தொடர் கட்டுரைகள்

தொடர் கட்டுரைகள் (62)

திங்கட்கிழமை, 26 நவம்பர் 2018 14:00

முதல் தலைமுறை மனிதர்கள் -20

Written by

                                                                                                                                                                                                            - சேயன் இப்ராகிம்
சமுதாயப் புரவலர்
மதுரை முஸ்தபா ஹாஜியார்

கூடல் மாநகர் என அழைக்கப்படும் மதுரை இந்தியாவிலுள்ள பழம் பெரும் நகரங்களில் ஒன்றாகும். பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இந்நகரில் நான்கு தமிழ்ச் சங்கங்கள் பல்வேறு கால கட்டங்களில் தோன்றிச் செயல்பட்டு தமிழ்ப்பணி ஆற்றியுள்ளன. பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்நகரை சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம் சுல்தான்கள் ஆட்சி புரிந்துள்ளனர்.
ஆங்கிலேய கம்பெனி ஆட்சியை எதிர்த்துப் போராடிய வீரர் கான்சாகிப் இந்த நகரில் தான் வீர மரணம் எய்தினார். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணிப் பங்கு வகித்த முகம்மது மௌலானா சாகிப், நாட்டு விடுதலைக்குப் பின்னர் முஸ்லிம் லீகின் முதல் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புடன் பணியாற்றிய எஸ்.எம். ஷெரீப் சாகிப் ஆகிய பெருமக்களைத் தந்த பெருமை மதுரை நகருக்குண்டு. அந்த நன்மக்களின் வரிசையில் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருந்த ‘எட்டெழுத்து முஸ்தபா ஹாஜியார்’ என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட முஸ்தபா அவர்களைப் பற்றித்தான் இந்த இதழில் பார்க்க விருக்கிறோம்.
பிறப்பு - சிறப்பு:
முஸ்தபா ஹாஜியாரின் பூர்வீகம் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கடற்கரை நகரமான தொண்டியாகும். இவ்வூர் முஸ்லிம்கள் கப்பல் வணிகத்தில் சிறப்புற்று விளங்கினர். பல மார்க்க அறிஞர்களையும், எழுத்தாளர்களையும் தமிழ் கூறும் உலகிற்குத் தந்த பெருமை இந்த ஊருக்குண்டு. முஸ்தபா ஹாஜியாரின் மூதாதையர்கள் இந்த ஊரிலிருந்து இடம் பெயர்ந்து வந்து மதுரை கீழ வெளிப் பகுதியில் குடியேறி வாழ்ந்து வந்தனர். அந்த மரபில் வந்த மதார் முகைதீன் - முகம்மது பாத்திமா பீவி தம்பதியினரின் மகனாக 15.03.1928 அன்று முஸ்தபா பிறந்தார். இவரது விலாசம் (இனிசியல்) T.S.N.M.S.A.P.M. என எட்டு எழுத்துகளைக் கொண்டிருந்ததால், இவர் ‘எட்டெழுத்து முஸ்தபா’ என அழைக்கப்பட்டார். இந்த விலாசத்தின் விளக்கம் பின்வருமாறு.
T - என்பது தொண்டி இராவுத்தர்
S - என்பது சிக்கந்தர் இராவுத்தர்
N - என்பது நைனாமுகம்மது இராவுத்தர்
M - என்பது மதார் முகம்மது இராவுத்தர்
S - என்பது ஷேக் இராவுத்தர்
A - என்பது அஹமது இராவுத்தர்
P - என்பது பீர் இராவுத்தர்
M - என்பது முகம்மது இராவுத்தர்
இவரது முழுப்பெயர் ஷேக் அகமது பீர் முகம்மது முஸ்தபா ஆகும். இக் குடும்பத்தினர் மிகப்பெரிய நிலச்சுவான்தார்களாக விளங்கினர். இவர்களுக்கு மதுரை நகரை ஒட்டிய கிராமங்களிலும் தேனி, உத்தமபாளையம் ஆகிய வைகை ஆற்றுப் பாசனப் பகுதிகளிலும் பன்னூற்றுக்கணக்கான நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் இருந்தன. இன்றைக்கும் இருக்கின்றன.
எனவே முஸ்தபா ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் தான் பிறந்தார். அவர் தனது தொடக்க மற்றும் இடை நிலைக் கல்வியை மதுரையிலுள்ள செயின்ட் மேரீஸ் உயர்நிலைப் பள்ளியில் கற்றுத் தேறினார். மார்க்கக் கல்வியிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். விவசாயப் பணிகளைக் கவனிக்க வேண்டியதிருந்ததால் இவர் உயர்கல்வி கற்கச் செல்லவில்லை.
சமயப் பணிகள்:
முஸ்தபா ஹாஜியார் இளமையிலேயே சமுதாயப்பற்றும், மார்க்கப்பற்றும் மிக்கொண்டவராகத் திகழ்ந்தார். அவர் தனது வருமானத்தின் ஒரு பகுதியை சமயப் பணிகளுக்கு வாரி வழங்கினார். புதிய பள்ளிவாசல் கட்டிடவும், ஏற்கனவே இருக்கும் பள்ளிவாசல்களை விரிவுபடுத்திடவும், மத்ரஸாக்களுக்கும் தாராளமாக நிதி உதவி செய்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ‘ஜாமிஆ மஹ்ஸனுத் தாரைனி’ என்ற மத்ரஸாவை நிறுவி சில ஆண்டுகள் நடத்தி வந்தார்.
அந்தப் பகுதியில் பேருந்து நிலையத்திற்கு அருகில் 1902 ஆம் ஆண்டு தனது தந்தையாரால் கட்டப்பட்டு நடத்தப்பட்டு வந்த தொ.சி. பள்ளிவாசல் என்ற இறையில்லத்தைத் தொடர்ந்து நிர்வகித்து வந்தார். மதுரை தாசில்தார் பள்ளிவாசலின் முத்தவல்லியாக நாற்பது ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். குழந்தைகள் சீர்திருத்தப் பள்ளியின் பொருளாளராகவும் சில ஆண்டுகள் பொறுப்பு வகித்தார்.
அல் அமீன் கைத் தொழில் கல்விச் சங்கம்:
முஸ்தபா ஹாஜியாரும், மதுரையின் பிரபல கண் மருத்துவர் டாக்டர் சத்தாரும் பிற சமுதாயப் பிரமுகர்களுடன் இணைந்து 1960 ஆம் ஆண்டு ‘அல்அமீன் கைத்தொழில் கல்விச் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினர்.
மதுரை நகரிலுள்ள முஸ்லிம்கள் கல்வி பயில பள்ளிக் கூடமும் ஆதரவற்ற முஸ்லிம் ஏழைச் சிறுவர்களின் பராமரிப்பிற்காக ஒரு அனாதை நிலையமும் தொடங்க வேண்டுமென்பது தான் இந்தச் சங்கத்தின் செயல்திட்டமாக இருந்தது. 1957ஆம் ஆண்டு பாளையங்கோட்டையில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்த முஸ்லிம் அனாதை நிலையத்தைப் பார்வையிட்டு வந்த முஸ்தபா ஹாஜியாருக்கு மதுரையிலும் அது போன்ற ஒரு அனாதை நிலையத்தைத் தொடங்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது.
அந்த எண்ணத்தை இந்த அல் அமீன் கைத் தொழில் கல்விச் சங்கம் மூலமாக செயல்படுத்த விழைந்தார். புறநகர் பகுதியிலுள்ள கொடிக்குளம் என்ற கிராமத்தில் தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை இதற்கென வழங்கினார். 1962ஆம் ஆண்டு அல் அமீன் அனாதை நிலையம் தொடங்கப்பட்டது. அதன் அருகிலேயே அல் அமீன் தொடக்கப் பள்ளியும் தொடங்கப்பட்டது.
அல் அமீன் அனாதை நிலையம் :
1962 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘அல் அமீன் அனாதை நிலையம்’ இன்றைக்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இங்கு தற்போது 250க்கும் மேற்பட்ட ஏழை எளிய, பெற்றோர்களால் கைவிடப்பட்ட முஸ்லிம் சிறுவர்கள் தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கான உணவு, உடை, தங்குமிடம், கல்வி, மருத்துவச் செலவு என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. நன்கொடையாளர்கள் வழங்கும் நிதியினைக் கொண்டே இந்தச் செலவுகள் செய்யப்படுகின்றன.
இங்கு அரபி மத்ரஸா ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அலுவலகக் கட்டிடம். மாணவர்கள் தங்குவதற்கான விடுதி, விருந்தினர் அறை. உணவுக் கூடம், பள்ளிவாசல் என பல கட்டிடங்கள் பெரும் பொருட் செலவில் கட்டப்பட்டுள்ளன. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நிலையத்தில் தங்கிப் படித்து உயர் கல்வி கற்றுப் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். மாணவர்களின் உயர்கல்விக்கான செலவையும் இந்த நிலையமே ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையத்திற்கு தமிழக அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது ஒரு மிகச் சிறந்த அனாதை நிலையமென இதனைப் பார்வையிட்டுச் சென்ற பல பொது நல அமைப்புகளின் தலைவர்கள் பாராட்டியுள்ளனர். இந்த நிலையத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக முஸ்தபா சாகிப் பல்லாண்டுகள் பொறுப்பு வகித்தார். தற்போது அவரது மகன் முகம்மது இத்ரீஸ் இதன் நிர்வாகியாகப் பொறுப்பு வகிக்கிறார்.
அல் அமீன் உயர்நிலைப் பள்ளி:
தொடக்கப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளிக்கூடம் 1966 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்ட பிறகு நகரிலுள்ள கோசகுளம் புதூருக்கு மாற்றப்பட்டது. இந்தப் பள்ளிக்கூடம் செயல்படத் தேவையான அளவுக்குரிய நிலைத்தையும் முஸ்தபா ஹாஜியாரே வழங்கினார். (டாக்டர் சத்தார் சாகிபும் வழங்கினார்) சில ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளியில் விளையாட்டுத் திடல் அமைத்திட மேலும் தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்கினார். 1978ஆம் ஆண்டு இந்தப் பள்ளிக் கூடம் மேல் நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இந்தப் பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் பிற சமயங்களைச் சார்ந்த மாணவர்களும் அடங்குவர். மதுரை நகரில் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரே மேல் நிலைப் பள்ளி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப் பள்ளியின் தாளாளராக முஸ்தபா ஹாஜியார் பல்லாண்டுகள் பொறுப்பு வகித்தார். தற்போது அவரது மகன் முகம்மது இத்ரீஸ் பொறுப்பு வகிக்கிறார்.
ஜமா அத்துல் உலமா சபை :
நகரில் தனக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்களை அவர் பல்வேறு பொது நல அமைப்புகளுக்கு வழங்கியுள்ளார். அனாதை நிலையத்திற்கு அருகில் தனக்குச் சொந்தமாக இருந்த 11 சென்ட் நிலத்தை 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபைக்கு வழங்கினார். இந்த வக்ப்பை காலம் சென்ற தனது மருமகன் (சகோதரியின் மகன்) வழக்கறிஞர் என்.அப்துல் ரஸாக் அவர்களின் ஈஸால் தவாபிற்காக அமைத்துக் கொண்டார். அவரது மனைவிக்குப் பின்னர் அவரது புதல்வர்கள் 2013 ஆம் ஆண்டு மேலும் இரண்டு சென்ட் நிலத்தை மாநில ஜமாஅத்துல் உலமா சபைக்கு வழங்கினர். இந்த வக்ப்பை தங்களது தாய், தந்தையருக்காக அமைத்துக் கொடுத்தனர். இந்த இடத்தில் தான் ஜமாஅத்துல் உலமா சபை தனது மாநில அலுவலகத்தை அண்மையில் கட்டி முடித்துள்ளது. மூன்று மாடிகள் கொண்ட இந்த எழிலார் கட்டிடத்தின் திறப்பு விழா சென்ற 12, 13.05.2018 ஆகிய தேதிகளில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்தக் கட்டிடம் முஸ்தபா ஹாஜியாரின் பெயரை காலமெல்லாம் தாங்கி நிற்கும் என்பது திண்ணம்.
திருமணம் - சுன்னத்:
முஸ்தபா ஹாஜியார் பல ஏழைக் குமருகளின் திருமணம் நடந்தேறிட நிதி உதவி செய்துள்ளார். எந்த விதமான ஆடம்பரமுமின்றி இஸ்லாமிய வழியில் இந்தத் திருமணங்களை நடத்தி வைத்தார். அது போல் ஆயிரக்கணக்கான ஏழைச் சிறுவர்களின் ‘சுன்னத்’தையும் தனது சொந்த செலவில் நடத்தி வைத்தார். அன்றைய நாட்களில் (60, 70 களில்) ‘சுன்னத்’ ஒரு ஆடம்பர வைபவமாகவே சமுதாய மக்களால் நடத்தப்பட்டது. அழைப்பிதழ் அடித்து உறவினர்களையும் நண்பர்களையும் நிகழ்ச்சிக்கு அழைத்தல், விருந்து வைத்தல் என ஆடம்பரம் அனைத்து நிலைகளிலும் தலை தூக்கியிருந்தது. இதனால் போதிய பண வசதியில்லாத ஏழைக் குடும்பத்தினர் தங்கள் வீட்டுச் சிறுவர்களின் ‘சுன்னத்’தை தள்ளிப் போட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த நிலையம் முஸ்தபா ஹாஜியார் தமிழகத்திலுள்ள முஸ்லிம்கள் நிறைந்து வாழுகின்ற பல்வேறு ஊர்களுக்கும் சென்று ஏழை எளிய சிறுவர்களைக் கண்டறிந்து ஒரு குறிப்பிட்ட நாளில் அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்று கூடச் செய்து ஒரு ‘பெருந்திரள் சுன்னத்’ வைபவங்களை நடத்தினார். இதற்கான அனைத்துச் செலவுகளையும் அவரே ஏற்றுக் கொண்டார் (மருத்துவச் செலவு உட்பட) நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற இந்த வைபவங்களில் ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்குச் சுன்னத் செய்யப்பட்டது.
முஸ்லிம்கள் தங்களது இல்லத் திருமண நிகழ்ச்சிகளைப் பள்ளி வாசலில் வைத்துத்தான் நடத்திட வேண்டுமென்பது அவரது எண்ணமாகும். வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ நடைபெறும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்றும், பள்ளிவாசல்களில் நடைபெறும் திருமணங்களில் மட்டுமே கலந்து கொள்வேன் என்றும் அவர் வெளிப்படையாக அறிவித்தார். இதன் காரணமாக தங்களது வீட்டுத் திருமணங்களில் முஸ்தபா ஹாஜியார் கலந்து கொள்ள வேண்டுமென விரும்பியவர்கள் பள்ளிவாசல்களிலேயே அதனை நடத்தினர்.
அரசியல் ஈடுபாடு:
முஸ்தபா ஹாஜியார் காங்கிரஸ் கட்சியின் அனுதாபியாக இருந்தார். எனினும் நேரடி கட்சி அரசியலில் அவர் ஈடுபடவில்லை. தேர்தல்கள் எதிலும் போட்டியிடவில்லை. அன்றையத் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜ், உள்துறை அமைச்சர் கக்கன். உள்ளாட்சித்துறை அமைச்சர் கடையநல்லூர் அப்துல் மஜீத் சாகிப், மதுரை சுப்பாராமன் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார். காங்கிரஸ் தலைவர்கள் மதுரைக்கு வரும் போதெல்லாம் இவரது இல்லத்திற்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். மதுரை நகரில் கக்கன் கும்பத்தினருக்கு வீடு ஒன்று கட்டிக் கொடுத்தார்.
குடும்பம்:
முஸ்தபா ஹாஜியாருக்கு 1958 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. துணைவியார் பெயர் சிக்கந்தர் பீவி. இத் தம்பதியினருக்கு அப்துல் லத்தீப், முகம்மது இல்யாஸ். முகம்மது இத்ரீஸ், முகம்மது அப்துல்லாஹ் என்ற நான்கு புதல்வர்களும் ஒரு புதல்வியும் உண்டு. வழக்கறிஞரான மூத்த மகன் அப்துல் லத்தீப் சாகிப் மரணமடைந்து விட்டார். இவர் அல் அமீன் கைத் தொழில் கல்விச் சங்கம் மற்றும் அல் அமீன் மேல் நிலைப் பள்ளியின் தலைவராகப் பல ஆண்டுகள் பதவி வகித்தார். மற்றப் புதல்வர்களும் தந்தையின் வழியைப் பின்பற்றி மதுரை நகரில் பல்வேறு பொதுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முடிவுரை:
தனது வாழ்நாள் முழுவதையும் பொதுப் பணிகளுக்கே அர்ப்பணித்துக் கொண்ட முஸ்தபா ஹாஜியார் தனது 63வது வயதில் 12.02.1991அன்று (ரஜப் மாதம் 27ம் நாள் மிஹ்ராஜ் இரவில்) மரணமடைந்தார். ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயதாகிய 63 வயது வரை நான் வாழ்ந்தால் போதும், அதற்கு மேல் வாழ வேண்டியதில்லை’ என்று தனது நண்பர்களிடம் அவர் கூறுவது வழக்கமாம். அதன்படியே அவர் தனது 63வது வயதில் மரணமுற்றார். அவரது ஜனாஸா மதுரை சுங்கம் பள்ளிவாசல் கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இஸ்லாமியக் கடமைகளை வழுவாது கடைப்பிடித்து ஒழுகிய முஸ்தபா ஹாஜியார், கண் மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பால் மிகுந்த நேசம் கொண்டிருந்தார். ஆலிம் பெருமக்கள் மீது மிகுந்த நேசம் கொண்டிருந்தார். அதனால் ‘முஹிப்புல் உலமா’ என ஆலிம்களால் மரியாதையுடன் அழைக்கப்பட்டார்.
தனது தன்னலமற்ற பொதுச் சேவைகளின் காரணமாக மதுரை எட்டெழுத்து முஸ்தபா ஹாஜியார் மதுரை முஸ்லிம் மக்களால் மட்டுமின்றி பிற ஊர்களிலுள்ள முஸ்லிம்களாலும் என்றும் நினைவு கூறப்படுவார். அவரது சேவையினை இறைவன் அங்கீகரிப்பானாக.
ஆதார நூல்கள்:
1. மலரும் நினைவுகள் - மாநில ஜமாஅத்துல் உலமா சபை வெளியீடு
2. அல் அமீன் மேல் நிலைப் பள்ளி 50 வது ஆண்டு மலர்.
கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள ....
99767 35561

திங்கட்கிழமை, 26 நவம்பர் 2018 13:33

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்! தத்துவம் (Philosophy) 17

Written by

அ. முஹம்மது கான் பாகவி

அன்பார்ந்த அரபிக் கல்லூரி மாணவர்களே! மரபுவழி மத்ரசாக்களின் பாடத்திட்டத்தில் ‘தத்துவம்’ ஒரு பாடமாக வைக்கப்பட்டிருப்பதை அறிந்திருப்பீர்கள். ‘தத்துவம்’ என்பதை ‘ஃபல்ஸஃபா’ அல்லது ‘ஹிக்மத்’ என்றழைப்பர். இதைப் போதிப்பதற்காக அல்ஹதிய்யத்துஸ் ஸஅதிய்யா, அல்மைபதீ, ஸத்ரா போன்ற பாடப் புத்தகங்கள் உள்ளன.
பிரபஞ்சத்திற்கும் மனிதருக்கும் உள்ள உறவு, மனித வாழ்வின் பொருள் மற்றும் குறிக்கோள் ஆகியவை பற்றிச் சிந்தனை ரீதியாக ஆராயும் துறையே ‘தத்துவம்’ (Philosophy) எனப்படுகிறது. தத்துவக் கோட்பாடுகளை உருவாக்குபவர் ‘தத்துவ ஞானி’ (Philosopher) எனப்படுவார்.
எனினும், ‘தத்துவம்’ என்றால் என்ன என்று அனைவராலும் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒரு வரையறை இலக்கணத்தைக் காண்பதில் சிக்கல் உண்டு. அடிப்படையான நம்பிக்கைகளை வெளிப்படுத்தப் பயன்படும் அடிப்படையான கருதுகோள்களைத் தர்க்கபூர்வமாக அலசி ஆராயும் துறையே ‘தத்துவ இயல்’ என்கிறார்கள் சிலர்.
மனிதனுடைய பல்வேறுபட்ட அனுபவங்களின் பிரதிபலிப்பே ‘தத்துவம்’ என்று சிலரும், மனித குலத்தின் கவனத்தை ஈர்க்கும் விஷயங்களைப் பகுத்தறிவுபூர்வமாகவும் ஒழுங்காகவும் முறையான திட்டமிட்ட வழியிலும் ஆய்வுக்கு உட்படுத்துவதே ‘தத்துவம்’ என்று வேறுசிலரும் கூறுகின்றனர்.
உலகின் அனைத்துப் பெரிய சமயங்களும் தமக்குச் சார்பான சிந்தனை மரபுகளைத் தத்துவங்களாகக் கொண்டுள்ளன.
முஸ்லிம் அறிஞர்களின் விளக்கம்
எல்லாப் பொருட்களின் உருவாக்கத்திற்கும் மூல காரணமான முதல் மெய்ப்பொருளை அறிவதே ‘தத்துவம்’ (ஹிக்மத்) ஆகும். இதனால், ஒரு முழுமையான தத்துவ ஞானி (ஹகீம்) என்பவர், இந்தச் சிறப்பான கலையை நன்கு அறிந்த மனிதராக இருத்தல் அவசியம். ஏனெனில், படைப்பை அறிவதைவிட, அதற்குக் காரணமான படைப்பாளனை அறிவதே மேலான அறிவாகும். ஆக, நிறைவான அறிவு என்பது, காரணியைப் படிப்பதுதான்.
இவ்வாறு தத்துவ அறிஞர் யஅகூப் பின் இஸ்ஹாக் அல்கின்தீ (இறப்பு: ஹி-260; கி.பி. 873) அவர்கள் குறிப்பிடுகிறார். பிரபல தத்துவ மேதையும் பல்கலை அறிஞருமான அபூநஸ்ர் அல்ஃபாராபி (இறப்பு: ஹி-339; கி.பி. 950) அவர்கள் பின்வருமாறு இலக்கணம் கூறுவார் :
படைப்புகளைப் பற்றி உள்ளது உள்ளபடி அறிவதே ‘தத்துவம்’ ஆகும். இது நான்கு வகைப்படும். 1. இறையியல் தத்துவம் 2. இயற்பியல் தத்துவம் 3. கணக்கியல் தத்துவம் 4. தர்க்கவியல் தத்துவம்.
ஆனால், மத்ரசா பாடத்திட்டத்தில் இடம்பெறும் தத்துவம் (ஃபல்ஸஃபா) பண்டைய கிரேக்கத் தத்துவமாகும் என்பது குறிப்பிடத் தக்கது. கிரேக்கத் தத்துவத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். 1. சிந்தனைபூர்வமான தத்துவம் 2. செயல்பூர்வமான தத்துவம்.இரணடவத படம நயகளயர ஃபசன இளம  1
பொருட்கள் ஒவ்வொன்றின் மெய்மைகளை உள்ளபடி அறிவதற்கான கலையே சிந்தனைசார் தத்துவமாகும். பயிற்சிமூலம் ஆன்மாவை ஒளிரச்செய்வது தொடர்பான கலையே செயல்சார் தத்துவமாகும். பிளேட்டோ, அவர் மாணவர் அரிஸ்டாட்டில் முதலானோர் முதல்வகை தத்துவத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். பிளேட்டோ மாணவர்களான அவருடைய ஆதரவாளர்களின் கொள்கைதான் இரண்டாவது வகை தத்துவமாகும்.
கிரேக்கத் தத்துவங்கள்
கிரேக்கத் தத்துவத்தின் அடிப்படையே அறிவுதான். எதையும் அறிவால் மட்டுமே அணுகி, தர்க்கரீதியாக மட்டுமே நிறுவுவதுதான் அந்தத் தத்துவம். அதாவது வேதச் சான்றுகளோ மரபுக் கருத்துகளோ தத்துவம் ஆகாது; ஒரு தத்துவத்திற்குச் சான்றும் ஆகாது. அவ்வாறே, ஒரு தத்துவத்தைச் செயல்பூர்வமாக நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை; வெறும் வாதப் பிரதிவாதத்தைக் கொண்டு நிரூபித்தாலே போதும் -என்பதே கிரேக்கத் தத்துவத்தின் அடிப்படை.
உதாரணமாக, “கடவுள் உண்டு” எனும் தத்துவத்தை எடுத்துக்கொள்வோம். இதற்கு வேதங்கள், ஞானிகள், சமய அறிஞர்கள் ஆகியோரின் கருத்துகள் சான்றாகா. மாறாக, தர்க்கரீதியாக நிரூபிக்க வேண்டும். ‘கடவுள்’ (God) என்றுகூட அவர்கள் குறிப்பிடுவதில்லை. ‘கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று’ (வாஜிபுல் வுஜூத்) என்றே கடவுளைக் குறிப்பிடுவார்கள்.
அனைத்தும் -கட்டாயம் இருக்க வேண்டிய பொருளல்ல; அதாவது இருக்கவும் செய்யலாம்; இல்லாமலும் இருக்கலாம் (மும்கினுல் வுஜூது)- என்ற நிலையிலேயே அனைத்துப் பொருட்களும் உள்ளன என்று வாதிட்டால், சமமான இவ்விரு நிலைகளில் ஒன்றைத் தீர்மானிக்கும் சக்தி எது? தீர்மானிக்கும் சக்தியும் இதே சமநிலையில் இருப்பின், அந்தச் சக்தியின் இருப்பை முடிவு செய்தது யார்? அதுவும் அதேபோல் இருந்தால்…? முடிவில்லாமல் போகும்.
எனவே, கட்டாயம் -எப்போதும்- இருக்க வேண்டியது என்று ஒன்று இருக்க வேண்டும். அந்தச் சக்தியே மற்ற பொருட்களின் நிலையை - அதாவது இருப்பை, அல்லது இல்லாமையை- தீர்மானிக்கும் அதிகாரம் படைத்ததாக இருக்கும். அதுதான் கடவுள்.
இந்த அதிகாரம் படைத்த சக்தி (கடவுள்), ஒன்றுக்கு மேல் இருக்கக் கூடாதா என்று கேட்டால், இருக்கலாம் என்பர் கிரேக்க அறிஞர்கள். அதாவது பல தெய்வங்கள் இருக்கலாம். பல தெய்வங்களும் ஒன்றுசேர்ந்தோ சேராமலோ ஒரே மாதிரி சிந்தித்து, ஒரே மாதிரி செயல்படுவது சாத்தியம்தானே! அப்போது பல கடவுள்களிடையே மோதலுக்கு வழி இல்லைதானே! என்று திருப்பிக் கேட்கும் கிரேக்கத் தத்துவம்! ஆக, ஓரிறைக் கோட்பாடெல்லாம் அதில் இல்லை.
இப்படி எதை எடுத்தாலும் வாதப்பிரதிவாத வழியிலேயே நிறுவ முனைவர் கிரேக்கத் தத்துவ ஞானிகள். வேதமோ, செயல்பூர்வ நிரூபணமோ அவர்களுக்குக் கிடையாது. சுய சிந்தனை வழியில்தான் மெய்ப்பொருள் ஒளிரும் என்பர். இதுதான், கிரேக்க - பண்டைய தத்துவமாகும்.
இதே சிந்தனைப் போக்குதான், மீண்டும் ஒருமுறை மாக்ஸ்மில்லர், ஹார்பர்ட் ஸ்பென்ஸர், ரெனிடேகார் போன்ற கிரேக்கத் தத்துவவாதிகளிடமிருந்து வெளிப்பட்டது. இதையே ‘பகுத்தறிவு வாதம்’ (Rationality) என்றும் கூறலாம். நம்பிக்கை சாராமல் அறிவால் மட்டுமே உண்மைகளை அறிய முயலும் முறை. சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில் ஆகியோரால் இது தோன்றியது. பின்னர் டேகார்ட் (1596-1658) போன்றோரால் திரும்பவும் இக்கோட்பாடு உயிர்பெற்றது.
கிரேக்கர்களின் கடவுள் கொள்கை
கிரேக்கர்களைப் பொறுத்த வரையில், கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால், பல தெய்வக் கொள்கை கொண்டவர்கள் அவர்கள். கி.மு. 2ஆம் ஆயிரத்தாண்டு, வானத்தின் கடவுள் என அவர்கள் நம்பிய ஸீயஸை வணங்கும் முறை இருந்தது. கி.மு. 750வாக்கில்தான், கிரேக்க மதம் முறையாகத் தொடங்கியதாம்!
கடலுக்கென ஒரு கடவுள் வைத்துள்ளனர் கிரேக்கர்கள். அதன் பெயர் பொசைடன்; அவ்வாறே, அறுவடைக்கென ஒரு கடவுள்; அதன் பெயர் டெமிட்டர். திருமணத்திற்கான கடவுள் பெயர் ஹீரா.
பண்டைய கால வீரர்களும் மன்னர்களுமான ஹிரக்ளீஸ், அங்க்ளீப்பியஸ் போன்றவர்களும் அந்த மக்களால் வணங்கப்பட்டுவந்தனர்.
அணுவைப் பிளக்க முடியாதா?இரணடவத படம நயகளயர ஃபசன இளம  2
ஒரு பொருளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாகப் பகுப்பதால் கிடைக்கக்கூடிய கூறுதான் ‘அணு’ (Atom) எனப்படுகிறது. மேலும், ஒரு தனிமத்தின் தனித்தன்மையை அப்படியே தக்கவைத்திருக்கும் அடிப்படைக் கூறுக்கும் ‘அணு’ என்பர்.
‘அணு’ என்பதைக் குறிக்கும் ‘Atom’ (ஆட்டம்) எனும் ஆங்கிலச் சொல், கிரேக்கச் சொல்லான ‘அட்டோமஸ்’ என்பதிலிருந்து வந்தது. ‘பிளக்க முடியாதது’ என்பது இதன் பொருள். மின்னணு (எலக்ட்ரான்), உட்கரு (Nucleus) போன்றவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்புவரை -அதாவது 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை- அணுவைப் பிளக்க முடியாது என்றே நம்பப்பட்டுவந்தது.
ஆனால், அணுவானது, நேர் மின்னூட்டம் (Positive Charge) கொண்ட உட்கரு ஒன்றைப் பெற்றுள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் உட்கருவானது, அணுவின் நிறையில் 99.9% கொண்டுள்ளது. ஆனால், கன அளவில் 1014அளவே (நூறாயிரம் கோடிக் கூறுகளில் ஒன்று) உள்ளது.
உட்கருவுக்குள், நேர் மின்னூட்டம் கொண்ட புரோட்டான்கள், மின்னூட்டமில்லாத நியூட்ரான்கள் ஆகியவை காணப்படுகின்றன.

முதல் படம் : நியூக்ளியர்

அணுப்பிளப்பு (Nuclear Fission) என்பது, கனமான அணுக்கரு ஒன்று ஏறத்தாழ சம நிலையுள்ள இரு கூறுகளாகப் பிளக்கப்படும் நிகழ்வே ஆகும். அணுப்பிளவில், இரண்டு அல்லது மூன்று தனி நியூட்ரான்கள் வெளியிடப்படுகின்றன. இந்தத் தனி நியூட்ரான்கள் மற்ற அணுக்கருக்களைத் தாக்குவதால், சங்கிலித் தொடர் வினை எனும் அணுக்கருப் பிளவு ஏற்படுகிறது.
இந்த அணுக்கருப் பிளவால் வெளியிடப்படும் ஆற்றல், மின்சார உற்பத்திக்கும், கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை முன்னோக்கிச் செலுத்துவதற்கும் பயன்படுகிறது. பெரிய அழிவிற்கு வழிவகுக்கும் அணு ஆயுதங்களின் ஆற்றலுக்கும் இதுவே மூலகாரணமாகிறது.

இரண்டாவது படம் நியூக்ளியர் ஃபிசன்

வாதப் பிரதிவாதம் எதற்கு?
ஆக, அணுவைப் பிளக்க முடியும் என்பது மட்டுமல்ல, பிளந்தாகிவிட்டது; பேரழிவு அணு ஆயுதங்கள்வரை அணுப் பிளவால் தயாரிக்கப்பட்டும்வருகிறது என்பது அறிவியல் அரங்கில் செயல்பூர்வமாக நிரூபணமாகிவிட்டது.
இந்நிலையில், இன்றும் மத்ரசா பாடத்திட்டத்தில் உள்ள தத்துவப் பாடப் புத்தகங்கள் சிலவற்றில், அணுவைப் பிளக்க முடியும் என்று ஒரு கட்சியும், பிளக்க முடியாது என்று ஒரு கட்சியும் விவாதம் செய்துகொண்டிருப்பதில் என்ன புண்ணியம் சொல்லுங்கள்!
பண்டைய கிரேக்கத் தத்துவத்தின்படி, அணுவைப் பிளக்க முடியாது. அதாவது இனிமேல் பகுக்க முடியாத இறுதி அணு (அல்ஜுஸ்உல்லதீ லா யத்தஜஸ்ஸா) உண்டு எனக் கிரேக்கர்கள் வாதிடுவார்கள். இதனால் அவர்களுக்கு நம்பிக்கை சார்ந்த ஓர் ஆதாயம் உண்டு. உலகம் அழியாது; மறுமை வராது என்பதே அது.
ஆம்! ஒவ்வொரு பொருளையும் அழிக்க அழிக்க கடைசி அணு இருந்துகொண்டே இருக்கும். பிறகெப்படி உலகம் அடியோடு அழியும்? மறுமை நிகழும்?
இதற்கு மறுப்பாக, முஸ்லிம்கள் இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்து, உலகத்தை ஒரு நொடியில் முற்றாக அழித்துப்போட இறைவனால் முடியும் என்பதை தர்க்கரீதியாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். தர்க்கமே தேவை இல்லை; செயல்பூர்வமான முடிவைக் காட்டினாலே போதுமல்லவா? அதையும் மறுத்தால் அணுகுண்டைக் காட்டலாமல்லவா?
இதையெல்லாம்விடப் பெரிய கொடுமை என்ன தெரியுமா? ஷியாக்களில் ‘இமாமிய்யா’ பிரிவைச் சேர்ந்தவர் ஹிஷாம் பின் ஹகம் என்பார். இவர் பல்வேறு அபத்தமான கொள்கைகள் கொண்டவர். நபிமார்கள் பாவம் செய்யலாம் -என்பது அவற்றில் ஒன்று.
அவ்வாறே, ஒரு பொருளைப் பகுத்தால், முற்றுப்பெறாதவாறு பகுப்பு போய்க்கொண்டே இருக்கும் -என்ற கொள்கையும் கொண்டிருந்தார் ஹிஷாம். இக்கொள்கையை அவர், முஅதஸிலியான இப்ராஹீம் அந்நழ்ழாம் என்பாரிடமிருந்து கற்றுக்கெண்டாராம்!
ஒரு காலத்தில், கிரேக்கத் தத்துவம் செல்வாக்குப் பெற்றிருந்தது. சிலர் அதைப் படித்துவிட்டு, இஸ்லாத்திற்குள் குழப்பம் விளைவிக்கத் தலைப்பட்டனர். அதனால் அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டியிருந்தது. எனவே, ஹிஜ்ரீ 7ஆம் நூற்றாண்டுவாக்கில் எழுதப்பட்ட இஸ்லாமிய நூல்களும் தர்க்கரீதியாகவும் கிரேக்கத் தத்துவத்தைக் கருத்தில் கொண்டும் எழுதப்பட்டன.
ஆனால், இன்று கிரேக்கத் தத்துவம் செயலிழந்து பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் அந்தக் காலாவதியான தத்துவத்தைக் கட்டி அழ வேண்டுமா?
இன்று அரசியல், பொருளியல், இயற்பியல், அறிவியல், ஊடகவியல், மருத்துவம்… எனப் பல்துறைகளில் இஸ்லாத்திற்கெதிரான தத்துவங்கள் பல நம்மை மிரட்டும் அளவிற்குச் செல்வாக்குப் பெற்றுவிட்டன. அவற்றை இனங்காட்டி, அவற்றுக்கு மாற்றாக இஸ்லாம் கூறும் தத்துவங்களை மாணவர்களுக்குக் கற்பித்தால், இன்றைய இளம் தலைமுறை ஆலிம்கள் ஆக்கபூர்வமாகச் செயல்பட இயலுமல்லவா?
எடுத்துக்காட்டாக :
Ø அரசியலில் : மக்களாட்சி - மன்னராட்சி - இராணுவ ஆட்சி - பரம்பரை ஆட்சி…
Ø பொருளியலில்: முதலாளித்துவம் - பொதுவுடைமை - தனியார்வுடைமை - முதலீடு - உற்பத்தி - விநியோகம் - வட்டி வங்கி...
Ø இயற்பியலில் : டார்வினின் பரிணாம வளர்ச்சி தத்துவம் - வேதியியல் பொருட்கள் - தனிமங்கள் - இயற்கைப் பாதுகாப்பு…
Ø அறிவியலில் : புவி வெடிப்பு - பேரண்டக் கொள்கை - மூன்றாம் பாலினம் - தன்பாலுறவு - இயற்கை உணவுமுறை…
Ø மருத்துவம் : உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை - செயற்கை குழாய் குழந்தை பிறப்பு - கருணைக்கொலை…
(சந்திப்போம்)

                                                                                                                                                                                                         தாழை மதியவன்
இராமநாதபுர மாவட்டத்தில் தொண்டித் துறை முகத்தின் தெற்கே ஒரு கல் தொலைவில் உள்ள மீன்பிடிக் கிராமம் நம்புதாழை.இதன் பூர்வீகப் பெயர் நம்பூந்தாழை. நறும்பூந்தாழை என்பதே மருவியுள்ளதாக ஆய்வாளர் கள் கூறுகின்றனர். “இங்கு தாழை பூத்துக் குலுங்கியதால், இது நல்ல பூந்தாழை எனப் பெயர் பெற்று அதுவே நம்புதாளை என்று மருவிற்று’’ என இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் பேசுகிறது.
இராமநாதபுர சேதுபதிகளின் ஆவணங்களி லும், முகவை ஆய்வாளர் டாக்டர் எஸ்.எம்.கமால் எழுதிய ‘முஸ்லிம்களும் தமிழகமும்’ எனும் நூலிலும் கச்சத் தீவு பற்றிய வரலாற்றுப் பதிவுகளிலும் ‘நம்புதாழை’ பதிவாகியுள்ளது.
தாழங்குடா, தாழங்குப்பம், தாழையூத்து, பூந்தாழை, தழுதாழை எனப் பல ஊர்கள் தாழையை அடிப்படையாகக் கொண்டு உள்ளன. அவற்றைப் போலவே நம்புதாழையும். தொண்டித்துறை முகத்தின் தென் பகுதியே நம்புதாழை. தொண்டியின் தெற்கிலுள்ள ஓடாவித் தெரு, மீனவர் தெருக்களின் நீட்சியே நம்புதாழை. இரு கிராமங்களுக்கு இடையே இரு சிற்றாறுகள் பாய்ந்து ஊரைப் பிரிக்கிறது.
தொண்டித் துறைமுகத்தின் தொடர்ச்சியாகவே நம்புதாழையின் முத்துபஜாரும் பன்னாட்டார் தெருவும் விளங்குகின்றன. முத்துக்கள் சந்தைப்படுத்தப்பட்ட பகுதி முத்துபஜார் என இன்றும் அழைக்கப்படுகிறது. பல வெளிநாட்டவரும் வந்து இருந்து வாழ்ந்த பகுதி பன்னாட்டார் தெரு. இரு ஊர்களையும் இணைக்க மூன்று பாதை கள் உள்ளன. ஒன்று கடலோரப் பாதை, இரண்டு தோப்புகள் வழியாகத் தொடரும் பாதை, மூன்று மிகப் பிரபலமான கிழக்குக் கடற்கரைச் சாலை, மூன்றாவதாகவுள்ள பழைய சாலையின் பழைய பெயர் சேது ரஸ்தா. இது இராமநாதபுரம் வரை சென்று ராமேஸ்வரமும் தெற்கில் நீண்டு சென்று குமரி முனையையும் அடைகின்றது.
நம்புதாழையின் வடக்கு எல்லையில் உள்ள புதிய பள்ளி மஸ்ஜித் கூபா. ஊருக்கு உள்ளே மேற்கில் மஸ்ஜித் தஃவா கிழக்கில் பலாஹ் என மொத்தம் மூன்று பள்ளிவாசல்கள் உள்ளன. இங்கு சிறிய பெரிய தர்காக்கள் நான்கு உள்ளன. மஸ்தான் சாகிபு, ஷைகு சாகிபு, வெள்ளை லெப்பை அப்பா, மலையாளத்தார் அப்பா ஆகிய இறைநேசர்களின் அடக்கத்தலங்கள் இவை. மலையாள அப்பா பெயர் சேகு அப்துல் காதர் வலி. இங்கேயுள்ள சகோதரர்கள் பல்வேறு காலகட்டங்களின் பல சங்கங்களை நிறுவியுள் ளனர். 1922 - இல் மஜ்மவுல் முஸ்லிமீன், 1925 இல் ஹிதாயா சங்கம், 1932 - இல் நஜாத்துல் முஸ்லிமீன், 1950 களில் பூரண சந்திரன் புட்பால் கிளப், 1960 - களில் ஹாஜஹான் கல்விக் கழகம், மாணவர் மன்றம், நம்புதாழை முற்போக்கு இளைஞர் மன்றம், 1992 - இல் ஸபீலுல் உலமா, இஸ்லாமிய இளந்தென்றல், சென்னை வாழ் முஸ்லிம்கள் நல அமைப்பு என நம்புதாழை மக்களின் நலத்தைப் பேணிட பல அமைப்புகள் உருவானாலும் மூன்று அமைப்புகளே தொடர்ந்து செயல்படுகின்றன.
1992இல் நம்புதாழை வந்த கீழக்கரை பல்லாக்கு வலியுல்லாஹ் அமைத்த ஹிதாயா சங்கம் ஆண்டு தோறும் அன்னாருக்கு விழா கொண் டாடி சிறப்பான விருந்தளித்து தொய்வின்றி செயல்பட்டு வருகிறது. மார்க்கத்தை முன் னெடுத்து செயல்படும் ஸபீலுல் உலமா மதரஸாக்களை உருவாக்கி ஏறத்தாழ நூறு உலமாக்களை உறுப்பினராகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த இரு அமைப்புகளோடு சென்னை வாழ் நம்புதாழை மக்கள் நலச் சங்கம் சென்னையில் பதினைந்து ஆண்டுகளாக பாடாற்றி வருகிறது.
பன்னாட்டார் தெரு, முத்து பஜார் ஆகிய இடங்கள் சில சங்கதிகளைக் கூறுவது போல மேலும் சில இடங்கள் பழைய சங்கதிகளைக் கூறுகின்றன. ‘பாவோடி’ எனும் ஊரின் மையப் பகுதி. இங்கு நெசவுத் தொழில் இருந்தது பற்றிக் கூறுகிறது. ‘புகையிலைக் கொல்லை’ எனும் பகுதி இங்கு புகையிலைப் பயிரிட்டக் கதையைக் கூறுகிறது. ‘சோனகர்தெரு’ அரபு வம்சா வழியினர் வாழ்ந்த பகுதி எனக் கட்டியம் கூறுகிறது. ‘தைக்கா’ முந்தைய காலத்தில் ஊரில் முஹர்ரம் பண்டிகை கொண்டாடிய வரலாற்றைக் கூறுகிறது. ‘உதுமான் ஜப்பார் கப்ர்ஸ்தான்’ இவ்வூரின் பூர்வகுடிகளான தெக்கத்தி உதுமான்- ஜப்பார் (தெ.உ) வந்து வாழ்வாங்கு வாழ்ந்து இன்றும் பேர் சொல்லி வாழ்வதை பறைசாற்றுகிறது. ‘பல்லாக்கு வலியுல்லாஹ் வளாகம்’- வலியுல்லாஹ் 1925 - இல் வருகை தந்து ஊரைத் தத்தெடுத் ததையும் அத் தத்தெடுப்பு தொடர்வதையும் உரைக்கிறது.
தெக்கத்தி உதுமான் குடும்பத்தார் தெற்கிலி ருந்து நம்புதாழை வந்து குடியேறியது போல் பல குடும்பங்களும் இங்கு குடியேறியவையே. முத்திக்கிலும் இருந்து வந்து குடியேறியவர் களின் வரலாறு சுவையானவை. பெரும்பாலும் இவர்கள் இங்கு கிடைத்திட்ட மீன்களைப் பிடிக்கவோ சுவைக்கவோ வந்தவர்கள். கிழக்கு கடலோரத்திலுள்ள மிக முக்கியமான மீனவக் கிராமம் நம்புதாழை. இராமநாத புரத்தில் நடக்கும் வாரச் சந்தையில் விற்கப் படும் கருவாடுகளுக்கு மொத்தப் பெயர்கள் இரண்டு. ஒன்று ராமேஸ்வர கருவாடு, இரண்டு நம்புதாழைக் கருவாடு. நம்புதாழைக் கருவாடு நன்கு காய்ந்து மஞ்சள் பூசி சிரிக்கும். இராமேஸ்வரக் கருவாடு ஈரமுடன், ஈனஸ்வரத்தில் இருக்கும்.
பெரும்பாலான ஊர்களில் குடும்பங்களைக் கண்டறிய குடும்பப் பெயர்கள் இருப்பது போல் நம்புதாழையிலும் பல பெயர்கள் உள்ளன. அவற்றில் காரணப் பெயர் காரியப் பெயர், விலாசங்களைத் தாண்டி ஊர்ப் பெயர் களே அதிகமாக இருக்கும்.தோப்புத்துறை, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், அம்மாபட்டினம், கோட்டைப் பட்டினம், பொம்பேத்தி, அஞ்சங்குடி, அஞ்சுக்கோட்டை, ஆனந்தூர், இருமதி, இடைக் காட்டூர் வட்டானம், கவலை வென்றான், கமுதி, காக்கூர், குஞ்சங்குளம், கீழக்கரை, சித்தார் கோட்டை, பாசிப்பட்டினம், மாவூர், வல்லம், வலசைப்பட்டினம், வெண்ணத்தூர், திருப் பாலைக்குடி, வெள்ளையபுரம் என உள்ளூர் பெயர்களோடு கொழும்பு, மட்டக் கொழும்பு, கண்டி என அயல்நாட்டு ஊர்ப்பெயர்களைக் கொண்ட குடும்பங்கள் காலாதிகாலமாக வாழ்ந்து வருகின்றன.nambuthalai 7
வணிகர்களும் உழைப்பாளிகளும் கல்வியாளர்களும் வழிவழியாய் வாழ்ந்து வரும் நம்பு தாழை ஆன்மீக மேதைகளின் ஊருமாகும். மௌலானா மௌலவி ஷைகு அப்துல் காதிர் ஆலிம் சாகிபு 1885இல் நம்புதாழையில் பிறந்தார். தொண்டியிலுள்ள மத்ரஸத்துல் இஸ்லாமியாவில் மௌலவி நெய்னா முகம்மது ஆலிம் சாகிபிடம் மார்க்கக் கல்விபயின்றார். ஆலிமாகிய நம்புதாழை பேராசான் அதிராம்பட்டினம், தொண்டி, கீழக்கரை, பண்டார வடை ஆகிய ஊர்களில் ஆசிரியப் பணி புரிந்தார். பண்டாரவடையில் பணியாற்றிய போது கிலாஃபத் இயக்கத்தில் முக்கியப் பிரமுகராய் விளங்கிய மௌலானா 12.11.1920இல் மேலப்பள்ளிவாசல் சதுக்கத்தில் நடந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தார். 1500 பேர்களுக்கு மேல் கூடியிருந்த கூட்டத்தில் திருவாளர்கள் அனுமந்தராவ், ராமச் சத்திர செட்டியார், திருவையாறு, சி.சுப்ரமணிய முதலியாரோடு ஷனாப்கள் ஆ.அப்துல் மஜீது சாகிப், எச்.முகம்மது இபுறாகீம், கோ.அ.பக்கீர் முகம்மது சாகிப் போன்றோரும் கலந்து கொண்டு உரையாற்றினர். (‘சுதேசமித்திரன்’ வெளியிட்ட செய்தியைத் தருபவர் வரலாற்று ஆய்வாளர் செ.திவான் - நூல் : விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள்) மௌலவி அவர்கள் அரபு இலக்கியத்தில் சிறந்த புலமை பெற்றிருந்தார். அவர் அல்லகாத், மகாமாத் ஆகிய நூல்களைப் பயிற்று விக்கும்போது கூட ஒரு முறையேனும் அகராதியை எடுத்துப் பார்த்ததில்லை. கி.பி.1947 மற்றும் 1948 இல் மௌலவி அவர்கள் சென்னைப் பல்கலைக் கழக அரபி -உர்து பார்ஸிப் பிரிவின் தூண்டுதலின் பேரில் அரபி - தமிழ் அகராதி ஒன்றைத் தயாரித்தார். (இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் பாகம் : 4) பல்லாக்கு வலியுல்லாஹ்வால் மதிக்கப்பட்ட மௌலானா 1955இல் நம்புதாழையில் காலமானார். இவருடைய புதல்வர்களில் ஒருவர் அன்புக்குரிய ராஜ்முகம்மது. பேரர்களில் ஒருவர் ‘சொக்கரா’ அக்பரலி.
ஆலிம்களும் மார்க்க மேதைகளும் உலா வரும் நம்புதாழையில் முத்துபஜார் வீதியில் சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்டத்தில் குப்பை ராவுத்தர் - மீரா நாச்சியார் தம்பதிக் குப் பிறந்த சேகுநெய்னா முகம்மது சூஃபி ஞானியான வரலாறு மெஞ்ஞான ரத ஊர்வலமாகும். நாகூர் - முத்துப்பேட்டை என ஒற்றையடிப் பாதையில் பயணித்த சேகு நெய்னா முகம்மது இலங்கை சென்று ராஜபாட்டையில் தம் ஞான ரதத்தைச் செலுத்தி தாழையான் பாவா ஆனார். கொழும்பிலிருந்த அரசியல் பிரமுகர்கள், யாழ்பாணத் தமிழர்கள், ஞானிகள் என எல்லோரையும் கவர்ந்த தாழையான் பாவா 1955- களில் மரணமாகி கொழும்பு ரத்மலானையில் ஓய்வு றக்கம். இன்று அவரின் கபர் இருக்குமிடம் தர்காவாக. தாழையான் பாவா போலவே சூஃபி ஞானியாக விளங்கிய முள்ளாம் வீட்டு மஸ்தான் எனும் பக்கீர் மஸ்தானைத் தேடி 1940களில் வந்த மக்கள் ஆயிரக்கணக்கில்.- திருப்பாலைக் குடி -நம்புதாழை என உலவிய மஸ்தானை திருப்பாலைக்குடி மஸ்தான் எனவே அழைத் தனர். அவருடைய சமாதி திருப்பாலைக்குடி மையவாடியில் உள்ளது. மூன்றாவதாக உலா வந்த ஒரு சூஃபி புளி ஊத்தி வீட்டு மஸ்தான் என அழைக்கப்பட்ட ஞானக்கொடி பாவா, ‘கல்வத்தியா தபோவனம்’ என ஆன்ம இல்லம் அமைத்து சீடர் சூழ வாழ்ந்த ஞானக்கொடி பாவா இயற்றிய கவிதை நூல் ‘மெய்ஞ்ஞானத் திறவுகோல்’ வெளிவந்தது. வியப்பான செய்தியல்ல. நம்புதாழைக்காரரின் ‘தையார் சுல்தான்’ நாடகம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்ததுதான் வியப்பு. ஊர்தோறும் நடிக்கப்பட்ட நாடகம் மட்டு மல்ல ‘தையார் சுல்தான்’ ராகம், தாளக் குறிப் போடு வந்த நாட்டாரியல் நாடக நூல் இது. இதை எழுதியவர் நம்புதாழையைச் சேர்ந்த சின்ன வாப்பு என்பார்.
இதன் இரண்டாம் பதிப்பு 1881 - லும் மூன்றாம் பதிப்பு 1990லும் வெளியாகியுள்ளது.இந்த இசை நாடக நூலுக்குப் பின் இதே நம்புதாழையைச் சேர்ந்த நல்ல தம்பி பாவலர் எனும் கிதுர் முகம்மது ‘இசைத்தேன்’ இசைப்பாடல் நூலை வெளியிட்டுள்ளார். நம்புதாழை யில் பிறந்து தொண்டியில் வாழ்ந்து கண்டியை அடுத்த கம்பளையில் கிளை பரப்பிய பாவலர் தெ.உ.குடும்பத்தைச் சேர்ந்தவர். இதே தெ.உ. குடும்பத்தின் தாய்வழியில் பிறந்த செ.முகம்மதலி சாகிபு எனும் தாழை மதியவன் ஒரு பன்னூலாசிரியர். சின்ன ஊர் என்றாலும் பல்வேறு சிறப்புகள் கொண்ட ஊர் பலவுண்டு என்பதற்கு நம்பு தாழை எடுத்துக்காட்டு. இராமநாதபுர சமஸ்தானத்துக்கு உட்பட்ட கச்சத்தீவின் உரிமை நம்புதாழை மேல வீட்டுக் காரர்களுக்கு இருந்துள்ளது. அது மட்டுமல்ல அத்தீவில் மீன் காயப்போட கொட்டகையைக் கட்டியவரும் நம்புதாழைக்காரரே. அவரு டைய பெயர் சீனிக்குப்பு, படையாட்சித் தெருக்காரர். காலப்போக்கில் சீனிக்குப்புப் படையாட்சி கட்டிய கொட்டகையை தேவாலயம் ஆக்கியவர்கள் ராமேஸ்வரம் ஓலக்குடாக் காரர்கள். கடைசியில் கையாலாகாத அரசுகள் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்து விட்டன.
நம்புதாழை மக்களில் 90 விழுக்காடு மக்கள் இலங்கையை நம்பியிருந்தனர். மிகச் சிலரே மலேசியா, தமிழக நகரங்களில் கால்பதித்தனர். இலங்கை கொழும்பு மாநகரில் அவர்களில் சிலர் சம்பாத்யத்தோடு பொதுப் பணிகளிலும் ஈடுபட்டனர். திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியதைத் தொடர்ந்து 1950களில் அதன் கிளையை கொழும்புவில் தொடங்கமுக்கியப் பங்கு வகித்தவர்கள் நம்புதாழை வாசிகள். நா.மீ. சதகத்துல்லா எனும் தாழை தாசனும் சேகுதாவூது எனும் செல்வத் தம்பியும் நாவலர் நெடுஞ்செழியனை கொழும்புக்குக் கூட்டிச் சென்று தொடக்க விழா நடத்தினர்.
கல்வியைக் கொண்டாட மறுத்த போதும் சிலர் கல்வியைக் கண்ணெனப் போற்றினர். அப்போது கொழும்பு சாஹிரா கல்லூரியில் படித்தவர்களில் வ.மு.வாஹிது காக்கா முக்கி யமானவர். எழுத்தார்வம் கொண்ட அவர் கொழும்பில் மேடையேற்றிய ‘மாப்பிள்ளை மரைக்கார்’ எனும் நாடகம் பரவலாகப் பேசப் பட்டது. பின்னாட்களில் அவர் நம்புதாழை ஊராட்சித் தலைவராகக் கூட இருந்தார். காக்காவின் தம்பி கிதுர் முகம்மது ‘மாணவர் மன்றம்’ அமைத்து இளைஞர்களை ஒருங்கி ணைத்தார். தியாக தீபம், சிந்தியதேன், மரகதச் சிலை போன்ற நாடகங்களை அரங்கேற்றத் துணை புரிந்தார்.
இலங்கையிலும் தமிழகத்திலும் மிகப் பெரும் வணிகப் புள்ளியாகத் திகழ்ந்தவர் அல்ஹாஜ் மன்சூர். இவர் நட்டியெழுப்பியதே மதுரையி லுள்ள ‘ஜூலைஹா’ ஏற்றுமதி இறக்குமதி தொழில்களோடு சினிமா விநியோகமும் ‘சேயன்னா பிலிம்ஸ்’ மூலம் செய்த ஹாஜியார் தான் மதுரை விஜயராஜை நடிகர் விஜயகாந்த் ஆக்கியவர். நம்புதாழையின் முதல் பட்டதாரி அல்ஹாஜ் S.R.M. ஜக்கரியா. இவர் இளையாங்குடி, கீழக்கரைப் பள்ளிகளில் ஆசிரியப் பணி புரிந்தார். கப்பல்காரர் வீட்டு ஹிதாயத்துல்லா இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். வ.மு. குடும்பத்தைச் சேர்ந்த பேராசிரியர் காதர் மஸ்தான் மதுரை வக்ஃப் போர்டு காலேஜின் முதல்வராக இருந்தார். இவர்களே தொடக்கக் கால கல்வியாளர்கள்.nambuthalai 12
மலேசியாவின் வணிகம் செய்து சென்னையில் அச்சகம் நடத்திய இன்னாஞ்சி வீட்டு காசிம் நம்புதாழை பிரமுகர்களில் முக்கியமானவர். இவர் தயாரித்த திரைப்படம் ‘அர்த்தமுள்ள ஆசைகள்’ இவரின் புதல்வர்களில் ஒருவரே நடிகர் ரவிராகுல்.
நம்புதாழையின் பூனைவீட்டு அகமது அவர் கள் தான் ஏர்வாடி தர்ஹா அருகிலுள்ள பள்ளிவாசலைக் கட்டியவர். அவர் மரணித்து விட்டாலும் அவருடைய துணைவியார் ஹாஜியானி ஆசியம்மா கணவரின் கொடைத் திறத்தைக் கொண்டாடி வருகிறார். நம்புதாழையிலுள்ள பெரும் குடும்பங்களில் ஒன்று கா.மீ. குடும்பம். இக்குடும்பத்தைச் சேர்ந்த ஜனாப் கா.மீ.அகமது ஜலால்தீன் சுதந்திர போராட்டக் காலத்தவர். பெருந்தலைவர் காமராஜரின் நண்பர். இராமநாத புரம் மாவட்டத்தின் முற்கால ஜில்ல போர்டு உறுப்பினராக இருந்தவர். கதர் சட்டைக்காரர்.
கொழும்பு நகரில் இருந்த மு.மு.காசிம் சாகிப் & சன்ஸ் அத்தர்கடையும் மு.அ.மு.மகமுதீன் நூல் கடையும் வியாங்கொடையில் இருந்த இருந்த கா.சி.குடும்பத்தாரின் தேங்காய் எண்ணெய் ஆலையும் செல்வங்கொழிக்கும் இடங்களாக இருந்தன. கண்டிப்பகுதியில் செயல்பட்ட ரா.ம.சி. குடும்பத்தின் தேயிலை ஏற்றுமதி நிறுவனம் குறிப்பிடத்தக்க வணிகத் தலமாக விளங்கியது. மு.வா.குடும்பத்தாருக்கு நீர் கொழும்பில் வணிக நிறுவனம் இருந்தது. எளிமையான விருந்துக்கான சாப்பாடு என்றாலும் நம்புதாழை உணவுத் தயாரிப்பு நீண்ட கரைப் போக்கில் மிகச் சுவையானது. சோறு, கறியாணம், கலியா, புளியாணம் தான் நம்மையறியாமல் நாவூறும். இங்கு புழங்கும் தனித் தமிழ்ச் சொற்களும் கவனிக்கத்தக்கவை. வாழ்வரசி, புலாத் தண்ணீர், இழைவாங்கி, ஆழவாங்கி, உடுப்புப் பெட்டி, பசியாறுதல், பெட்டகம், தைலா எனச் சொல்லிக் கொண்டே போகலாம். கடைசியாக ஒரு செய்தி இந்தியா- இலங்கை யின் கடுமையான கட்டங்களுக்குப் பின் சட்டத்தை மீறிய போக்குவரத்து நடத்திய ஊர் நம்புதாழை. 1960 வரை இங்கிருந்துதான் பெரும் பாலும் ‘கள்ளத் தோணிகள்’ வல்வெட்டித் துறைக்குப் பயணித்தன.

தொடரும்....

புதன்கிழமை, 10 அக்டோபர் 2018 06:17

முதல் தலைமுறை மனிதர்கள் 19

Written by

 சேயன் இப்ராகிம்
சமுதாயப் போராளி தென்காசி சாகுல் கமீது சாகிப்

‘இன்றைக்கு மைனாரிட்டி சமூகத்திற்குப் பல இடங்களில் பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. உதாரணமாக, சென்னையில் இந்து மத விழா ஒன்று நடைபெற்றது. நல்லது தான். வரவேற்கிறேன். பாராட்டுகிறேன் பலரும் கலந்து கொண்டு அதிலே பேசினார்கள். எல்லாம் சரி. இந்து மதம் ஒரு உயர்வான மதம்தான். மனுதர்ம ஆட்சி பற்றி அவர்கள் புகழ்ந்து பேசுவது பற்றி எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.
ஆனால் அதற்கு முன்னர் நடைபெற்ற ஊர்வலத்தில் ‘பத்து பைசா முறுக்கு, பள்ளிவாசலை நொறுக்கு’ என்று கோஷங்களை எழுப்பிக் கொண்டு சென்றார்கள். இது தேவையா? இது இந்து மத விழாவா அல்லது இஸ்லாமிய மதத்தைத் துவேசிக்கும் விழாவா என்று சந்தேகம் ஏற்பட்டு விடுகிறது. பெரியவர் சங்கராச்சாரியார் இந்து மதத்தைப் பரப்பட்டும், அதிலே எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை.
ஆனால் அந்த ஊர்வலத்தில் இஸ்லாமிய மதத்தைப் பற்றி துவேஷமான முழக்கஙக்ள் எழுப்பப்படுவதை அவர் அனுமதித்திருக்கிறாரா? ஊர்வலத்தில் பாதுகாவலாகச் சென்ற போலீசாரும் அதனை அனுமதித்திருக்கிறார்களா? அரசும் அனுமதிக்கிறதா? என்று தான் கேட்க விரும்பகிறேன்.’
இந்த பேச்சு : 8.3.1983 அன்று தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகின்ற போது தான் இந்து முன்னணி போன்ற இந்துத்துவ அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிராகத் தமிழகத்தில் செய்து வருகின்ற வெறுப்புப் பிரச்சாரம் குறித்து கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினரான முஸ்லிம் லீகைச் சார்ந்த தென்காசி ஏ.சாகுல் கமீது சாகிப் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முஸ்லிம் லீகின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த அவரைப் பற்றித்தான் இந்த இதழில் பார்க்க விருக்கிறோம்.
இளமைப் பருவம்:mla
‘தென்காசி மேடை முதலாளி’ என தென் தமிழக முஸ்லிம்களால் அன்புடன் அழைக்கப்பட்ட மு.ந. அப்துல் ரகுமான் சாகிபின் இரண்டாவது புதல்வர் தான் சாகுல் கமீது. இவர் முஸ்லிம் லீகின் முன்னணித் தலைவராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவுமிருந்த பன்னூலாசிரியர் ஏ.கே. ரிபாயி சாகிபின் தம்பியாவார். தென்காசி மேடை முதலாளி மு.ந.அப்துல் ரகுமானும், காயிதே மில்லத்தும் சகலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மு.ந.அ - பாத்திமா பீவி தம்பதியினரின் மகனாக சாகுல் கமீது 8.4.1927 அன்று ஆடுதுறையில் பிறந்தார்.
தனது குழந்தைப் பருவத்தை ஆடுதுறையிலேயே கழித்த அவர் பின்னர் தென்காசியிலும், திருநெல்வேலியிலும் தொடக்கக் கல்வியையும், இடைநிலைக் கல்வியையும் கற்றுத் தேறினார். பாரம்பர்யமிக்க முஸ்லிம் லீக் குடும்பத்தில் பிறந்த அவர் இளமையிலேயே அக்கட்சியின் செயல்பாடுகளில் தன்னையும் இணைத்துக் கொண்டார். தென்காசி நகரில் மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் நடைபெற்ற முஸ்லிம் லீக் கூட்டங்களிலும், மாநாடுகளிலும், ஊர்வலங்களிலும் ஆர்வமாகக் கலந்து கொண்டார். படிப்படியாக கட்சியில் பல பொறுப்புகள் இவரைத் தேடி வந்தன.
1969ஆம் ஆண்டு இவரது தந்தையார் மு.ந.அ மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் பொறுப்பிலிருந்து விலகியதும், இவரே மாவட்டத் தலைவராகத் தேர்ந்தெடுக்கபட்டார். மாவட்டமெங்கும் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டார். 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 4, 5 தேதிகளில் மாவட்ட முஸ்லிம் லீகின் மாநாட்டை மேலப்பாளையம் நகரில் வெற்றிகரமாக நடத்தினார்.
இம் மாநாட்டின் போது காயிதேமில்லத் அவர்களின் பாராளுமன்ற உரைகளைத் தொகுத்து ‘காயிதே மில்லத் பேசுகிறார்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். மாவட்ட முஸ்லிம் லீகில் மட்டுமின்றி மாநில லீகிலும் துணைத்தலைவராகவும், பொருளாளராகவும் பொறுப்பு வகித்தார்.
1945ஆம் ஆண்டு இவரது தந்தையாரால் தொடங்கப்பட்ட தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபையின் தலைவராகவும் 1969ஆம் ஆண்டு இவர் பொறுப்பேற்றார். 1986ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் நீடித்தார்.
நகர் மன்றத் தலைவர் : 2
1968ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவர் முஸ்லிம் லீக் வேட்பாளராக தென்காசியில் தனது சொந்த வார்டில் நின்று வெற்றி பெற்றார். இத் தேர்தலில் தி.மு.கவும், முஸ்லிம்லீகும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. தென்காசி நகர் மன்றத்தில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றிய தி.மு.க மற்றும் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் சாகுல் கமீது சாகிபை நகர் மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். நகரப் பஞ்சாயத்தாக இருந்த தென்காசி 1966ஆம் ஆண்டு நகர சபையாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று இவர் நகரசபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், தென்காசி நகர சபையின் முதல் தலைவர் என்ற சிறப்பினைப் பெற்றார். (தென்காசிப் பஞ்சாயத்தின் முதல் தலைவராக இவரது தந்தையார் மு.ந.அ. 1923ஆம் ஆண்டு முதல் 1926ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது)
சாகுல் கமீது சாகிப் தனது பதவிக்காலத்தில் தென்காசி நகரில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றினார். தென்காசி நகரப் பேருந்து நிலையத்தைப் புதுப்பித்துக் கட்டியது, புகை வண்டி நிலையத்திற்கு செல்லும் சாலையை தரம் வாய்ந்ததாக அமைத்துக் கொடுத்தது ஆகியன இவரது பதவிக் காலத்தில் நடைபெற்ற குறிப்பிடத்தக்க பணிகளாகும்.

சட்டமன்ற உறுப்பினர் :
1979ஆம் ஆண்டு மத்தியில் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதாக் கட்சி ஆட்சி கவிழ்ந்து அதன் பின்னர் பொறுப்பேற்ற சரண்சிங் ஆட்சியும் சில மாதங்களிலேயே கவிழ்ந்து அதன் பின்னர் அடுத்த ஆண்டு(1980) ஜனவரி மாதம் பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். shahulஇந்தத் தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க, காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 39 பாராளுமன்றத் தொகுதிகளில் 37 ஐக் கைப்பற்றின. எம்.ஜி.ஆர் தலைமையில் அப்போது தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பிலிருந்த அ.தி.மு.கவுக்கு இரண்டு இடங்களே கிடைத்தன.
1980 பொதுத் தேர்தலின் போது பல மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த ஜனதாக் கட்சியும், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த அ.தி.மு.கவும் பெரும் தோல்வியைச் சந்தித்த காரணத்தால் அவை மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டன என்று கூறி மத்திய அரசு அரசியல் சட்டத்தில் 356வது பிரிவைப் பயன்படுத்தி தமிழகம் உள்ளிட்ட ஒன்பது மாநில அரசுகளைக் கலைத்து உத்தரவிட்டது. (1977ஆம் ஆண்டு மத்தியில் ஜனதாக் கட்சி கூட்டணி வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் பிரதமரானதும் பல மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த காங்கிர° கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்ததைக் காரணம் காட்டி அந்த அரசுகளைக் கலைத்து உத்தரவிட்டார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்திலேயே இந்திராகாந்தியும் செயல்பட்டார்) கலைக்கபட்ட தமிழக சட்டமன்றத்திற்கு 1980ம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற்றது.
இத் தேர்தலிலும் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியில் முஸ்லிம் லீகும் இடம் பெற்றிருந்தது. லீகிற்கு ஒதுக்கப்பட்ட எட்டுத் தொகுதிகளில் ஒன்றான கடையநல்லூரில் அக்கட்சியின் வேட்பாளராக சாகுல் கமீது சாகிப் நிறுத்தப்பட்டார். அ.தி.மு.க சார்பில் எம்.கனி என்ற முஸ்லிம் வேட்பாளர் களத்தில் இருந்தார். கடும் போட்டியில் லீகின் வேட்பாளரான சாகுல் கமீது சாகிப் அ.தி.மு.க வேட்பாளரை விட 1880 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். (வாக்குகள் விபரம் சாகுல் கமீது சாகிப் 38,225 - எம் கனி 36,345) இத் தேர்தலில் எட்டு தொகுதிகளில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் கடையநல்லூர் தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது.
முஸ்லிம் லீகின் முக்கியத் தலைவர்களான லத்தீப் சாகிப், பேரா. காதர் முகையதின் சாகிப், வந்தவாசி கே.ஏ. வகாப் சாகிப் ஆகியோர் வெற்றி வாய்ப்பை இழந்தனர். (அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாக, இத் தேர்தலில் தி.மு.க காங்கிரஸ் கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்து அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் மீண்டும் தமிழக முதல்வரானார்) சட்டமன்றத்தில் முஸ்லிம் லீகின் ஒற்றை உறுப்பினராகயிருந்த சாகுல் கமீது சாகிப் சமுதாயப் பிரச்னைகளுக்காக உரக்கக் குரல் கொடுத்தார்.
அநேகமாக அனைத்து மானியக் கோரிக்கைகளிலும் கலந்து கொண்டு உரையாற்றுகின்ற வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்தி முஸ்லிம்களின் பிரச்னைகளுக்காக மட்டுமின்றி பட்டியலின மக்களின் பிரச்னைகளுக்காகவும் குரல் கொடுத்தார்.
அவர் பதவிப் பொறுப்பிலிருந்த போது தான் மீனாட்சிபுரம் மதமாற்றமும், புளியங்குடி கலவரமும் ஏற்பட்டன. அவை குறித்தும் சட்டசபையில் உரையாற்றினார். குறிப்பாகப் புளியங்குடி கலவரத்தில் பெரிதும் பாதிக்கபட்ட பட்டியலின மக்களுக்கு ஆதரவாகச் சட்டமன்றத்தில் பேசினார். ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்குதல், குடிநீர்ப் பிரச்னை, கடையநல்லூர் நெசவாளர்கள் பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை எனப் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் சட்ட சபையில் மிக விரிவாகப் பேசியுள்ளார். அவரது சட்ட மன்றப் பணி அனைத்துத் தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டது.
மீனாட்சிபுரம் மதமாற்றம்:
19.02.1981 அன்று திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டைத் தாலுகாவிலுள்ள மீனாட்சிபுரம் என்ற கிராமத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான பட்டியலின மக்கள் (180 குடும்பத்தினர்) ஆதிக்க சாதியினரின் கொடுமைகளைத் தாங்கவொண்ணாது இஸ்லாத்தில் இணைந்தனர். இம் மக்கள் அப் போது தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம்சபையின் தலைவராக இருந்த சாகுல் கமீது சாகிப்பை அணுகித்தான் தாங்கள் இஸ்லாத்தில் இணைவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால், இதன் காரணமாக பிரச்னைகள் ஏற்படக் கூடும் எனக் கருதிய அவர் முதலில் அம்மக்களின் வேண்டுகோளை ஏற்கத் தயங்கினார். எனினும் அம்மக்கள் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவே, அவர்களை இஸ்லாத்தில் சேர்த்துக் கொள்வதற்குரிய நடைமுறைகளை நிறைவேற்றினார். அம்
மக்கள் முஸ்லிம்களாயினர்.
எனினும் அவர் எதிர்பார்த்தது போவே இந்துத்துவ அமைப்புகள் இந்த மதமாற்றத்தை ‘இந்து மதத்தை அழிக்கும் சதி’ என்ற ரீதியில் தமிழகமெங்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு சட்டம், ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தின. முஸ்லிம் அமைப்புகள் பட்டியலின மக்களை வற்புறுத்தியும், பணம் கொடுத்தும், வெளிநாட்டு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறியும் மதம் மாற்றியதாகப் பிரச்சாரம் செய்தனர்.
பிஜேபியின் அகில இந்தியத் தலைவர்கள், தமிழக பிஜேபி மற்றும் இந்து முன்னணித் தலைவர்கள் என அனைவரும் மீனாட்சிபுரம் கிராமத்திற்கு வருகை தந்து பரபரப்பான அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். இதனால் இது ஒரு தேசியப் பிரச்னையாக உருவெடுத்தது. தமிழகத்தில் அப்போதிருந்த எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க அரசும் இந்த மதமாற்றத்தைக் கட்டாய மதமாற்றம் என்றும், இந்து மதத்தை அழிக்கும் சதி என்றும் கருதியது.
எனவே இந்த மதம் மாறிய மக்களுக்குப் பல்வேறு வழிகளிலும் உதவி செய்து கொண்டிருந்த தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபையின் நடவடிக்கைகளையும் அதன் தலைவர் சாகுல் கமீது சாகிபையும் கண்காணிக்கத் தொடங்கியது. இந்துத்துவா அமைப்புகளைத் திருப்திப்படுத்த அவரைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் தமிழக அரசு திட்டமிட்டிருந்தது.
இதனை முன்கூட்டியே அறிந்து கொண்ட மாநில முஸ்லிம் லீக் தலைவர் அப்துஸ்ஸமது சாகிப் கேரளத் தலைவர் சி.ஹெச்.முகம்மது கோயா சாகிபை அழைத்துக் கொண்டு அப்போதையப் பிரதமர் இந்திரா காந்தியை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்து தமிழக அரசின் கைது முயற்சியைத் தடுத்து நிறுத்தினார். இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும்
சாகுல் கமீது சாகிப் தனது சகோதரர் ரிபாய் சாகிபுடன் இணைந்து மீனாட்சிபுரத்தில் இஸ்லாத்தில் இணைந்த மக்கள் மார்க்கக் கல்விபெறவும். அங்கு மதரஸா, பள்ளிவாசல் கட்டப்படவும், வேறு பல இஸ்லாமியப் பணிகள் நடைபெறவும் தொடர்ந்து துணை நின்றார்.
சமத்துவ சகோதரத்துவ சங்கம் (எஸ்.எஸ்.எஸ்)
மீனாட்சிபுரம் மதமாற்ற நிகழ்வுக்குப் பின்னர், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சமூகப் பதற்றம் அதிகரித்தது. இந்துத்துவா அமைப்புளின் தூண்டுதல் காரணமாக சாதி இந்து அமைப்புகள் முஸ்லிம்கள் மீதும், பட்டியலின மக்கள் மீதும் வெறுப்பும் பகைமையும் கொள்ள ஆரம்பித்தன. இந்து முன்னணித் தலைவரான இராம கோபாலன் அந்தக் காலகட்டத்தில் தமிழகமெங்கும் பிரச்சாரம் மேற்கொண்டு ‘இந்துக்களே முஸ்லிம்கள் நடத்தும் வணிக நிறுவனங்களில் பொருட்களை வாங்காதீர்கள், அவர்களை புறக்கணியுங்கள்’ என்று பிரச்சாரம் செய்து வந்தார்.
இந்து முன்னணியின் ‘ஞானரதம் தென் தமிழகத்தை வலம் வரப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் முஸ்லிம்களும், பட்டியலின மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் தேவையை உணர்ந்த இரு தரப்பைச் சார்ந்த இளைஞர்களும், படித்தவர்களும் சாகுல் கமீது சாகிபை அணுகி ஒரு பொது அமைப்புத் தொடங்க வேண்டுமென வலியுறுத்தினர். இது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் அவரின் தலைமையின் கீழ் 10.01.1982அன்று கடையநல்லூர் கலந்தர் மஸ்தான் தெருவிலுள்ள ஜக்கரியா முஸ்லிம் சங்கத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் இருதரப்பு மக்களும் இணைந்த ‘சமத்துவ சகோதரத்துவ சங்கம்’ தொடங்குவதென முடிவு செய்யப்பட்டது. இதன் அமைப்பாளராக சாகுல் கமீது சாகிபும், தலைவராக முஸ்லிம் லீக் பிரமுகர் வி.எஸ். கமருத்தீனும், செயலாளராகப் பட்டியலின வகுப்பைச் சார்ந்த இராமநாதனும் கொள்கை பரப்பு செயலாளராக அதே வகுப்பைச் சார்ந்த இராஜாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த அமைப்பு சிறப்பான முறையில் செயல்படத் தொடங்கியது. எனினும் இந்துத்துவா அமைப்புகளால் இதனைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. ஏதாவது ஒரு பிரச்னையைக் கிளப்பிக் கலவரத்தைத் தூண்டுவதற்கு தக்க தருணத்தை அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
8.06.1982 அன்று சமத்துவ சகோதரத்துவச் சங்கத்தின் சார்பில் கடையநல்லூரில் நடந்த சிறப்பு கூட்டத்தில் முஸ்லிம்லீகின் தமிழ் மாநிலத் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துல் ஸமது சாகிப், அகில இந்தியத் தலைவர் இப்ராகிம் சுலைமான் சேட் சாகிப் மற்றும் சாகுல் கமீது சாகிப் ஆகியோர் உரையாற்றினார். இதில் கலந்து கொள்வதற்காக புளியங்குடி பகுதியிலிருந்து வேன்கள் மூலம் கடையநல்லூர் வந்து கொண்டிருந்த பட்டியலின மக்கள் மீது சொக்கம்பட்டி என்ற ஊரில் கூடியிருந்த தேவரின இளைஞர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் பட்டியலின மக்கள் பலருக்குக் காயமேற்பட்டது. இங்கு தான் கலவரத்திற்கான வித்து ஊன்றப்பட்டது. இக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முஸ்லிம்லீக் தலைவர் இப்ராகிம் சுலைமான் சேட் சாகிப் ‘ முஸ்லிம்களும் பட்டியலின மக்களும் அரசியல் ரீதியில் ஒன்றுபட்டுச் செயல்பட்டால் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிவிடமுடியும்’ என்று
கூறியிருந்தார்.
இந்தக் கூட்டம் நடந்த மறு நாள் 9.6.82 அன்று புளியங்குடியில் பட்டியலின மக்களுக்கும், தேவரின மக்களுக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டன. இதில் தேவரின மக்கள் பாதிக்கப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அதற்கு மறுநாள் 10.06.1982 அன்று புளியங்குடி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சார்ந்த தேவரின மக்கள் ஒன்று திரண்டு அருகிலிருந்த அய்யாபுரம் என்ற பட்டியலின மக்கள் நிறைந்து வாழ்கின்ற கிராமத்திற்குச் சென்று திடீர்த் தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் எட்டு பட்டியலின மக்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து புளியங்குடிசுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும் கலவரம் பரவியது. புளியங்குடியில் பட்டியின மக்கள் மீது காவல்துறையின் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இருவர் உயிரிழந்தனர். புளியங்குடியிலும் வாசுதேவநல்லூரிலும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டுச் சேதமுற்றன. வாசுதேவநல்லூரில் ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டார்.
கடையநல்லூர் பொதுக் கூட்டத்தில் சுலைமான் சேட் பேசியது தான் கலவரத்திற்குக் காரணம் என இந்துத்துவ அமைப்புகள் குற்றம் சாட்டின. குமுதம், துக்ளக் ஆகிய இதழ்களும் இதே ரீதியில் கருத்துக்களைத் தெரிவித்திருந்தன. கலவரம் நடந்து கொண்டிருக்கும்போதே சாகுல் கமீது சாகிப் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மூன்றுமாதகால சிறை வாசத்திற்குப் பின் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதன் பின்னர் இச்சங்கத்தின் செயல்பாடுகள் படிப்படியாகக் குறைந்து ஒரு கட்டத்தில் நின்று போனது.
இஸ்லாமியப் பேரவை:
1983ஆம் ஆண்டு சாகுல் கமீது சாகிப் சென்னையில் தமிழ் நாடு இஸ்லாமியப் பேரவை என்ற புதிய அமைப்பு ஒன்றைத் தொடங்கினார். இது கட்சி சார்பற்ற தொண்டு இயக்கம் என்றும் இதில் முஸ்லிம்கள் அனைவரும் சேர்ந்து பணியாற்றலாம் என்று அறிவித்தார்.
முஸ்லிம்லீகின் சட்டமன்ற உறுப்பினராகவும், மாவட்ட முஸ்லிம் லீக் தலைவராகவும் இருக்கும் அவர், இது போன்ற தனி அமைப்பு ஒன்றைத் தொடங்கியதை முஸ்லிம் லீகின் மாநிலத் தலைமை ஏற்கவில்லை. அதனை ஒழுங்கீனமான செயலாகக் கருதியது. முஸ்லிம்களுக்காக முஸ்லிம் லீக் இருக்கும் போது இன்னொரு அமைப்பு ஏன் என்று கேள்வி எழுப்பிது. இந்த அமைப்பைக் கலைத்து விடவேண்டுமென்றும் இல்லையெனில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலத் தலைமை அவரை எச்சரித்தது. ஆனால் அவர் இந்த அமைப்பைக் கலைக்க மறுத்து விட்டார்.
இதன் காரணமாக 1984ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற கட்சியின் மாநில பொதுக் அவரை முஸ்லிம் லீகின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது. அப்போது அவர் சட்டமன்ற உறுப்பினராகவும், நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுப்பணிகள்:
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்பு, அவர் பல்வேறு பொதுப்பணிகளில் ஈடுபட்டார். ‘இஸ்லாமிய இதயக்குரல்’என்ற மாத இதழைத் தொடங்கி அதில் தனது எண்ணங்களையும், கருத்துக்களையும் எழுதி வந்தார். நாட்டு நடப்புகளை விமர்சிக்கும் கேலிச் சித்திரங்களையும் அதில் இடம்பெறச் செய்தார். 1993 ஆம் ஆண்டு ‘இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு’ என்ற அமைப்பு ஒன்றைத் தொடங்கினார். அவ்வமைப்பின் தலைவராக அவரும், செயலாளர் பேராசியர் ஏ.அஷ்ரப் அலியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பின்னர் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு முஸ்லிம்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்தது. அவர் மாவட்டமெங்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல ஊர்களில் இதன் கிளைகளை நிறுவினார். இந்த அமைப்பின் சார்பாக ‘இஸ்லாமிய சகோதரத்துவக் குரல்’என்ற மாத இதழைத் தொடங்கி நடத்தி வந்தார். அதில் பெரும்பாலான அரசியல் சார்ந்த கட்டுரைகளை அவரே எழுதினார்.
24.09.1994, 25.09.1994 ஆகிய நாட்களில் முஸ்லிம் அனாதை நிலைய ஆதரவில் பாளையங்கோட்டையில் கல்வி விழிப்புணர்வு மாநாடு ஒன்று நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த கல்வியாளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இம் மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்த அவர் மாநாடு வெற்றிகரமாக நடைபெறப் பாடுபட்டார்.
மேலும் சிறுபான்மையினர் கல்வி விழிப்புணர்வுக் கூட்டங்களை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பாளையங்கோட்டை ஆகிய நகரங்களில் நடத்தினார். தனது சிறிய தந்தையாரால் தென்காசியில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்த காட்டுபாவா நடுநிலைப் பள்ளியின் தாளாளராகவும் பொறுப்புவகித்தார். நெல்லை மாவட்டத்திலுள்ள சில முஸ்லிம் ஜமாஅத்துகளில் பிரச்னைகள் ஏற்பட்டபோது அதில் தலையிட்டு சுமூகமாகத் தீர்த்து வைத்தார். இளமையிலேயே அவர் கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். நினைத்த மாத்திரத்தில் கவிதை எழுதி விடுவார். பொதிகைக் கவிஞர் என்ற சிறப்புப் பெயரும் அவருக்குண்டு.
அவரது கவிதைகள் இஸ்லாமிய இதயக்குரல் இதழிலும். பிற இஸ்லாமிய இதழ்களிலும் வெளிவந்தன. எனினும் அவை நூல் வடிவம் பெறவில்லை.
பண்பு நலன்கள்:
சாகுல் கமீது சாகிப் மிகுந்த நெஞ்சுரம் மிக்கவராகத் திகழ்ந்தார். யாருக்கும் அஞ்சாமல் தனது கருத்துக்களை எடுத்துரைத்து வந்தார். அவரது சில செயல்பாடுகள் விமர்சனங்களுக்கு உள்ளான போதிலும் அதனைப் பொருட்படுத்தாது தனது வழியில் சென்றார். எப்போதும் பச்சை நிற ஆடைகளையே உடுத்துவார். பச்சை நிறத் தொப்பி, பச்சைத் துண்டு, பச்சைப் பேனா என இஸ்லாமிய நிறமான பச்சை மீது இச்சை கொண்டிருந்தார்.
முடிவுரை:
சாகுல் கமீது சாகிப்பிற்கு 1951 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. துணைவியார் பெயர் சாராபீவி.
இத்தம்பதியினருக்கு முகம்மது இப்ராகிம், முகம்மது இஸ்மாயில் ஆகிய இரு புதல்வர்களும், ரபக் ஜமால் பாத்திமா, ஜமால் ஹமீதா பானு ஆகிய இரு மகள்களும் உண்டு. மூத்த புதல்வர் இப்ராகிம் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் பணியாற்றுகிறார். தென்காசி காட்டுபாவா உயர்நிலைப் பள்ளியின் தாளாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். இளையவர் அப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் தற்போது பணியாற்றி வருகிறார்.
தனது வாழ்க்கையின் பிந்தியக் காலகட்டத்தில் சாகுல் கமீது சாகிப் தென்காசியிலேயே வசித்து வந்தார். அந்நகரில் பல்வேறு பொதுப்பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். சில காலம் உடல் நலிவுற்றிருந்த அவர் 14.04.2002 அன்று மரணமுற்றார். அவரது வாழ்க்கையே போராட்டமாக இருந்தது. அவரை ஒரு சமுதாயப் போராளி என்று அழைப்பதே பொருத்தமானது.
நன்றி: தகவல்கள் அளித்திட்ட சாகுல் கமீது சாகிபின் புதல்வர் முகம்மது இப்ராகிம் மற்றும் சமத்துவ சகோதரத்துவ சங்கத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராயிருந்த கடையநல்லூர் இராஜா ஆகியோருக்கு.
கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள ... 99767 35561

அ. முஹம்மது கான் பாகவி
அரபி மத்ரசா மாணவச் செல்வங்களே! அரபிமொழி சொல் இலக்கணம் (ஸர்ஃப்), பொருள் இலக்கணம் (நஹ்வு), இலக்கியம் (பலாஃகத்), மொழி (லுஃகா), கிராஅத் மற்றும் தஜ்வீத் (குர்ஆனைச் சீராக ஓதும் கலை), திருக்குர்ஆன் மனனம் (தஹ்ஃபீள்), திருக்குர்ஆன் விரிவுரை (தஃப்சீர்), திருக்குர்ஆன் அறிவியல் (உலூமுல் குர்ஆன்), நபிமொழி தரவியல் (உஸூலுல் ஹதீஸ்), நபிமொழி (ஹதீஸ்), சட்டக்கலை (ஃபிக்ஹ்), நவீனப் பிரச்சினைகளுக்குத் தீர்வு (ஃபதாவா), கொள்கை (அகீதா), பாகப்பிரினை மற்றும் வாரிசுரிமைச் சட்டம் (மீராஸ்) ஆகிய கலைகள் குறித்தும் அவற்றின் அவசியம் மற்றும் நெளிவுசுளிவுகள் குறித்தும் இதுவரை விவரித்தோம்.
இக்கலைகள் எல்லாம் அரபிக் கல்லூரிகளில் ஓரளவு கற்பிக்கப்படுகின்றன. அரபிக் கல்லூரிகள் முழுக் கவனம் செலுத்தியாக வேண்டிய அதிமுக்கியமான சில கலைகள் உள்ளன. இவை பெயரளவுக்கு நடத்தப்படும்; அல்லது அடியோடு கவனிக்கப்படாமல் இருக்கும்.
அவற்றில் ஒன்றுதான், சீரத்துந் நபி மற்றும் இஸ்லாமிய வரலாறு. முந்தியதைச் சுருக்கமாக ‘சீரா’ என்பர். இது, அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறைக் குறிக்கும். நபிகளாரின் பிறப்பு முதல் இறப்புவரை ஆண்டுவாரியாக அவர்களது வாழ்க்கையை அலசுகின்ற அருமையான சுவைமிக்க கலையாகும் இது.
சீரா - என்றால் என்ன?
‘சீரத்’ எனும் சொல்லுக்கு நடத்தை, வழி, போக்கு, முன்மாதிரி முதலான பொருள்கள் உண்டு. ‘சீரத்துந் நபி’ என்றால், நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை, நடத்தை, நடவடிக்கை எனப் பொருள். இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் நிலைமைகள், குணங்கள், நடவடிக்கைகள், தன்மைகள், வழிகாட்டல்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய தகவல் களஞ்சியமே சீரா ஆகும்.
சிலர் இப்படியும் இலக்கணம் கூறுவதுண்டு : திருக்குர்ஆனுக்கு, அதன் எல்லா விளக்கங்களுடன் கூடிய முழுமையான முன்னுதாரணமாக விளங்கும் நடமாடும் விரிவுரையே ‘சீரா’ ஆகும். ஆம்! இறைமறையாம் திருக்குர்ஆனை வானவரிடமிருந்து செவிவழியாகக் கேட்டு, நினைவில் நிறுத்தி, தோழர்கள் வாயிலாகப் பதிவு செய்து, சொல்லாலும் செயலாலும் விளக்கமளித்து, வாழ்ந்துகாட்டிய செம்மல்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
அண்ணலாரின் வாழ்க்கை வரலாறு (சீரா) எல்லா மொழிகளிலும் பதிவு செய்யப்பட்டு, சமுதாயத்தாரால் பாதுகாக்கப்பட்டுவருகிறது. அரபியில் ‘ஷாமிலா’ எனும் குறுந்தகட்டில் பதிவான சீரா நூல்கள் மட்டும் 200-க்கும் அதிகமாக இருக்கும். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலாக எழுத்தில் பதிவு செய்தவர் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் (இறப்பு: ஹிஜ்ரீ-92) ஆவார்கள். நபித்தோழர் ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களுடைய புதல்வர்தான் உர்வா (ரஹ்) அவர்கள்.
அடுத்து கலீஃபா உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுடைய மகனார் அபான் (ரஹ்) அவர்கள் (இறப்பு: ஹிஜ்ரீ-105) பதிவிட்டார்கள். அடுத்து யமனியரான வஹ்ப் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் (இறப்பு: ஹிஜ்ரீ-110). அடுத்து ஷுரஹ்பீல் பின் சஅத் (ரஹ்) அவர்கள் (இறப்பு: ஹிஜ்ரீ-123). அடுத்ததாக இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (இறப்பு: ஹிஜ்ரீ-124).
இவர்களில் வஹ்ப் (ரஹ்) அவர்கள் எழுதிய ‘சீரா’ நூல், ஜெர்மனியிலுள்ள ஹைடில்பர்க் (Heidelberg) நகரில் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
மேற்கண்ட அனைவருமே நபிமொழி அறிவிப்பாளர்களில் ‘தாபிஉ’கள் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் சீராவை எழுதிப் பதிவு செய்யும் பணியின் முக்கியத்துவம் வளரத் தொடங்கியது. சீராவின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய, தெளிவும் உறுதியும் வாய்ந்த தரத்தை சீரா எட்டியது.
இந்தத் தலைமுறையின் முதன்மையான ஆசிரியராக விளங்கியவர், ஃபிக்ஹ் கலை மேதை முஹம்மத் இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் (இறப்பு: ஹிஜ்ரீ-152). அன்னாரை அடுத்து இப்னு ஹிஷாம் (ரஹ்) அவர்கள் (இறப்பு: ஹிஜ்ரீ-213) ஆவார்கள்.
சீரா இப்னு ஹிஷாம் - நூலாசிரியரின் முழுப் பெயர் அப்துல் மலிக் பின் ஹிஷாம் பின் அய்யூப் அல்ஹிம்யரீ (ரஹ்), முஸ்தஃபா அஸ்ஸகா, இப்ராஹீம் அல்அப்யாரீ, அப்துல் ஹஃபீழ் அஷ்ஷலபீ ஆகிய மூன்று அறிஞர்களின் ஆய்வுடன் சிரியா பதிப்பகம் ஒன்று இந்நூலை வெளியிட்டது. 1955இல் அதன் இரண்டாம் பதிப்பு வெளியானது. இரு பாகங்களில் வெளிவந்துள்ள இந்நூலில் அடிக்குறிப்பு விளக்கமும் இடம்பெறுகிறது.
அவ்வாறே, சீராவின் முன்னோடியான முஹம்மத் பின் இஸ்ஹாக் பின் யசார் அல்மதனீ (ரஹ்) அவர்கள் எழுதிய ‘சீரா இப்னு இஸ்ஹாக்’ நூலில் நபி வரலாறும் போர்கள் குறித்த தகவல்களும் இடம்பெறுகின்றன. சுஹைல் ஸகார் அவர்களின் ஆய்வோடு பைரூத் (லிபியா) தாருல் ஃபிக்ர் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டது. ஒரே பாகத்தில் வெளியாகியுள்ள இதன் முதல் பதிப்பு 1978இல் வெளிவந்தது.
வரலாறு - தாரீக்
ஏதேனும் ஒரு படைப்பு கடந்துவந்த நிகழ்வுகளும் சந்தித்த நிலைகளும் கொண்ட மொத்தத் தகவலுக்கே வரலாறு (History) என்பர். கடந்த காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளே வரலாறு, அல்லது சரித்திரம் எனப்படுகிறது.
இதில் தனிமனிதனோ ஒரு சமூகமோ கடந்துவந்த பாதையும், இயற்கை மற்றும் மனிதகுல நடப்புகளும் அடங்கும். கடந்தகால சமுதாயங்களின் நிலைகளை அறிவதே வரலாற்று அறிவு எனப்படுகிறது. அவர்களின் பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், தொழில்கள், வமிசாவளி, சாதனைகள் ஆகியவற்றை அறிவதுதான் அது.
வரலாற்றைக் கற்பதால் நமக்குக் கிடைக்கும் மிகப்பெரும் பயன் பாடம்; வாழ்க்கைப் பாடம். முற்கால மனிதர்களின் நிலைகளைக் கொண்டு படிப்பினை பெற்று, அதன்மூலம் நல்லறிவை வளர்த்துக்கெள்வது; உலகப் படைப்புகளின் இயல்புகளையும் காலத்தின் மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிகளையும் அறிந்து நம் அனுபவ ஆற்றலை வளர்த்துக்கொள்வது வரலாற்றால் கிடைக்கும் விலைமதிப்பற்ற வெகுமதியாகும்.
இஸ்லாத்தைப் பொறுத்தமட்டில், வரலாற்று நூல்கள் ஏராளம் உள்ளன. ‘அஷ்ஷாமிலா’ எனும் குறுந்தகட்டில் பதிவான வரலாற்று நூல்களின் (அரபி) எண்ணிக்கை மட்டும் சுமார் 250 இருக்கும். வரலாற்றுக் கலையின் பிதா மகன் இப்னு கல்தூன் ஆவார். அவர்தான் இக்கலையை நிறுவியவர் என்பர்.
இருப்பினும், இப்னு கல்தூன் (ரஹ்) அவர்களுக்கு முன்பே அறிஞர்கள் பலர் வரலாறு எழுதியுள்ளனர். இந்த வகையில் ஹைஸம் பின் அதீ (ரஹ்) அவர்கள் (இறப்பு: ஹிஜ்ரீ - 207) எழுதிய வரலாறு முதலிடத்தைப் பெறுகிறது. அடுத்து முஹம்மத் பின் சஅத் (ரஹ்) அவர்கள் (இறப்பு: ஹிஜ்ரீ-236) எழுதிய தபகாத்து இப்னு சஅத்; அதற்கடுத்தது, கலீஃபா பின் கய்யாத் (ரஹ்) அவர்கள் (இறப்பு: ஹிஜ்ரீ-240) எழுதிய தாரீகு - வரலாறு ஆகும்.
வரலாற்றியல் (Historiography):
வரலாற்று ஆதாரங்களை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அணுகி, அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த தகவல்களைத் தொகுத்து, திறனாய்வுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கோவையாக எழுதுவதே ‘வரலாற்றியல்’ எனப்படும் என்கிறது Britannica Encyclopedia.
வரலாறு எழுதுவதில் மேனாட்டு மரபில் இரு வழிமுறைகள் உள்ளன. 1. ஆவணங்களைக் குவித்தலே வரலாற்றியல் என்பதாகும். 2. காரணகாரியங்களை விளக்கிக் கதையாகப் புனைவது மற்றொன்று. கி.மு. 5ஆம் நூற்றாண்டில் ஹெரோடோட்டஸ், பிற்காலத்தில் துஸிடெடீஸ் ஆகியோர் சமகால நிகழ்ச்சிகளை விவரிக்கும் தங்கள் முயற்சியின்போது நேரடி விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தினர்.
நான்காம் நூற்றாண்டில் கிறித்தவ வரலாற்றியல் கோலோச்சியது. மனித வாழ்க்கையில் தெய்வம் ஏற்படுத்திவரும் மாற்றங்களே உலக வரலாற்றுக்குக் காரணம் எனும் கருத்தை அது உருவாக்கியது. இக்கொள்கை, இடைக்காலம் முழுவதும் செல்வாக்குப் பெற்றிருந்தது. நவீன ஐரோப்பிய வரலாற்றியலின் தொடக்கத்தில், மனிதத் தன்மை, திறனாய்வுக் கருத்தில் உருவான சமதர்ம நோக்கு ஆகியவை தாக்கத்தை ஏற்படுத்தின.
19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில், முக்கிய ஆதாரங்களின் அடிப்படையிலான நவீன வரலாற்று ஆய்வு முறைகள் உருவாயின. கடந்த காலத்தின் முழு நிலையையும் அறியும் நோக்கத்தோடு, நவீன வரலாற்றாசிரியர்கள், சாதாரண மனித நடவடிக்கைகள், பழக்கங்கள் ஆகியவற்றின் பதிவுகளை மறு உருவாக்கம் செய்ய முயன்றுள்ளனர். அந்த மறு உருவாக்கத்தின்போதுதான், சமயம், அரசியல், ஆட்சி முறை, கலாசாரம் ஆகியவை தொடர்பான வரலாற்றுத் தகவல்களில் விருப்பு வெறுப்பு, ஒரு சார்பு, மனஅரிப்பு ஆகிய குறுகிய கண்ணோட்டத்திற்கு மேற்கத்திய வரலாற்றாசிரியர்கள் அடிமைகளாயினர்.
முஸ்லிம் வரலாற்றியலைப் பொறுத்தவரையில், பெரும்பாலும் தகுந்த ஆதாரங்கள், செவிவழி தகவல்கள், கள ஆய்வு போன்ற நியாயமான அடிப்படைகளைக் கொண்டதாகவே அமைந்துள்ளது. மிகைப்பற்று காரணமாகத் தனி மனிதர்கள் வரலாற்றில் சிலர், ஆய்வு செய்து உறுதிப்படுத்தாமலேயே காதில் கேட்டதை எல்லாம் பதிவு செய்துவிட்டுப் போயுள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. அந்தக் கதைகளைக்கூட ஆய்வாளர்கள் திறனாய்வு செய்து உண்மையை வெளிக்கொண்டுவரத் தவறவில்லை. அவை கட்டுக்கதைகள் என்பதை நிறுவியுள்ளனர்.
இதனாலேயே, வரலாற்றியல் (இல்முத் தாரீக்) பற்றி முஸ்லிம் மேதைகள் இவ்வாறு குறிப்பிடுவர்:
வரலாற்றியல் என்பது, வலுவான கருத்தியல் கலையாகும்; பெரிய பயன்களும் சிறந்த இலக்கும் கொண்டதாகும். ஆம்! அது முந்தைய சமுதாயங்களின் பண்பாட்டு நிலைகளை நமக்குப் படம்பிடித்துக் காட்டும். நபிமார்களின் வாழ்க்கைமுறையைக் கூறும். மன்னர்களின் அரசியல் மற்றும் ஆட்சி முறையை விளக்கும்.
இதனாலெல்லாம், இம்மை, மறுமை விஷயங்களில் யாரைப் பின்பற்ற நாம் நாடுகிறோமோ அவரைப் பின்பற்றிப் பயனடைகின்ற வாய்ப்பு நமக்குக் கிடைக்கும்.
வான் மறையில் வரலாறு
திருக்குர்ஆன் ஓர் இறைமறை. அதில் மனித குலத்தை நல்வழிப்படுத்துவதற்கான இறைக்கட்டளை, இம்மை-மறுமை நிலைகள், பாவம்-புண்ணியம், இறைவழிபாடு, மனித உரிமைகள்… என எண்ணம், சொல், செயல் சார்ந்த வழிகாட்டல்களே நிறைந்திருக்கும்.
திருக்குர்ஆன் ஒரு வரலாற்று நூல் கிடையாது. இருந்தாலும், முந்தைய சமூகங்களின் ஆக்கம்-அழிவு, வாழ்வு-சாவு, ஏற்றம்-இறக்கம், ஏழ்மை-செழுமை, இறை ஆணைகளை ஏற்றல்-மறுத்தல், இறைத்தூதர்கள் சந்தித்த ஆதரவு-எதிர்ப்பு… எனப் பண்டைய காலத்தின் வரலாற்றுக் குறிப்புகள் அதில் நிறைந்து காணப்படுகின்றன.
இவற்றால் இறுதி சமுதாயமான நாம் படிப்பினை பெறலாம்; எண்ணிப்பார்த்து நம்மை நாமே திருத்திக்கொள்ளலாம்; நம்மைவிடப் பலத்தாலும் படையாலும் கொடிகட்டிப் பறந்தவர்களெல்லாம், இறைவனுக்கும் இறைத்தூதர்களுக்கும் விரோதமாக நடந்துகொண்டபோது, கண் இமைக்கும் நேரத்தில் எவ்வாறு அழிக்கப்பட்டனர்; அவர்களில் சிலர் விட்டுச்சென்ற மிச்சசொச்சங்கள் எங்கேனும் உள்ளனவா? அதுகூட இல்லாமல் முற்றாகத் துடைத்தெறியப்பட்டவர்கள் யார்?
இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, இறுதி சமுதாயம் பாடம் கற்கலாம்; தவறுகளையும் பாவங்களையும் களைந்து நல்லவர்களாக மாறலாம்; இனிமேலாவது இருக்கும் எஞ்சிய நாட்களில் பாவமன்னிப்புக் கோரி திருந்தலாம் என்பதற்காகவே குர்ஆனில் முந்தைய மக்களின் வரலாறுகளை அல்லாஹ் திரும்பத்திரும்ப எடுத்துரைப்பான்.
இதனால்தான், நபி நூஹ் (அலை) அவர்களின் வரலாற்றை எடுத்துரைத்துவிட்டு ஒரு வசனத்தில் இவ்வாறு கூறுவான் அல்லாஹ் : (நபியே!) இவை மறைவான செய்திகளில் அடங்கும். இவற்றை நாம்(தான்) உமக்கு அறிவிக்கிறோம். இதற்கு முன்னர் நீரும் உம்முடைய சமூகத்தாரும் இவற்றை அறிந்திருக்கவில்லை. எனவே, பொறுமை காப்பீராக! நிச்சயமாக இறையச்சம் உடையோருக்கே முடிவு (சாதகமாக) இருக்கும். (11:49)
இந்த வகையில் திருக்குர்ஆனில் ஆதித்தூதர் ஆதம் (அலை) அவர்கள் முதல் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் வரை 25 நபிமார்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன.
அவர்களில் நோய்நொடியால் வாடிய அய்யூப் (அலை) அவர்கள், மீன் வயிற்றில் சிக்கி அவதியுற்ற யூனுஸ் (அலை) அவர்கள், சர்வாதிகாரி பாரோவிடமிருந்து தம் மக்களான இஸ்ரவேலர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த போராளி மூசா (அலை) அவர்கள், உலகம் முழுவதையும் ஆண்ட பேரரசர் சுலைமான் (அலை) அவர்கள், ஓரிறைக் கொள்கையின் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்கள், சகோதரர்களின் சூழ்ச்சியிலிருந்து காப்பாற்றப்பட்டு, எகிப்தின் அமைச்சரவையில் முக்கியப் பங்கு வகித்த பேரழகர் யூசுஃப் (அலை) அவர்கள், அநாதையாகப் பிறந்து உறவினர்களால் வளர்க்கப்பட்டு, சொந்த மக்களாலேயே பிறந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்டு, இறுதியில் உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்த இறுதித் தூதர் முத்திரை நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் முதலானோர் அடங்குவர்.
அதிகார வர்க்கத்தில் பிறந்து, செருக்கின் உச்சிக்கே சென்ற ஃபாரோ, ஹாமான், நம்ரூத் போன்ற சர்வாதிகாரிகள், பணத் திமிரால் கர்வம் கொண்டு திரிந்த காரூன் போன்றவர்கள், உடல் வலிமைக்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் பெயர்போன, ஆத், ஸமூத், கிணற்றுவாசிகள், தோப்புக்காரர்கள், துப்பஉ ஆகியோர், பாலியல் குற்றத்தில் மூழ்கி அழிந்துபோன லூத் சமூகத்தார், சட்டவிரோத வணிகத்தில் ஈடுபட்ட மத்யன்வாசிகள்… என எல்லா வகை மனிதர்களைப் பற்றியும் எடுத்துக்கூறி, நமக்குப் பாடம் புகட்டுகிறான் இறைவன்.
வேதத்தின் பெயரால் பொய்யும் புரட்டும் பேசிவந்த பழைய வேதக்காரர்களின் முகத்திரையைக் கிழித்து, அவர்களை அடையாளம் காட்டுவதற்காக அந்த வேதங்களின் உண்மை நிலையைப் பல வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான்.
இவை எல்லாமே வரலாற்றின் பகுதிகள்தான், அறிவுரைக்காகவும் உண்மைகளை வெளிப்படுத்தவும் இந்த வரலாற்றுத் தரவுகள் மட்டும் நமக்குச் சொல்லப்படாமல் இருந்திருக்குமானால், நாம் இந்தத் துறையில் அநாதைகளாக்கப்பட்டிருப்போம். குர்ஆனுக்கு நன்றி! அதை அருளிய ஏகனுக்குக் கோடி நன்றி!
சுய வாசிப்பு
மாணவச் செல்லங்களே! அரபிக் கல்லூரிகளில் அறிஞர் பெருமகனார் அபுல் ஹசன் அலீ நத்வீ (ரஹ்) அவர்கள் எழுதிய ‘நபிமார்கள் வரலாறு’ (கஸஸுந் நபிய்யீன்) சில இடங்களில் பாடத்திட்டத்தில் உள்ளது. நூருல் யகீன் போன்ற சீரா நூல்கள் வெகுசில இடங்களில் அமலில் உள்ளது.
ஆனால், பல கல்லூரிகளில் சீராவுக்கோ பொதுவான இஸ்லாமிய வரலாறுகளுக்கோ போதிய இடமில்லை என்பதுதான் உண்மை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முழு வரலாறே சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை எனும்போது, கலீஃபாக்கள் வரலாறு, உமய்யாக்கள் ஆட்சி, அப்பாசிய்யாக்கள் ஆட்சி, ஃபாத்திமிய்யாக்கள் ஆட்சி, இந்தியாவில் முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி, இந்திய வரலாறு ஆகியவை பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
எனவே, சுய வாசிப்பு வாயிலாக இவற்றையெல்லாம் கற்று, வரலாற்று அறிவை வளர்த்துக்கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது!
(சந்திப்போம்)

புதன்கிழமை, 10 அக்டோபர் 2018 05:30

மண்ணின் வரலாறு - 15 கீர்த்திமிகு கீழக்கரை

Written by

தமிழகத்தின் முதல் பெரிய அரபிக் கல்விக் கூடம் வேலூர் பாக்கியாத் சாலிஹாத் மதரஸா என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கீழக்கரையிலுள்ள அரூசியா மதரஸாவே தமிழகத்தின் முதல் பெரிய மதரஸா. அரூசியா எனும் பட்டத்தை வழங்கும் இம்மதரஸாவில் ஓதிப் படித்தவர்கள்தான் குணங்குடி மஸ்தான், புலவர் நாயகம் போன்றவர்கள்.
காயல்பட்டினத்தில் பிறந்து கீழக்கரைக்கு மருமகனாய் வந்த தைக்கா சாகிபு அப்துல் காதர் நிறுவிய மதரஸாவே அரூசியா, இவர்தான் அண்ணலெங்கோ முஹம்மது (ஸல்) அவர்களின் பெருந்தொண்டைப் புகழும் ‘ஷஃபஇய்யா’ எனும் நூலை யாத்தவர்.
தைக்கா சாகிபிடம் பாடம் கேட்ட லெப்பை ஆலிம், ஆசானின் ஐந்தாவது மகனை மணந்து மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ஆனார். தமிழ், அரபி, உருது, பார்சி என புலமை பெற்ற மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அரூசியாவின் பொறுப்பை ஏற்றதோடு பல மௌலிதுகளையும் ராத்திபுகளையும் இயற்றியுள்ளார்.
அரூசியாவில் கற்றவர்களே கலவத்து நாயகமும் பல்லாக்கு வலியும் இவர்கள் கல்விக் கடலாகவும் அரபு மொழி மேதைகளாகவும் திகழ்ந்தனர்.
ஷைகு நாயகம் என்ற அகமது அப்துல்காதர் அவர்களும் மஹானந்த பாவா என்ற முகம்மது அப்துல்காதர் அவர்களும் குறிப்பிடத்தக்க சூஃபிகளாவர்.
காயல்பட்டனத்திலிருந்து வந்து கீழக்கரையில் வாழ்ந்த சதக்கத்துல்லா அப்பா, அண்ணலார் மீது அரபுக் கவிதைகள் பாடினார். அந்நூலின் பெயர் : வித்ரியா.
சதக்கத்துல்லா அப்பா அவர்களின் பேரர். சின்ன மரக்காயர் என்ற அப்துல்காதர் ஆலிம் புலவர் அரபியிலும் தமிழிலும் பல செய்யுட்களை இயற்றியுள்ளார். இவர் இயற்றிய நூலே ‘அடைக்கல மாலை.’
ஹபீபு முஹம்மது மரக்காயரின் தம்பி மகனான சையது இஸ்மாயில் லெப்பை மரைக்காயர் ‘மூஸா நபி நாயகம்’ எனும் நூலை இயற்றியுள்ளார்.
இவ்வூரில் வாழ்ந்த கருத்த சதக்குத் தம்பிப் புலவரும் காதிர் சாகிபு அண்ணாவியாரும் முஹம்மது காசிம் மரக்காயரும் சேர்ந்து ‘யூசுபு நபி காவியம்’ எனும் நூலை எழுதியதாக சொல்லப்படுகிறது. இவ்வூரில் பிறந்து இலங்கையில் மறைந்து அப்துல் மஜீது புலவர் ‘ஆசாரக் கோவை’ எனும் நூலை எழுதியுள்ளார்.
‘ஆயிரமசாலா’ பாடிய செய்யிது இசுஹாக் புலவர் ‘நபியவதார அம்மானை’ பாடிய கவி களஞ்சியப் புலவர் ‘சின்ன சீறா’ பாடிய பனீ அகமது மரைக்காயர் புலவர் ‘நூறு நாமா’ பாடிய செய்யது அகமது மரைக்காயர் புலவர், மதுரை தமிழ் சங்க வித்வான் செய்யிது முகம்மது ஆலிம் புலவர் ஆகியோர் கீழக்கரைவாசிகள்.
வளமான வணிகத்தால் வளமான வாழ்க்கைக்குச் சொந்தமுடைய பேரூர் பேரறிவாலும் பேரருளாலும் பல பெருமகன்களைக் காலந்தோறும் பெற்றே வந்துள்ளது.
அண்மைக் காலத்தில் பெரும் புகழ் பெற்ற அப்ஸலுல் உலமா டாக்டர் தைக்கா சுஹைப் ஆலிம் ஆய்வு செய்து எழுதிய நூல் மிகவும் சிறப்புக்குரியது. அந்நூலின் பெயர் : ARABIC ARAVI AND PERSIAN IN SARANDIB AND TAMILNADU.sadaksyed abthul kaderஅமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்நூல் மொழியியல் வரலாறு பற்றிய பல சந்ததிகளை உலகுக்கு உரைக்கிறது.

அப்ஸலுல் உலமா சுஹைல் ஆலிம் அவர்களுக்கு நேரெதிர் கருத்துக்களைக் கூறிய கவிஞர் இன்குலாப் எனும் சாகுல் அமீதும் கீழக்கரைக்காரரே.
‘தமிழகத்தில் மார்க்கோபோலோ, இபுனு பதூதா’ எனும் நூலை எழுதிய இத்ரீஸ் மரைக்காயரும் ‘பசுங்கதிர்’ எனும் இதழை நடத்திய எம்.கே.ஈ.மவ்லானாவும் கீழக்கரைக்காரர்களே!
‘தென்பாண்டிச் சீமையிலே’ எனும் பெயரில் ஏர்வாடியார் வரலாற்றை நாவலாக வடித்த சகோதரர் ச.சி.நெ.அப்துல் ரசாக்கும் அவருடைய அண்ணன் அப்துல் ஹக்கீமும் குறிப்பிடத்தக்க கீழக்கரை எழுத்தாளர்கள்.
‘காணாத காட்சி’ எனும் சிறுகதை நூலை எழுதிய மஜீதா மைந்தன் [இயற்பெயர் மகபூபா] சில நாவல்களை எழுதிய ரஹீமா ஆகிய பெண் படைப்பாளிகளும் கீழக்கரைவாசிகளே . எமக்குத் தெரியாதவரும் இருப்பர்.
மகத்தான சமுதாயத்தை அமைக்க மதரஸாக்கள் - கல்விக் கூடங்கள் உதவியிருக்கின்றன என்பதை கீழக்கரை மெய்ப்பிக்கிறது.
கீழக்கரை அரூசியா மதரஸா குணங்குடியார், புலவர் நாயகம் போன்றவர்களின் இரண்டாவது தாய் வீடாக இருந்ததை முன்பே குறிப்பிட்டுள்ளோம். இவர்கள் மட்டுமல்ல அக்கால மேதைகள் பலரையும் அரூசியா மதரஸா உருவாக்கித் தந்துள்ளது.
அவர்களில் முக்கியமானவர்கள் : புதூர் குட்டைக் காதர் லெப்பை, வேலூர் அஃலா ஹலரத் அவர்களின் தந்தை ஆத்தூர் அல்லாமா அப்துல் காதிர் சாகிபு, அம்மாபட்டினம் முகம்மது யூசுபு ஹலரத், அபிராமம் அப்துல் காதர் ஆலிம் சாகிபு.
கீழக்கரை அறிஞர்களையும் அருளாளர்களையும் பெற்ற பேரூர் மட்டுமல்ல கொடையாளர்கள் பலரையும் பெற்ற சீரூர்.
வள்ளல் சீதக்காதியைப் பற்றி தமிழகமே நன்கறியும். இவரைப் போல் மானுடர்க்கல்லாது தமிழ் வளர்க்க வாரி வழங்கியவர்கள் சிலர் இருந்துள்ளனர். பெரிய மரைக்காயர் என்ற லெப்பை நெய்னா மரைக்கார் ‘சின்ன சீறா’ எனும் நூல் வெளிவர கொடையளித்துள்ளார். அப்துல் காதிர் என்ற வள்ளலே ‘இராஜ நாயகம்’ எனும் நூல் வெளிவர கொடை நாயகராய் இருந்துள்ளார்.
ஆயிரமாண்டு கால வரலாற்றுச் சுவடுகளைக் கொண்டது கீழக்கரை என்றால் மிகையாகாது. காலங்கள் தோறும் கல்விச் சாலைகள் மூலம் கல்விப் பணி செய்த சமுதாயம் பிற்காலத்தில் உஸ்வத்துல் ஹஸனா எனும் சங்கத்தின் மூலம் கல்வியை முன்னெடுத்துச் சென்றது.
சங்கத்தின் பொறுப்பிலிருந்த புகழ்பெற்ற கே.டி.எம். எனும் விலாசத்துக்கு சொந்தக்காரரான ஹுஸைன் ஹாஜியார் மதரஸதுல் ஹமீதியா எனும் வித்தை ஹமீதியா தொடக்கப் பள்ளி என்னும் செடியாக்கினார். அதுவே வளர்ந்து ஹமீதியா மேல்நிலைப் பள்ளியாக கிளை விட்டு ஹமீதியா மகளிர் மேனிலைப் பள்ளியாகவும் வளர்ந்துள்ளது.
ஹமீதியா கல்விக் கூடங்களைத் தொடர்ந்து எவரும் எதிர்பாராத வகையில் இன்று கீழக்கரை கல்விக் கூடங்களின் தாயகமாகத் திகழ்கின்றது.
பத்து தொடக்கப் பள்ளிகள், பத்து மெட்ரிக்குலேசன் மேனிலைப் பள்ளிகள், ஐந்து கிண்டர் கார்டன் பள்ளிகள், முகம்மது சதக் பாலிடெக்னிக், முகமது சதக் ஐ.டி.ஐ., முகம்மது சதக் அறிவியல் கல்லூரி, முகம்மது சதக் ஆண்கள் கலைக் கல்லூரி, முகம்மது சதக் பொறியியல் கல்லூரி, தாஸிம் பீவி அப்துல் காதர் மகளிர் அறிவியல் கல்லூரி, புகாரி ஆலிம் அரபிக் கல்லூரி, சையது ஹமீதியா அரபிக் கல்லூரி, சையது ஹமீதியா கலை அறிவியல் கல்லூரி, கீழக்கரை கல்லூரிகளில் பெரும்பாலானவை மேதகு சேனா மூனா வகையறாவைச் சேர்ந்த ஹமீது அப்துல் காதர் அமைத்தவை. சென்னை சோழிங்கநல்லூரிலும் இவர்களின் கல்லூரி உள்ளது.bsa u
சேனா மூனா ஹமீது அப்துல் காதர் தனியார் கல்லூரிகள் உருவாக முதலமைச்சராக இருந்த எம்ஜியாருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்.
சேனா மூனாவுக்கு கல்விப் போட்டியாளர் சேனா ஆனா வகையறா இவர்கள்தான் வண்டலூர் பி.எஸ்.ஏ.பல்கலைக் கழகத்தை உருவாக்கியவர்கள்.
அண்மைக் காலத்தில் கீழக்கரை மைந்தர்கள் மைந்தர்களை மட்டுமல்ல பல்வேறு பகுதி மக்களையும் வாழ வைத்தவர்கள் கீழக்கரை வணிக முன்னோடிகள். கிழக்காசியா நாடுகளிலும் மேற்காசிய நாடுகளிலும் வேலை கொடுத்து இந்தியாவைச் செழிப்பாக்கியவர்கள் கீழக்கரை வணிகர்கள்.
கீழக்கரையின் மிக முக்கியமான பிரமுகர் பேரூராட்சித் தலைவராகவும் பதவி வகித்த அல்ஹஜ் கே.எஸ்.எம்.சாகுல் ஹமீது ஆலிம் ஜமாலியாவார்.
ஜமாலியா அரபுக் கல்லூரியில் பட்டம் பெற்ற ஹாஜியார் பேரூராட்சித் தலைவராக இருந்த போது கீழக்கரையைச் சுற்றியுள்ள ஊர்களிலும் பிரபலமானார். அவ்வாறு அவர் பிரபலமாகக் காரணம் தம்முடைய மார்க்கமான இஸ்லாத்தை நசுக்கப்பட்ட மக்களிடம் எடுத்துரைத்ததே.
இவரால்தான் கூரியூர் கிராமமே இஸ்லாத்தின் வண்ணத்தை பூசிக் கொண்டது. அழைப்பியல் முன்மாதிரி ஹாஜியார்.
தொடக்க காலத்தில் சங்குத் தொழிலில் கொடி கட்டிப் பறந்த ஹாஜியார் மோட்டார் படகு வாங்க கேரளத்துக்குச் சென்று வாங்கிய படகில் பயணித்து கீழக்கரை வந்தாராம். இன்னொரு முக்கிய சங்கதி கேரளத்திலிருந்து படகோட்டி வந்தவர்களில் ஒருசிலர் கீழைக்கரைவாசிகளாக்கினாராம்.
1960 ஆம் ஆண்டு டிசம்பரில் கீழைக்கரையில் நடந்த அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஐந்தாம் மாநாடு ஒரு மகத்தான மாநாடாக அமைந்தது.
அம்மாநாட்டின் போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர் பல்வேறு சங்கதிகளைப் பற்றி கதைக்கிறது.
அதிலுள்ள ‘வகுதை பூரான்’ எழுதிய ‘அதிசய மனிதர்’ எனும் கட்டுரைத் தொழில் முன்னோடி கே.டி.எம்.ஹூஸைன் ஹாஜியார் பற்றிக் கூறுகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கீழக்கரை ஏற்றுமதி இறக்குமதியில் நலிவுற்றது. இருபதாம் நூற்றாண்டு தொடங்கிய போது பிறந்த ஹுஸைன் ஹாஜியார் கீழக்கரை மீண்டெழ் வழிவகுத்தார்.
சங்கு முத்து ரத்தின வணிகங்களைத் தொடங்கிய ஹாஜியார் பலரை தம் பங்காளிகளாக்கிக் கொண்டார். இத்தகைய வழிமுறையை கீழக்கரையாளரைத் தவிர வேறு யாரும் வேறு யாரும் முன்னெடுக்கவில்லை. இதே முறையைத்தான் பிற்காலத்தில் பெரும் செல்வச் சீமானாக வளர்ந்த டாக்டர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பின்பற்றினார்.
இறுதியாக டாக்டர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் அவர்கள் குறிப்பிட்ட ஒரு நன்மொழியைக் கூறி கட்டுரையை முடிப்போம்.
“மறுமைக்கென நன்மையை நாடி நாம் இறைவனை வணங்கும் போது அடுத்தவேளை உயிருடன் இருப்போம் என்ற எண்ணமின்றி ஒரே ஓர்மையுடன் வணக்கம் புரிதல் வேண்டும். இம்மைக்கென செல்வம் தேடி நாம் நிறுவனங்களைத் துவங்கும் போது ஆயிரம் ஆண்டுகள் தழைத்திருக்கும் என்ற எண்ணத்தில் தக்க கட்டமைப்புகளுடன் துவங்கிட வேண்டும்.”
மண் வலம் தொடரும்…
9710266971

                                       அ. முஹம்மது கான் பாகவி

அருமையான மாணவக் கண்மணிகளே! இஸ்லாமிய வாரிசுரிமை மற்றும் பாகப்பிரிவினை சட்டம் குறித்து அறிந்து வருகிறீர்கள். இச்சட்டம் எவ்வளவு துல்லியமானது; நேர்மையானது என்பதை, ஒப்பீடு அளவில் ஆய்வு செய்தால் உங்களால் உறுதியாகப் புரிந்துகொள்ள முடியும். இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில், ஆண் வாரிசுகளுக்கே முன்னுரிமையும் அதிகப் பாகமும் வழங்கப்படுகின்றன என்றும், பெண் வாரிசுகளுக்குப் பாரபட்சம் காட்டப்படுகிறது என்றும் குற்றமும் குறையும் சொல்லப்படுவதை அறிந்திருப்பீர்கள். அதற்கான தக்க விளக்கத்தை நீங்கள் அறிவது காலத்தின் கட்டாயமாகும். அதற்காகவே இக்கட்டுரை! அறியாமைக் காலம் இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்தில் பெண்களைக் கொத்தடிமைகள் போல் நடத்திவந்தனர் அரபியர். திருமணம், மணவிலக்கு, சொத்துரிமை... என எதை எடுத்துக்கொண்டாலும் பெண்களை மனுஷிகளாகவே அவர்கள் மதித்ததில்லை. பெண் சிசு கொலை, பெண்ணைப் பெற்றவன் அவமானம் தாங்காமல் தலைமறைவாக வாழ்வது, கணவனை இழந்த கைம்பெண் மாதக்கணக்கில் அழுக்கோடும் அசிங்கத்தோடும் வாழ வேண்டிய பரிதாபம், கணவன் குடும்பத்தாரே அவளுக்குச் சொந்தம் கொண்டாடி அவளது வாழ்க்கையைச் சூனியமாக்குவது... எனப் பெண்ணினக் கொடுமைகளுக்கு அன்று பஞ்சமே இருந்ததில்லை.
மொத்தத்தில், பெண் இனத்தையே ஓர் அவமானச் சின்னமாகக் கருதிய இருண்ட காலத்தில்தான், நபிகள் நாயகம் (ஸல்) என்ற
அற்புதமான இறைத்தூதர், இஸ்லாமிய மார்க்கத்தை அம்மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். அன்னாருக்கு இறைவன் குர்ஆன் எனும் மாமறையை அருளினான். அதன் வழியில் புத்துலகிற்கு மக்களை அழைத்துச் சென்றார்கள் நபிகளார்.
அப்புத்துலகில் பெண்மைக்கு மரியாதை இருந்தது. கற்புக்குப் பாதுகாப்பு இருந்தது. தாய்மைக்கு முதலிடம் இருந்தது. பெண்ணைப் பெற்றவன், இம்மையில் மட்டுமன்றி மறுமையிலும் இறைக் கருணைக்கு உரியவன் என்று போதித்தார்கள். ‘தாயின் காலடியில் சொர்க்கம்’ என்று சொல்லி, அன்னையரின் அந்தஸ்தை வானளவிற்கு உயர்த்தினார்கள். (அஹ்மத்)
சொத்துரிமை அறியாமைக்கால அரபியர், சொத்து என்பதேஆண்களுக்கு மட்டும்தான்; ஆண்களிலும் பெரியவர்களுக்கு மட்டும்தான் என்ற தீர்க்கமான முடிவில் இருந்தார்கள். இதற்கு அவர்கள் கற்பித்த காரணம்தான் வேடிக்கையானது. ஆண்களில் பெரியவர்களாலேயே போரில் கலந்துகொள்ள முடியும்; வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட முடியும்; பிறர் உடைமைகளைப் பறிக்க முடியும். இப்படி விநோதமான காரணங்களைப் பட்டியலிட்டார்கள். இதனால் பெண்களுக்குச் சொத்துரிமையை மறுத்தனர்; குழந்தைகள், பலவீனர்கள் ஆகியோருக்கும் சொத்தில் பங்கு கிடையாது என்று அறிவித்தனர்.
இந்நிலையில்தான், திருக்குர்ஆன் வாயிலாக இஸ்லாம் பாகப்பிரிவினை விதிகளை மிகத் துல்லியமாகவும் விரிவாகவும் வழங்கியது. இறந்துபோன ஒருவரின் சொத்தில், அவருடைய உறவினர்களில் யார், யாருக்கு உரிமையுண்டு; எவ்வளவு பாகம் உரிமையுண்டு; எப்போது உரிமையுண்டு என்ற விவரங்களை விலாவாரியாக எடுத்துரைத்து, அதைக் குடிமைச் சட்டமாக ஆக்கியது திருக்குர்ஆன். இது நடந்தது கி.பி. 625 வாக்கில். ஆனால், இந்தியாவில் இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956இலும் கிறிஸ்தவ வாரிசுரிமைச் சட்டம் 1925இலும்தான் இயற்றப்பட்டது; அதுவும் மனிதர்களால்.
இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில், பொதுவானதொரு அடிப்படைக் கூறு உண்டு. இறந்துபோனவரின் சொத்தில் பங்கு பெற வேண்டுமானால், இறந்தவரின் உறவினராக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. அதில் இரத்த சொந்தமும் முத்த சொந்தமும் அடங்கும். (திருமணத்தால் வரும் சொந்தமே முத்த சொந்தமாகும்.) உறவின் நெருக்கம், அந்த உறவிலும் பொருளாதாரத் தேவையின் அளவு, வாழ்க்கைச் செலவினத்தை எதிர்நோக்கியுள்ள இளைய தலைமுறையா; வாழ்க்கையின் எல்லையைத் தொட்டுவிட்ட மூத்த தலைமுறையா என்ற கண்ணோட்டம் ஆகிய அடிப்படைகளைக் கொண்டே பாகப் பிரிவினை அமையும்.
ஆக, உறவினருக்கு வாரிசுரிமை உண்டு. ஆனால், வாரிசுகளுக்குக் கிடைக்கும் பங்குகள், அவரவரின் தகுதி நிலைக்கேற்ப கூடலாம்; அல்லது குறையலாம். எல்லாருக்கும் சமமான பாகம் கிடைக்காது. தர்க்கரீதியாக அதை ஏற்கவும் முடியாது. சொத்துக்காரரின் சொந்த மகளும் தம்பியும் சமமாக முடியுமா? மகன் இல்லாதபோது தம்பிக்குச் சொத்தில் பங்கு கிடைக்கலாம். ஆனால், மகளுக்குக் கிடைக்கும் சமமான பங்கு கிடைக்காது.
அவ்வாறே, உறவுகளில் மிக நெருங்கிய உறவினர் இருக்கையில், தூரத்து உறவினருக்குச் சொத்தில் பங்கு கிடைக்காது. சொந்த மகன் இருக்கும்போது, சகோதரனுக்கோ சகோதரிக்கோ சொத்தில் பங்கு கேட்பது முறையாகாது. சகோதரன், உறவில் சற்றுத் தள்ளிப்போய்விடுகிறான் அல்லவா? அவ்வாறே, இறந்தவருக்குத் தந்தை இருக்கையில், தந்தையின் தந்தைக்கோ தந்தையின் உடன்பிறப்புகளுக்கோ பாகம் கேட்பது எந்த வகையில் நியாயம்?
மகளுக்காக வாதாடிய தாய்
அன்சாரியான உம்மு குஜ்ஜா (ரலி) என்ற தாய், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களின் தந்தை (என் கணவர்) இறந்துபோய்விட்டார். (அவருக்குச் சொத்து உள்ளது. ஆனால்,) மகள்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை” என முறையிட்டார்.
அப்போதுதான் பின்வரும் வாரிசுரிமை வசனம்
அருளப்பெற்றது (இப்னு மர்தவைஹி) : தாய் தந்தையும் உறவினர்களும் விட்டுச்சென்ற (சொத்)தில் ஆண்களுக்குப் பங்கு உண்டு. (அவ்வாறே,) தாய் தந்தையும் உறவினர்களும் விட்டுச்சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பங்கு உண்டு. அ(ந்தச் சொத்)து, குறைவாகவோ அதிகமாகவோ இருந்தாலும் சரியே! இது (அல்லாஹ்வால்) விதிக்கப்பட்ட பங்காகும். (4:7)
இவ்வசனம் ஆண்களைப் போன்றே, பெண்களுக்கும் அடிப்படை சொத்துரிமை வழங்குகிறது; அதைக் கட்டாயமாக்குகிறது. சொத்து சிறியதோ பெரியதோ தாய், தந்தை, உறவுக்காரர் விட்டுச்சென்ற சொத்தில் ஆண் வாரிசுக்கும் பங்கு உண்டு; பெண் வாரிசுக்கும் பங்கு உண்டு. சொத்தை விட்டுவிட்டு இறந்தவருக்கும் வாரிசுகளுக்கும் இடையே உள்ள இரத்த சொந்தம், திருமண பந்தம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கிடைக்கும் பங்குகளில் வித்தியாசம் இருந்தாலும் அடிப்படைச் சொத்துரிமையில் ஆணும் பெண்ணும் சமமே! (இப்னு கஸீர்) பெண்ணுக்கான சொத்துரிமையைக் குறிப்பாகச் சொல்லும் ஒரு வசனத்தின் பின்னணி பாருங்கள்:

நபித்தோழர் சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களின் துணைவியார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இப்படி முறையிட்டார்: அல்லாஹ்வின் தூதரே! இவ்விரு பெண் குழந்தைகளும் சஅத் பின் அர்ரபீஉ உடைய புதல்வியர். தங்களுடன் ‘உஹுத்’ போரில் கலந்துகொண்ட இவர்களின் தந்தை (சஅத்), வீரமரணம் அடைந்துவிட்டார்.
இவர்களின் செல்வம் முழுவதையும் சஅதின் சகோதரர் எடுத்துக்கொண்டார். இவர்களுக்கு எதையும் அவர் விட்டுவைக்கவில்லை. இவர்களுக்குச் செல்வம் இருந்தால்தான் திருமணம் நடக்கும். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் இதற்கு ஒரு தீர்வை அளிப்பான்” என்று கூறினார்கள். அப்போதுதான் பின்வரும் வசனம் அருளப்பெற்றது : ஓர் ஆணுக்கு இரு பெண்களின் பாகத்திற்குச் சமமான (சொத்)து கிடைக்கும் என உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் உங்களுக்கு அல்லாஹ் அறிவுறுத்துகின்றான். (இரண்டு, அல்லது) இரண்டுக்கு மேற்பட்ட மகள்கள் இருந்தால், (பெற்றோர்) விட்டுச்சென்ற சொத்தில் மூன்றில் இரு பாகங்கள் அவர்களுக்குக் கிடைக்கும். ஒரே ஒரு மகள் (மட்டும்) இருந்தால் (சொத்தில்) பாதி கிடைக்கும். (4:11) இவ்வசனம் இறங்கிய உடனேயே அவ்விருவரின் தந்தையுடைய சகோதரரை அழைத்துவரும்படி நபியவர்கள் ஆளனுப்பினார்கள். அவர் வந்ததும் அவரிடம் நபியவர்கள், ‘‘சஅதுடைய மகள்கள் இருவருக்கும் மூன்றில் இரு பாகங்களும் அவர்களின் தாய்க்கு (சஅதின் மனைவிக்கு) எட்டில் ஒரு பாகமும் கொடுத்துவிடுங்கள். மீதி உங்களுக்குரியது” என்று கூறினார்கள். (திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, முஸ்னது அஹ்மத்) அதாவது இறந்தவரின் மனைவிக்கும் அவருடைய மகள்களுக்கும் சொத்துரிமை மறுத்த ஆணிடம், அவர்களுக்குச் சொத்துரிமை வழங்கும்படி நபியவர்கள் ஆணையிட்டார்கள். (வரைபடம் காண்க!)பெண்ணின் ஆறு பருவங்கள் பெண்கள் அடையும் ஆறு பருவங்களிலும் அந்தந்தப் பருவங்களில் உள்ள உறவினர்களிடமிருந்து பெண்களுக்குச் சொத்துரிமை கிடைக்கும் என்கிறது இஸ்லாமிய ஷரீஆ குடிமைச் சட்டம். மகள்: தாய், அல்லது தந்தை இறந்துவிட்டால், அவர்களின் சொத்தில் மகளுக்குப் பங்கு உண்டு. (மகன் இல்லாமல்) ஒரு மகள் இருந்தால், மொத்த சொத்தில் பாதி (50%) அவளுக்குச் சொந்தம். இரு மகள்களோ அதற்கு மேலோ இருந்தால், சொத்தில் மூன்றில் இரு பாகம் (66.66%) கிடைக்கும். அதை அவர்கள் சமமாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். மகனும் இருந்தால், அவனுக்கு இரு பங்கும் மகளுக்கு ஒரு பங்கும் கிடைக்கும்.

2. பேத்தி: சொத்துப் பிரிவினையின்போது மகன் இறந்து போயிருந்தால், மகனின் மகனுக்கும் (பேரன்) மகனின் மகளுக்கும் (பேத்தி) சொத்துரிமை உண்டு. பாகப் பிரிவினை செய்யும்போது மகள் இறந்து போயிருந்தால், மகளின் மகனுக்கும் (பேரன்) மகளின் மகளுக்கும் (பேத்தி) பங்கு கிடைக்கும். மகன் அல்லது மகளின் இடத்தை பேரனும் பேத்தியும் அடைவர்.
3. மனைவி: கணவனின் சொத்தில் மனைவிக்குப் பங்கு கிடைக்கும். குழந்தை இருந்தால், மொத்த சொத்தில் எட்டில் ஒரு பாகமும் (12.50%) குழந்தை இல்லாவிட்டால் நான்கில் ஒரு பாகமும் (25%) மனைவிக்கு உரியதாகும்.
4. தாய்: மகனோ மகளோ இறந்துபோனால், அவர்களின் சொத்தில் பெற்ற தாய்க்குப் பங்கு உண்டு. இறந்தவருக்குக் குழந்தை இருந்தால், தாய்க்கு மொத்த சொத்தில் ஆறில் ஒரு பாகமும் (16.66%) இறந்தவருக்குக் குழந்தை இல்லாவிட்டால் தாய்க்கு மூன்றில் ஒரு பாகமும் (33.33%) கிடைக்கும்.
5. சகோதரி: சகோதரன் இறந்துபோனால், அவன் விட்டுச்செல்லும் சொத்தில் சகோதரிக்கு ஒரு கட்டத்தில் பங்கு உண்டு. இறந்து
போனவருக்கு மூலவாரிசான பெற்றோரோ பெற்றோரின் பெற்றோரோ கிளைவாரிசான மக்களோ மக்களின் மக்களோ இல்லாத சந்தர்ப்பத்தில் சகோதரிக்குப் பங்கு கிடைக்கும். சகோதரி ஒருத்தி இருந்தால், மொத்த சொத்தில் பாதியும் (50%) ஒருவருக்குமேல் இருந்தால் மூன்றில் இரு பாகங்களும் (66.66%) சொத்துக் கிடைக்கும். (குர்ஆன் 4:176)
6. பாட்டி: பேரன், அல்லது பேத்தியின் சொத்தில் பாட்டிக்கும் பங்கு உண்டு. ஆனால், இறந்தவருக்குத் தாய் இல்லாதபோதுதான், தாயின் இடத்தைத் தாயின் தாய் அடைவார். (பாட்டி விவகாரத்தில் பலத்த கருத்துவேறுபாடு காணப்படுகிறது.) ஆண்-பெண் வித்தியாசம் ஏன்? முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இஸ்லாம் கூறும் பாகப்பிரிவினைச் சட்டத்தில், ஆணுக்கு இரு பங்கு; பெண்ணுக்கு ஒரு பங்கு என்பது நான்கு கட்டங்களில் மட்டுமே.
1. தாய், அல்லது தந்தையின் சொத்தில் மகன் மற்றும் மகளுக்குப் பங்கு பிரிக்கும்போது.
2. பாட்டி, அல்லது தாத்தாவின் சொத்தில் பேரன்-பேத்திக்குப் பங்கு கொடுக்கும்போது.
3. கணவன் சொத்தில் மனைவிக்கும் மனைவி சொத்தில் கணவனுக்கும் பங்கு கொடுக்கும்போது.
4. இறந்தவரின் சகோதரன் மற்றும் சகோதரிக்குப் பங்கு கிடைக்கும் கட்டத்தில்.
சில சமயங்களில் ஆண்-பெண் உறவுகளுக்குச் சமமான பங்கு அளிக்கப்படும். உதாரணமாக, இறந்துபோனவருக்கு மூலவாரிசுகளோ கிளை வாரிசுகளோ இல்லாத நிலையில் தாய்வழிச் சகோதர-சகோதரிகளுக்கு (தாய் ஒன்று; தந்தை வேறு) சொத்தில் பங்கு கிடைக்கும்.
இந்தச் சகோதர-சகோதரிகள் பலர் இருந்தால், மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பாகம் (33.33%) கிடைக்கும். அதை அவர்கள் (ஆண்-பெண் வித்தியாசமின்றி) சமமாகத் தங்களிடையே பிரித்துக்கொள்ள வேண்டும். (குர்ஆன், 4:12)
இன்னொரு தகவல்: சில உறவுகளில் ஆணைவிடப் பெண்ணுக்குக் கூடுதல் பங்கும் கிடைப்பதுண்டு. உம்: ஒருவரின் சொத்தில் அவருடைய தந்தையைவிட மகள் கூடுதல் பங்கு பெறுகிறார். இன்னும் சில கட்டங்களில் பெண்ணுக்கு மட்டுமே பாகப்பிரிவினையில் பங்கு உண்டு; நிகரிலுள்ள ஆணுக்கு பங்கே கிடைக்காது. உம்: வரைபடம் காண்க:

கூடுதல் சுமை ஆணுக்கே!
பொதுவாக, இஸ்லாமியக் குடும்ப வாழ்க்கை அமைப்பில் ஆணுக்கே எல்லாவிதப் பொருளாதாரச் சுமையும் கடமையும் உண்டு; அல்லது கூடுதல் சுமை உண்டு. குடும்பத்தைக் கட்டிக்காத்தல், தொழில் மற்றும் வணிகத்தில் முதலீடு செய்தல், குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், தன் தேவையையும் பார்த்துக்கொண்டே, தன்னை நம்பியுள்ள மனைவி, மக்கள், பெற்றோர், சில நேரங்களில் சகோதரிகள் முதலான உறவுகளின் தேவைகளையும் கவனிக்க வேண்டிய பொருளாதார நெருக்கடியில் ஆண்மகன் உள்ளான். பெண்ணுக்கு இச்சுமைகள் இல்லை -கட்டாயக் கடமை இல்லை.பிறந்த வீட்டில் இருக்கும்வரை, பெண்ணின் எல்லாத் தேவைகளையும் தந்தை கவனித்துக்கொள்கிறார். அது அவரது கடமையும்கூட. தந்தை இல்லாத கட்டத்தில் சகோதரர்களோ நெருங்கிய வேறு உறவினர்களோ கவனித்தாக வேண்டும். புகுந்த வீட்டில், அவளுக்கு வேண்டிய நியாயமான தேவைகள் கணவனால் நிறைவேற்றப்பட வேண்டும். அது அவனது பொறுப்பு. கணவன் இல்லாத நிலையில் கணவன் குடும்பத்தாரோ அவளுடைய பிள்ளைகளோ அப்பெண்ணுக்குப் பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் உண்டு.அப்படி ஒருவருமே உதவ முன்வராவிட்டால் இஸ்லாமிய அரசு, ஆதரவற்றோருக்கான நிதியிலிருந்து நிதியுதவி அளித்தாக வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில், முஸ்லிம் ஜமாஅத் ஸகாத், ஸதகா போன்ற நிதிகளிலிருந்து அவளுடைய தேவைகளை நிவர்த்திக்க முன்வர வேண்டும்.
ஆக, ஒரு பெண் தன் சொந்த தேவைக்காகட்டும்! பிறர் தேவைகளுக்காகட்டும்! பொறுப்பேற்கும் கட்டாயம் இஸ்லாத்தில் இல்லை. ஆதலால், ஆணுக்கும் பெண்ணுக்கும் - சகோதரனுக்கும் சகோதரிக்கும் ஒரேயளவிலான பொருளா
தாரத் தேவை இல்லை என்பது தெளிவு. எனவேதான், ஆணுக்கு இரு பாகம்; பெண்ணுக்கு ஒரு பாகம் என்ற கணக்கு சில கட்டங்களில் விதியாக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு பாகத்தின் வாயிலாகப் பெண், தெம்போடும் சமூக அந்தஸ்
தோடும் வாழ முடியும் என்ற நிலையை அடையலாம். நடைமுறையில் உள்ளதா? எல்லாம் சரி! குர்ஆனின் இக்கட்டளை நடைமுறைப்படுத்தப்படுகிறதா? முஸ்லிம் குடும்பங்களில் பெண்களுக்கு ஷரீஆ குடிமைச் சட்டப்படி சொத்துரிமை வழங்கப்
படுகிறதா? முறைப்படி பாகப்பிரிவினைவழங்கப்படுகிறதா? இக்கேள்விக்கு சமுதாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்; தட்டிக்கழிக்க முடியாது. மார்க்கச் சட்டப்படி நடக்கும் இறையச்சமுள்ள குடும்பங்களில் இது முறையாகச் செயல்படுத்தப்படுவதை நாம் மறுக்கவில்லை. ஆனால், இந்தியாவில் -குறிப்பாக தமிழ்நாட்டில் பெரும்பாலான குடும்பங்களின் நிலை என்ன?
திருமணத்தின்போது, பெண்ணுக்கு வழங்கப்படும் சீர்வரிசை, வரதட்சிணை போன்ற -மார்க்கத்தில் இல்லாத- சடங்குகளைத் தவிர, பிறந்த வீட்டிலிருந்து வேறு என்ன சொத்துக் கிடைக்கிறது? கேட்டால், கல்யாணத்திலேயே 50 சவரன், நூறு சவரன் போட்டுவிட்டோம். மாப்பிள்ளைக்கு கார், அல்லது பைக் வாங்கிக் கொடுத்தோம். மிகச் சிலர், வீடு வாங்கிக் கொடுத்தோம். இதற்குமேல் பாகப்பிரிவினை என்ன கிடக்கிறது? என்று ஆண் வாரிசுகள் முகத்தில் அடித்தாற்போல் பதில் சொல்கிறார்கள்.
ஆரம்பமாக இதைப் புரிந்துகொள்ளுங்கள்! வரதட்சிணை என்பது இஸ்லாத்தில் இல்லாத, வேறு கலாசாரம். இதைக் காரணம் காட்டி, மார்க்கம் கட்டாயமாக்கியுள்ள பாகப்பிரிவினையை எப்படி மறுக்கலாம்? திருமணத்தின்போது பெண்ணுக்குத் தரப்படும் பொருள் அன்பளிப்பு என்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டால், அன்பளிப்பைப் பேரம் பேசியோ முன்நிபந்தனை விதித்தோ வாங்கலாமா? அதற்கு அன்பளிப்பு என்றுசொல்ல முடியுமா? அவ்வாறே, அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதைப் பாகப்பிரிவினையில் கணக்கிடலாமா? தயைகூர்ந்து யோசியுங்கள்!ஆகவே, அதற்கும் பாகப்பிரிவினைக்கும் சம்பந்தமில்லை. பாகப்பிரிவினைக்கு முன்பாகக் கோடியே கொடுத்திருந்தாலும், பெண்ணுக்காகச் செலவிட்டிருந்தாலும் பாகப்பிரிவினைபங்கில் அது சேராது; சேர்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால், ஆணுக்குச் செலவழிப்பதில்லையா? படிப்பு, வேலை, திருமணம்,தனிவீடு... என இலட்சக்கணக்கில் செலவழித்தும்விட்டு, பாகப்பிரிவினையின்போது சண்டைபோட்டுத் தன் பங்கை ஆண் வாரிசு வாங்குகிறானா இல்லையா? பதில் சொல்லுங்கள்!நபித்தோழர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உம்முடைய வாரிசுகளை, மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விடத் தன்னிறைவு உடையவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. (புகாரீ - 1295)

திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018 10:22

தொழுகையும் இறை சிந்தனையும்

Written by

இந்த மாத இதழில், நாம் ‘தொழுகையும் ஆன்மீக
மும்’ என்ற தலைப்பின் கீழ் தொழுகையும் இறை சிந்தனையும் எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்
“என்னை நினைவு கூறும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக!’’ (20:14) இவ்வசனத்தில் நாம்
தொழுகையும் திக்ர் என்று கூறப்படும் இறை சிந்தனையும் இணைக் கப்பட்டிருப்பதை காணலாம்.
தொழுகையின் எந்த நிலையானாலும்-நின்றா
லும்,குனிந்தாலும்,சிரம்பணிந்தாலும், அமர்ந்தா லும் அது மட்டுமல்லாது தொழுகையின் போது நாம் அல் குர்ஆன் வசனங்களை ஓதுவதும் திக்ர் தான். ஆதாரம் குர் ஆனுக்கு திக்ர் என்ற ஒரு பெயரும் உண்டு. பார்க்க (15:9)
ஆக, தொழுகையின் போது நாம் செய்வது ஒன்றே ஒன்று தான், அது இறை சிந்தனையே ஆகும். ஆனால் இறை சிந்தனை என்பது தொழுகையோடு முடிந்துவிடக்கூடிய ஒன்றா? என்றால் அது தான் இல்லை. பின் வரும் இறைவசனத்தை சற்று கவனியுங்கள் : பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், பூமியில் பரவிச்
சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றிய டையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். (62:10)
தொழுகையை முடித்துவிட்டு பொருளீட்டச் செல்லுங்கள் என நம்மை ஊக்கப்படுத்தும் இறைவன் அதே நேரத்தில் பொருளீட்டும் போது தம்மை மறந்துவிடாமல் அதிகம் நினைவு கூருமாறு கூறுகிறான். அவ்வாறு நினைவு கூர்வதினால் வெற்றியடைவீர்கள் என்றும் வாக்களிக்கிறான்.
இவ்வசனத்திலிருந்து இறை சிந்தனை நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைக்கைப்பட்டி ருப்பதை புரிந்துக் கொள்ளலாம். அவ்வாறே நாம் நமது வாழ்க்கையில் தூங்கும் போது, எழும்
போது, சாப்பிடும் போது, வீட்டினுள் நுழையும் போது, போன்ற அனைத்து வாழ்க் கைக்கு தேவையான செயல்களில் நாம் இறைவனை நினைவு கூர்வது மட்டுமல்லாமல் இன்று ஒரு விஷயம் நடந்து விட்டால் அல்ஹம்துலில்லாஹ்; நாளை ஒரு விஷயம் நடக்கவிருந்தால் இன்ஷா அல்லாஹ், ஒருவருக்கு நன்றி பாராட்டும்போது ஜசாக்கல்லாஹ்; என்று நாம் வாழ்கையில் நடைபெறக் கூடிய பல நிகழ்வின் போது அல்லாஹ்வை நினைவு கூர்வதினால் அது வாழ்க்கைக்கு வெற்றியாக அமைகிறது.
சரி திக்ர் என்ற சொல்லிற்கான அர்த்தத்தை ‘ஷெய்ஃக்
ஹம்ஸா யூசுப் ‘அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்க்கலாம்:
திக்ர் - என்றால் நினைவூட்டுதல் என்று பொருள்!
தகர் என்றால் ஆண் மகன் என்று பொருள்!
தகர -என்றால் இடுப்பில் குத்துதல் என்று பொருள்!
இம்மூன்றுக்கும் உள்ள தொடர்பு என்ன?
திக்ர் என்பது - பிரக்ஞையற்று நிற்கின்ற ஒரு “ஆண்மகனை’’ அவனது “இடுப்பில் ஓங்கி ஒரு தட்டு தட்டி அவனை “நினைவுலகுக்குக் கொண்டு வருதல்’’ என்று பொருளாகும்!
ஆக திக்ர் என்றால் நினைவுக்கு கொண்டு வருதல்; அனால் மனிதனின் இயல்பு அவன் மறதியாளன் ஆயிற்றே! இறைவனை மறந்தால் என்ன நடக்கும்? தன்னை அறியாமலேயே அவன் பாவம் ஒன்றில் வீழ்ந்து விட வாய்ப்பு இருக்கின்றது! இறைவனை மறந்த நிலையில் தான் பாவ காரியங்கள் நடந்து விடுகின்றன.
இந்த இறை வசனத்தையும் சற்று ஆழமாக சிந்தியுங்கள் : தவிர, மானக்கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்து விட்டாலும், அல்லது
தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் அல்லாஹ் வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார் கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங் களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்துகொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள். (3:135)
ஒருவன் பாவகாரியங்களில் ஈடுபட்டு விட்டால் என்னவாகும்? அத்தோடு அவனுக்கு இறைவனின் அருட்கொடைகள் தடுக்கப்பட்டு விடும்! அருட் கொடைகள் தடுக்கப்பட்டு விட்டால் அவன் வெற்றி பெறுவது எங்ஙனம்? தடைபட்டிருக்கும் அருட்கொடைகளை மீண்டும் பெற்றுக்கொள்வது எப்படி? அது பாவ மன்னிப்பின் மூலம் தான்!
எப்போது ஒருவன் பாவமன்னிப்பின் பக்கம் திரும்பு
வான்? இறைவனை நினைத்துவிடும் போது! இதனால் அவன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவனுக்கு மீண்டும் இறை அருள் கிட்டுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கின்றது.
நமது வாழ்வில் சில நேரங்களில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்; சில நேரங்களில் நாம் கவலை அடைகின்றோம். ஒரு இறை நம்பிக்கையாளனைப் பொறுத்தவரை -மகிழ்ச் சியான தருணங்களில் அவன் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான். கவலையான தருணங்களில் அவன் இறை உதவி யை நாடி பொறுமையைக் கடை பிடிக்கின்றான். ஆக இரண்டு நிலைகளிலும் அவன் மன நிம்மதியுடன் தான் இருக்கின்றான்.
(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோ ரென்
றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! (13:28)
எனவே நமக்கு ஒரு சோதனை ஏற்படுகின்றது எனில் உடன் நாம் தொழுகையின் பக்கம் விரைந்து ஓடி வல்லோனிடம் நமது கவலையைப் பற்றி முறையிட்டுவிட்டு செய்வன திருந்தச் செய்து விட்டு -பொறுப்பை இறைவனிடம் ஒப்படைத்து விடுகிறோம்.
நமது வாழ்வு முழுவதும் இதே நிலைதான்! இதுவே ஒரு வெற்றியாளனின் நிலை ஆகும். குடும்ப வாழ்வில் பிரச்னையா? கணவனும் மனைவி
யும் சேர்ந்து இறைவனைத் தொழுது உதவி வேண்டி நின்றால் - குடும்பத்தில் மன அமைதி தானாக வரும். இது ஒரு குடும்பத்தின் வெற்றி!
அது போலவே -குழந்தை வளர்ப்பிலும் அவர்களை சிறு வயதிலிருந்தே - தொழுகைக்குப் பழக்குவதன் மூலமும், இறை உதவி குறித்து அவர்களுடன் கலந்துறவாடுவதன் மூலமும் -எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ளும் குழந்தைகளை நாம் உருவாக்கிட முடியும். இதுவே குழந்தை வளர்ப்பின் வெற்றியாகும்!
ஆம்! இறை சிந்தனை வெற்றிக்கு வழி வகுக்கும்!
திக்ர் செய்வதின் நன்மைகள் குறித்து நான் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன்:
“நான் என்னை நினைவுகூரும் அடியாரோடு இருக்கின்றேன்” (புகாரி)
திக்ர் செய்பவருக்கும் திக்ர் செய்யாதவருக்கும் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறும் உருவகம் இதுதான்: திக்ர் செய்பவர் உயிரோடு இருப்பவ ருக்கு சமம், திக்ர் செய்யாதவர் இறந்தவருக்கு சமம் (புகாரி,முஸ்லிம்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகம் கூறிய
தாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)அவர்கள்
அறிவிக்கிறார்கள்: எல்லாவற்றிற்கும் ஒரு மெருகேற்றுதல் உண்டு, இதயத்தை மெருகேற்று வது இறை சிந்தனையே ஆகும்
இன்னும் திக்ர் செய்வதினால் விளையும் நன்மை
களை பற்றி அறிந்து கொள்ள இமாம் இப்னுல் கையும் அவர்களால் எழுதப்பட்ட ‘கிறீ-கீணீணீதீவீறீus ஷிணீஹ்ஹ்வீதீ’ என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டு இணை தளத்தில் பதிவாக்கப்பட்டுள்ள 73 ஙிமீஸீமீயீவீts ஷீயீ ஞீவீளீக்ஷீ- மினீணீனீ மிதீஸீ னிணீஹ்ஹ்வீனீ (ஸிகி) என்ற தலைப்பின் கீழ் பாருங்கள்.
இப்பொழுது புரிகின்றதா இறை சிந்தனைக்கும் வெற்றிக்கும் உள்ள தொடர்பு ?
இன்ஷா அல்லாஹ் இனி நாம் நம் ஆன்மீக பயணத்தை அடுத்த இதழில் தொடர்வோம்.

திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018 10:17

கீர்த்திமிகு கிழக்கரை

Written by

வாலுக்கும் கீழுக்கும் பத்து
கீழுக்கும் ராமுக்கும் பத்து
ராமுக்கும் தேவிக்கும் பத்து
தேவிக்கும் உப்புக்கும் பத்து
உப்புக்கும் தொண்டிக்கும் பத்து
இது ஒரு நாடோடிப் பாடல். நாடோடிப் பாடல் என்றாலும் இப்பாடல் ஊர்களையும் தொலைவுகளையும் அளந்து சொல்கிறது.
வால் என்றால் வாலிநோக்கம். கீழ் என்றால் கீழக்கரை. ராம் என்றால் இராமநாதபுரம். தேவி என்றால் தேவிப்பட்டினம். உப்பு என்றால்
உப்பூர். தொண்டி என்றால் தொண்டித் துறைமுகம். இப்பாடல் இருவேறு ஊர்களுக் கிடையே உள்ள தொலைவை பத்து பத்தாக அளக்கிறது.
இப்பாடலின் கணக்குப்படி கிழக்குக் கடற்
கரை சாலையில் வாலிநோக்கத்திற்கு வடக்காக
பத்துக் கல் தொலைவிலும் இராமநாதபுரத்திற்கு தெற்காக பத்துக்கல் தொலைவிலும் தொண்
டிக்கு மிகவும் தெற்காக நாற்பது கல் தொலை விலும் கீழக்கரை இருப்பது தெளிவாகும்.
பழம்பெரும் துறைமுகப்பட்டினமான கீழக் கரைக்கும் பல பெயர்கள் இருந்துள்ளன. பவுத்திர மாணிக்கப்பட்டினம், செம்பிநாடு, நினைத்ததை முடித்தான் பட்டினம், காயற் கரை, தென்திசை, தென்காயல், வகுதை, வச்சிர
நாடு, அணித்தொகை மங்களம் என பல பெயர்களால் அழைக்கப்படும் கீழக்கரை அரபிப் பாடல்களில் “கிற்கிறா’’ எனவும் தமிழ்க் காவியங்களில் வகுதை எனவும் குறிப்பிடப்பிடுகிறது.
இவ்வூர் தோன்றிய காலம் தெரியவில்லை யென்றாலும் இதன் வரலாற்றின் வயது
ஆயிரத்துக்கும் மேலிருக்கும். பாண்டியர்களின் பழம்பெரும் துறைமுகமான கொற்கையே கீழக்கரையெனக் கூறப்படுகிறது. இத்துறை முகத்தின் வழியாக அரபுக்குதிரைகள் வந்திறங் கியிருக்கின்றன. முத்து, பவளம், வாசனைத் திரவியங்கள். அரேபியா, ரோம், கிரீஸ், சைனா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகியுள்ளன.
கீழக்கரை மதுரைப் பாண்டியர்களின் துறை முகமாக இருந்ததோடு அவர்கள் நாட்டைப் பிரித்து ஆண்டபோது அது தலைநகராகவும் விளங்கியிருக்கிறது.
கி.பி. 12 - ஆம் நூற்றாண்டின் இறுதியில் விக்கிரம பாண்டியன் எனும் மன்னர் கீழக்
கரையைத் தலைநகராக்கி ஆட்சி செய்துள்ளார்.
இவருடைய காலத்தில்தான் மதீனாவிலிருந்து வந்த சுல்தான் செய்யது இபுறாகீம் (ஏர்வாடி
அவுலியா) பாண்டிய மன்னனின் பங்காளி
விக்கிரம பாண்டியனை வென்று ஆட்சி அதிகாரம் பெற்றார். பின்னர் ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் ஏர்வாடியாரை வெல்ல ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
கீழக்கரை ஆட்சியாளர்களின் தலைநகராக இருந்ததற்கு அடையாளமாக கிழக்குத் தெரு
பழைய ஜூம்மா பள்ளிவாசலை அடுத்து
கோட்டைக் கொத்தளங்களின் சிதைவுகள்
இன்றும் காணப்படுகின்றன. சுரங்கப்பாதைகள் இருந்ததற்கான அடையாளங்கள் மண் மூடிப் போயுள்ளன.
பதிமூன்றாம் நூற்றாண்டில் கீழக்கரை வந்த மார்க்கோ போலோவும் அதன் பின் இங்கு வந்த இபுனு பதூதாவும் கீழக்கரையைப் பற்றி தம் பயண நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
கிழக்குக் கரையோரம் குடியேறிய அரபுக்கள்
வணிகர்களாக விளங்கியதோடு படையாட் சியும் செய்துள்ளனர். அரபு வம்சா வழியைச் சேர்ந்த முஸ்லிமான தகீயுத்தீன் கி.பி. 1286 - இல் பாண்டிய மன்னரின் அமைச்சராகவும் தளபதியாகவும் விளங்கியுள்ளார். இவரைப் பற்றி ‘செய்தக் காதிறு திருமண வாழ்த்து’ எனும் நூலில் கூறப்பட்டுள்ளது. இவர் ‘கறுப்பாற்றுக் காவலன்’ என குறிப்பிடப்படுகிறார். இவரின்
வழித் தோன்றல்களே சீதக்காதி பரம்பரையினர்.
இந்தியாவில் இஸ்லாம் காலூன்றிய மிகப் பெரும் பழைய நகரங்களில் ஒன்று கீழக்கரை. ஆறாம் நூற்றாண்டில் வெறும் அரபு வணிகர்களாய் கீழக்கரைக்கு வந்தவர்கள் ஏழாம் நூற்றாண்டில் முஸ்லிம் வணிகர்களாய் வந்தனர். இதற்கு மிகப்பெரும் ஆதாரமாக விளங்கி வருவது பழைய ஜும்மா பள்ளி கட்டிடமாகும். இப்பள்ளிவாசல் ‘பாதன் பள்ளி’ என அழைக்கப்படுகிறது. இது பாதன் (ரழி) எனும் நபித் தோழர் கட்டியதாகும். பாதன் (ரழி) ஏமன் ஆளுநராகயிருந்து அதைத் துறந்து அழைப்புப் பணிக்காக கீழக்கரை வந்தவர்.
அண்ணலாரின் வரலாற்றில் அவர்கள் அரபகத்துக்கு அடுத்தடுத்துள்ள ஆட்சியாளர் களுக்கு அழைப்பு மடல்கள் விடுத்தது முக்கிய நிகழ்ச்சியாகும். அவ்வாறு விடுத்த அழைப்பை பாரசீக மன்னன் கிழித்துப் போட்டு விட்டு அண்ணலாரை கைது செய்து கொண்டு வரும் படிக் கட்டளையிட்டதை வரலாறு கூறுகிறது.
பாரசீக மன்னன் அப்போது ஏமனை ஆண்ட தன் ஆளுநரான பாதனுக்கே கைதாணையை அனுப்பினான். அனுப்பியவன் சில நாட் களில் தன் மகனாலேயே கொல்லப்பட பாரசீகத்தில் ஆட்சி மாற்றம்.
கட்டளையைப் பெற்ற பாதன் காலமாற்றத் தால் அண்ணலாரைச் சந்தித்து இஸ்லாத்தைத் தழுவி ஆட்சியைத் தன் மகனிடம் ஒப்படைத்து கீழக்கரை வந்து கட்டிய பள்ளிவாசல் தான் பழைய ஜும்மா பள்ளிவாசல் எனப் பரம்பரை பரம்பரையாக சொல்லப்பட்டு வருகிறது.

keelakkarai 2
சங்கு குளிப்பவர்களும் முத்துக் குளிப்பவர்களும்
மீன் பிடிப்பவர்களும் வாழ்ந்த கிழக்குத் தெருவிலேயே முதல் பள்ளிவாசல் எழுப்பப்
பட்டுள்ளது. இங்குள்ள இருபதுக்கு மேற் பட்ட பள்ளிவாசல்களில் மூன்று பள்ளிகள் கல்லுப்பள்ளிகள். கீழக்கரையின் சில பகுதி களை தொல்பொருள் துறையினர் அகழ்ந்து பார்த்தபோது பழைய சீனப் பீங்கான்கள், செப்புக் காசுகள் கிடைத்துள்ளன.
இருபதுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் மணிமகுடம் போன்றது வள்ளல் சீதக்காதி கட்டிய பெரிய குத்பா பள்ளிவாசல். இது நகரின் நடுவில் கட்டிடக் கலையின் கருவூலமாய் நிற்கிறது. இப்பள்ளிவாசலின் தூண்களில் பூ வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 1200
பூக்களுக்கு மேல் காணப்படும் பள்ளி நம்மை
பழங்காலத்துக்கே அழைத்து செல்லும். இங்குள்ள ஒவ்வொரு சின்னஞ்சிறு சிற்ப வேலையும் ஒன்றுகொன்று மாறுபட்டு கலை நயத்தோடு காணப்படுகிறது.
இப்பள்ளியின் முகப்பில் அடக்கமாகியிருக்கும் அவ்வாக்கார் மரைக்காயர் என்ற அப்துல் காதிர் மரக்காயரின் கப்ரும் கலை நயமிக்கதே. இப்பள்ளியை கட்டி முடித்தவர் இவரே.
சதகத்துல்லா அப்பா அவர்களின் அடக்க இடத்தின்மீது ஆலம்கீர் ஔரங்கசீபின் ஆணைப்படி நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ‘குப்பா’ ஒரே கல்லில் குடைந்தெடுக்கப்பட்ட சிற்பக்கலையின் சின்னமாக விளங்குகிறது.
கீழக்கரையில் கடல்புரம் மிகவும் வித்தியாச மானது. மன்னார் வளைகுடாவில் மிதக்கும் கடற்கரை உலகப் புகழ் பெற்றதாகும். பெரும்
பட்டினமாக இல்லாவிட்டாலும் உலகமே அறிந்த பெரும் புகழ்மிக்க பட்டினம் கீழக் கரை. இதற்கு முக்கிய காரணம் கடல் வணிகம்.
இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட முத்துக் கள் ரோம் கிரேக்கம் வரை புகழை நாட்டின.
கீழக்கரை கிழக்கே சீனத்தையும் மேற்கே எகிப்தையும் இணைத்தது. உலக வணிகர்களின் மையப் புள்ளியாக கீழக்கரை விளங்கியது. மரக்காயர்கள் ஏற்றுமதி இறக்குமதிகள் செய்ய
கடல் தொழிலாளர்கள் சங்கு, முத்துக் குளிக்க மீனவர்கள் மீன் பிடிக்க ஓடாவிகளும் கலப் பத்தர்களும் கப்பல்களையும் தோணிகளையும் கட்டியிருக்கின்றனர்.
பெரிய தம்பி மரக்காயர் குடும்பம் பல்லாண் டுகாலமாக ஏற்றுமதி இறக்குமதியில் ஏற்றம் பெற்றிருக்கிறது. பெரிய தம்பி மரைக்கார் குடும்பத்தின் வாரிசே வள்ளல் சீதக்காதி மரக்காயர்.
பெரிய தம்பி மரக்காயரின் நிறுவனம் இலங்கைக்கு உணவுப் பொருட்களையும் துணி
மணிகளையும் ஏற்றுமதி செய்தது. அங்கிருந்து
முக்கியமாக பாக்கை இறக்குமதி செய்தது. இவர்கள் இலங்கை முதல் வங்கம் வரை கடலில் வலம் வந்தவர்கள். வள்ளல் சீதக்காதி
வழிவந்த ஹபீபு முகம்மது என்பவரின் புகழ் பெற்ற வணிகப் பெருக்கமும் கப்பல் பெருக்கமும் இவரை ‘ஹபீப் அரசர்’ என அழைக்க வைத்தன.
முஸ்லிம் வணிகர்களின் பயன்பாட்டிற்காக கல்கத்தாவிலும் ராமேஸ்வரத்திலும் ஹபீபு அரசர் சாவடிகள் கட்டி வைத்திருந்தார். கல்கத்தாவிலுள்ள ‘சோழியா மஸ்ஜித்’ இவர் கட்டியதே.
கீழக்கரையில் உள்ள ஓடக்கரைப் பள்ளிவாசல்
இவரது வழித் தோன்றல்களால் கட்டப்பட்ட தாகும். இதனை இங்கு பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு மெய்ப்பிக்கிறது. keelakkarai 10
ஹபீப் அரசரின் சகோதரர் அப்துல் காதர்
சாகிபு புதல்வர் சேக் சதக்கதுல்லா மரக்காயர் ஆகிய இருவரும் பெரும் கப்பல் வணிகர்களாய் திகழ்ந்துள்ளனர்.
இவர்களின் உறவுகள் மட்டுமின்றி மேலும்
சிலரும் திரைகடலோடி திரவியம் தேடியுள்ள னர். அகமது ஜலாலுத்தீன் மரக்காயர் ஏழு
கப்பல்களை வைத்து கடல் வணிகம் செய்துள்ளார். ‘இராஜநாயகம்’ எனும் தமிழ் நூல் புகழ்ந்து பேசும் சுல்தான் அப்துல் காதர் மரக்காயர் கப்பல் வணிகராகவும் வள்ளலாகவும் விளங்கியுள்ளார்.
மார்க்க அறிஞராய்த் திகழ்ந்த மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள்கூட மிகப்பெரும்
கப்பல் வணிகராவார். இவரின் ஏற்பாட்டின் படி கீழக்கரை வந்த கப்பல்கள் சுங்க வரியோடு
அரூஸியா மதரஸாவுக்கு ஒரு ரூபாய் நன்கொடையாகவும் வழங்கின. 1802 - முதல் தொடர்ந்து இருபது ஆண்டுகாலமாக செய்யது
அப்துல் காதர் மரக்காயர் பெரும் கப்பல் வணிகராய்த் திகழ்ந்துள்ளார். காயல்பட்டினம் முதல் கல்கத்தா வரை உள்நாட்டிலும் இலங்கையிலும் இவர் கொடி கட்டிப் பறந்துள்ளார்.
முத்துக் குளித்தல், சங்கு குளித்தல் இரண்டும் கீழக்கரையின் பொருளாதாரத்தில் முக்கிய இடம் வகித்தது. அவர்கள் மன்னார் வளை
குடாவின் மகத்தான மனிதராய்த் திகழ்ந் துள்ளனர். கீழக்கரை முதல் மன்னார் நகர் வரை
அவர்கள் கால் பதித்திருந்தனர். மன்னார் மரிச்சுக்கட்டியில் தொட்டிகளில் முத்துச் சிப்பிகளை வளர்த்து எடுக்கின்றனர். தொடக்க
கால முத்துக்குளித்தலுக்கு வெற்றிகளைத் தந்தவர்கள் முஸ்லிம்களான முத்துக் குளிப்பவர்களே. கூடுதல் சிறப்பாக தோணி களின் முதலாளிகளும் குத்தகைக்காரர்களும் முஸ்லிம்களாய் இருந்ததே!
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முத்துக்குளிக்கும் தொழில் முற்றிலும் நசிந்து போனது. இத்தொழில் ஈடுபட்டோர் வேறு வேறு தொழில்களை நாடிச் சென்றனர். மொத்தத்தில் இப்பகுதி பொருளாதாரம் வீழ்ந்தது. உப்புக் காய்ச்சுதலிலும் உப்பு வணிகத் திலும் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற முடியவில்லை.
கடல்தான் எங்கள் வாழ்க்கை என்ற முஸ்லிம் கள் கடல் கடந்து சென்று இலங்கை நகரங்
களில் குடியேறினர். பல்வேறு குறுந்தொழில் களை மேற்கொண்டனர். கடைகள் வைத்துப் பிழைத்தனர்.
கீழக்கரைக்குக் கீர்த்தி சேர்க்கும் நிகழ்வுகள் பலவுண்டு. அவற்றில் ஒன்று பட்டத்து லெப்பை நெய்னா மரக்காயர் ஐதுரூஸ் எனும் பெயரில் பெரிய புதிய கப்பல் ஒன்றைக் கட்டி முதல் பயணமாக அக்கப்பலைப் புனித ஹஜ் யாத்திரைக்கு ஓட்டினார் என்பது.
கீழக்கரை கப்பல் கட்டும் தளமாக மட்டும் இருக்கவில்லை. கப்பல்களைப் பழுது பார்க்கும் இடமாகவும் இருந்துள்ளது. 1686 -டிசம்பர் ஒன்பதில் மதராஸ் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் கூட்டத்தில் கீழக்கரையிலுள்ள கப்பல் பழுது பார்க்கும் இடத்திற்கு ஜேம்ஸ் எனும் போர்க்கப்பலை பழுது பார்க்க அனுப்பி வைப்பது பற்றி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதே கூட்டத்தில் கீழக்கரை பெரிய தம்பி மரக்காயர் எனும் சீதக்காதியிடமிருந்து அரிசி வாங்குவதற்கும் மிளகு கொள்முதலுக்கும் ஆவன செய்யப்பட்டிருக்கின்றன. (ஸிமீநீஷீக்ஷீபீs ஷீயீ திஷீக்ஷீt ஷிt. நிமீஷீக்ஷீரீமீ. ஞிவீணீக்ஷீஹ் ணீஸீபீ நீஷீஸீsuறீtணீtவீஷீஸீ தீஷீஷீளீ)
கீழக்கரை மக்கள் மிகவும் வித்தியாசமானவர்கள், மார்க்கத்தை நன்கு பேணும் அவர்கள் சுற்றுலா - கூட்டாஞ்சோறு என கொண்டாடுவர். பெருநாட்கள் முடிந்த பின் வடக்குத் தெரு பெரும் வளைவுக்குள் கூடும் ‘பெருநாள் தோப்பு’ மிகவும் கவனிக் கத்தக்கதாகும். ஆயிரக்கணக்கான மக்கள் கூடும்
அக்கூடலில் நடக்கும் வணிகம் அபரிமித மானது. இலட்சக்கணக்கான தொகைக்கு வாடகைக்கு விடப்படும் கடைகளில் லட்சக்
கணக்கில் வணிகம் நடக்கும் வாய்ப்புள்ள தென்றால் கூட்டத்தை கவனித்துக் கொள் ளுங்கள். உள்ளூர் மக்களோடு சுற்றியுள்ள பல
முஸ்லிம் ஊர்களின் மக்களும் கூடும் மூன்று நாள் சங்கமம் மாநாடுகளைத் தோற்கடித்து விடும்.
சின்ன சின்னதாய் சில செய்திகளைச் சொல் கிறேன். படித்து உங்கள் வட்டங்களிலும் அவற்றை நடைமுறைப்படுத்துங்கள். நவம்பர்
டிசம்பர் மாதங்களில் கீழக்கரை மேலத்தெரு குடும்பங்களில் மணவிழாக்கள் பல நடக்கும்.
பெரிய அரங்கத்தை அமைத்து பெரும் விருந்தோடு நடக்கும் திருமணச் செலவு கள் அவர்களுடையவை என்றாலும் பெருங் கொட்டகை - பேரரங்குச் செலவை மணமக்கள் வீட்டில் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.
உள்ளுர் அயலூர் என்றில்லை வெளிநாட்டுக் காரர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் மணவிழா மாநாடு வேறு ஊர்களில் காணப் படாத வியப்பைத் தரும் ஏற்பாடு. யார் வேண்டு மென்றாலும் வரலாம். மணவிழா விருந்தில் கலந்து கொள்ளலாம். இந்த மணவிழாவில் தம் பணியாளர் குடும்பத்து ஏழைக்குமருக்கு முதலில் மணம் முடித்துக் கொடுப்பது ஒரு சிறப்புக்குரிய செயலாகும்.
ஆறாம் நூற்றாண்டில் அரபுக்களாய் வந்தவர் கள் ஏழாம் நூற்றாண்டில் முஸ்லிம்களாக வந்து
குடியேறினர். எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று, பனிரெண்டு என வந்து சென்று கொண்டிருந்தவர்கள் பதிமூன்றாம் நூற்றாண்டில் அரபுலகத்திலிருந்து கப்பல் கப்பலாக தமிழக கடற்கரைகளுக்கு வந்தவர் கள் இங்கேயே தங்கிவிட்டார்கள். 1269 இல் மதீனாவிலிருந்து குடும்பம் குடும்பமாக கப்பல்
களில் வந்தவர்கள் காயலிலிருந்து பழவேற் காடு வரை 12 ஊர்களில் தங்கி வாழத் தொடங்கினார்கள்.
இவ்வாறு வந்து குடியேறியவர்கள் பெரும் பாலும் வாப்பா வீட்டுக்காரர்கள். இவர்கள் மணம் செய்து கொள்ளும் ஏற்பாடு வித்தியாச
மானது. இவர்களின் மணமகன் மணம் முடித்த பின் மணமகள் வீட்டுக்கே குடியேறி
விடுவர். சொத்துக்கள் அனைத்தும் பெண் களையே சேரும்.
வடக்குத் தெருவில் சில அத்தா வீட்டுக் காரர்கள் இருந்தாலும் மிகப் பல வாப்பா வீட்டுக்காரர்கள் வாழும் ஊர் இது.keelakkarai 4
1269 இல் வந்து குடியேறிய 12 ஊர்க்காரர்
களுக்கு இடையே தொடர்பு இல்லா விட்டாலும் கீழக்கரை -காயல்பட்டினம்- தொண்டித் தொடர்புகள் தொடர்கின்றன. மதீனா வம்சா வழியிலிருந்து தற்போதைய வம்சா வழிவரை குறித்து வைத்திருப்பவர்கள் மேலத்தெரு மரக்காயர்கள்.
12 ஊர்களில் கீழக்கரை, காயல்பட்டினம், அதிராம்பட்டினம் உணவுகள் முதல் தரத்தில் உள்ளன. மற்ற ஊர்களும் மோசமில்லை. வணிக முஸ்லிம்களின் சாப்பாட்டில் முதலாளி சாப்பாடு - தொழிலாளி எனப் பிரிப்பவரிடையே ஒரே சாப்பாடு வழங்குபவர்கள் கீழக்கரையினர்.
கீழக்கரையினர் இயக்கப் பற்று வைப்பார். இயக்க வெறி கொள்ளமாட்டார். வீரத்தையும் விவேகத் தையும் கலந்து செயலாற்றும் தன்மையால்தான் அவர்கள் எல்லா வகையிலும் சிறப்பு பெற்றிருக்கிறார்கள்.
தொடர்பு : 9710266971

வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018 08:34

இளம் ஆலிம்களே! உங்களைத்தான்! - 14

Written by

அ. முஹம்மது கான் பாகவி
வாரிசுகள் யார், யார்?
இறந்துபோனவரின் வாரிசுகளில் உயிரோடு இருக்கும் ஆண்களில் 15 பேரும் பெண்களில் 10 பேருமாக மொத்தம் 25 பேர் முதல் நிலை வாரிசுகள் எனும் உரிமை பெறுவார்கள்.
ஆண்களில் 15 பேர்: 1. இறந்துபோனவரின் மகன் 2. (மகன் இல்லாதபோது) மகனின் மகன் 3. தந்தை 4. (தந்தை இல்லாதபோது) தந்தையின் தந்தை 5. உடன் பிறந்த சகோதரன் 6. தந்தை வழிச் சகோதரன் 7. தாய்வழிச் சகோதரன் 8. (சகோதரன் இல்லாதபோது) உடன்பிறந்த சகோதரனின் மகன் 9. தந்தைவழிச் சகோதரனின் மகன்.
10. இறந்தவருடைய தந்தையின் உடன்பிறந்த சகோதரன் 11. தந்தையின் தந்தைவழிச் சகோதரன் 12. (தந்தையின் உடன்பிறந்த சகோதரன் இல்லாதபோது) அந்தச் சகோதரனின் மகன் 13. (தந்தையின் தந்தைவழிச் சகோதரன் இல்லாதபோது) அந்தச் சகோதரரின் மகன் 14. கணவன் 15. (அக்கால முறைப்படி, இறந்தவர் அடிமையாக இருந்து விடுதலை பெற்றவராக இருப்பின், சொந்தம் யாரும் இல்லாதபோது) விடுதலை செய்த எசமான்.
இந்தப் பதினைந்து பேருக்கும் இறந்தவரின் சொத்தில் எல்லா நேரங்களிலும் பங்கு கிடைக்கும் என எண்ணிவிடக் கூடாது. இறந்தவருக்கு மிக நெருங்கிய உறவினர் இருக்கையில், தூரத்து உறவினருக்குப் பங்கு கிடைக்காமல்போகலாம். எடுத்துக்காட்டாக, இறந்துபோன ஒருவருக்கு, மேற்சொன்ன 15 வகை உறவினர்களும் ஒருசேர இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்! இறந்துபோனவரின் மகன், தந்தை, கணவன் ஆகிய மூவருக்கு மட்டுமே சொத்தில் பங்கு கிடைக்கும். மிக நெருங்கிய உறவினர்களான மகன், தந்தை ஆகியோரால் மற்ற வாரிசுகள் பங்கை இழந்துவிடுவார்கள்.
பெண் வாரிசுகளில் 10 பேர் :
1. மகள் 2. (மகன் இல்லாதபோது) மகனின் மகள் 3. தாய் 4. (தாயில்லாதபோது) தாயின் தாய் 5. தந்தையின் தாய் 6. உடன்பிறந்த சகோதரி 7. தந்தைவழிச் சகோதரி 8. தாய் வழிச் சகோதரி 9. மனைவி 10. (விடுதலை செய்த) எஜமானி.
இறந்துபோன ஒருவருக்கு இந்தப் பத்துப் பெண் உறவினரும் உள்ளனர் என்று வைத்துக்கொண்டால், அவர்களில் ஐவருக்கு மட்டுமே பாகம் கிடைக்கும். 1. மகள் 2. மகனுடைய மகள் 3. தாய் 4. மனைவி 5. உடன்பிறந்த சகோதரி. இவர்களின் காரணத்தால் மற்றவர்கள் பங்கை இழந்துவிடுவர்.
இறந்துபோன ஒருவருக்கு, இங்கு குறிப்பிடப்பட்ட 15 ஆண்களும் 10 பெண்களுமாக 25 உறவுகளும் உயிரோடு இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால், 25 பேரில் 5 பேருக்கு மட்டுமே பாகப்பிரிவினைச் சட்டப்படி பங்கு கிடைக்கும். 1. தந்தை 2. தாய் 3. மகன் 4. மகள் 5. கணவன், அல்லது மனைவி. காரணம், சொல்லாமலே புரியும். இறந்துபோனவர் விட்டுச்சென்ற சொத்தை அனுபவிக்க, மற்றெல்லாரையும்விட இவர்களே மிகவும் அருகதை உடையவர்கள் என்பதை யாராலும் மறுக்க இயலாது.
வரிசைப்படி வாரிசுரிமை
இறந்துவிட்ட ஒருவரது சொத்துக்கு, ஒன்றன்பின் ஒன்றாக வாரிசுரிமை பெறும் மூவகை உறவினர்கள் உள்ளனர். முதல் வகையினருக்கு நிர்ணயிக்கப்பட் பங்கீட்டைக் கொடுத்த பிறகு மீதியுள்ள பங்குகளையே இரண்டாம் வகையினர் பெற முடியும். முதல் இரு வகையினர் இல்லாதபோது மட்டுமே மூன்றாம் வகையினருக்குப் பங்கு கிடைக்கும்.
இந்த வகையினரையும் அவர்களுக்குக் கிடைக்கும் பாகங்களையும் அறிந்துவிட்டாலே, இஸ்லாமியப் பாகப்பிரிவினைச் சட்டம் ஓரளவுக்குப் புரிந்துவிடும்.
1. குறிப்பிட்ட பாகஸ்தர்கள் (அஸ்ஹாபுல் ஃபராயிள்). 2. ஆண்வழி மீதிப் பாகஸ்தர்கள் (அஸபா). 3. பெண்வழி உறவுகள் (தவுல் அர்ஹாம்).
1. அஸ்ஹாபுல் ஃபராயிள்
உறவினர்களில் யார் யாருக்கு எவ்வளவு பாகம், இறந்தவர் சொத்தில் கிடைக்கும் என இறைமறை வரையறுத்துக் கூறியிருக்கிறதோ அவர்களே ‘பாகஸ்தர்கள்’ (அஸ்ஹாபுல் ஃபராயிள்) எனப்படுவர். இப்படி ஆறு வகையான பாகங்களும் 12 வகையான உறவுகளும் திருக்குர்ஆனில் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.
ஆறு வகைப் பாகங்களாவன: 1. இறந்தவர் விட்டுச்சென்ற மொத்த சொத்தில் பாதி அரை (½ - 50%) 2. கால் - நான்கில் ஒரு பாகம் (¼ - 25%) 3. அரைக்கால் - எட்டில் ஒன்று (1/8 - 12.5%) 4. மூன்றில் இரண்டு (2/3 - 66.67%). 5. மூன்றில் ஒன்று (1/3 - 33.33%). 6. ஆறில் ஒன்று (1/6 - 16.67%).
இறந்தவருடைய வாரிசுகளில் 12 பேர், இப்பாகங்களில் ஏதேனும் ஒன்றுக்கு உரிமையாளர்கள் ஆவர். ஆண்களில் நால்வரும் பெண்களில் எண்மரும் அந்தப் பாகஸ்தர்கள் ஆவர்.
ஆண் பாகஸ்தர்கள்: 1. இறந்துபோனவரின் தந்தை (Father). 2. (அவர் இல்லாதபோது) தந்தையின் தந்தை (Grand Father). 3. தாய்வழிச் சகோதரன். அதாவது இறந்தவரும் இவரும் ஒரு தாய்க்குப் பிறந்தவர்கள்; ஆனால், தந்தை வேறு (Half Brother). 4. கணவன் (Husband).
பெண் பாகஸ்தர்கள்: 1. இறந்தவருடைய மனைவி (Wife). 2. மகள் (Daughter). 3. பேத்தி (மகனின் மகள் - Grand Daughter). 4. சொந்தச் சகோதரி; அதாவது இறந்தவரும் இவரும் ஒரே தாய், தந்தைக்குப் பிறந்தவர்கள் (Full Sister). 5. தந்தை வழிச் சகோதரி; அதாவது இறந்தவரும் இவரும் ஒரே தந்தைக்குப் பிறந்தவர்கள்; ஆனால், தாய் வேறு (Half Sister). 6. தாய்வழிச் சகோதரி; அதாவது இறந்தவரும் இவரும் ஒரே தாய்க்குப் பிறந்தவர்கள்; தந்தை வேறு (Half Sister) 7. தாய் (Mother). 8. பாட்டி; அதாவது தாயின் தாய், அல்லது தந்தையின் தாய் (Grand Mother).
உதாரணத்திற்கு ஒன்று
இறந்தவருடைய தாய்க்கு மூன்று நிலைகள் உண்டு: இறந்தவருக்குப் பிள்ளை குட்டிகள் இருந்தால், மொத்த சொத்தில் ஆறில் ஒரு பாகம் (1/6 - 16.67%) உரியதாகும். 2. பிள்ளை குட்டிகள் இல்லாதபோது, தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (1/3 - 33.33%) கிடைக்கும். 3. கணவன், அல்லது மனைவிக்குக் கொடுத்ததுபோக எஞ்சியுள்ள சொத்தில் மூன்றில் ஒரு பாகம் (1/3 - 33.33%) தாய்க்குக் கிடைக்கும். (இந்த மூன்றாவது நிலைக்கு வரைபடம் காண்க:)
ஃபாத்திமா (100%)

கணவன் மீதி தாய் தந்தை
50% 50% 16.67% 33.33%
அதாவது ஃபாத்திமா என்ற பெண் இறந்துவிட்டார். அவருக்குக் கணவன், தாய், தந்தை ஆகிய மூன்று வாரிசுகள் உள்ளனர். இறந்தவருக்குப் பிள்ளைகள் இல்லாததால், மொத்த சொத்தில் பாதி (50%) கணவருக்குச் சேரும். மீதியுள்ள 50 சதவீதத்தில் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (16.67%) கிடைக்கும். இங்கு தந்தை ‘அஸபா’ என்பதால் மீதியான 33.33% சொத்தை எடுத்துக்கொள்வார்கள். சரியா?
2. அஸபா
இறந்தவரின் சொத்துக்கு வாரிசாகும் இரண்டாவது வகை உறவினருக்கு ‘அஸபா’ என்று பெயர். அதாவது ஆண்வழி மீதிப் பாகஸ்தர்கள். குர்ஆனில் கூறப்பட்டுள்ள குறிப்பிட்ட பாகஸ்தர்களுக்கு உரிய பாகத்தைக் கொடுத்தபின், மீதியிருக்கும் பாகம் முழுவதற்கும் உரிமை பெறும் ஆண் வாரிசுகள்தான் ‘அஸபா’க்கள் என அறியப்படுகின்றனர். உதாரணத்திற்கு, இறந்துபோனவரின் மகன்; மகனுடன் வரும் மகள்; சகோதரன் ஆகியோரைச் சொல்லலாம்!
‘அஸபா’க்களுக்குப் பாகம் நிர்ணயிக்கப்படவில்லை. ‘அஸபா’வில் ஒருவர் மட்டும் இறந்தவருக்கு வாரிசாக இருந்தால், முழுச் சொத்திற்கும் அவரே உரிமையாளராகிவிடுவார். பாகம் நிர்ணயிக்கப்பட்டவர்கள் யாரும் இருப்பின், அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுத்ததுபோக மீதியுள்ள சொத்து முழுவதையும் ‘அஸபா’ வாரிசு எடுத்துக்கொள்வார்.
சில சந்தர்ப்பங்களில், முதல் வகை வாரிசுகளுக்கு (அஸ்ஹாபுல் ஃபராயிள்) சொத்தைப் பங்கிடும்போதே, சொத்து முழுவதும் தீர்ந்துவிடுவதுண்டு. அப்போது மீதிப் பாகம் இராது. இந்நிலையில், ‘அஸபா’ வாரிசுக்குப் பாகம் எதுவும் கிட்டாது.
மூவகை ‘அஸபா’ வாரிசுகள்:
(1) நேரடி அஸபா. இவர்கள் அறுவர். 1. இறந்துபோனவரின் மகன். 2. தாத்தா 3. சகோதரன் 4. சகோதரன் மகன் 5. இறந்தவருடைய தந்தையின் சகோதரன் (uncle). 6. தந்தையுடைய சகோதரனின் மகன் (Cousin).
(2) மற்றொரு உறவினரால் ‘அஸபா’வான வாரிசுகள். இவர்கள் நால்வர். 1. இறந்தவருடைய மகள்; மகனால் ‘அஸபா’ ஆவார். 2. மகன்வழிப் பேத்தி; மகன்வழிப் பேரனால் ‘அஸபா’ ஆவார். 3. சொந்தச் சகோதரி; சொந்தச் சகோதரனால் ‘அஸபா’ ஆவார். 4. தந்தைவழிச் சகோதரி. தந்தைவழிச் சகோதரனால் ‘அஸபா’ ஆவார்.
(3) மற்றோர் உறவினருடன் வருவதால் ‘அஸபா’ ஆகும் வாரிசுகள். இவர்கள் இருவர். 1. இறந்தவரின் சொந்தச் சகோதரி; மகள், அல்லது மகனுடைய மகளுடன் வரும்போது. 2. தந்தைவழிச் சகோதரி; மகள், அல்லது மகனுடைய மகளுடன் வரும்போது.
ஆக மொத்தம் ஆண்வழி மீதிப் பாகஸ்தர்களான ‘அஸபா’ வாரிசுகள் 12 பேர் (6+4+2=12) ஆவர். இவர்களுக்குக் குறிப்பிட்ட பாகம் கிடையாது; ஆயினும், குர்ஆனில் நிர்ணயிக்கப்பட்ட பாகங்களைப் பெறும் பாகஸ்தர்களுக்குக் கொடுத்ததுபோக எஞ்சியுள்ள பாகத்தை இவர்கள் கையகப்படுத்திக்கொள்வர்.
சில உதாரணங்கள் : 1
அப்துல்லாஹ் (100%)

தந்தை தாய் மீதி மகன் மகள்
16.67% 16.67% 66.66% 44.44% 22.22%
(முதல் வகை) (முதல் வகை) (இரண்டாம் வகை) (இரண்டாம் வகை)
இதில், இறந்துபோன அப்துல்லாஹ்வுக்கு நான்கு உறவினர்கள். தந்தையும் தாயும் முதல் வகை (அஸ்ஹாபுல் ஃபராயிள்) வாரிசுகள். இவர்களில் ஒவ்வொருவருக்கும் மொத்த சொத்தில் ஆறில் ஒரு பாகம் (1/6 - 16.66%) கிடைக்கும். இறந்தவருக்குப் பிள்ளைகள் இருப்பதால் இதுவே பெற்றோரின் பாகமாகும். இருவரின் மொத்த பாகம் நூறில் 33.34% ஆகும். மீதி 66.66% ஆகும்.
அடுத்து மகன், மகள் இருவரில் மகளும் முதல் வகை வாரிசுதான். ஆயினும், மகனின் காரணத்தால் மகள் இரண்டாம் வகை (அஸபா) வாரிசாகிவிடுவாள். எனவே, மீதியுள்ள பாகத்தை ஆணுக்கு இரு பங்கு; பெண்ணுக்கு ஒரு பங்கு என்ற விகிதத்தில் பிரித்தளிக்க வேண்டும். மீதியிருப்பது 66.66%. இதை 3ஆல் வகுத்தால் 22.22% விடையாகும். இதில் இரு மடங்கு, அதாவது 44.44% மகனுக்கும், ஒரு பாகம், அதாவது 22.22% மகளுக்கும் வழங்கப்படும்.

2 அப்துர் ரஹ்மான் (100%)

மனைவி மீதி மகன் மகள்
12.5% 87.5% 58.33% 29.17%
(முதல் வகை) (அஸபா) (அஸபா)
இங்கு இறந்துபோன அப்துர் ரஹ்மானுக்கு மனைவி இருக்கிறார். குறிப்பிட்ட பாகஸ்தரான இவருக்கு எட்டில் ஒரு பாகம் (1/8 - 12.5%) கிடைக்கும். இறந்தவருக்குப் பிள்ளைகள் இருக்கும்போது, மனைவிக்கு ஒதுக்கப்பட்ட பாகம் இதுதான். நூறில் அரைக் கால் பங்கான 12.5% மனைவிக்குக் கொடுத்ததுபோக எஞ்சியுள்ளது 87.5% ஆகும். இதை மூன்றாகப் பங்கிட்டு, இரு மடங்கு 58.33% மகனுக்கும் ஒரு பாகம் 29.17% மகளுக்கும் அளிக்கப்படும்.
3. தவுல், அர்ஹாம்
இறந்தவரின் சொத்துக்கு வாரிசாகும் மூன்றாவது வகை உறவினர், பெண்வழி உறவுகள் (தவுல் அர்ஹாம்) ஆவர். முதல் இரு வகை வாரிசுகள் இல்லாதபோது மட்டுமே, இறந்தவர் சொத்தில் இவர்களுக்கு உரிமை உண்டு. இவர்கள் வாரிசுரிமை பெறும் தருணம் மிகவும் அரிது. இவர்கள் பெண்வழி உறவினர்களாவர்.
இந்த மூன்றாம் வகை உறவினர்கள் என அறுவரைக் குறிப்பிடுவர்:
1. இறந்தவருடைய மகளின் (ஆண், அல்லது பெண்) மக்கள். 2. மகன்வழிப் பேத்தியின் (ஆண், அல்லது பெண்) மக்கள். 3. சகோதரியின் மகன், அல்லது மகள். 4. இறந்தவருடைய தந்தையின் சகோதரி (அத்தை - Aunt). 5. தாய்மாமன் (Uncle) 6. தாயின் சகோதரி (Aunt).
நிர்ணயிக்கப்பட்ட பாகஸ்தர்களோ (அஸ்ஹாபுல் ஃபராயிள்), ஆண்வழி மீதிப் பாகஸ்தர்களோ (அஸபா) இறந்துபோனவருக்கு இல்லாதபோது, பெண்வழி உறவுகளான இவர்களுக்குச் சொத்தை எம்முறையில் பிரிப்பது என்பது தொடர்பாக அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது. இருப்பினும் இவர்களுக்கு வாரிசுரிமை உண்டு என்பதே வலுவான கருத்தாகும்.
இவர்களில் பெண்ணோ ஆணோ ஒருவர் மட்டுமே இருந்தால், இறந்தவரின் முழுச் சொத்துக்கும் அந்த ஒருவரே வாரிசாகிவிடுவார். பலர் இருக்கையில், அவர்களின் உறவுமுறையைக் கருத்தில் கொண்டு, நெருக்கமான உறவுக்காரருக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பர் சிலர்.
யார் மூலம் இவர்கள் வாரிசாகிறார்களோ அந்த மூல உறவுக்காரரைக் கருத்தில் கொண்டு பாகப் பிரிவினை செய்ய வேண்டும் என்பர் வேறுசிலர்.
உதாரணமாக, இறந்துபோன ஒருவருக்கு, மகள்வழிப் பேத்தியின் மகளும், தந்தைவழிச் சகோதரரின் மகளும் மட்டுமே இருக்கிறார்கள். பேத்தியின் மகளுக்கே சொத்துக் கிடைக்கும். காரணம், பேத்தியின் உறவே நெருக்கமானது என்பர் சிலர்.
இல்லை; சொத்தைச் சரிபாதியாகச் பிரித்து பேத்தியின் மகளுக்கு ஒரு பாதியும் தந்தைவழிச் சகோதரன் மகளுக்கு மறுபாதியும் வழங்க வேண்டும் என்பர் மற்றச் சிலர். மகளின் இடத்தில் பேத்தியின் மகள் உள்ளார். மகள் ஒருவர் இருந்தால் மொத்தச் சொத்தில் பாதி வழங்கப்படும். அதே பாகத்தை மகளின் மகளுடைய மகளுக்கும் வழங்க வேண்டும் என்பது இவர்கள் வாதம்.
அவ்வாறே, சகோதரன் இடத்தில் சகோதரனின் மகள் இருக்கிறார். சகோதரன் ‘அஸபா’ என்ற அடிப்படையில் மீதிக்குச் சொந்தக்காரர் ஆவார். அப்படியே, சகோதரனின் மகளும் ‘அஸபா’ ஆவார் என்பதே காரணம்.
ஆக, முதல் வகை வாரிசுகள் - 12; இரண்டாம் வகை வாரிசுகள் - 12; மூன்றாம் வகை வாரிசுகள் - 6, ஆகமொத்தம் 30பேர். வரிசைக்கிரமப்படி, இவர்களில் ஒருவர்பின் ஒருவராக வாரிசு சொத்துகளை வழங்க வேண்டும் என்கிறது, இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்.
(சந்திப்போம்)