கான் பாகவி மவுலானா அவர்கள் எழுதி வரும் தொடர் மிகச் சிறப்பாக பயனுள்ளதாக…
மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் அரசியல் நகர்வுகளை ஓரளவுக்கு ‘வரலாற்று நினைவுகளில் கலைஞர்’…
அக்டோபர் மாத இதழின் அட்டைப்படக் கட்டுரை ‘2019 பொதுத் தேர்தல்’ சிறப்பான மொழியாக்கம்.…
மதுரையில் வாழும் நான் பலகாலம் அல் அமீன் பள்ளிக் கூடம், அல் எத்தீம்கானா…
சவுதி அரேபியா உள்ளிட்ட பிறஅரபு நடுகளின் பொருளாதார கொள்கைகள் வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளில் தற்போது…
உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை முதலில் நியூசிலாந்தில்தான் வழங்கப்பட்டது. செப்டம்பர் 19, 1893 ஆம்…

                                                                                                                                                                                                            - சேயன் இப்ராகிம்
சமுதாயப் புரவலர்
மதுரை முஸ்தபா ஹாஜியார்

கூடல் மாநகர் என அழைக்கப்படும் மதுரை இந்தியாவிலுள்ள பழம் பெரும் நகரங்களில் ஒன்றாகும். பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இந்நகரில் நான்கு தமிழ்ச் சங்கங்கள் பல்வேறு கால கட்டங்களில் தோன்றிச் செயல்பட்டு தமிழ்ப்பணி ஆற்றியுள்ளன. பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்நகரை சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம் சுல்தான்கள் ஆட்சி புரிந்துள்ளனர்.
ஆங்கிலேய கம்பெனி ஆட்சியை எதிர்த்துப் போராடிய வீரர் கான்சாகிப் இந்த நகரில் தான் வீர மரணம் எய்தினார். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணிப் பங்கு வகித்த முகம்மது மௌலானா சாகிப், நாட்டு விடுதலைக்குப் பின்னர் முஸ்லிம் லீகின் முதல் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புடன் பணியாற்றிய எஸ்.எம். ஷெரீப் சாகிப் ஆகிய பெருமக்களைத் தந்த பெருமை மதுரை நகருக்குண்டு. அந்த நன்மக்களின் வரிசையில் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருந்த ‘எட்டெழுத்து முஸ்தபா ஹாஜியார்’ என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட முஸ்தபா அவர்களைப் பற்றித்தான் இந்த இதழில் பார்க்க விருக்கிறோம்.
பிறப்பு - சிறப்பு:
முஸ்தபா ஹாஜியாரின் பூர்வீகம் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கடற்கரை நகரமான தொண்டியாகும். இவ்வூர் முஸ்லிம்கள் கப்பல் வணிகத்தில் சிறப்புற்று விளங்கினர். பல மார்க்க அறிஞர்களையும், எழுத்தாளர்களையும் தமிழ் கூறும் உலகிற்குத் தந்த பெருமை இந்த ஊருக்குண்டு. முஸ்தபா ஹாஜியாரின் மூதாதையர்கள் இந்த ஊரிலிருந்து இடம் பெயர்ந்து வந்து மதுரை கீழ வெளிப் பகுதியில் குடியேறி வாழ்ந்து வந்தனர். அந்த மரபில் வந்த மதார் முகைதீன் - முகம்மது பாத்திமா பீவி தம்பதியினரின் மகனாக 15.03.1928 அன்று முஸ்தபா பிறந்தார். இவரது விலாசம் (இனிசியல்) T.S.N.M.S.A.P.M. என எட்டு எழுத்துகளைக் கொண்டிருந்ததால், இவர் ‘எட்டெழுத்து முஸ்தபா’ என அழைக்கப்பட்டார். இந்த விலாசத்தின் விளக்கம் பின்வருமாறு.
T - என்பது தொண்டி இராவுத்தர்
S - என்பது சிக்கந்தர் இராவுத்தர்
N - என்பது நைனாமுகம்மது இராவுத்தர்
M - என்பது மதார் முகம்மது இராவுத்தர்
S - என்பது ஷேக் இராவுத்தர்
A - என்பது அஹமது இராவுத்தர்
P - என்பது பீர் இராவுத்தர்
M - என்பது முகம்மது இராவுத்தர்
இவரது முழுப்பெயர் ஷேக் அகமது பீர் முகம்மது முஸ்தபா ஆகும். இக் குடும்பத்தினர் மிகப்பெரிய நிலச்சுவான்தார்களாக விளங்கினர். இவர்களுக்கு மதுரை நகரை ஒட்டிய கிராமங்களிலும் தேனி, உத்தமபாளையம் ஆகிய வைகை ஆற்றுப் பாசனப் பகுதிகளிலும் பன்னூற்றுக்கணக்கான நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் இருந்தன. இன்றைக்கும் இருக்கின்றன.
எனவே முஸ்தபா ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் தான் பிறந்தார். அவர் தனது தொடக்க மற்றும் இடை நிலைக் கல்வியை மதுரையிலுள்ள செயின்ட் மேரீஸ் உயர்நிலைப் பள்ளியில் கற்றுத் தேறினார். மார்க்கக் கல்வியிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். விவசாயப் பணிகளைக் கவனிக்க வேண்டியதிருந்ததால் இவர் உயர்கல்வி கற்கச் செல்லவில்லை.
சமயப் பணிகள்:
முஸ்தபா ஹாஜியார் இளமையிலேயே சமுதாயப்பற்றும், மார்க்கப்பற்றும் மிக்கொண்டவராகத் திகழ்ந்தார். அவர் தனது வருமானத்தின் ஒரு பகுதியை சமயப் பணிகளுக்கு வாரி வழங்கினார். புதிய பள்ளிவாசல் கட்டிடவும், ஏற்கனவே இருக்கும் பள்ளிவாசல்களை விரிவுபடுத்திடவும், மத்ரஸாக்களுக்கும் தாராளமாக நிதி உதவி செய்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ‘ஜாமிஆ மஹ்ஸனுத் தாரைனி’ என்ற மத்ரஸாவை நிறுவி சில ஆண்டுகள் நடத்தி வந்தார்.
அந்தப் பகுதியில் பேருந்து நிலையத்திற்கு அருகில் 1902 ஆம் ஆண்டு தனது தந்தையாரால் கட்டப்பட்டு நடத்தப்பட்டு வந்த தொ.சி. பள்ளிவாசல் என்ற இறையில்லத்தைத் தொடர்ந்து நிர்வகித்து வந்தார். மதுரை தாசில்தார் பள்ளிவாசலின் முத்தவல்லியாக நாற்பது ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். குழந்தைகள் சீர்திருத்தப் பள்ளியின் பொருளாளராகவும் சில ஆண்டுகள் பொறுப்பு வகித்தார்.
அல் அமீன் கைத் தொழில் கல்விச் சங்கம்:
முஸ்தபா ஹாஜியாரும், மதுரையின் பிரபல கண் மருத்துவர் டாக்டர் சத்தாரும் பிற சமுதாயப் பிரமுகர்களுடன் இணைந்து 1960 ஆம் ஆண்டு ‘அல்அமீன் கைத்தொழில் கல்விச் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினர்.
மதுரை நகரிலுள்ள முஸ்லிம்கள் கல்வி பயில பள்ளிக் கூடமும் ஆதரவற்ற முஸ்லிம் ஏழைச் சிறுவர்களின் பராமரிப்பிற்காக ஒரு அனாதை நிலையமும் தொடங்க வேண்டுமென்பது தான் இந்தச் சங்கத்தின் செயல்திட்டமாக இருந்தது. 1957ஆம் ஆண்டு பாளையங்கோட்டையில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்த முஸ்லிம் அனாதை நிலையத்தைப் பார்வையிட்டு வந்த முஸ்தபா ஹாஜியாருக்கு மதுரையிலும் அது போன்ற ஒரு அனாதை நிலையத்தைத் தொடங்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது.
அந்த எண்ணத்தை இந்த அல் அமீன் கைத் தொழில் கல்விச் சங்கம் மூலமாக செயல்படுத்த விழைந்தார். புறநகர் பகுதியிலுள்ள கொடிக்குளம் என்ற கிராமத்தில் தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை இதற்கென வழங்கினார். 1962ஆம் ஆண்டு அல் அமீன் அனாதை நிலையம் தொடங்கப்பட்டது. அதன் அருகிலேயே அல் அமீன் தொடக்கப் பள்ளியும் தொடங்கப்பட்டது.
அல் அமீன் அனாதை நிலையம் :
1962 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘அல் அமீன் அனாதை நிலையம்’ இன்றைக்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இங்கு தற்போது 250க்கும் மேற்பட்ட ஏழை எளிய, பெற்றோர்களால் கைவிடப்பட்ட முஸ்லிம் சிறுவர்கள் தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கான உணவு, உடை, தங்குமிடம், கல்வி, மருத்துவச் செலவு என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. நன்கொடையாளர்கள் வழங்கும் நிதியினைக் கொண்டே இந்தச் செலவுகள் செய்யப்படுகின்றன.
இங்கு அரபி மத்ரஸா ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அலுவலகக் கட்டிடம். மாணவர்கள் தங்குவதற்கான விடுதி, விருந்தினர் அறை. உணவுக் கூடம், பள்ளிவாசல் என பல கட்டிடங்கள் பெரும் பொருட் செலவில் கட்டப்பட்டுள்ளன. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நிலையத்தில் தங்கிப் படித்து உயர் கல்வி கற்றுப் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். மாணவர்களின் உயர்கல்விக்கான செலவையும் இந்த நிலையமே ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையத்திற்கு தமிழக அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது ஒரு மிகச் சிறந்த அனாதை நிலையமென இதனைப் பார்வையிட்டுச் சென்ற பல பொது நல அமைப்புகளின் தலைவர்கள் பாராட்டியுள்ளனர். இந்த நிலையத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக முஸ்தபா சாகிப் பல்லாண்டுகள் பொறுப்பு வகித்தார். தற்போது அவரது மகன் முகம்மது இத்ரீஸ் இதன் நிர்வாகியாகப் பொறுப்பு வகிக்கிறார்.
அல் அமீன் உயர்நிலைப் பள்ளி:
தொடக்கப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளிக்கூடம் 1966 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்ட பிறகு நகரிலுள்ள கோசகுளம் புதூருக்கு மாற்றப்பட்டது. இந்தப் பள்ளிக்கூடம் செயல்படத் தேவையான அளவுக்குரிய நிலைத்தையும் முஸ்தபா ஹாஜியாரே வழங்கினார். (டாக்டர் சத்தார் சாகிபும் வழங்கினார்) சில ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் விளையாட்டுத் திடல் அமைத்திட மேலும் தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்கினார். 1978ஆம் ஆண்டு இந்தப் பள்ளிக் கூடம் மேல் நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இந்தப் பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் பிற சமயங்களைச் சார்ந்த மாணவர்களும் அடங்குவர். மதுரை நகரில் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரே மேல் நிலைப் பள்ளி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப் பள்ளியின் தாளாளராக முஸ்தபா ஹாஜியார் பல்லாண்டுகள் பொறுப்பு வகித்தார். தற்போது அவரது மகன் முகம்மது இத்ரீஸ் பொறுப்பு வகிக்கிறார்.
ஜமா அத்துல் உலமா சபை :
நகரில் தனக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்களை அவர் பல்வேறு பொது நல அமைப்புகளுக்கு வழங்கியுள்ளார். அனாதை நிலையத்திற்கு அருகில் தனக்குச் சொந்தமாக இருந்த 11 சென்ட் நிலத்தை 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபைக்கு வழங்கினார். இந்த வக்ப்பை காலம் சென்ற தனது மருமகன் (சகோதரியின் மகன்) வழக்கறிஞர் என்.அப்துல் ரஸாக் அவர்களின் ஈஸால் தவாபிற்காக அமைத்துக் கொண்டார். அவரது மனைவிக்குப் பின்னர் அவரது புதல்வர்கள் 2013 ஆம் ஆண்டு மேலும் இரண்டு சென்ட் நிலத்தை மாநில ஜமாஅத்துல் உலமா சபைக்கு வழங்கினர். இந்த வக்ப்பை தங்களது தாய், தந்தையருக்காக அமைத்துக் கொடுத்தனர். இந்த இடத்தில் தான் ஜமாஅத்துல் உலமா சபை தனது மாநில அலுவலகத்தை அண்மையில் கட்டி முடித்துள்ளது. மூன்று மாடிகள் கொண்ட இந்த எழிலார் கட்டிடத்தின் திறப்பு விழா சென்ற 12, 13.05.2018 ஆகிய தேதிகளில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்தக் கட்டிடம் முஸ்தபா ஹாஜியாரின் பெயரை காலமெல்லாம் தாங்கி நிற்கும் என்பது திண்ணம்.
திருமணம் - சுன்னத்:
முஸ்தபா ஹாஜியார் பல ஏழைக் குமருகளின் திருமணம் நடந்தேறிட நிதி உதவி செய்துள்ளார். எந்த விதமான ஆடம்பரமுமின்றி இஸ்லாமிய வழியில் இந்தத் திருமணங்களை நடத்தி வைத்தார். அது போல் ஆயிரக்கணக்கான ஏழைச் சிறுவர்களின் ‘சுன்னத்’தையும் தனது சொந்த செலவில் நடத்தி வைத்தார். அன்றைய நாட்களில் (60, 70 களில்) ‘சுன்னத்’ ஒரு ஆடம்பர வைபவமாகவே சமுதாய மக்களால் நடத்தப்பட்டது. அழைப்பிதழ் அடித்து உறவினர்களையும் நண்பர்களையும் நிகழ்ச்சிக்கு அழைத்தல், விருந்து வைத்தல் என ஆடம்பரம் அனைத்து நிலைகளிலும் தலை தூக்கியிருந்தது. இதனால் போதிய பண வசதியில்லாத ஏழைக் குடும்பத்தினர் தங்கள் வீட்டுச் சிறுவர்களின் ‘சுன்னத்’தை தள்ளிப் போட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த நிலையம் முஸ்தபா ஹாஜியார் தமிழகத்திலுள்ள முஸ்லிம்கள் நிறைந்து வாழுகின்ற பல்வேறு ஊர்களுக்கும் சென்று ஏழை எளிய சிறுவர்களைக் கண்டறிந்து ஒரு குறிப்பிட்ட நாளில் அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்று கூடச் செய்து ஒரு ‘பெருந்திரள் சுன்னத்’ வைபவங்களை நடத்தினார். இதற்கான அனைத்துச் செலவுகளையும் அவரே ஏற்றுக் கொண்டார் (மருத்துவச் செலவு உட்பட) நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற இந்த வைபவங்களில் ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்குச் சுன்னத் செய்யப்பட்டது.
முஸ்லிம்கள் தங்களது இல்லத் திருமண நிகழ்ச்சிகளைப் பள்ளி வாசலில் வைத்துத்தான் நடத்திட வேண்டுமென்பது அவரது எண்ணமாகும். வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ நடைபெறும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்றும், பள்ளிவாசல்களில் நடைபெறும் திருமணங்களில் மட்டுமே கலந்து கொள்வேன் என்றும் அவர் வெளிப்படையாக அறிவித்தார். இதன் காரணமாக தங்களது வீட்டுத் திருமணங்களில் முஸ்தபா ஹாஜியார் கலந்து கொள்ள வேண்டுமென விரும்பியவர்கள் பள்ளிவாசல்களிலேயே அதனை நடத்தினர்.
அரசியல் ஈடுபாடு:
முஸ்தபா ஹாஜியார் காங்கிரஸ் கட்சியின் அனுதாபியாக இருந்தார். எனினும் நேரடி கட்சி அரசியலில் அவர் ஈடுபடவில்லை. தேர்தல்கள் எதிலும் போட்டியிடவில்லை. அன்றையத் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜ், உள்துறை அமைச்சர் கக்கன். உள்ளாட்சித்துறை அமைச்சர் கடையநல்லூர் அப்துல் மஜீத் சாகிப், மதுரை சுப்பாராமன் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார். காங்கிரஸ் தலைவர்கள் மதுரைக்கு வரும் போதெல்லாம் இவரது இல்லத்திற்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். மதுரை நகரில் கக்கன் கும்பத்தினருக்கு வீடு ஒன்று கட்டிக் கொடுத்தார்.
குடும்பம்:
முஸ்தபா ஹாஜியாருக்கு 1958 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. துணைவியார் பெயர் சிக்கந்தர் பீவி. இத் தம்பதியினருக்கு அப்துல் லத்தீப், முகம்மது இல்யாஸ். முகம்மது இத்ரீஸ், முகம்மது அப்துல்லாஹ் என்ற நான்கு புதல்வர்களும் ஒரு புதல்வியும் உண்டு. வழக்கறிஞரான மூத்த மகன் அப்துல் லத்தீப் சாகிப் மரணமடைந்து விட்டார். இவர் அல் அமீன் கைத் தொழில் கல்விச் சங்கம் மற்றும் அல் அமீன் மேல் நிலைப் பள்ளியின் தலைவராகப் பல ஆண்டுகள் பதவி வகித்தார். மற்றப் புதல்வர்களும் தந்தையின் வழியைப் பின்பற்றி மதுரை நகரில் பல்வேறு பொதுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முடிவுரை:
தனது வாழ்நாள் முழுவதையும் பொதுப் பணிகளுக்கே அர்ப்பணித்துக் கொண்ட முஸ்தபா ஹாஜியார் தனது 63வது வயதில் 12.02.1991அன்று (ரஜப் மாதம் 27ம் நாள் மிஹ்ராஜ் இரவில்) மரணமடைந்தார். ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயதாகிய 63 வயது வரை நான் வாழ்ந்தால் போதும், அதற்கு மேல் வாழ வேண்டியதில்லை’ என்று தனது நண்பர்களிடம் அவர் கூறுவது வழக்கமாம். அதன்படியே அவர் தனது 63வது வயதில் மரணமுற்றார். அவரது ஜனாஸா மதுரை சுங்கம் பள்ளிவாசல் கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இஸ்லாமியக் கடமைகளை வழுவாது கடைப்பிடித்து ஒழுகிய முஸ்தபா ஹாஜியார், கண் மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பால் மிகுந்த நேசம் கொண்டிருந்தார். ஆலிம் பெருமக்கள் மீது மிகுந்த நேசம் கொண்டிருந்தார். அதனால் ‘முஹிப்புல் உலமா’ என ஆலிம்களால் மரியாதையுடன் அழைக்கப்பட்டார்.
தனது தன்னலமற்ற பொதுச் சேவைகளின் காரணமாக மதுரை எட்டெழுத்து முஸ்தபா ஹாஜியார் மதுரை முஸ்லிம் மக்களால் மட்டுமின்றி பிற ஊர்களிலுள்ள முஸ்லிம்களாலும் என்றும் நினைவு கூறப்படுவார். அவரது சேவையினை இறைவன் அங்கீகரிப்பானாக.
ஆதார நூல்கள்:
1. மலரும் நினைவுகள் - மாநில ஜமாஅத்துல் உலமா சபை வெளியீடு
2. அல் அமீன் மேல் நிலைப் பள்ளி 50 வது ஆண்டு மலர்.
கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள ....
99767 35561

இன்றைய நவீன தலைமுறையிடம் ஒருவித ஆன்மீக வறட்சி நிலவுகிறது. மத எல்லைகளைக் கடந்து…

அ. முஹம்மது கான் பாகவி

அன்பார்ந்த அரபிக் கல்லூரி மாணவர்களே! மரபுவழி மத்ரசாக்களின் பாடத்திட்டத்தில் ‘தத்துவம்’ ஒரு பாடமாக வைக்கப்பட்டிருப்பதை அறிந்திருப்பீர்கள். ‘தத்துவம்’ என்பதை ‘ஃபல்ஸஃபா’ அல்லது ‘ஹிக்மத்’ என்றழைப்பர். இதைப் போதிப்பதற்காக அல்ஹதிய்யத்துஸ் ஸஅதிய்யா, அல்மைபதீ, ஸத்ரா போன்ற பாடப் புத்தகங்கள் உள்ளன.
பிரபஞ்சத்திற்கும் மனிதருக்கும் உள்ள உறவு, மனித வாழ்வின் பொருள் மற்றும் குறிக்கோள் ஆகியவை பற்றிச் சிந்தனை ரீதியாக ஆராயும் துறையே ‘தத்துவம்’ (Philosophy) எனப்படுகிறது. தத்துவக் கோட்பாடுகளை உருவாக்குபவர் ‘தத்துவ ஞானி’ (Philosopher) எனப்படுவார்.
எனினும், ‘தத்துவம்’ என்றால் என்ன என்று அனைவராலும் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரு வரையறை இலக்கணத்தைக் காண்பதில் சிக்கல் உண்டு. அடிப்படையான நம்பிக்கைகளை வெளிப்படுத்தப் பயன்படும் அடிப்படையான கருதுகோள்களைத் தர்க்கபூர்வமாக அலசி ஆராயும் துறையே ‘தத்துவ இயல்’ என்கிறார்கள் சிலர்.
மனிதனுடைய பல்வேறுபட்ட அனுபவங்களின் பிரதிபலிப்பே ‘தத்துவம்’ என்று சிலரும், மனித குலத்தின் கவனத்தை ஈர்க்கும் விஷயங்களைப் பகுத்தறிவுபூர்வமாகவும் ஒழுங்காகவும் முறையான திட்டமிட்ட வழியிலும் ஆய்வுக்கு உட்படுத்துவதே ‘தத்துவம்’ என்று வேறுசிலரும் கூறுகின்றனர்.
உலகின் அனைத்துப் பெரிய சமயங்களும் தமக்குச் சார்பான சிந்தனை மரபுகளைத் தத்துவங்களாகக் கொண்டுள்ளன.
முஸ்லிம் அறிஞர்களின் விளக்கம்
எல்லாப் பொருட்களின் உருவாக்கத்திற்கும் மூல காரணமான முதல் மெய்ப்பொருளை அறிவதே ‘தத்துவம்’ (ஹிக்மத்) ஆகும். இதனால், ஒரு முழுமையான தத்துவ ஞானி (ஹகீம்) என்பவர், இந்தச் சிறப்பான கலையை நன்கு அறிந்த மனிதராக இருத்தல் அவசியம். ஏனெனில், படைப்பை அறிவதைவிட, அதற்குக் காரணமான படைப்பாளனை அறிவதே மேலான அறிவாகும். ஆக, நிறைவான அறிவு என்பது, காரணியைப் படிப்பதுதான்.
இவ்வாறு தத்துவ அறிஞர் யஅகூப் பின் இஸ்ஹாக் அல்கின்தீ (இறப்பு: ஹி-260; கி.பி. 873) அவர்கள் குறிப்பிடுகிறார். பிரபல தத்துவ மேதையும் பல்கலை அறிஞருமான அபூநஸ்ர் அல்ஃபாராபி (இறப்பு: ஹி-339; கி.பி. 950) அவர்கள் பின்வருமாறு இலக்கணம் கூறுவார் :
படைப்புகளைப் பற்றி உள்ளது உள்ளபடி அறிவதே ‘தத்துவம்’ ஆகும். இது நான்கு வகைப்படும். 1. இறையியல் தத்துவம் 2. இயற்பியல் தத்துவம் 3. கணக்கியல் தத்துவம் 4. தர்க்கவியல் தத்துவம்.
ஆனால், மத்ரசா பாடத்திட்டத்தில் இடம்பெறும் தத்துவம் (ஃபல்ஸஃபா) பண்டைய கிரேக்கத் தத்துவமாகும் என்பது குறிப்பிடத் தக்கது. கிரேக்கத் தத்துவத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். 1. சிந்தனைபூர்வமான தத்துவம் 2. செயல்பூர்வமான தத்துவம்.இரணடவத படம நயகளயர ஃபசன இளம  1
பொருட்கள் ஒவ்வொன்றின் மெய்மைகளை உள்ளபடி அறிவதற்கான கலையே சிந்தனைசார் தத்துவமாகும். பயிற்சிமூலம் ஆன்மாவை ஒளிரச்செய்வது தொடர்பான கலையே செயல்சார் தத்துவமாகும். பிளேட்டோ, அவர் மாணவர் அரிஸ்டாட்டில் முதலானோர் முதல்வகை தத்துவத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். பிளேட்டோ மாணவர்களான அவருடைய ஆதரவாளர்களின் கொள்கைதான் இரண்டாவது வகை தத்துவமாகும்.
கிரேக்கத் தத்துவங்கள்
கிரேக்கத் தத்துவத்தின் அடிப்படையே அறிவுதான். எதையும் அறிவால் மட்டுமே அணுகி, தர்க்கரீதியாக மட்டுமே நிறுவுவதுதான் அந்தத் தத்துவம். அதாவது வேதச் சான்றுகளோ மரபுக் கருத்துகளோ தத்துவம் ஆகாது; ஒரு தத்துவத்திற்குச் சான்றும் ஆகாது. அவ்வாறே, ஒரு தத்துவத்தைச் செயல்பூர்வமாக நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை; வெறும் வாதப் பிரதிவாதத்தைக் கொண்டு நிரூபித்தாலே போதும் -என்பதே கிரேக்கத் தத்துவத்தின் அடிப்படை.
உதாரணமாக, “கடவுள் உண்டு” எனும் தத்துவத்தை எடுத்துக்கொள்வோம். இதற்கு வேதங்கள், ஞானிகள், சமய அறிஞர்கள் ஆகியோரின் கருத்துகள் சான்றாகா. மாறாக, தர்க்கரீதியாக நிரூபிக்க வேண்டும். ‘கடவுள்’ (God) என்றுகூட அவர்கள் குறிப்பிடுவதில்லை. ‘கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று’ (வாஜிபுல் வுஜூத்) என்றே கடவுளைக் குறிப்பிடுவார்கள்.
அனைத்தும் -கட்டாயம் இருக்க வேண்டிய பொருளல்ல; அதாவது இருக்கவும் செய்யலாம்; இல்லாமலும் இருக்கலாம் (மும்கினுல் வுஜூது)- என்ற நிலையிலேயே அனைத்துப் பொருட்களும் உள்ளன என்று வாதிட்டால், சமமான இவ்விரு நிலைகளில் ஒன்றைத் தீர்மானிக்கும் சக்தி எது? தீர்மானிக்கும் சக்தியும் இதே சமநிலையில் இருப்பின், அந்தச் சக்தியின் இருப்பை முடிவு செய்தது யார்? அதுவும் அதேபோல் இருந்தால்…? முடிவில்லாமல் போகும்.
எனவே, கட்டாயம் -எப்போதும்- இருக்க வேண்டியது என்று ஒன்று இருக்க வேண்டும். அந்தச் சக்தியே மற்ற பொருட்களின் நிலையை - அதாவது இருப்பை, அல்லது இல்லாமையை- தீர்மானிக்கும் அதிகாரம் படைத்ததாக இருக்கும். அதுதான் கடவுள்.
இந்த அதிகாரம் படைத்த சக்தி (கடவுள்), ஒன்றுக்கு மேல் இருக்கக் கூடாதா என்று கேட்டால், இருக்கலாம் என்பர் கிரேக்க அறிஞர்கள். அதாவது பல தெய்வங்கள் இருக்கலாம். பல தெய்வங்களும் ஒன்றுசேர்ந்தோ சேராமலோ ஒரே மாதிரி சிந்தித்து, ஒரே மாதிரி செயல்படுவது சாத்தியம்தானே! அப்போது பல கடவுள்களிடையே மோதலுக்கு வழி இல்லைதானே! என்று திருப்பிக் கேட்கும் கிரேக்கத் தத்துவம்! ஆக, ஓரிறைக் கோட்பாடெல்லாம் அதில் இல்லை.
இப்படி எதை எடுத்தாலும் வாதப்பிரதிவாத வழியிலேயே நிறுவ முனைவர் கிரேக்கத் தத்துவ ஞானிகள். வேதமோ, செயல்பூர்வ நிரூபணமோ அவர்களுக்குக் கிடையாது. சுய சிந்தனை வழியில்தான் மெய்ப்பொருள் ஒளிரும் என்பர். இதுதான், கிரேக்க - பண்டைய தத்துவமாகும்.
இதே சிந்தனைப் போக்குதான், மீண்டும் ஒருமுறை மாக்ஸ்மில்லர், ஹார்பர்ட் ஸ்பென்ஸர், ரெனிடேகார் போன்ற கிரேக்கத் தத்துவவாதிகளிடமிருந்து வெளிப்பட்டது. இதையே ‘பகுத்தறிவு வாதம்’ (Rationality) என்றும் கூறலாம். நம்பிக்கை சாராமல் அறிவால் மட்டுமே உண்மைகளை அறிய முயலும் முறை. சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில் ஆகியோரால் இது தோன்றியது. பின்னர் டேகார்ட் (1596-1658) போன்றோரால் திரும்பவும் இக்கோட்பாடு உயிர்பெற்றது.
கிரேக்கர்களின் கடவுள் கொள்கை
கிரேக்கர்களைப் பொறுத்த வரையில், கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால், பல தெய்வக் கொள்கை கொண்டவர்கள் அவர்கள். கி.மு. 2ஆம் ஆயிரத்தாண்டு, வானத்தின் கடவுள் என அவர்கள் நம்பிய ஸீயஸை வணங்கும் முறை இருந்தது. கி.மு. 750வாக்கில்தான், கிரேக்க மதம் முறையாகத் தொடங்கியதாம்!
கடலுக்கென ஒரு கடவுள் வைத்துள்ளனர் கிரேக்கர்கள். அதன் பெயர் பொசைடன்; அவ்வாறே, அறுவடைக்கென ஒரு கடவுள்; அதன் பெயர் டெமிட்டர். திருமணத்திற்கான கடவுள் பெயர் ஹீரா.
பண்டைய கால வீரர்களும் மன்னர்களுமான ஹிரக்ளீஸ், அங்க்ளீப்பியஸ் போன்றவர்களும் அந்த மக்களால் வணங்கப்பட்டுவந்தனர்.
அணுவைப் பிளக்க முடியாதா?இரணடவத படம நயகளயர ஃபசன இளம  2
ஒரு பொருளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாகப் பகுப்பதால் கிடைக்கக்கூடிய கூறுதான் ‘அணு’ (Atom) எனப்படுகிறது. மேலும், ஒரு தனிமத்தின் தனித்தன்மையை அப்படியே தக்கவைத்திருக்கும் அடிப்படைக் கூறுக்கும் ‘அணு’ என்பர்.
‘அணு’ என்பதைக் குறிக்கும் ‘Atom’ (ஆட்டம்) எனும் ஆங்கிலச் சொல், கிரேக்கச் சொல்லான ‘அட்டோமஸ்’ என்பதிலிருந்து வந்தது. ‘பிளக்க முடியாதது’ என்பது இதன் பொருள். மின்னணு (எலக்ட்ரான்), உட்கரு (Nucleus) போன்றவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்புவரை -அதாவது 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை- அணுவைப் பிளக்க முடியாது என்றே நம்பப்பட்டுவந்தது.
ஆனால், அணுவானது, நேர் மின்னூட்டம் (Positive Charge) கொண்ட உட்கரு ஒன்றைப் பெற்றுள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் உட்கருவானது, அணுவின் நிறையில் 99.9% கொண்டுள்ளது. ஆனால், கன அளவில் 1014அளவே (நூறாயிரம் கோடிக் கூறுகளில் ஒன்று) உள்ளது.
உட்கருவுக்குள், நேர் மின்னூட்டம் கொண்ட புரோட்டான்கள், மின்னூட்டமில்லாத நியூட்ரான்கள் ஆகியவை காணப்படுகின்றன.

முதல் படம் : நியூக்ளியர்

அணுப்பிளப்பு (Nuclear Fission) என்பது, கனமான அணுக்கரு ஒன்று ஏறத்தாழ சம நிலையுள்ள இரு கூறுகளாகப் பிளக்கப்படும் நிகழ்வே ஆகும். அணுப்பிளவில், இரண்டு அல்லது மூன்று தனி நியூட்ரான்கள் வெளியிடப்படுகின்றன. இந்தத் தனி நியூட்ரான்கள் மற்ற அணுக்கருக்களைத் தாக்குவதால், சங்கிலித் தொடர் வினை எனும் அணுக்கருப் பிளவு ஏற்படுகிறது.
இந்த அணுக்கருப் பிளவால் வெளியிடப்படும் ஆற்றல், மின்சார உற்பத்திக்கும், கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை முன்னோக்கிச் செலுத்துவதற்கும் பயன்படுகிறது. பெரிய அழிவிற்கு வழிவகுக்கும் அணு ஆயுதங்களின் ஆற்றலுக்கும் இதுவே மூலகாரணமாகிறது.

இரண்டாவது படம் நியூக்ளியர் ஃபிசன்

வாதப் பிரதிவாதம் எதற்கு?
ஆக, அணுவைப் பிளக்க முடியும் என்பது மட்டுமல்ல, பிளந்தாகிவிட்டது; பேரழிவு அணு ஆயுதங்கள்வரை அணுப் பிளவால் தயாரிக்கப்பட்டும்வருகிறது என்பது அறிவியல் அரங்கில் செயல்பூர்வமாக நிரூபணமாகிவிட்டது.
இந்நிலையில், இன்றும் மத்ரசா பாடத்திட்டத்தில் உள்ள தத்துவப் பாடப் புத்தகங்கள் சிலவற்றில், அணுவைப் பிளக்க முடியும் என்று ஒரு கட்சியும், பிளக்க முடியாது என்று ஒரு கட்சியும் விவாதம் செய்துகொண்டிருப்பதில் என்ன புண்ணியம் சொல்லுங்கள்!
பண்டைய கிரேக்கத் தத்துவத்தின்படி, அணுவைப் பிளக்க முடியாது. அதாவது இனிமேல் பகுக்க முடியாத இறுதி அணு (அல்ஜுஸ்உல்லதீ லா யத்தஜஸ்ஸா) உண்டு எனக் கிரேக்கர்கள் வாதிடுவார்கள். இதனால் அவர்களுக்கு நம்பிக்கை சார்ந்த ஓர் ஆதாயம் உண்டு. உலகம் அழியாது; மறுமை வராது என்பதே அது.
ஆம்! ஒவ்வொரு பொருளையும் அழிக்க அழிக்க கடைசி அணு இருந்துகொண்டே இருக்கும். பிறகெப்படி உலகம் அடியோடு அழியும்? மறுமை நிகழும்?
இதற்கு மறுப்பாக, முஸ்லிம்கள் இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்து, உலகத்தை ஒரு நொடியில் முற்றாக அழித்துப்போட இறைவனால் முடியும் என்பதை தர்க்கரீதியாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். தர்க்கமே தேவை இல்லை; செயல்பூர்வமான முடிவைக் காட்டினாலே போதுமல்லவா? அதையும் மறுத்தால் அணுகுண்டைக் காட்டலாமல்லவா?
இதையெல்லாம்விடப் பெரிய கொடுமை என்ன தெரியுமா? ஷியாக்களில் ‘இமாமிய்யா’ பிரிவைச் சேர்ந்தவர் ஹிஷாம் பின் ஹகம் என்பார். இவர் பல்வேறு அபத்தமான கொள்கைகள் கொண்டவர். நபிமார்கள் பாவம் செய்யலாம் -என்பது அவற்றில் ஒன்று.
அவ்வாறே, ஒரு பொருளைப் பகுத்தால், முற்றுப்பெறாதவாறு பகுப்பு போய்க்கொண்டே இருக்கும் -என்ற கொள்கையும் கொண்டிருந்தார் ஹிஷாம். இக்கொள்கையை அவர், முஅதஸிலியான இப்ராஹீம் அந்நழ்ழாம் என்பாரிடமிருந்து கற்றுக்கெண்டாராம்!
ஒரு காலத்தில், கிரேக்கத் தத்துவம் செல்வாக்குப் பெற்றிருந்தது. சிலர் அதைப் படித்துவிட்டு, இஸ்லாத்திற்குள் குழப்பம் விளைவிக்கத் தலைப்பட்டனர். அதனால் அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டியிருந்தது. எனவே, ஹிஜ்ரீ 7ஆம் நூற்றாண்டுவாக்கில் எழுதப்பட்ட இஸ்லாமிய நூல்களும் தர்க்கரீதியாகவும் கிரேக்கத் தத்துவத்தைக் கருத்தில் கொண்டும் எழுதப்பட்டன.
ஆனால், இன்று கிரேக்கத் தத்துவம் செயலிழந்து பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் அந்தக் காலாவதியான தத்துவத்தைக் கட்டி அழ வேண்டுமா?
இன்று அரசியல், பொருளியல், இயற்பியல், அறிவியல், ஊடகவியல், மருத்துவம்… எனப் பல்துறைகளில் இஸ்லாத்திற்கெதிரான தத்துவங்கள் பல நம்மை மிரட்டும் அளவிற்குச் செல்வாக்குப் பெற்றுவிட்டன. அவற்றை இனங்காட்டி, அவற்றுக்கு மாற்றாக இஸ்லாம் கூறும் தத்துவங்களை மாணவர்களுக்குக் கற்பித்தால், இன்றைய இளம் தலைமுறை ஆலிம்கள் ஆக்கபூர்வமாகச் செயல்பட இயலுமல்லவா?
எடுத்துக்காட்டாக :
Ø அரசியலில் : மக்களாட்சி - மன்னராட்சி - இராணுவ ஆட்சி - பரம்பரை ஆட்சி…
Ø பொருளியலில்: முதலாளித்துவம் - பொதுவுடைமை - தனியார்வுடைமை - முதலீடு - உற்பத்தி - விநியோகம் - வட்டி வங்கி...
Ø இயற்பியலில் : டார்வினின் பரிணாம வளர்ச்சி தத்துவம் - வேதியியல் பொருட்கள் - தனிமங்கள் - இயற்கைப் பாதுகாப்பு…
Ø அறிவியலில் : புவி வெடிப்பு - பேரண்டக் கொள்கை - மூன்றாம் பாலினம் - தன்பாலுறவு - இயற்கை உணவுமுறை…
Ø மருத்துவம் : உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை - செயற்கை குழாய் குழந்தை பிறப்பு - கருணைக்கொலை…
(சந்திப்போம்)