“குழந்தைகள், அவர்களது தாய்கள், தந்தையர்கள், குழந்தைகளின் நேசத்திற்குரியவர்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்துவதற்கு வார்த்தைகளே கிடையாது.”ஜீயர்ட்…

என்.ஜாஹிர் உசேன், மருந்தாளுநர், மனித வள மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சியாளர், தொடர்பு எண் : +91 98427 03690, +91 75982 03690 இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ஆசிரியர் அறிமுகம்
(என்.ஜாஹிர் உசேன் அவர்கள், ஈரோட்டில் வசித்து வருகிறார். 32 வருடங்களாக மருந்து வணிக நிறுவனம் நடத்தி வருகிறார். 15 வருடங்களாக மனிதவள மேம்பாடு தொழில் முனைவோர் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார். “கற்றதையும் பெற்றதையும் யார் திருப்பி தருகின்றாரோ அவர்தான் இறைவனிடத்தில் பெறுவதற்கும் கேட்பதற்கும் தகுதியானவர்” என்ற எண்ணத்தின் காரணமாக தான் கற்ற, பெற்ற, படித்து அறிந்து புரிந்து கொண்ட அனுபவங்களை, பல்வேறு துறைகளில் வெற்றி பெற்றவர்களின் வாழ்வியல் செய்திகளையும் நல்கருத்துக்களையும் இளைய தலைமுறையினர், சுய தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், தொழில் முனைவோர்கள், சுய தொழில் குழு பெண்கள், பெண்கள் அமைப்பில் உள்ளவர்கள் ஆகியோருக்கு தன்னம்பிக்கை (self confidence) ஆளுமைத் திறன் மேம்பாடு (Personality Development) பெண்ணாலும் முடியும் (women can) தொழில் முனைவோர் மேம்பாடு (Entrepreneurship Development) என்ற தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார். மேலும் பெற்றோர்களுக்கு “பெற்றோர்கள் சாதனையாளர்களின் முகவரி” (Parents are Address of Achievers) ஆசிரியர்களுக்கு “ஆசிரியர்களே மாணவர்களின் முன்மாதிரி (Teachers Are Role Models of students)’ பணியாளர்களுக்கு “பணித்திறன் மேம்பாடு (Employability)’ போன்ற தலைப்புகளில் 1000 க்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளை கல்வி நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் மூலம் நடத்தியுள்ளார். பல்வேறு புத்தகங்கள் மேலும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆளுமை திறன் கொண்ட தொழில் முனைவோர்கள் பல்லாயிரக்கணக்கானவர்களை உருவாக்குவதே அவரது வாழ்நாள் லட்சிமாக கொண்டுள்ளார். அவருக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்வானாக.)
எல்லாப் புகழும் இறைவனுக்கே. இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக…
தொழிலும் நாமும் வேறல்ல! தொழில்தான் நமது வேர்
கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு இரண்டின் மூலம்தான் குடும்பங்கள் மற்றும் ஒரு தேசத்தின் வளர்ச்சி அளவிடப்படுகிறது.
எல்லாம் வல்ல இறைவன் அருளால், சிறு மற்று குறு தொழில் செய்பவர்கள் மற்றும் புதிதாக தொழில் துவங்க எண்ணம் கொண்டவர்களுக்கு தொழில் செய்யும் தன்னம்பிக்கை, ஊக்கம் மற்றும் உற்சாகத்தையும் தொழில் செய்வதற்கான வழிமுறைகள், செயல் திட்டங்களை “தொழில் செய்வோம் வளம் பெறுவோம்” என்ற பெயரில் தொடராக நமது சமூகநீதி முரசு மாத இதழ் மூலம் தருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
உலக அளவிலும் சரி, நமது தேச அளவிலும் சரி 80% பொருளாதாரத்தை கையாளுபவர்கள் 20% தொழில்துறையில் உள்ளவர்கள் தான் என்பது 100% நிதர்சன உண்மை.
இப்படிப்பட்ட மதிப்புமிக்க, பொருளாதார வளர்ச்சியைத் தரும் தொழில் துறையில் ஈடுபட்டு வெற்றி பெற எல்லோராலும் முடியும்.
அதற்காக அளப்பரிய ஆற்றல், அறிவு, திறமை, வாய்ப்புகள் அனைத்தையும் எல்லாம் வல்ல இறைவன் அனைத்து மனிதர்களுக்கும் தந்துள்ளான். இதை முழு நம்பிக்கையுடன் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்தியவர்கள்தான் எத்துறையாயினும் தனி முத்திரை பதித்த சாதனையாளர்கள்.
தொழில் துறையில் நிறைய பேர் தயக்கம் கொள்ள சொல்லும் காரணங்கள்,தொழில் துவங்க நிறைய பணம் தேவை, நிரம்ப படிப்பறிவு வேண்டும். நஷ்டம் ஆகிவிட்டால் பணத்தை இழந்து விடுவோமா என்ற பயம் ஏன் தேவையில்லாத ரிஸ்க் எடுக்க வேண்டும் போன்ற பல்வேறு எதிர்மறை எண்ணங்களை (Negative Thoughts) மற்றும் தாழ்வு மனப்பான்மையை (Inferiority Complex) கொண்டுள்ளது.
இன்றைய தினங்களில் தேசிய அளவில் மட்டுமல்ல நமது மாநிலத்தில் உள்ள தொழில்துறை சாதனையாளர்கள் பெரும்பான்மையினர் பள்ளிப் படிப்பைக் கூட நிறைவு செய்யாதவர்கள், மிக மிக சொற்ப தொகையைக் கொண்டு தொழில் துறைக்கு வந்தவர்கள், வளரும் போது அந்த சொற்ப தொகை கூட இல்லாதவர்கள் பலரும் கூட இன்று நேரடியாகவும், மறைமுகமாகவும் தன் தொழில் நிறுவனத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு தன் நிறுவனத்தின் மூலம் சிறு குறு தொழில் வாய்ப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கிக் கொண்டுள்ளார்கள். வருடா வருடம் பல லட்சம் ரூபாய்களை கல்வி உதவித் தொகைகளை கொடையாக வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
தொழில் துறையில் நுழைவதற்கு படிப்பு, பணம் தேவையில்லை என்பது இதன் அர்த்தமில்லை. அவை வாழ்வதற்கான ஓர் கருவி மட்டுமே, அவை இருந்தால் மட்டுமே தொழில்துறையில் வெற்றி பெற முடியும் என்று காரணம் கூறாமல், சூழ்நிலையை காரணம் காட்டாமல் சாதித்தவர்கள்தான் முன்மாதிரி சாதனையாளர் என்ற வகையில் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் எதிர்மறை சூழ்நிலைகளைக் காரணம் காட்டாமல் வெற்றிக்கான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொண்டவர்கள்.
தான் விரும்பும் தொழில் துறையில் இன்றைய சாதனையாளர்கள் 10 தாரக மந்திரத்தை வெற்றிக்கான சூத்திரங்களை தன் மனதில் ஆழமாக விதைத்து உள்ளத்தால் உணர்வால் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்தியுள்ளார்கள்.
சாதனையாளர்கள் சாதனைக்கோர் பாதை அமைத்து வெற்றி கொண்டுள்ள 10 தாரக மந்திரங்கள்.
1. தன்னம்பிக்கை (Self - Confidence)
2. இலக்குகளை தீர்மானித்தல் (Goal Setting)
3. முடிவெடுக்கும் திறன் (Decision Making)
4. விடா முயற்சி (Perseverance)
5. பிரச்சனைகளைத் தீர்த்தல் (Problem Solving)
6. வாய்ப்புகளை பயன்படுத்துதல் (Opportunities Utilization)
7. நேர மேலாண்மை (Time Management)
8. மனித உறவுகள் (Human Relations)
9. மாற்றம் / புதுப்பித்தல் (Changes – Update)
10. சந்தைப்படுத்துதல் (Marketing)
இந்த 10 தாரக மந்திரங்களை முழுமனதுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுத்தினால் நம்மாலும் சாதிக்க முடியும்.
முயற்சியும் பயிற்சியும் செய்தால் சாதாரணமானவர்களும் சாதனையாளராகலாம்.

தொடரும்…

2004 டிசம்பர், 26
சொல்லிக் கொள்ளாமல் சுனாமி வந்தநாள். தன் பெயரைப் பிரபலப்படுத்த ஆழிப்பேரலை கடலோரக் கிராமங்களை காவு கொண்ட நாள். படகுகளைப் பந்தாடி குப்பங்களை கொலைக்களம் ஆக்கிய நாள்.
பரங்கிப் பேட்டைக்கும் அந்த பாதரவு வந்தது. கடலோர மக்கள் பசியும் பட்டினியுமாய் அடுத்தடுத்துள்ள தெருக்களில் நிர்க்கதியாய் நின்றனர்.
அன்று ஓர் மணவிழ என்பதால் அங்குள்ள முஸ்லிம்கள் ஒன்றாய்க் கூடியிருந்தனர். அவர்கள் கவனம் மணப்பந்தலை விட்டு மீனவர்களின் இயலாமையின் பக்கம் சாய்ந்தது. விழாவுக்காக சமைக்கப்பட்ட உணவு மீனவர்களின் பசியைப் போக்க உதவியது. அடுத்து பாதிக்கப்பட்டவர்களை நோக்கி சகோதர சமுதாயத்தின் உதவிக்கரங்கள் நீண்டன.
அன்றுவரை ஒரு வகையான சுவருக்குப்பின் வாழ்ந்தவர்களை சுனாமி ஒன்றாக்கியது. சுவற்றை உடைத்தெறிந்தது.
நிலைமைகள் சரியாகி கடலுக்குச் சென்ற மீனவர்கள் தாய் பிள்ளை அன்போடு அனைத்தையும் பள்ளிவாசல் வாயிலுக்குக் கொண்டு வந்து கொட்டினர்.

2. parangip pettai 6
சுனாமி செய்த ஒரு நாள் பாய்ச்சலால் முஸ்லிம்களும் மீனவர்களும் ஒன்றாகினர். உறவுக்கரம் பற்றினர்: இவ்வுறவை மேம்படுத்தியவர் பேரூராட்சியின் மேனாள் தலைவர் யூனுஸ் அவர்கள்.
கடலோரங்களில் பெரும்பாலும் மீனவமக்களும் முஸ்லிம் மக்களுமே வாழ்கின்றனர். இவ்வாறு வாழும் இரு சமுதாயங்களிடையே நீண்ட உறவுகளோ நெருக்கமான தொடர்புகளோ இல்லை. இதை சுனாமி பரங்கிப்பேட்டையில் புரட்டிப்போட்டது.
கடல், கடலோர மக்களை ஆய்வு செய்துவரும் பேராசிரியரும் ‘பழவேற்காட்டிலிருந்து நீரோடிவரை’ எனும் நூலாசிரியருமான வஹீதையா கான்ஸ்டைன் கடற்புரத்து மக்களிடையேயுள்ள தொடர்பின்மையைப் பற்றிக் கவலைப்படுகிறார். இனிவரும் ஏதாவது கட்டுரையில் நாம் கடற்புரத்து மக்களின் தொடர்பையும் தூர விலகி நிற்பதையும் பற்றி விரிவாகப் காண்போம்.
பரங்கிப் பேட்டை கடலூர் மாவட்டத்து பாழைய துறைமுக ஊர். இங்கிருந்து கடலூர் 30 கி.மீ. தூரத்தில் வடக்கில் உள்ளது.
பழம்பெரும் நகரான பரங்கிப்பேட்டையின் பழைய பெயர்கள் : ஆதிமூலோவரம், வருணா புரி, கிருஷ்ணாபுரி, கிருஷ்ண பட்டினம், முத்து கிருஷ்ணபுரி, நாயக்கர்களின் ஆட்சியிலிருந்த துறைமுகப்பட்டினம் முஸ்லிம்களின் பெருக்கத்திற்குப்பின் முகமதுபந்தர் எனப் பெயர் பெற்றுள்ளது. பந்தர் என்பதன் பொருள் துறைமுகப்பட்டினம் என்பதே. பரங்கியர்களின் குடியேற்றத்திற்குப்பின் பரங்கிப்பேட்டை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நோவா என்பது நூஹ் நபியைக் குறிக்கும் சொல் நூஹ் நபி கடற்பயணத்தைக் குறிக்கவோ PORTNOVA எனப் பெயரிடப்பட்டுள்ளது!
இவ்வூரின் பழம்பெருமைகளில் முக்கியமானது நபித்தோழர் உக்காஸா (ரலி) அவர்களின் அடக்கத்தலம். ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இஸ்லாமியப் பேரொளி கிழக்குக் கடலோரங்களில் பரவியதைப் பற்றியும் உக்காஸா (ரலி) பற்றியும் பாகிஸ்தானின் நபீஸ் அகாடமி வெளியிட்டுள்ள நூலொன்று விரிவாகப் பேசுகிறது.
‘ஆயினேயே அகீகத்துல் நுவஸி’ -உண்மையான வரலாற்றுக் கண்ணாடி- எனும் நூல் பரங்கிப் பேட்டை பற்றி பேசுகிறது. இதன் ஆசிரியர்: மௌலானா அக்பர் ஷாஹ் கான் நஜீப் ஆபாதி. இந்தநூல் தவிர ‘இந்தியத் துறவிகள் – ‘Saints of india’ எனும் நூலும் உக்காஸா (ரலி) பற்றி கூறுகிறது. இவரின் அடக்கத்தலம் ‘கண்டெடுக்கப்பட்ட பள்ளி’ என அழைக்கப்படுகிறது. முந்தைய கால கட்டத்தில் இப்பகுதியில் புகையிலைத் தோட்டங்கள் இருந்தனவாம்.
ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே அரபு வணிகர்கள் பரங்கிப்பேட்டைக்கு வந்து சென்றுள்ளனர். உக்காஸா (ரலி) வருகையின் போது வந்தவர்களும் அவரால் இஸ்லாத்தைத் தழுவியவர்களும் இறைநேசர்களாகி பரங்கிப்பேட்டை முழுவதும் அடங்கியுள்ளார்கள். அவர்களின் கபரடிகள் 360-வும் இன்று சிறிய பெரிய தர்காக்களாக உள்ளன.
எட்டு, ஒன்பது, பத்து என நூற்றாண்டுகள் ஓட பதிமூன்றாம் நூற்றாண்டில் அரபகத்திலிருந்து வந்து கடியேறிய பனிரெண்டு பட்டினங்களில் பரங்கிப்பேட்டையும் ஒன்று. இவர்களின் பண்பாட்டு அடையாளம் பெண்வீட்டுக்கு மாப்பிள்ளை சென்றுவாழ்வது, பெண்ணுக்கு சீதனமாய் வீடு வழங்குவது. இப்பழக்கம் பரங்கிப்பேட்டையிலும் உண்டு. இப்பழக்கம் இல்லாத முஸ்லிம் குடிகளும் இங்கு உண்டு.

2. parangip pettai 2
5000 முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட பரங்கிப்பேட்டையில் பதினாறு பள்ளிவாசல்கள் இருக்கின்றன. இன்று வெளிநாடுகளுக்கு சென்ற முஸ்லிம்கள் அன்று கப்பல்காரர்களாய விளங்கியுள்ளனர், இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அயல்நாடுகளில் உள்ளனர்.
முனைவர் ஜெ. ராஜாமுகம்மது எழுதியுள்ள ‘தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு’ எனும் நூல் பரங்கிப்பேட்டையின் பண்டைய வரலாற்றைப் பாறைசாற்றுகிறது.
துறைமுகத்தின் அமைவிடமே அதன் மேன்மையை மேலும் மேலும் உயர்த்தும் பரங்கிப்பேட்டைத் துறைமுகத்தின் அமைப்பு கடலும் ஆறும் சங்கமிக்கும் இடமாக இருக்கிறது. கொள்ளிடத்திலிருந்து கிளைபிரிந்துவரும் வெள்ளாறு கடலில் கலக்கும் இடத்தில் ஆற்றின் இடதுபக்கம் முகத்துவாரம் அமைந்துள்ளது. முகத்துவாரம் வழியாக மரக்கலங்கள் ஆற்றில் நங்கூரமிடப்படும். தெற்கே பிச்சாவரம் சதுப்பு நில சுரப்புன்னைக் காடுகள் பாதுகாப்பாய் அமைந்துள்ளன.
கிழக்குக்கடற்கரை துறைமுகங்கள் கிரேக்கம், ரோமர், யாவனர் என தொடர்புவைத்திருந்த வணிக மையங்கள். அரபு முஸ்லிம்கள் வருகை தந்து கொண்டிருந்த முகத்துவாரங்கள் காலப்போக்கில் போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், பிரெஞ்சியர், ஆங்கிலேயர்கள் வசம் கைமாறின. இவர்களைப் பொதுவாக பரங்கியர் என வரலாறு கூறுகிறது.
இவர்களில் டேனிஷ்காரர்கள் தரங்கம்பாடியிலும், பரங்கிப்பேட்டையிலும் வணிகம் செய்துள்ளனர். இவர்களின் எச்சமாக தரங்கம்பாடியில் டேனிஷ் கோட்டையும் பரங்கிப் பேட்டையில் ‘டேனிஷ்மெண்ட் மிஷன் பள்ளி’யும் உள்ளன. இப்பள்ளிக்கு அண்ணல் காந்தி அடிக்கல் நாட்டியுள்ளார்.
டச்சுக்காரர்களை இலங்கையர் ஒல்லாந்தர் என்பர், பரங்கிப்பேட்டையிலும் அவர்கள் ஒல்லாந்தர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் நிறுவனங்கள் இருந்த பகுதி ‘ஒல்லாந்தர் தோட்டம்’ என்றும் கல்லறை ‘ஒல்லாந்தர் கல்லறை’ என்றும் இன்றும் குறிப்பிடப்படுகின்றன.
பரங்கிப்பேட்டையிலிருந்து துணிவகைகளும் சாயவகைகளும் (INDIGO) ஏற்றுமதியாகியுள்ளன. இவை கிழக்கு - மேற்கு நாடுகளை சென்றடைந்துள்ளன.
துணிமணிகளோடு அரிசி, நவதானியங்களும் ஏற்றுமதியாகின. யானை, குதிரைகளோடு, மிளகு, லவங்கம், பாக்கு, வாசனைத் திரவியங்களும் இறக்குமதியாகின. கெதா, பைகு, ஜோகர் போன்ற கிழக்காசிய நாட்டு மன்னர்கள் தம் கப்பல்களை பரங்கிப்பேட்டைக்கு அனுப்பினர்.
பரங்கிப்பேட்டை கப்பல் கட்டும் தொழிலில் புகழ்பெற்றிருந்தது. இங்கு கட்டப்பட்ட கப்பல்களை கிழக்காசிய பண்டம் நாட்டு சுல்தான் விரும்பி வாங்கியதாக ஆவணங்கள் உள்ளன. சிறந்த ஓடாவிகளாய் இருந்த முஸ்லிம்கள் கப்பல்களைக் கட்டியதோடு பழுது பார்ப்பதிலும் சிறந்து விளங்கியுள்ளனர். கப்பல் கட்டுவோர் கலப்பத்தர் எனவும் அழைக்கப்பட்டனர். கப்பல் கட்டதேவையான மரங்களை விற்க கிட்டங்கிகள் இருந்துள்ளன.
பரங்கிப்பேட்டை கப்பல் வணிகர்கள் கல்கத்தா முதல் மலாக்கா, அச்சை, பர்மா, மலாயா, இலங்கை ஆகிய இடங்களில் பெரும்வணிகம் செய்தனர். சென்ற இடங்களில் தங்கியும் தொழில் செய்துள்ளனர். சோழ மண்டலக்கடற்கரையிலிருந்து சென்று வாழ்ந்தவர்களின் தெருக்கள் சோழியர் தெரு என அழைக்கப்பட்டன.
முஸ்லிம்கள் வணிகர்களாக மட்டும் இருக்கவில்லை. அவர்கள் மாலுமிகளாகவும் கப்பல் தொழிலாளர்களாகவும் விளங்கியுள்ளனர். கப்பல் மாலுமிக்கு அரபு மொழியில் ‘நகுதர்’ எனப் பெயர். நகுதா எனும் பெயரோடு முஸ்லிம்கள் உள்ள ஊர்கள் பரங்கிப்பேட்டையும் நாகூரும் ஆகும். வேறு ஊர்களில் இப்பெயர் புழக்கத்தில் இல்லை.
இராமநாதபுர மாவட்ட புதுமடம் போன்ற ஊர் முஸ்லிம்கள் பெயரோடு ‘நகுதா’ எனப்பொருள்தரும் சம்மாட்டி எனும் சொல்லை பெயரோடு சேர்த்துக் கொள்கின்றனர். கப்பலின் மீகாமனே சம்மாட்டி ஆவார்.
பரங்கிப்பேட்டை வணிகர்கள் கிழக்காசியத் துறை முகங்களில் பெயர் சொல்லும் அளவில் தொழில் செய்துள்ளனர். மலாக்கா நாட்டு எபராக் துறைமுகத்தில் சித்திக்லெப்பை அந்நாட்டின் அரசு வணிகராக விளங்கியுள்ளார். ஷேக் சந்தா மரைக்காயர், ஷேக் இஸ்மாயில் மரைக்காயர் ஆகியோர் பர்மா துறைமுகங்களில் பெயர் பெற்றிருந்தனர்.
முகம்மது அலீ மரைக்காயர் பல கப்பல்களுக்குச் சொந்தக்காரராயிருந்துள்ளார். ஹபீபுல்லா மரைக்காயர் ‘படே தவுலத்’ எனும் கப்பலுக்குச் சொந்தக்காரராயிருந்துள்ளார். மீரா லெப்பை, பீர் மரைக்காயர் எனப் பலர் செல்வாக்கு மிக்க கப்பல் வணிகராய்த் திகழ்ந்துள்ளனர்.

2. parangip pettai 3
பரங்கிப்பேட்டை ஆற்காடு நவாபின் துறைமுகங்களில் ஒன்று. முகம்மது அலீ ஆற்காடு நவாபாக இருந்தபோது சஃப்பைனதுல்லா, சஃப்பைனத்துல் நபிம் ஆகிய இரு கப்பல்கள் அவர்களுக்குக் சொந்தமாக இருந்தன. இந்த இரு கப்பல்களும் பயணிகளோடு பொருட்களையும் ஏற்றிக்கொண்டு இங்கிருந்து அரபகத்துக்குப் புனிதப்பயணம் செல்ல பயன்பட்டிருக்கின்றன. இவற்றின் மாலுமிகளும் தொழிலாளர்களும் பரங்கிப்பேட்டை சகோதரர்களாய் இருந்துள்ளனர்.
பரங்கியரின் தொழில் போட்டியால் பரங்கிப்பேட்டை முஸ்லிம்கள் விவசாயிகளாய் மாறினர். அவர்கள் வெற்றிலைக் கொடிக்காரர்காளகவும் புகையிலை பயிரிடுபவர்களாகவும் உள்நாட்டு வணிகர்களாகவும் புதிய களங்களைக் கண்டனர். பலர் வெளிநாடுகளில் தங்கி புதிய வணிகங்களை மேற்கொண்டனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அருகில் இருப்பதால் பரங்கிப்பேட்டைக்காரர்கள் பட்டதாரிகளாக மாற வாய்ப்பேற்பட்டது. அவர்கள் பல்வேறு பணிகளில் சேர்ந்து உயர்வடைய கல்வி கை கொடுத்தது.
பரங்கிப்பேட்டை கடல் வளம் நிறைந்த பகுதி, இங்கு கடற்கரை கழிமுகம் சதுப்பு நிலம் ஆற்று நீரோடைகள் அனைத்தும் காணப்படுகின்றன. இந்த ஊரை கடல் ஆராய்ச்சிக்காக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறையினர் தேர்ந்தெடுத்து கடல் உயிரின ஆய்வு மையம் - Marine Biology Study Center - ஒன்றினை நிறுவியுள்ளனர்.
இந்த மையத்தில் கடல் உயிரினங்கள், பற்றிய ஓர் அருங்காட்சியகம் இருக்கிறது, இதனைக்காண ஏராளமான பெதுமக்கள் மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் தினமும் வருகின்றனர். ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள 10,000 புத்தகங்கள் கொண்ட நூலகமும் இங்கு இருக்கிறது. ஆய்வுக்காக ஒரு கப்பலும் நான்கு படகுகளும் கூட இங்கு உள்ளன. இந்த ஆய்வு மையம்தான் இந்தியாவில் கடல் உயிரின ஆய்வுக்கான தொடங்கப்பட்ட முதல் ஆய்வு நிலையமாகும்.
பேராசிரியர் சாதிக் அப்துல் அமீது சென்னை சதக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர், பரங்கிப்பேட்டைக்காரர், நல்ல நண்பர், ஆய்வாளரும்கூட, அவரை நான் பரங்கிப்பேட்டையில் சந்தித்தேன். அவர் பல அரிய தகவல்களைத் தந்தார்.
கி.பி. 1784 இல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்தார். அதன் நினைவுப் போர்க்கொடி கம்பமும் கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளன. ஹைதர் அலி தோல்வியைத் தழுவியதைப் பற்றிய கல்வெட்டு ஒன்று உண்டு. அப்போரில் மரணித்தவர்கள் ஹில்ரு நபி பள்ளிவாசல் கப்ரஸ்தானில் ஓய்வுறக்கத்தில் உள்ளார்கள்.
ஆசியாவின் முதல் இரும்புத் தொழிற்சாலை பரங்கிப்பேட்டையில் நிறுவப்பட்டிருந்தது. 1818 - இல் நிறுவப்பட்ட உருக்காலை ஜோயம் ஹீத் எனும் ஆங்கிலேய வணிகரால் உருவாக்கப்பட்டது. இங்கு கட்டிடங்களுக்கான வார்ப்படங்களும் பாலங்களுக்கான இரும்புத் தொகுதிகளும் வடிக்கப்பட்டு லண்டன், சிங்கப்பூர் என ஏற்றுமதி செய்யப்பட்டன. சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில்வே அலுவலகங்களில் கூட பரங்கிப்பேட்டை வார்ப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளாற்றங்கரையில் அமைக்கப்பட்ட இரும்பாலைக்கு சேலத்திலிருந்து இரும்புத்தாதுக்கள் நீர்வழியாகவே கொண்டுவரப்பட்டுள்ளன. நீர் வழி, கடல் வழிப் பயன்பாடுகள் உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் பரங்கிப்பேட்டை வளம் கொழிக்கும் ஊராகத் திகழ்ந்துள்ளது.
பரங்கிப்பேட்டை வெள்ளாறும் கடலூர் உப்பனாறும் இணைக்கப்பட்டு அந்நீர்த்தடம் புதுச்சேரியைக் கடந்து பக்கிங்காங்கால்வாயோடு சேர்க்கப்படும் திட்டம் செயல் படுத்தப்படாமல் போயிருக்கிறது. கடலோர ஆறுகள் இணைக்கப்பட்டு நீர்வழிப் பயணங்கள் தொடர்ந்திருந்தால் கிழக்குக் கடற்கரைச்சாலை பயணத்திற்கு இணையாக நீர்த்தடப் பயணங்களும் வளர்ந்திருக்கும்.
மதராஸ் பட்டினத்திலிருந்து கடலூர், பரங்கிப்பேட்டை, நாகப்பட்டினத்தைத் தொட்டு மலேயா, சிங்கப்பூர் சென்ற கப்பல்கள் பொருள்களோடு பயணிகளையும் ஏற்றிக் சென்றுள்ளன.
இன்றைய சாலைப் போக்குவரத்தோடு நீர் வழிப்போக்குவரத்தையும் கடல் வழிப் போக்குவரத்தையும் கற்பனை செய்து பாருங்கள், காக்கிநாடாவிலிருந்து பரங்கிப்பேட்டை வரை உருவாகியிருக்க வேண்டிய மூன்று வழிப்பாதைகள் தரைவழிப் பாதையாக மட்டும் சுருங்கிப் போய்விட்டது. இந்த சுருக்கத்தை இருப்புப்பாதை ஓரளவு விரிவடையச் செய்துள்ளது.
பேராசிரியர் சாதிக் அப்துல் அமீது சீறா புராணம் பற்றிய சில செய்திகளைச் கூறினார் சீறாப் புராணத்தின் கையேட்டுப் பிரதிகள் இரண்டு பரங்கிப்பேட்டையில் இருந்ததாகவும் அவை ஹாஜி காதர் அலி மரைக்காயர் ஜனாப் ஒலி சாகிபு ஆகிய இருவரின் வசம் இருந்ததாகவும் பேராசிரியர் கூறினார்.
அக்கையேட்டுப் பிரதிகளில் ஒன்று 1890 - இல் கண்ணமுது மகமூது புலவர் மூலம் பதிப்பிக்கப்பட்டு ஜனாப் அபுல் காசிம் மரைக்கார் இல்லத்தின் முன் போடப்பட்ட பந்தலில் வெளியிடப்பட்டதாகவும் பேராசிரியர் கூறினார்.
பரங்கிப்பேட்டையில் அடங்கப்பட்டிருக்கும் உக்காஸா (ரலி) பற்றி கூறிய பேராசிரியர் கோல்கொண்டாவிலிருந்து வந்து அடங்கியிருக்கும் இறைநேச செல்வர் அக்காஷா பற்றியும் எடுத்துரைத்தார். அக்காஷா தர்காவின் கந்தூரிவிழா மிகவும் பெரிய அளவில் நடந்ததாகவும் அங்கு நடந்த பெருஞ் சந்தையில் எல்லாப் பொருட்களும் தங்கு தடையின்றி கிடைத்தாகவும் என்னுடைய பரங்கிப்பேட்டை உறவினர் கவுஸ் பழைய கால நினைவுகளைக் கண்முன் கொண்டுவந்தார்.
எந்த ஊரிலும் இல்லாத அளவுக்க பரங்கிப் பேட்டையில் உள்ள தர்காக்களில் பெண் இறைநேசர் அரைக்காசு நாச்சியார் தர்காவும் ஒன்று. எமனிலிருந்து வந்து அடக்கமாகியிருக்கும் அன்னையின் சரியான பெயர் அல் குறைஷ் பீவி.
முற் காலத்தில் மூன்று முஸ்லிம்களின் ஊர்களுக்கு ‘வகுதை’ எனும் சிறப்புப்பெயர் சூட்டப்பட்டிருந்தது. அவை காயல்பட்டினம், கீழக்கரை, பரங்கிப்பேட்டை ஆகிய பட்டினங்களாகும். தொன்மைக்காலத்தில் பாரசீகத்தின் பாக்தாத் பெரும் புகழ் பெற்றிருந்த காரணத்தால் அந்த நகரத்தின் பெயரைத் தம் ஊர்களுக்கும் முஸ்லிம்கள் சூட்டி மகிழ்ந்தனர். பாக்தாத்தின் தமிழ் வடிவமே வகுதை. முந்தைய காலத்தில் கீழக்கரை, காயல்பட்டின வணிகர்கள் நாகூரில் குடியேறியதைப் போல் காயல் வணிகர்கள் பரங்கிப்பேட்டையிலும் குடியேறியிருந்தனர். அவர்கள் வாழ்ந்த தெரு காயல் தெரு.
டச்சுக்காரர்கள் பழவேற்காட்டில் நாணயங்களை வெளியிட்டு புழக்கத்தில் விட்டது போல் பரங்கிப்பேட்டையிலும் நாணயங்களை வெளியிட்டுள்ளனர். அவை ‘பரங்கிப்பேட்டை பகடா’ என குறிப்பிடப்பட்டன.

2. parangip pettai 8
பரங்கியர் காலத்தில் பரங்கிப்பேட்டையில் நெசவாலைகளும் சாய ஆலைகளும் முக்கியம் வகித்தன. டச்சுக்காரர்கள் கூட சாய ஆலை வைத்திருந்தனர். சாய ஆலை இருந்த பகுதி வண்ணாரப்பாளையம் என இன்றும் அழைக்கப்படுகிறது. கடலூரிலும் வண்ணாரப்பாளையம் உள்ளது. மதரஸாபட்டினத்திலும், திருநெல்வெலியிலும் வண்ணாரப்பேட்டைகள் உள்ளன.
இன்று பரங்கிப்பேட்டையில் நெசவுத் தொழில் இல்லையென்றாலும் அடுத்துள்ள புவனகிரியில் கைத்தறி தொழில் சிறப்புற்று விளங்குகிறது. முஸ்லிம்கள் கணிசமாக வாழும் புவனகிரியில் இரு பள்ளிவாசல்கள் உள்ளன. முட்லூர், பெருமாத்தூர் பெரியபட்டு ஆகிய ஊர்களில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கின்றனர். முட்லூரில் மட்டும் நான்கு பள்ளிவாசல்கள் உள்ளன. அடுத்துள்ள சிதம்பரத்தில் ஆறு பள்ளிவாசல்கள் உள்ளன.
பழம் புகழைப் பறை சாற்றுவதுபோல் கலங்கரை விளக்கமும் சுங்க அலுவலகமும் தோணித்துறையும் விளங்குகின்றன. புவனகிரி வட்டத்திலும் சிதம்பரம் தொகுதியிலும் உள்ள பரங்கிக்பேட்டை நாற்பதுக்கு மேற்பட்ட தெருக்களைக் கொண்ட பேரூர். ஒவ்வொரு தெருவும் கணிசமான அகலம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு சார்பு நீதிமன்றமும் கிளைச் சிறைச்சாலையும் கூட இருக்கின்றன.
பதிமூன்றாம் நூற்றாண்டில் அரபகத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்த முஸ்லிம்கள் பனிரெண்டு கிழக்குக் கடற்கரைப்பட்டினங்களில் வாழ்ந்து வருவதாக ஆவணங்கள் உள்ளன. காயல்பட்டினத்திலிருந்து பழவேற்காடு வரை ஆங்காங்கு அவர்கள் பல்லாண்டுகளாக வாழ்ந்த வருகின்றனர். அவர்கள் அவர்களுக்குள்ளேயே அகமணம் புரிந்து வாழ்கின்றனர்.
பழவேற்காட்டின் அருகில் அவர்களின் வகையறா இல்லாததால் அவர்களுக்குள்ளே மணம் முடித்துக் கொள்கின்றனர். பரங்கிப்பேட்டைக்காரர்கள் கடலூரும் திரு முல்லை வாசலும் அருகில் இருப்பதால் அகமணம் செய்து கொள்கின்றனர். என்றாலும் தற்போது அவ்வழக்கம் மாறிவருகிறது. கீழக்கரை - காயல்பட்டின மரைக்கார்கள் அவ்வழக்கத்தைத் தொடர்கின்றனர். தொலைவைப் பார்க்காமல் இரு ஊராரும் தொடர்ந்து தம் உறவைப் பேணி வருகின்றனர்.
பரங்கிப்பேட்டைக்காரர்கள் புதுவை, கோட்டக்குப்பம், நெல்லிக்குப்பம் வரை சம்பந்தம் செய்கின்றனர். சில மாதங்களுக்கு முன் காரைக்காலில் ஒரு தம்பியைச் சந்தித்தேன். அவர் புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவக்கடிக்காரர். அவர் தன் சகோதரியை பரங்கிப்பேட்டையில் மணம் முடித்துக் கொடுத்திருப்பதாக சொன்னார்.
தொடக்கத்தில் சிங்கப்பூர், மலேசியா முதலிய கிழக்காசிய நாடுகளில் சம்பாதித்ததோடு சம்பந்தமும் செய்து வாழ்ந்த பரங்கிப்பேட்டைக்காரர்கள் இன்று அரபு நாடுகள் முழுதும் சென்று சம்பாதித்து வாழ்கின்றனர்.
அமைதியான ஊர், அழகான ஊர், பழம்பெருமை வாய்ந்த ஊர் பரங்கிப்பேட்டை. இப்பேரூரை நீங்கள் ஒரு முறை சென்று கண்டு வரவேண்டும். பழங்கால நினைவுகளை நெஞ்சில் கொண்டு வர வேண்டும்.

உயிர்களில் வித்தியாசமில்லை மனிதர்கள் அனைவரும் மனிதர்களே. ஆனால் மதம், மொழி, இனம், நிலம்…

 அ. முஹம்மது கான் பாகவி

மாணவக் கண்மணிகளே! அரபிக் கல்லூரியில் நீங்கள் மாசுமறுவற்ற முறையில் கற்க வேண்டிய மிக முக்கியமான கலை “இறையியல்” ஆகும். ‘கடவுள்’ என்ற தத்துவத்தையும் அதை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடுகளையும் குறித்த துறையே ‘இறையியல்’ (Theology) எனப்படுகிறது. இதையே, இறைவனின் தன்மை (இறைமை), இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு ஆகியன பற்றிய துறை என்றும் கூறுவர்.
மத்ரஸாக்களில் இதையே ‘அகீதா’ (நம்பிக்கை) என்று குறிப்பிடுவர். இறைவன் என்றால் யார்? அவனது மெய்மை என்ன? அவனுக்கே உரிய தனித்தன்மைகள் யாவை? அவன் நம்பச்சொன்ன இறை மார்க்கம், இறைத்தூதர், இறைமறை, வானவர்கள், மறுமை, மரணத்திற்குப்பின் உயிர் கொடுத்து எழுப்பப்படல், இறைவனின் விசாரணை, அவனது தீர்ப்பு, நல்லோருக்கு அழியா சொர்க்கம், தீயோருக்கு நரகம்… போன்ற நம்பிக்கைகள் தொடர்பாக அறிந்து, ஐயத்திற்கிடமின்றி திடமாக நம்புவதே ‘அகீதா’ எனப்படுகிறது.
இந்த நம்பிக்கைகளும் கொள்கைகளும்தான் மார்க்கத்தின் அஸ்திவாரம்; செயல்கள், வழிபாடுகள் அனைத்தும் அதன் கிளைகள். இந்த அடிப்படை நம்பிக்கைகளைத்தான் ஆரம்பமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்குப் போதித்தார்கள்; மக்களின் ஆழ்மனதில் பதியச்செய்தார்கள்.
இருக்கின்றான் இறைவன்; அவன் ஒருவன்; அவனுக்கு இணைதுணை கிடையாது; எந்தத் தேவையும் இல்லாதவன். அவனை யாரும் பெற்றெடுக்கவில்லை. அவனும் யாரையும் பெற்றெடுக்கவில்லை. அவன் இப்படிப்பட்டவன் என்று சுட்டிக்காட்டுவதற்கு -அவனுக்கு நிகராக யாருமில்லை; எதுவுமில்லை.
அவன்தான் இந்தப் பேரண்டத்தைப் படைத்தான். அதிலுள்ள அனைவரையும் அனைத்தையும் படைத்தான். ஒவ்வொன்றுக்கும் ஒரு விதியை ஏற்படுத்தினான். அந்த விதியின்படி ஒவ்வொரு பொருளும் இயங்கிவருகிறது. அவன் அறியாது துரும்பும் அசையாது. அவனுக்குத் தெரியாமல் யாரும் எங்கும் எதையும் எப்படியும் செய்ய முடியாது.
நீங்கள் எண்ணுவது, கண் இமைப்பது, செய்வது, உங்கள் பிறப்பு, வாழ்க்கை, உயர்வு-தாழ்வு, சுகம்-துக்கம், எழுவது-வீழ்வது, இறுதியாக இறப்பு, இறப்புக்குப்பின் உயிர் கொடுத்து எழுப்புவது… என ஒவ்வோர் அசைவும் அவனது திட்டப்படியும் நாட்டப்படியுமே நடக்கிறது. அவை அனைத்தையும் அவனே நிகழ்த்துகிறான். எல்லாம் அறிந்தவன். சர்வ வல்லமை படைத்தவன். கருணையாளன். கடுமையாகத் தண்டிப்பவன். அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். நல்வழி இது; தீவழி இது என தன் தூதர்கள் மூலம் அறிவித்தவன்; தன் வேதத்தில் விவரித்தவன்.

ஒற்றைக் கடவுள் கொள்கை
இதில் இரண்டு கோட்பாடுகள். 1. இறைவன் இருக்கின்றான். இந்தப் பிரபஞ்சம், வரையறுக்கப்பட்ட கச்சிதமான ஒரு விதியின்கீழ் இயங்கிவருவதே இதற்குச் சாட்சி. காரணம், வரையறுத்த அந்தப் பேராற்றல்தான் இறைவன்.
2. அவன் ஒருவன். கடவுள் பலராக இருந்திருப்பின் வானமும் பூமியும் என்றோ சீர்குலைந்திருக்கும். அதிகாரத்தை நிலைநிறுத்த ஒவ்வொரு கடவுளும் முயலும்போது போட்டி ஏற்பட்டு, நீயா-நானா என்ற தன்முனைப்பால் படைப்புகள் பரிதாபத்திற்குரிய நிலையை அடைந்திருப்பர்.

1 aalim9 4
இந்த ஒற்றைக் கடவுள் கொள்கை (தவ்ஹீத்)தான், மனிதன் படைக்கப்பட்ட நாளில் இருந்தே மனிதர்களின் நம்பிக்கையாக இருந்துவந்தது. இடையில், வல்லமைக்கு முன் பணியும் மனித புத்தியால், யாருக்கெல்லாம் எதற்கெல்லாம் வல்லமை உண்டோ அதையெல்லாம் கடவுளாக நம்ப ஆரம்பித்தான் மனிதன். சர்வாதிகாரிகள், ராஜாக்கள், குருக்கள், ஆசான்கள், ஆன்றோர்கள், சாதனையாளர்கள்… என யாரைக் கண்டெல்லாம் பிரமித்துப்போனானோ அவர்களையெல்லாம் கடவுளாக்கி, சிலைகள் வடித்து வழிபடத் தொடங்கிவிட்டான் மனிதன்.
ஒரு கட்டத்தில் பெற்ற தாயைப் பெண் தெய்வம் என்றான். தந்தையை, ‘ஆளாக்கிய சாமி’ என்றான். பிறந்த மண்ணை, செய்யும் தொழிலை, காப்பாற்றிய மருத்துவரை, கற்பித்த ஆசிரியரை, கை கொடுத்த நண்பனை, மனதுக்குப் பிடித்த நடிகரை, வாக்களித்த பொது மக்களை, பதவி கொடுத்த முதல்வரை, நெருக்கடியில் உதவியவரை… இப்படிக் கொஞ்சமும் விவஸ்தையே இல்லாமல் கண்டவரையெல்லாம், கண்டதையெல்லாம் கடவுள் என்று சொல்லி ஏமாந்துபோனான் சாமானியன்.
வேதங்களில் ஓரிறை
இறைவேதங்கள் அனைத்திலும் ஒற்றைக் கடவுள் கொள்கைதான் பறைசாட்டப்பட்டுள்ளது; பலதெய்வக் கொள்கை மறுக்கப்பட்டுள்ளது; கண்டிக்கப்பட்டுள்ளது. இதோ இறைவேங்களில் இறுதியான பரிசுத்த மாமறை திருக்குர்ஆன் பகர்வதைப் பாருங்கள்:
(நபியே!) “என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே, என்னையே வழிபடுங்கள்” என்று நாம் அறிவிக்காமல் உமக்கு முன்னர் எந்தத் தூதரையும் அனுப்பிவைக்கவில்லை. (21:25)
ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் தூதரை நாம் அனுப்பியிருந்தோம். (அவர்கள்) “அல்லாஹ்வையே வழிபடுங்கள்; தீய சக்திகளைத் தவிர்த்திடுங்கள்” என்றே பரப்புரை வழங்கினார்கள். (16:36)
யூத, கிறித்தவ வேதங்கள்
திருக்குர்ஆன் மட்டுமன்றி, யூத, கிறித்தவ வேதங்களான விவிலியங்களும் ஒற்றைக் கடவுள் கொள்கைக்கே சாட்சியம் அளிக்கின்றன. இறைத்தூதரை, ‘இறைவன்’ என்று வருத்திக்கொண்ட மனிதர்களின் பிழைக்கு வேதம் என்ன செய்யும்?
விவிலியம் பழைய ஏற்பாடு கூறுவதைக் கவனமாகப் படியுங்கள்!
உன்னை அடிமைத்தள வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணின என்னையன்றி உனக்கு வேறெ தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்!
மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கின்றவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்ரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்! (யாத்திராகமம், 20:2-5)
இந்நிலையில், அக்கால யூதர்கள், இறைத்தூதரான உஸைர் (அலை) அவர்களை (எஸ்றா) தேவனின் குமாரர் என்று சொல்லிவந்தார்கள் எனத் திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது. (9:30)
விவிலியம் புதிய ஏற்பாடு (பைபிள்) சொல்லும் தீர்ப்பைப் பாருங்கள்!
உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக! (லூக்கா, 4:8)
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. (மத்தேயு, 7:21)
உண்மை இவ்வாறிருக்க, இறைவனின் அடியாரும் தூதருமான ஈசா (அலை) அவர்களை – இயேசுவை - கர்த்தரின் (அல்லாஹ்வின்) குமாரர் என்கின்றனர் கிறித்தவர்கள் சிலர் என எடுத்துரைக்கின்றது திருக்குர்ஆன் (9:30).
இன்னும் சிலர், பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் சேர்ந்து ஒருமித்த கடவுள் என்பர். இதையே ‘திரித்துவம்’ (Trinity) என்கிறார்கள். இதையும் குர்ஆன் சுட்டிக்காட்டத் தவறவில்லை. (5:73)
வேறுசிலர், மூன்றின் மொத்தமும் கடவுள்தான்; ஒவ்வொன்றும் தனித்தனியாகவும் கடவுள்தான் என்பர். இதன்படி, கடவுள்கள் மூவர் என்றாகும்.

இந்து வேதங்கள்
இந்துக்கள் தங்களின் வேதங்கள் என்றும் உபநிஷத்கள் என்றும் போற்றுகின்ற ஏடுகள் சொல்வதை இனிக் காண்போம்:
1. யா இக் இத்முஸ்தி இ (ரிக் வேதம்: 6:45:16) சமஸ்கிருத வாக்கியமான இதன் பொருள்: வழிபாட்டுக்குரியவன் இறைவன் ஒருவனே!
2. மா சிதன்யதிவி சன்சதா (ரிக்வேதம், 8:11) பொருள்: அவனையல்லாது வேறு எவரையும் வழிபடாதீர்கள்.
3. சந்தம் தமப்ரவசந்தியே அஸம்பூதம், உபாஸதே ததபூய இவ தே தமயே ஸம்பூத்யாம்ரதா (யஜூர் வேதம், 40:9). பொருள்: யார் அசம்பூதியை –இயற்கையை- வழிபடுகிறார்களோ அவர்கள் இருளில் இருக்கிறார்கள். படைக்கப்பட்டதை வழிபடுபவர்கள் ஆழ்ந்த இருளுக்குள் செல்கிறார்கள்.
4. ஏகம் ஏவல் அத்வீதயம் (சாந்தோ சியா உபநிஷத், 6:2:1). பொருள்: அவன் ஒருவனே; வேறு எவரும் இல்லை.
5. நாதஸ்தி பிரதிம அஸ்தி (ஸ்வேத்தாஸ் வரதா உபநிஷத், 4:19). பொருள்: அவனுக்கு நிகராக ஒன்றுமில்லை.
6. பிறப்பும் முடிவும் அற்ற என்னை, மயங்கிய இவ்வுலகு அறிவதில்லை. (பகவத் கீதை, 7:25)
இம்மக்கள் தாங்கள், வேதங்கள் என்று நம்பும் இவற்றின் கூற்று ஓரிறைக் கொள்கையாக இருக்க, பலதெய்வக் கொள்கையை எப்படி ஏற்றனர் என்று தெரியவில்லை. ஒரே பரம்பொருள் என்று கூறும் இந்து சமயம், எங்கும் நிறைந்த, எப்போதும் உள்ள, எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட, எல்லாவற்றிலும் நிறைந்த சர்வ வல்லமை கொண்ட பரம்பொருள், பல்வேறு வடிவங்களாக வெளிப்படுகிறது என்று சொல்கிறதாம்!

1 aalim9 5
மனிதர்களின் சராசரி அறிவுக்கும் புலனுக்கும் புரிவதற்காக வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டாலும் பரம்பொருள் ஒன்றே என்பது இந்து மதத்தின் ஆழ்ந்த நம்பிக்கையாகும். (பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்)
ஆக, ஒற்றைக் கடவுள் கொள்கையை – தவ்ஹீதை - ஏதோ ஒரு வகையில் ஒப்புக்கொள்ளும் இச்சமயத்தார், சுற்றிவளைத்து அந்த ஏகனுக்கு இணைகளாக – நிகர்களாகப் பல படைப்புகளை நம்புகின்றனர். படைப்பாளன் ஒதுபோதும் படைப்பாக இருக்க முடியாது; படைப்பின் வடிவத்தையும் பெற முடியாது. அவனுக்கு நிகராக எந்தவொன்றும் இல்லை -என்பதில் இஸ்லாம் உறுதியாக இருக்கிறது.
இதனாலேயே, திருக்குர்ஆன்மீது நம்பிக்கை கொண்டுள்ள முஸ்லிம்கள், ஏக இறைவனைத் தவிர வேறு யாரையும் கடவுள் என்றோ, கடவுளின் மறுபிறவி என்றோ, கடவுளைப் போன்றவர் என்றோ ஒருகாலும் சொல்லமாட்டார்கள்.
அவர் இறைத்தூதராகவோ பெரிய மகானாகவோ இருக்கட்டும்! ராஜாதிராஜனாகவோ இருக்கட்டும்! பெற்ற தாயாக, சொல்லிக்கொடுத்த குருவாக, வேலை கொடுத்து அரவணைத்த முதலாளியாக, யாராகவும் இருக்கட்டும்! யாருமே கடவுளுக்கு நிகரானோர் அல்லர்; நிகரானோர் என எண்ணுவதுகூட ‘ஷிர்க்’ எனும் இணை கற்பித்தல் ஆகிவிடும் – என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களே முஸ்லிம்கள் ஆவர்.
                                                                                                                                                                                                         (சந்திப்போம்)...........

111. தேமல், ஊறல், சொறி சிரங்கு, வியர்வை நாற்றம் தீர : ஏலகிரி…
பிப்ரவரி மாத தலையங்கம் முஸ்லிம் சமூகம் கவனிக்க மறந்த பகுதியை நினைவூட்டியுள்ளது. நவீன…
நீதித்துறை, நிர்வாகத்துறை, சட்டமியற்றும் துறை, பத்திரிக்கைத் துறை ஆகிய நான்கும் நாட்டின் ஜனநாயகத்தைத்…
வலிமையான வணிகச் சமூகம் கட்டுரை ஊக்கப்படுத்தும் ஆக்கமாக உள்ளது. நீண்ட தமிழ கடற்கரையின்…
ஒவ்வொரு ஊர்களுக்குப் பின்னாலும் மறைந்திருக்கும் வரலாறுகள், மனிதர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் சகோதரர்…