saleem

saleem

Write on வெள்ளிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2018

“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு வருகிறது. அதில் கதாநாயகன் தன் மக்கள் வசிக்கும் நிலங்களை அரசு இயந்திரம் மற்றும் மக்கள் விரோத அரசியல்வாதிகளிடமிருந்து காப்பாற்றுவதற்கு தொடர்ந்து போராட்டம் நடக்கும் விதமாக காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். ஆக நிலம் என்பது மனிதர்களுக்கு அதிஅவசியமானது.
நிலம் இயற்கையாக நமக்கு கிடைத்த வரம். அதில் உழைத்து வியர்வை சிந்தி சத்தான, சுவையான காய், கனிகளை, பலவிதமான மரங்களையும் நாம் உற்பத்தி செய்யலாம். நாம் உண்டு கழித்து மீதம் இருக்கும் உற்பத்தி உபரியை வைத்து வணிகம் செய்ய முடியும். பகிர்ந்து கொடுக்கலாம். சேமித்து வைக்கலாம்.
ஆதி மனிதன் முதல் இயந்திரமாகிப் போன இன்றைய நாகரீக மனிதன் வரை மனிதர்கள் அனைவரும் உணவுக்காக நிலத்தையும் மண்ணையுமே நம்பி இருக்கின்றனர். சுரண்டல், ஏற்றத்தாழ்வு என இடையில் நிலம் தொடர்பான உரிமைகள் பிரச்சனைகளாக ஆரம்பித்த போது சமூகம் ஆண்டான் அடிமை என இரு பிரிவாகியது. பின்பு நிலவுடமைச் சமூகம், ஜமீன்தார் முறை சமூகம் என்றாகி இன்றைக்கு நவீன உலகம் முதலாளித்துவ சமூகமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மேலுள்ள அனைத்து நிலைகளிலும் நிலமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.
நிலவுடமை சமூகத்தை எடுத்துக் கொண்டால் எந்த சாதிகளிடத்தில் அதிக நிலங்கள் இருந்ததோ அவர்களே அதிகாரம் செலுத்தும் மையங்களாக செயல்பட்டு வந்தனர். நிலத்தில் உழுது உழைத்து உற்பத்தி செய்யும் சாதிகள் தங்கள் கரங்களால் விளைநிலங்களை அலங்கரித்தாலும் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மீது அவர்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. நிலவுடமையாளர்கள் கொடுக்கும் அற்ப அரிசியும், தானியமும் தான் அவர்களுக்கு கிடைக்கும் பரிசு.
இன்றைக்கு இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் நிலையை நில உரிமையோடு முடிச்சிப் போட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை புரிந்து கொள்ளலாம். 2011 ஆம் ஆண்டு பொது பதிவுகள் மற்றும் கணக்கெடுப்பு ஆணையம் இணைந்து வெளியிட்ட தரவுகளின் படி நாட்டின் உழவு பணியில் 45.40 சதவீதம் இந்துக்கள் இருக்கிறார்கள் என்றும் 60% முஸ்லிம் சமூகம் உற்பத்தி துறையிலும், தொழிற்சாலைகளிலும், உபரி தொழில்களிலும் அதிகமாக இருக்கிறார்கள் என்ற செய்தியும் நமக்கு தெரிய வருகிறது.
உழவு தொழிலில் முஸ்லிம்கள் ஈடுபட்டாலும் நேரடியான விவசாய வேலைகளில் அதிகம் கிடையாது என்பதுதான் உண்மை நிலை.
வட இந்திய மாநிலங்களைப் பொறுத்துவரை முஸ்லிம்களில் பெறும்பான்மையினர் உபரி தொழில்களில் ஈடுபடுகின்றனர். நெசவாளர்களாக, மண்பாண்டம் செய்பவர்களாக, கொல்லர்களாக, தச்சர்களாக, கைத்தறி மற்றும் ஆடை உற்பத்தி துறையில் சிரிய அளவிலும் ஈடுபட்டு வருகிறார்கள். பெரும்பலான முஸ்லிம்கள் விவசாயிகள் அல்ல என்பதை புரிந்து கொள்வது அவசியம். மேலும் முஸ்லிம்கள் சிறு தொழில்களில் மூலமே தங்கள் வருமானத்தை தேடுபவர்களாக இருக்கிறார்கள் என்கிறார் என்கிறார் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் செயலர் பி.எஸ்.கிருஷ்ணன்.
2005 இல் இந்திய முஸ்லிம்களின் சமூக, பொருளாதார நிலையை கண்டறிவதற்காக நீதிபதி சச்சார் அவர்களின் தலைமையில் மன்மோகன் சிங் அரசால் அமைக்கப்பட்ட குழு “முஸ்லிம் சமூக மக்களிடம் குறைவான நிலம் இருப்பதே அவர்களின் பின்னடைவுக்கு ஒரு காரணம்” என்று இந்திய அரசுக்கும், சமூகத்துக்கும் உணர்த்தியது.
இந்திய மக்கள் தொகையில் கிராமத்தில் இருப்போரில் 94% பேருக்கு சொந்த வீடு உள்ளிட்ட சொந்த நிலம் இருக்கிறது. ஒரு ஏக்கர் கொண்டவர்கள் சராசரி 81%. அதிலும் உயர் சாதி மற்றும் இடைநிலை சாதிகள்தான் அதிக நிலம் கொண்டவர்கள். 12.7% நிலம் தான் முஸ்லிம்களிடத்தில் உள்ளது. மற்ற மத சிறுபான்மைகளிடத்தில் 5.4 நிலம் உள்ளது. நம் நாட்டில் காலம் காலமாக ஒடுக்கப்பட்ட சமூகமான தாழ்த்தப்பட்ட மக்களிடம் 19% நிலமும் மலைவாழ் மக்களிடம் 8.4%மும் இருக்கிறது. சொந்த நிலமற்ற சமூகம் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறது என்பதுதான் வரலாறு நமக்குச் சொல்லும் பாடம். அதை இந்த கணக்கெடுப்பு உண்மைப்படுத்துகிறது.

தரவுகள் இப்படி இருக்க ஒரு விசித்திர உண்மை என்னவென்றால் உலகத்திலேயே முஸ்லிம்களால் கொடையளிக்கப்பட்ட வக்ஃபு சொத்துக்கள் இந்தியாவில்தான் அதிகம். ஆம் இந்திய இரயில்வே துறை மற்றும் இந்திய இரணுவத்துக்குப் பிறகு அதிகமான சொத்துக்களையும், நிலங்களையும் கொண்டிருப்பது இந்திய வக்ஃப் ஃபோர்டுதான்.
பதிவு செய்யப்பட்ட 4.9 லட்சம் சொத்துக்களின் மதிப்பு 1.20 லட்சம் கோடி. இந்த தொகையை பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது. இந்திய முஸ்லிம்களின் முன்னோர்கள் ஆறு லட்சம் ஏக்கர் நிலங்களை தங்களின் சந்ததிகளின் உயர்வுக்காக தங்களது சொத்துக்களை இறைப் பாதையில் வக்ஃபு செய்திருக்கிறார்கள்.
சச்சார் குழு பரிந்துரைப்படி இருக்கின்ற வக்ஃப் சொத்துக்களை முறையாக பராமரித்து வந்தாலே ஆண்டுக்கு 12,000 கோடி ரூபாய் வருமானம் வரும். அதை வைத்து முஸ்லிம் சமூகத்தின் வறுமையை மட்டும் இல்லாமல் மற்ற சிறுபான்மை மக்களின் பொருளாதார நிலையையும் சரி செய்து விடலாம்.
தற்போது இந்திய வக்ஃபு வாரியத்தின் வருமானம் என்பது வெறும் 163 கோடி மட்டுமே. முஸ்லிம்களின் வக்ஃபு சொத்துக்கள் குறித்த அறியாமையாலும், மெத்தனப் போக்காலும் கேட்பாடற்றுக் கிடக்கிறது சமுதாயத்தின் சொத்துக்கள்.
கல்வியில் பின் தங்கியிருக்கிற முஸ்லிம் சமுதாயத்திற்குத் தேவையான தரமான கல்வி நிலையங்களை உருவாக்க வக்ஃபு துறையால் முடியும். நியாயமாக, சரியாக அரசியல் தலையீடு இல்லாமலிருந்தால்.
இன்றைக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஏழை, நடுத்தர முஸ்லிம் குடும்பங்களுக்கு வாடகைக்கு வீடுகள் கிடைப்பதில் இருக்கும் சிக்கல்கள் சொல்லிமாளாது. முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக வீடு கொடுக்க மறுக்கிறார்கள். பல முஸ்லிம்கள், நண்பர்களின் வீடுகளில் ஒரு அகதியின் வாழ்க்கையைப் போல காலம் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றொரு புறம் பாதுகாக்கப்பட வேண்டிய நம் முன்னோர்கள் வழங்கிய வக்ஃபு சொத்துக்கள் சமூக அக்கறையற்றவர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரமிக்கவர்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டு பறிபோய்க்கொண்டிருக்கிறது.
“நிலமே ஒரு மனிதனின் உரிமை” சமுதாய தன்மானம் அதில் அடங்கி இருக்கிறது. ஆகவே அஸ்தமம் ஆவதற்கு முன் விழித்துக் கொண்டு நம் நிலங்களை மீட்டெடுப்போம். சமூகத்தின் தடை போக்க முயற்சிப்போம்.

Write on வெள்ளிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2018

- ரவூப் ஸய்ன் -
உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் அகராதி வருடம் தோறும் அந்த ஆண்டுக்கான சொல்லைத் தேர்வு செய்வது வழக்கம். 2016 ஆம் ஆண்டுக்கான ஆக்ஸ்போர்ட் அகராதி தேர்வு செய்த சொல் Post - Truth என்பதாகும். அந்த ஆண்டில் பத்தி எழுத்தாளர்கள், நூலாசிரியர்கள், செய்திப் பகுப்பாய்வாளர்கள் இச்சொல்லை 2000 முறை பயன்படுத்தியதனாலேயே அந்த ஆண்டுக்கான சொல்லாக Post - Truth தேர்வாகியது.
1992 இல் The Nation என்ற நாவலின் ஆசிரியர் ஸ்டீவ் டைசிக் என்பவர்தான் இந்தச் சொல்லை முதலில் பயன்படுத்தினார். Post - Truth என்ற சொல்லின் அர்த்தம் உண்மைக்குப் பிந்திய அல்லது உண்மையைக் கடந்தது என்பதாகும். ஆயினும் இப்பெயர்ப்பு அச்சொல்லின் அர்த்தங்களை ஆழ அகலத்துடன் பிரதிபலிக்கவில்லை.
சமகால உலக அரசியல் அப்பட்டமான பொய்களை உண்மைகளாய் நம்பச் செய்து உண்மையான தரவுகள், தகவல்களை புறமொதுக்கி விட்டு, திட்டமிட்ட சில பொய்களோடு இயங்குவதனையே இந்தச் சொல் குறிக்கின்றது. 2016 ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அமெரிக்காவின் நடுநிலை ஊடகங்களும் எழுத்தாளர்களும் இச் சொல்லை அதிகம் பயன்படுத்தின. முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அமெரிக்கக் குடியுரிமை இல்லை என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
நியூயார்க் உணவு விடுதியொன்றின் அருகில் ஹிலாரி கிளின்டனுக்குச் சொந்தமான சிறுவர் துஷ்பிரயோக நிலையமொன்று இயங்குவதாக பிரச்சாரக் கூட்டத்தில் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இது சில ஊடகங்களில் பரப்பப்பட்டது. வடகரோலினா மாநிலத்திலிருந்து இச்செய்தியைக் கேட்டு ஆத்திரமடைந்த ஒருவர் 500 கி.மீ.க்கு அப்பாலுள்ள நியூயார்க்கிற்கு வந்து உணவு விடுதியின் அருகிலிருந்த கட்டடத்தின் மீது சரமாரியாகச் சுட்டதில் சிலர் இறந்து போனார்கள். பின்னர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட அந்த நபர் குறிப்பிட்ட ட்ரம்பின் கருத்தை தான் நம்பியதனாலேயே இந்த முடிவுக்கு வந்ததாக வாக்குமூலம் வழங்கினார்.
ஆனால், விசாரணையின் பின்னர் ட்ரம்ப் குறிப்பிட்டது போன்று ஹிலாரிக்குச் சொந்தமான துஷ்பிரயோக நிலையமொன்று மொத்தமாகவே அங்கில்லை என்பது தெளிவானது. பொய்களை திட்டமிட்டு உருவாக்குவதும் அதனை நம்பச் செய்து அதன் மீது தமது அரசியலை நடத்துவதுமே இன்று உலகின் பல நாடுகளில் நடக்கின்றது.
‘அரசியலில் பொய்’ என்பதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. கடந்த காலம் முழுவதும் அரசியல் பொய்கள் முக்கிய திருப்பங்களில் தீர்மானிக்கும் சக்தியாக இருந்துள்ளன. ஹிட்லரின் கொள்கை பரப்புச் செயலாளர் கோயபல்ஸ் மட்டுமே பொய் அரசியலுக்குப் பெயர் போனவர். ஆனால், அவருக்குப் பிந்திய பல பத்தாண்டுகளாக இன்று வரை கோயபல்ஸின் பொய்களை விட மிகப் பயங்கரமானதும் ஆபத்தானதுமான பொய்களோடு உலக அரசியல் நகர்கின்றது.
உண்மைகளைப் பொய்யாக்குவதும் பொய்களை உண்மையாக்குவதுமே Post - Truth எனலாம். இதில் உண்மையான புள்ளிவிபரங்கள், தரவுகளைப் பிழையானதாக அல்லது பொய்யானதாகத் திரிப்பது நிகழ்கிறது. இன்னொரு புறம் இல்லாததை இருப்பதாக பொய்கள் உருவாக்கப்படுகின்றன. உலகின் 748 கோடி மக்கள் 4 வல்லரசுகளின் 5 தலைவர்களால் சொல்லப்படும் பொய்களால் ஏமாற்றப்படுகிறார்கள்.
நிறுவனத் தேவைகளுக்கும் தனிநபர்களின் சுயநலன்களுக்கும் சில அரசுகளின் ஆதிக்கப் போட்டிக்கும் ஏற்ப பொய்கள் உருவாக்கப்படுகின்றன. அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் அரசியல் செயல்பாடுகள் பெரும்பான்மையானவை உண்மைக்குப் புறம்பான பொய்களின் மீதே நகர்கின்றன. அதன் எதிர்மறையான தாக்கம் உலக அரசியலை விட்டு வைக்க வாய்ப்பில்லை. அதனால், முழு மொத்த சர்வதேச அரசியலையும் இந்த அப்பட்டமான பொய்கள் பாதித்து வருகின்றன.
9/11 க்குப் பின்னர் புஷ்ஷும் பிளேயரும் வெளியிட்ட அறிக்கைகளும் அதனையொட்டி மேற்கொண்ட பயங்கரவாதத்திற்கு எதிரான போரும் மிகப் பெரிய பொய்களின் அடிப்படையில் நடந்தவைதான். ஈராக் ஆக்கிரமிப்புக்கும் ஆப்கான் ஆக்கிரமிப்புக்கும் புஷ் முன் வைத்த காரணங்கள் சுத்தமான பொய்கள். அந்தப் பொய்கள் ஈராக்கில் 10 இலட்சம் அப்பாவிப் பொதுமக்களை பலியாக காரணமானது. பல்லாயிரக்கணக்கான அப்பாவிக் குழந்தைகளை அநாதைகளாக்கின.
நூற்றுக்கணக்கான ஈராக்கிய பெண்களை பாலியல் வல்லுறவுக்குப் பலியாக்கின. ஈராக்கை மூன்று பிராந்தியங்களாகத் துண்டாடின. அதன் எண்ணெய் வளத்தை அமெரிக்கக் கம்பனிகளின் கீழ் கொண்டு வந்தன. இன்று வரை ஈராக் இன, மத பேதங்களால் குமுறிக்கொண்டிருப்பதற்கு புஷ்ஷும் பிளேயரும் சொன்ன பொய்களே காரணமாகியது. சத்தாம் ஹுஸைனிடம் பேரழிவு தரும் ஆயுதங்கள் உள்ளன என்பதே அவர்கள் சொன்ன பொய். இப்போது இது பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
1963 இல் ஜான் எஃப் கென்னடி சவூதி அரேபியாவுக்குப் படையினரை அனுப்பினார். எகிப்தின் ஜமால் அப்துந் நாஸர் சவூதியை ஆக்கிரமிக்கப் போகின்றார் என்று கென்னடி சொன்ன பொய்யை அடுத்து அவரது நகர்வு நியாயப்படுத்தப்பட்டது. ட்ரம்ப் அமெரிக்காவுக்குப் புலம்பெயரும் வெளிநாட்டவர்கள் குறித்து உருவாக்கிய அச்சம் அவரது வெற்றிக்குப் பின்னணியாய் இருந்தது. அது கூட மிகப் பெரிய பொய்தான். 1990 களில் இடம்பெற்ற பாரசீக வளைகுடா யுத்தத்திற்கு முதலாவது புஷ் முன்வைத்த நியாயமும் பொய்யானவைதான்.
2016 இல் உலக அரசியலில் விவாதிக்கப்பட்ட இன்னொரு மிகப் பெரிய பொய் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய சம்பவமாகும். டேவிட் கேமரூன் அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு முன் வைத்த பொய்ப் பிரச்சாரம் புள்ளி விபரங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. இப்பிரச்சாரம் பொய்யென நிரூபிக்கப்பட்ட பின்னரும் அதனைத் தோற்கடிக்க முடியாத அளவுக்கு பிரக் ஸிட் ஆதரவு ஊடகங்கள் இந்தப் பொய்யை உண்மையாக்கின.
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க வேண்டுமாயின், 3500 இலட்சம் பவுன்களை வருடம் தோறும் இழக்க வேண்டி ஏற்படும். எனவே, இவ்வளவு தொகையை இழந்த வண்ணம் ஐரோப்பிய ஒன்றியத்தில் அது நீடிக்க வேண்டியதில்லை என்பதே கேமரூன் அரசின் வாதமாக இருந்தது. ஆனால், முன் வைக்கப்பட்ட தரவு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
அயோத்தியிலிருந்த பாபரி மஸ்ஜித் மொகலாய மன்னர் பாபரினால் கட்டப்பட்டது. அது இலக்கியத்தில் வரும் கற்பனைப் பாத்திரமான ராமன் பிறந்த இடம் என்று பொய்ப் பரப்புரை செய்யப்பட்டு சங்கபரிவாரம் அதனைத் திட்டமிட்டு அழித்தது. இந்தியச் சூழலில் இதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.
குஜராத் பிரதமர் நரேந்திர மோடியை பிரதமராக்குவதற்கு கார்ப்பரேட் கம்பெனியின் கட்டுப்பாட்டிலிருந்த ஊடகங்கள் திரும்பத் திரும்ப பரப்புரை செய்த பொய்களே துணை நின்றன. பொருளாதாரத்திலும் கல்வியிலும் குஜராத்தே முன்னிலை வகிப்பதாகவும் அதற்கு மோடியே காரணம் எனவும் பொய்கள் கட்டவிழ்க்கப்பட்டன. உண்மை இதற்குப் புறம்பாகவே இருந்தது. கேரளாவுடன் ஒப்பிடும்போது குஜராத்தின் கல்வி நிலை பின்தங்கியிருந்தது.
மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது ஊட்டச்சத்துக்குறையால் வாடும் குழந்தைகளின் வீதம் குஜராத்தில்தான் அதிகம் இருந்தது. மோசமான இனக் கலவரங்களுக்கும் பெயர் போன மாநிலம் அதுதான். இந்த உண்மைகளெல்லாம் மறைக்கப்பட்டு, மோடியைப் பற்றிய புதிய பிம்பங்கள் ஊடகங்களில் உலா வந்தன. மக்கள் அவற்றை நம்பினார்கள்.
இப்போது ஒரு புதிய சர்ச்சை கூட இந்தியச் சூழலில் உருவாகியுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதியொருவர் வரலாற்றை தலைகீழாய்ப் புரட்டும் பொய் ஒன்றை கட்டவிழ்த்துள்ளார். தாஜ் மஹாலின் உண்மைப் பெயர் தே.ஜே. மஹால் எனவும் அது பழைய சிவன் கோயில் எனவும் மொகலாயர் காலத்தில் முஸ்லிம்கள் அதனைக் கைப்பற்றி தாஜ்மஹால் என்று மாற்றினர் எனவும் ஹரிசங் ஜெய்ன் எனும் ஒரு நீதிபதியே இப்படிப் பெரிய பொய்யொன்றை அவிழ்த்துள்ளார்.
தாஜ்மஹாலின் வரலாற்றை இவர் அறியாதிருக்க வாய்ப்பில்லை. ஆனால், ஹரிசங் ஜெய்ன் ஆர்.எஸ்.எஸ். பாசறையில் வளர்ந்தவர் என்பதால் இந்துத்துவ கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்களுக்கு தீனி போட முயற்சிக்கிறார். மக்கள் இதனை நம்புவதற்கும் கலவரங்களில் பங்குகொள்வதற்கும் கூட இந்தப் பொய் காரணமாகலாம்.
நாங்கள் உருவாக்கும் உண்மைகளை மக்களை நம்பச் செய்வோம். அவற்றை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அதிகார வர்க்கத்தின் பொய் அரசியல் ஆகும். அரசியலில் பொய் என்பதை விட பொய் அரசியல் மிகுந்த ஆபத்தானதாகும்.
அகிலத்தை அழிப்பதற்கும் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கும் வல்லரசுத் தலைவர்களும் ஆதிக்க சக்திகளும் தமது கையிலெடுத்துள்ள பயங்கர ஆயுதமே இதுவாகும்.
ஜான் பெர்கின்ஸ் எனும் எழுத்தாளர் ஒரு காலத்தில் அமெரிக்காவின் சதிக் கோட்பாட்டிற்கு பொறுப்பாயிருந்த கூலிகளில் ஒருவர். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் அவர் எழுதியுள்ள ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் எனும் நூலின் இறுதிப் பகுதியில் அமெரிக்காவின் மிகப் பெரிய பலம் ஒட்டு மொத்த உலகப் பொருளாதாரமும் டாலரின் அடிப்படையில் இருப்பது தான். டாலரை அச்சடிப்பதற்கு நம்மால் முடிகின்றது. அதனால்தான் நாம் வல்லரசாக நிலைத்திருக்கிறோம் என்கிறார்.
அவரது கருத்தில் உலகத்தில் மிகப் பெரிய கறுப்புப் பணம் டாலர்தான். ஆனால் இதனை எத்தனை பேர் நம்புவார்கள் என்பதுதான் நமக்கு முன்னாலுள்ள பிரச்சினை.
நவீன உலக வரலாற்றை தலைகீழாய் மாற்றியதில் உண்மைக்குப் பிந்திய பொய் அரசியலுக்கும் அவற்றைப் பரப்புரை செய்யும் ஊடகங்களுக்கும் பெரிய பங்குள்ளது.
பெரும்பாலான அமெரிக்க ஊடகங்கள் அரசுக்கு ஆதரவானவை. கூலிக்கு மாரடிப்பவை. ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் லாபிகளின் கீழே உள்ளவை. இதனால், உண்மையை விட பொய்த் தரவுகளையும் தகவல்களையும் முன்வைத்து வாதிடுபவை. அவை உருவாக்க விளைவது பொய்ச் சமநிலையையே. பொய்களை அப்படியே சந்தைப்படுத்தும் நிலைக்கே இறுதியில் அவை வந்து சேர்கின்றன.
இன்றைய சமூக ஊடகங்கள் இதற்கு மேலும் பலமூட்டுகின்றன. டிஜிட்டல் பயன்பாடு மற்றும் இணைய வதியுள்ள ஒருவருக்கு தான் விரும்பும் கருத்தை உலகமயமாக்குவதற்கு வாய்ப்புள்ளது. அந்த அபிப்பிராயத்தில் பொய்கள், பக்கச் சார்புகள், உண்மையைப் புறந்தள்ளும் வெறுப்பு எல்லாமே கலந்திருக்கின்றது.
பொய்களையும் அசத்தியங்களையும் அடிப்படையாகக் கொண்ட இந்தப் புழுகுமூட்டை அரசியல், மக்களைத் தவறாக வழிநடாத்துகின்றது என்பது மட்டுமல்ல, உலகிற்கே பெரும் அழிவைக் கொண்டு வருகின்றது.
உண்மைகளைத் திட்டமிட்டு நிராகரித்து பொய்களை உருவாக்கி, சந்தைப்படுத்தும் எந்திரங்களாகவே உலகின் பெரும்பாலான அரசாங்கங்கள் இயங்குகின்றன.
இத்தகைய பொய்களை வடிகட்டி உண்மைகளை மட்டும் உள்ளீர்க்கும் மனோநிலைக்கு மக்களை கொண்டு வந்து சேர்ப்பதுதான் நமக்கு முன்னாலுள்ள பெரும் சவாலாகும்.

Write on வெள்ளிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2018

 - சேயன் இப்ராகிம்
சமுதாயச் சேவையாளர் கும்பகோணம் E.S.M. பக்கீர் முகம்மது சாகிப்
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்ற மூதுரைக்கு ஏற்ப இம்மக்கள் மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய தென்கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று பொருளீட்டி வருபவர்கள். அவர்களில் பலர் தாங்கள் ஈட்டிய செல்வத்தின் ஒரு பகுதியை சமய மற்றும் சமுதாயப் பணிகளுக்கு வாரி வழங்கினர். இன்றைக்கும் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் பல புலவர்களையும், கவிஞர்களையும், கல்வியாளர்களையும், எழுத்தாளர்களையும். புரவலர்களையும் தமிழகத்திற்குத் தந்த பெருமை இம்மாவட்ட முஸ்லிம் சமூகத்திற்குண்டு. இம் மாவட்டத்தைச் சார்ந்த அத்தகைய ஒரு சமூக சேவையாளரைப் பற்றியே இந்த இதழில் பார்க்கவிருக்கிறோம்.
தஞ்சை மாவட்டத்தின் வர்த்தக நகரம் என அறியப்படும் கும்பகோணம் காவேரிக் கரையில் அமைந்தள்ளது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இரு சோழர்களின் தலைநகராக விளங்கியது. இதன் பழைய பெயர் பறையாழை என்பதாகும். குடந்தை என்றும் திருக்குடந்தை என்றும் இந்நகர் அழைக்கப்படுகிறது.
கும்பகோணம் என்றதும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்து சமய மக்களின் பண்டிகையான மகாமகம் நமது நினைவிற்கு வரும். வெற்றிலை, டிகிரி காபி ஆகியனவும் நமது நினைவிற்கு வரும். கும்பகோணத்தைப் பற்றிய இந்த நினைவுகளோடு நமது நினைவுக்கு வருபவர் சமுதாயச் சேவையாளராகவும், கல்வியாளராகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்த மறைந்த இ.எஸ்.எம். பக்கீர் முகம்மது சாகிப் ஆவார்.
பிறப்பு - கல்வி - தொழில் :
ஷேக் முகையதீன் இராவுத்தர் என்பார் கும்பகோணம் பெரிய கடைத் தெருவில் ஒரு சிறிய கடை வைத்து காம்பு புகையிலை வியாபாரம் செய்து வந்தார். அப்போது வெற்றிலையுடன் புகையிலையையும் சேர்த்துப் போடுகின்ற பழக்கம் மக்களிடையே பெருமளவு இருந்து வந்தது. எனவே இவரது கடையில் நல்ல வியாபாரம் இருந்தது. நாளடைவில் இவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர் தனது வியாபாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஒரு புதிய உத்தியைக் கையாண்டார்.
புகையிலையை மிகச் சிறிய துண்டுகளாகக் கத்தரித்து அவற்றை பொட்டலங்களில் போட்டு விற்பனை செய்ய ஆரம்பித்தார். இந்த உத்தி வாடிக்கையாளர்களைப் பெருமளவு ஈர்த்தது. அதனால் விற்பனை அதிகரித்து வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டியது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் தரமான புகையிலையை அவை விளையும் இடத்திற்கே சென்று கொள்முதல் செய்து அதனை பக்குவமான முறையில் பாடம் செய்து, மணமும் காரமும் இருப்பதற்காக சில செயற்கை சுவையூட்டிகளை அதில் சேர்த்து அதனை சிறு சிறு பொட்டலங்களில் போட்டு ‘மைதீன் புகையிலை’ என்ற லேபிலை ஒட்டி விற்பனை செய்ய ஆரம்பித்தார்.
இதற்காகத் தொழிற்சாலை ஒன்றையும் தொடங்கி அதற்க ‘மைதீன் புகையிலைக் கம்பெனி’ என்று பெயரிட்டார். காரமும், மணமும் கொண்ட இந்த மைதீன் புகையிலையின் சுவையில் மக்கள் சொக்கிப் போயினர். இந்தப் புகையிலையின் சந்தை கும்பகோணம் நகரம், தஞ்சை மாவட்டம், தமிழ் நாட்டின் பிற பகுதிகள் என நாளடைவில் விரிவடைந்தது. அன்றையத் தமிழ் நாட்டில் ஒரு முன்னணி புகையிலை வணிகராக ஷேக் முகையதீன் இராவுத்தர் திகழ்ந்தார்.
இந்தப் புகையிலை வணிகரான ஷேக் முகையதீன் இராவுத்தரின் புதல்வராக 28.04.1937 அன்று பக்கீர் முகம்மது பிறந்தார். தனது தொடக்க மற்றும் இடை நிலைக் கல்வியை கும்பகோணத்திலிருந்த நேடிவ் உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். இவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே தந்தையார் ஷேக் முகையதீன் இராவுத்தர் திடீரென மரணமுற்றார். எனவே இவரது மூத்த சகோதரியின் கணவர் மைதீன் புகையிலைக் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று சில ஆண்டுகள் நடத்தி வந்தார். பள்ளிப் படிப்பு முடிந்ததும், பக்கீர் முகம்மதுவே புகையிலைக் கம்பெனியின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு வயது 18 தான். தனது கடின உழைப்பு, விடா முயற்சி, நாணயம் காரணமாக மைதீன் புகையிலைக் கம்பெனியை மேலும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றார்.
பொதுப் பணிகள்:
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்த டாக்டர் ஸையது கலீலுல்லாஹ் கும்பகோணத்தை ஒட்டிய மேலக் காவிரியில் குடியிருந்து வந்தார். இஸ்லாமியப் பற்றும் பொது நல நோக்கும் கொண்ட இந்த டாக்டருடன் பக்கீர் முகம்மதுவுக்குப் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது நட்பாக மாறியது. டாக்டரின் தொடர்பு காரணமாக பக்கீர் முகம்மதுவுக்கும் பொதுப் பணிகளில் நாட்டமும், இஸ்லாமிய வழிமுறைகளில் நல்ல பிடிப்பும் ஏற்பட்டது.
தஞ்சை மாவட்ட முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ஏதேனும் செய்திட வேண்டுமென இருவரும் எண்ணினர். மாவட்டதிலுள்ள ஒருமித்த எண்ணம் கொண்ட நண்பர்களை அழைத்து ஆலோசனை நடத்தினர். அதன் விளைவாக உருவானது தான் தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்விச் சங்கமாகும். பக்கீர் முகம்மது இச்சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கபட்டார்.
மேலக் காவிரியில் தனது தந்தையின் நினைவாக ‘மைதீன் மதரஸா நிஸ்வான்’ என்ற பெண்கள் பள்ளிக் கூடத்தைத் அவர் தொடங்கினார். முஸ்லிம் பெண் பிள்ளைகளுக்கு மார்க்கக் கல்வியுடன் பொதுக் கல்வியையும் கற்றுக் கொடுக்கும் பள்ளியாக இது திகழ்ந்தது. இப் பள்ளியின் தாளாளராகவும் அவர் பொறுப்பில் இருந்தார். இந்தப் பள்ளி தற்போது மெட்ரிகுலேசன் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு நன்கு செயல்பட்டு வருகின்றது. தனது தந்தையார் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு வழிகளிலும் உதவிகள் செய்து வந்தார். தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்விச் சங்கத்தால் தொடங்கப்பட்ட அல் அமீன் மெட்ரிகுலேசன் பள்ளியின் வளர்ச்சிக்காகவும் பாடுபாட்டார்.
கும்பகோணம் நகரத்திலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் செயல்பட்டு வந்த பல்வேறு பொது நல அமைப்புகளிலும் பொறுப்புகளை வகித்து மக்கள் பணி ஆற்றியுள்ளார். அவர் அங்கம் வகித்த பொறுப்புகள்
1. கும்பகோணம் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர். 1973ஆம் ஆண்டு அதன் தலைவர்
2. சென்னை காஸ்மோ பாலிடன் கிளப் உறுப்பினர்
3. மைலாப்பூர் அகாடமியின் துணைத் தலைவர்
4. கும்பகோணம் நேடிவ் மேல் நிலைப் பள்ளியின் தாளாளர்.
5. இந்திய முந்திரி வளர்ச்சி கழகத்தின் உறுப்பினர்.
சமயப் பணிகள்:
ஒரு மிகச் சிறந்த முஸ்லிமாகத் திகழ்ந்த பக்கீர் முகம்மது இஸ்லாமிய சமயம் சார்ந்த பணிகளுக்கு வாரி வழங்கினார். மேலக்காவேரியிலிருந்த பள்ளிவாசலைப் புதுப்பித்துக் கட்ட நிதி வழங்கினார். கும்பகோணம் மற்றும் தஞ்சை மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் புதிய பள்ளிவாசல்கள் கட்டிடவும், பள்ளிவாசல்களை விரிவுபடுத்தவும் தாராளமாக நிதி உதவி செய்தார். அரபி மதரஸாக்களுக்கும் பெருமளவு நிதி உதவி செய்துள்ளார். 1972ஆம் ஆண்டு கும்பகோணத்தில் மீலாது மாநாடு ஒன்றினை மிகப் பெரிய அளவில் நடத்தி மக்களின் பாராட்டுதல்களைப் பெற்றார். இம் மாநாட்டையொட்டி சிறப்பு மலர் ஒன்றை வெளியிடவும் துணை நின்றார்.
அரசியல் :
இளமையிலிருந்தே காங்கிரஸ் பேரியக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அவர் அக்கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பனாரின் நம்பிக்கைக்குரிய சீடராக விளங்கினார். 1967 முதல் 1970ம் ஆண்டு வரை கும்பகோணம் நகரக் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பு வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகவும் சில ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகப் பெரிதும் பாடுபட்டார். இவரின் நேர்மையான கட்சிப் பணிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இவரை கும்பகோணம் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக்கி காங்கிரஸ் கட்சி கௌரவித்தது.
1980 ஆம் ஆண்டு தமிழக சட்ட சபைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கும்பகோணம் சட்டமன்ற காங்கிரஸ் வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டார். (தி.மு.க காங்கிரஸ் - முஸ்லிம் லீக் கூட்டணி) இவரை எதிர்த்து அ.தி.மு.க வேட்பாளராக மறைந்த எஸ்.ஆர். இராதா களத்தில் இருந்தார். இத் தேர்தலில் பக்கீர் முகம்மது அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.ஆர். இராதாவை விட 9623 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். (பக்கீர் முகம்மது 40,034, எஸ்.இராதா 35,415) 1980ம் ஆண்டு வரை நான்காண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றினார்.
1984 மற்றும் 1989ம் ஆண்டுகளில் பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் பக்கீர் முகம்மது கும்பகோணம் பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். (காங்கிரஸ் - அ.தி.மு.க கூட்டணி) இந்த இரண்டு தேர்தல்களிலும் இத் தொகுதியில் இவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தி.மு.க வின் வேட்பாளரான கல்யாணம். இனி ஓட்டு விவரங்களைப் பார்ப்போம்
1984தேர்தல்:
இ.எஸ்.எம். பக்கீர் முகம்மது (காங்கிரஸ்) 3, 35, 033
கல்யாணம் (தி.மு.க) 2, 15, 390
1989 தேர்தல்
இ.எஸ்.எம். பக்கீர் முகம்மது (காங்கிரஸ்) 3, 52, 492
கல்யாணம் (தி.மு.க) 2, 50, 547

ஏழாண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் கும்பகோணம் தொகுதி வளர்ச்சிக்காக மட்டுமின்றி பல்வேறு பொதுப் பிரச்னைகளுக்காகவும் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார். பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் நிதி அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் (1985-1989) தரை வழிப் போக்குவரத்துத் துறையின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் (1990) பொறுப்புகள் வகித்தார். இந்தியாவிலிருந்து புனித ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்லும் பயணிகளுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட அரசு ஹஜ் நலக் குழுவின் உறுப்பினராக புனித மக்கா மற்றும் மதினா நகரங்களுக்குச் சென்று வந்தார். (1990) வியாபார விஷயமாகவும், அரசியல் விஷயமாகவும் மலேசியா, சவூதி அரேபியா, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஹாங்காங் இத்தாலி ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.
நல்லிணக்க நாயகர்:
பக்கீர் முகம்மது சாகிப் சமய நல்லிணக்க நாயகராகத் திகழ்ந்தார். அனைத்து சமூக மக்களிடமும் சுமுக உறவைப் பேணினார். கும்பகோணம் நகர மக்களால் பெரிதும் மதிக்கப் பெற்ற ஒரு பிரமுகராக அவர் விளங்கினார். கும்பகோணம் மகாமகம் திருவிழாவைக் காணவரும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதை வழங்கமாகக் கொண்டிருந்தார்.
தனது கம்பெனியில் பணியாற்றிய நூறுக்கும் மேற்பட்ட ஊழியர்களை அன்புடனும் பரிவுடனும் நடத்தினார். சிராஜுல் மில்லத் அப்துல் ஸமது சாகிப், வடகரை பக்கர் சாகிபு, கவிஞர் சாரண பாஸ்கரன், சொல்லின் செல்வர் எம்.எம்.பீர்முகம்மது சாகிப் போன்ற சமுதாயத் தலைவர்களுடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார். அனைத்துத் தரப்பினரின் அன்பைப் பெற்றதன் காரணமாக சமுதாய மக்கள் இவரைத் ‘தம்பி’ என்று வாஞ்சையுடன் அழைத்தனர்.
குடும்பம்:
ஒன்பது பெண் பிள்ளைகளுக்கிடையே ஒரே ஒரு ஆண் பிள்ளை பக்கீர் முகம்மது சாகிபு. அதன் காரணமாகப் பெற்றோர்களால் செல்லமாக வளர்க்கப்பட்டார். அவரது தந்தையார் சேக் முகையதீன் இராவுத்தர் காலமான போது நான்கு பெண் பிள்ளைகளுக்கு மட்டுமே திருமணம் நடந்தேறியிருந்தது. மீதி ஐந்து பெண் பிள்ளைகளுக்கும் (சகோதரிகளுக்கும்) இவரே தந்தையின் ஸ்தானத்திலிருந்து திருமணங்களை நடத்தி வைத்தார்.
பக்கீர் முகம்மது சாகிபிற்கு 21.1.1960 அன்று திருமணம் நடைபெற்றது. துணைவியார் பெயர் எம். ரஸ்யாபானு. இத்தம்பதியினருக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் என நான்கு பிள்ளைகள். தந்தையாரின் மறைவிற்குப் பின்னர் மகன் கலீல் ‘மைதீன் புகையிலைக் கம்பெனியை’த் திறம்பட நடத்தி வருகிறார். தந்தையாரைப் போலவே அவரும் பொதுச் சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
முடிவுரை:
பக்கீர் முகம்மது சாகிப் 28.01.1991 அன்று தனது 54வது வயதில் காலமானார். அப்போது அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து பொதுச் சேவையில் ஈடுபடுவார் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவரது அகால மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டு சிராஜுல் மில்லத் அப்துல் சமது சாகிப் ஆற்றிய இரங்கலுரை அனைவரின் நெஞ்சங்களையும் ஈர்ப்பதாக அமைந்திருந்தது.
கும்பகோணம் பக்கீர் முகம்மது சாகிப் ஒரு மிகச் சிறந்த முஸ்லிமாக. மிகச் சிறந்த மனிதராக விளங்கினார். ‘வாழ்வை விட சாவு எல்லோருக்குமானது எல்லோரும் இறக்கிறார்கள். ஆனால் எல்லோருமே வாழ்ந்து விடுவதில்லை’ என்கிறார் அறிஞர் ஆலன் சாக்ஸ். ஆம் பக்கீர் முகம்மது சாகிப் வாழ்ந்து காட்டியவர். ‘தொண்டு செய்யாத மனித வாழ்க்கை மிருக வாழ்க்கை’ என்கிறான் வேறொரு அறிஞன். மக்கள் தொண்டு செய்தோருக்கு ஒரு போதும் மரணமில்லை. மரணத்திற்குப் பிறகும் அவர்கள் மக்களின் நெஞ்சங்களில் வாழ்வார்கள். கும்பகோணம் பக்கீர் முகம்மது சாகிபும் நமது நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கட்டுரையாளருடன் தொடர்பு கொள்ள ... 99767 35561

Write on வெள்ளிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2018

முஹம்மத் பகீஹுத்தீன்
துருக்கி ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட ரஜப் தையிப் எர்துகான் மீண்டும் புதிதாய் 2018 இல் தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளார். 2003இல் பிரதமராக பதவிக்கு வந்த எர்துகான் 2014இல் ஜனாதிபதியாக பதவியேற்றார். அன்று முதல் இன்றுவரை அவர் துருக்கி மக்கள் மனம் கவர்ந்த தலைவராகவே காணப்படுகிறார்.
மேற்கத்திய ஊடகங்கள் இம்முறை எர்துகான் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகுவார் என்றும் அவர் கேட்டு வாங்கும் தோல்வி இதுதான் என்றெல்லாம் கொக்கரித்தன. ஆனால் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 52 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று ரஜப் தையிப் அர்துகான் வெற்றி பெற்றுள்ளார்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்தான்பூல் நகரத் தலைவராக தேர்வானதிலிருந்து இன்று வரை அர்துகான் தன்னை ஒரு போதும் மக்கள் தலைவனாக கருதியது கிடையாது. மக்கள் சேவகனாகவே தன்னை எண்ணி கடைமையாற்றி வருவதாக அர்துகான் வெற்றிவாகை சூடிய தருணத்தில் கூறியுள்ளார்.
மேலும் எதிர்க் கட்சியினரை விழித்துப் பேசும் போது ‘தேசத்தை கட்டியெழுப்புவதில் பகைமைகளை மறந்து நாட்டின் எழுச்சிக்காக சேவையை தொடர்வதே இனி நமது கடமை’ என வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு துருக்கியில் சர்ச்சைகளுக்கு இடையில் கருத்து கணிப்பு ஒன்றின் மூலம் நடந்த புதிய அரசியல் சீர்திருத்த நடைமுறையின்படி பிரதமர் அலுவலகம் என ஒன்று இருக்காது. நாட்டை வழிநடத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாற்றப்படும். நாட்டின் ஜனாதிபதியே இனி நாட்டின் தலைவராகவும் அரசின் தலைவராகவும் இருப்பார். அவருடைய பதவிக்காலம் 2030 வரை தொடரும்.
ஜனாதிபதியாக இருப்பவரே அமைச்சர்களை, நீதிபதிகளை, அதிகாரிகளை நியமிப்பார். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை தலைவர்களையும் ஜனாதிபதியே நியமிப்பார். அவ்வாறே ராணுவ நீதிமன்றங்கள் ஒழிக்கப்பட்டு அதிகாரங்கள் ஜனாதிபதியடம் வழங்கப்படும். இத்தகைய புதிய அரிசயல் சீர்த்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி புவியரசியலில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனாலேயே எதிரிகள் மீடியா உலகத்தில் அர்துகானின் தோல்விக்கான பிம்பத்தை வளர்த்தார்கள்.
அரபுலகம் அப்பாவிகளான இஸ்லாமியவாதிகளையும் அழைப்பாளர்களையும், அநீதிக்கு குரல் கொடுக்கும் பெருந்தகைகளையம் சிறையில் தள்ளி வதைத்து வந்த வேளையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நல்லிரவில் துருக்கியின் மக்கள் எர்துகானை சதிப் புரட்சியில் கவிழ்த்து விட்டு நினைத்ததை நடத்தி முடிக்கலாம் என இஸ்லாத்தின் எதிரிகள் கனவு கண்டனர்.

மக்களின் பிரார்த்தனை காரணமாக அல்லாஹ்வின் உதவியால் ஒரே இரவில் சதிப்புரட்சி தோல்வி கண்டது. அர்துகான் இறையுதவியால் பெரும் நெருக்கடியிலிருந்து தப்பிப்பிழைத்தார்.

Write on வெள்ளிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2018

1. பெருங்காயத்தை சட்டியில் போட்டு பொரித்து பஸ்பமாக்கி அதில் ஒரு கிராம் எடுத்து இளநீருடன் சேர்த்து குடித்தால் நீர் நன்கு பிரியும்.
2. திருநீற்று பச்சிலை சாறு, செம்பருத்திப் பூ சாறு, தேன் சேர்த்து சாப்பிட்டால் நெஞ்சு வலி குணமாகும்.
3. மருதாணி இலை, சிறிது மிளகு சேர்த்து எழுமிச்சை பழசார் விட்டு அரைத்து வெண் தேமல் உள்ள இடத்தில் பூசி அரப்பு தேய்த்து வந்தால் குணமாகும்.
4. அம்மான் பச்சரிசி இலை, வசம்பு, இந்துப்பு சேர்த்து அரைத்து உடலில் பூசினால் வண்டுக்கடி, காணா கடி, தடிப்பு, சொறி சிரங்கு மாறிவிடும்.
5. வெங்காய சாறு150 மல்லி, பனங்கற்கண்டு 30 கிராம் சேர்த்து குடித்தால் நீர் கடுப்பு குணமாகும்.
6. அடுப்பில் பாலை வைத்து காய்ச்சும் போது, கழுவிய துத்தி வேர்களை கொண்டு கிண்டிக் கொண்டே வந்தால் பால் அனிப்பாக மாறிவிடும்.
7. அடிவேர் பாகத்தை வெட்டி, அதில் கொஞ்சம் நல்லெண்ணெய், சர்க்கரை, நவச்சாரம் மூன்றையும் சேர்த்து வெட்டிய இடத்தில் வைத்து துணி சுற்றி வைத்தால் நான்கு நாட்களில்வீட்டு சுவர்களில் முளைக்கும் மரங்கள் பட்டுவிடும்.
8. சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஏலக்காய் சம அளவு எடுத்து இள வறுப்பாய் வறுத்து இடித்து சலித்து, இதற்கு சம அளவு அச்சு வெல்லம் சேர்த்து இடித்து பிசைந்து ஒரு டீ ஸ்பூன் அளவு சாப்பிட்டால் வயிறு தொந்திரவு மாறி பசி எடுக்கும்.
9. நவச்சாரத்தையும், சர்க்கரையையும் கரைத்து தெளித்தால் வீடுகளில் கரையான் அண்டாது.
10. திருகுகள்ளி பாலும், கற்பூரமும் சேர்த்து அரைத்து துணியில் தடவி காய வைத்து திரியாக திரித்து தண்ணீர் ஊற்றிவிளக்கு எரிக்கலாம்.
11. உங்கள் வீட்டு பழ மரங்களில் பிரண்டை செடியை போட்டு வந்தால் அணில் எலி கிட்ட வராது.
12. அவுரி இலைச்சாறும், எருக்கன் இலை பாலும் சேர்த்து தடவினால் தேள்கடி 10 நிமிடத்தில் குணமாகும்.
13. ஒரு காய்ந்த வரட்டியில் வெண்ணெய் தடவி தீ இட்டு வரும் புகையை காதுக்குள் பிடிக்க காது புளு வெளியேறி விடும்.
14. காட்டு சீரகத்தை வாங்கி தூள் செய்து அத்துடன் வலுமிச்சை சார் விட்டு பிசைந்து தலைக்கு தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளித்து வந்தால் தலை பேன் எல்லாம் ஒழிந்துவிடும்.
15. வெள்ளெருக்கன் பூ அதழ் ஒரு பங்கு, மிளகு ½ அரை பங்கு, கிராம்பு ¼ பங்கு, வெற்றிலை 1/8 பங்கு சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரை செய்து உலர்த்தி காலை - மாலை 2 மாத்திரை வீதம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும்.
16. நொச்சிப்பூ, நந்தியா வட்டப்பூ. குங்குமப்பூ நற்சீரகம் இந்நான்கையும் இடித்து துணியில் வைத்து பிழிந்து கண்களில் 2 சொட்டு வீதம் விட்டு வந்தால் கண்களில் பூ விழுதல் குணமாகும்.
17. கற்பூரவல்லி கசாயத்தில் ஏலக்காய் இரண்டு, கிராம்பு ஒன்றை இடித்து சேர்த்து காய்ச்சி தேன் சேர்த்து குடித்து வந்தால் மார்பு சளி குணமாகும்.
18. சீரகம் ஒன்று டீஸ்பூன் வெந்தாணம் ½ பொடியாக்கி மோருடன் சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும்.
19. முசுமுசுக்கை, தூதுவளை இலை, பூ, சிறுதும்பை, மிளகு சம அளவு எடுத்து சூரணம் செய்து காலை - மாலை தேனுடன் சாப்பிட ஜலதோஷம் தும்மல், இருமல், குணமாகும்.
மருத்துவர் : கே.பி.பால்ராஜ்
தொடர்புக்கு : 94 87 34 87 03
பயிற்சி : 15.10.2018
இடம் : ராஜா ஹோட்டல், திருச்சி

Write on வியாழக்கிழமை, 26 ஜூலை 2018
Write on வியாழக்கிழமை, 26 ஜூலை 2018

சமூக மாற்றம் என்பது சாதாரனது அல்ல. அது தானாக நிகழும் நிகழ்வும் அல்ல. கடந்த 30ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியே மனிதனின் வளர்ச்சி, வசதி வாய்ப்பைப் பெருக்குவதே வாழ்வின் இலக்கு என்ற வெறியோடு ஓடத்துவங்கிய மனிதன் இன்று தனது அடிப்படைத் தேவைகளுகாக 24 மணி நேரம் உழைத்தாலும் பூர்த்தி செய்ய இயலாமல் தவிக்கின்றான்.

உணவு, உடை, இருப்பிடம்,மருத்துவம் போன்ற அடிப்படை ஆதாரத் தேவைகளை இன்று ஒரு நடுத்தர குடும்பம் பூர்த்தி செய்வதற்குள் குடும்பத்தலைவனின் விழி பிதுங்குகிறது. இந்தச் சூழலில் அவன் சார்ந்திருக்கும் சமூக மக்களின் இன்னல் தீர்க்கும் சமுதாயப் பணியிலும் அவன் ஈடுபட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவனை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்குகிறது.
மக்களில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களுக்கு மட்டுமே தன்னைச் சுற்றி தனது சமுதாயத்தைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை நுணுக்கமாக அறியக்கூடிய அறிவை வழங்குகின்றான். அதில் ஒரு சிலருக்கு மட்டுமே தனது சமூகத்திற்கான பெருகிவரும் ஆபத்துக்களைக் கண்டறியும் ஆற்றலைத் அல்லாஹ் தருகிறான்.
ஆபத்துக்களையும் சிக்கலையும் அறிந்து கொள்ளும் பல அறிவு ஜீவிகள் சிலர் அந்த ஆபத்துக்களை மட்டுமே திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருப்பதைக் காணலாம். அந்த மிகச் சிலரில் ஓரிருவருக்கு மட்டுமே தீர்வை எடுத்துக் கொண்டு களப்பணியாற்றும் செயல்திறன் வழங்கப்படுகிறது.
தமிழக முஸ்லிம்களின் சிக்கலையும் எதிர்கால ஆபத்துக்களையும் வரலாற்று நிகழ்வின் அடிப்படையில் ஆராய்ந்து அவற்றிற்கான நீடித்த நிலையான தீர்வையும் கண்டறிந்து அந்த தீர்விற்கு செயல்வடிவம் கொடுத்திட தொலைநோக்குத் திட்டத்துடன் களப்பணியாற்றும் ஆற்றலை சமூகநீதி அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தோடு இணைந்து பணியாற்றும் தோழர்கள் வளர்த்துக் கொண்டு வருகின்றனர்
தமிழக முஸ்லிம் சமூகத்தின் இன்றைய அனைத்து பின்னடைவுகளுக்கும் காரணம் தற்போது நடைமுறையில் உள்ள குழப்பமான குறைபாடு நிறைந்த கல்வி அமைப்பு தான். மனித வளர்ச்சியின் அடிப்படை ஆதாரமாக விளங்கும் கல்வி திட்டத்தில் குழப்பம் நிறைந்திருந்தால் மனித சமூகமே குழப்பதில் சிக்கிக் கொள்ளும் அது தான் இப்போது நடக்கிறது.
இஸ்லாத்தில் ஆகுமாக்கப்பட்ட ஹலாலான கல்விப் பாதையிலிருந்து தமிழக முஸ்லிம் சமூகம் கடந்த 65ஆண்டுகளாக பாதை மாறி பயணித்ததின் காரணமாக அதன் எதிர் விளைவுகள் சமூகத்தில் மிக கோரமாக காட்சியளிக்கிறது.
அந்த விளைவுகளின் ஆபத்துகளை நுட்பமாக அறிந்து கொள்ளும் பக்குவத்தையும் சமூகம் இழந்து வருகிறது.
மனித வாழ்வு இரயில் பயணத்தைப் போல சொற்ப கால அவகாசத்தைக் கொண்டது. மரணமும் அதனைத் தொடர்ந்த மறுமையும் தான் வாழ்வின் எதார்த்தம் என்ற உண்மை உள்ளடக்கிய வாழ்க்கைக் கலையை இஸ்லாம் தனது கல்வியின் மையக் கருவாக முன்வைக்கிறது. இதை ஏற்று வாழும் முஸ்லிம்களுக்கு இஸ்லாமியக் கல்வியின் இந்த மையக் கருத்தை உங்கள் பிள்ளைகளின் உள்ளங்களில் தங்கு தடையின்றி முறைப்படி பதிய வையுங்கள் என்று கட்டளையிடுகிறது.

பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மையக் கருத்தின் அடிப்படையில் 23 ஆண்டுகளில் ஒரு சமூகத்தைக் கட்டமைத்துக் காட்டினார்கள். உலகம் உள்ள வரை அது தொடர ஒவ்வொரு காலத்திலும் உருவாகும் இளம் தலைமுறைக்கு இஸ்லாமியக் கல்வியை முறையாக பயிற்றுவிக்கச் சொன்னார்கள். வரலாறு முழுக்க வாழ்ந்த முஸ்லிம் சமூகம் தனது பிள்ளைகளை முறைப்படுத்தப்பட்ட இந்த இஸ்லாமிய கல்வி திட்டத்தை பயிற்றுவித்து உருவாக்கியது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய சூழலைக் கவனத்தில் கொண்டு தமிழகத்தில் தற்போது இயங்கும் அரபு மதரஸாக்கள் இஸ்லாமிய உலகின் அரபு கலாசாலைகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்பட வேண்டும். மார்க்கக் கல்வியோடு அரசின் பள்ளி இறுதித்தேர்வும் பட்டப்படிப்பும் இணைக்கப்பட்ட உயர்தரமான மதரஸாக்கள் புதிதாக தமிழகம் முழுவதும் உருவாக்கப்பட வேண்டும்.
இஸ்லாமிய பள்ளிக் கூடங்கள் தமிழகம் முழுவதும் பெருக வேண்டும். அவற்றில் பணியாற்றுவதற்கு நிர்வகிப்பதற்கு முஸ்லிம் பெண்கள் கல்வியாளர்களாக கல்வி நிறுவனங்களை நடத்தும் திறன் பெற்றவர்களாக உருவாக்கப்பட வேண்டும். மார்க்கக் கல்வியும் இன்றைய உயர்கல்வியும் இணைக்கப்பட்ட மகளிர் கல்லூரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்தது 15 வது உருவாக்கப்பட வேண்டும்.
இந்தச் சமூக முன்னேற்ற செயல் திட்டங்கள் கடந்த 17 ஆண்டுகளாக சமூகநீதி அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் தமிழக முஸ்லிம் சமூகத்தில் கருத்துக்களாக வைக்கப்பட்டு அவற்றிற்கு செயல் வடிவம் கொடுக்கும் விதமாக இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் மகளிர் கல்லூரிகள் புதிய மதரஸாக்கள் துவங்குவதற்கான வேலைகள் மிக மிக வேகமாக அதே நேரத்தில் நிதானமாக பொறுப்புணர்வோடு மூத்த உலமாக்கள் மற்றும் கல்வியாளர்களின் ஆலோசனைப்படி நடைபெற்று வருகின்றன.
ஜகாத் தொகையையயும் சதகாத் தொகையையும் சமூக மக்களிடமிருந்து ஒருசேர பெறுவதற்கு தகுதி வாய்ந்த சமூகநீதிஅறக்கட்டளையின் இந்த மறுமலர்ச்சிப் பணிகளை புனிதமான இந்த ரமளான் மாதத்தில் உள்ளத்தாலும் பிரார்த்தனையாலும் உங்களுடைய பொருளாதாரத்தாலும் நிரம்பச் செய்திடுவீர்!
- சமூகநீதி அறக்கட்டளை..

Samooga Neethi Arakattalai, A/c. No. 97.53.11700
Dhanalakshmi Bank, Mannady Branch, Chennai-1.

Write on வியாழக்கிழமை, 26 ஜூலை 2018

SUCCESS THROUGH SALAAH
இக்கால இளைய சமுதாயத்தை மனதில் கொண்டு அவர்களை, அனுதினமும் ஐந்து வேளை தொழுகின்ற, தொழுகையாளிகளாக ஆக்கிடவும், மேலும் நம்மிலே தொழுபவர்கள் தங்களின் தொழுகையை உயிரோட்டத்துடன் தொழுதிடவும் - ஒரு புதிய வழிமுறையைக் கையாண்டு 'நீடூர் S.A.மன்சூர்அலி' அவர்களால் பல ஊர்களில் "தொழுகை கற்றுத் தரும் வாழ்க்கையில் வெற்றி (SUCCESS THROUGH SALAAH)" என்ற தலைப்பில் பல முறை பயிலரங்கங்கள் நடத்தப்பட்டன.
அதில் கலந்து கொண்ட மக்கள், பயனடைந்ததைக் கருத்தில் கொண்டு, இது தமிழ் பேசும் அனைத்து முஸ்லிம்களிடமும் போய்க்சேரவேண்டும் என்ற நோக்கத்துடன், அங்கு கூறப்படும் கருத்துக்களைத் தழுவி, அதை எழுத்து வடிவில் கொண்டுவருவதே என் முயற்சி. (எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு உதவி புரிவானாக!)
முன்னுரை :
தொழுகையின் முக்கியத்துவம்: தொழுகையை நிலைநாட்டுமாறு சுமார் 80 இடங்களில் அல்லாஹ் குர்ஆனில் கட்டளையிட்டுள்ளான். நபி (ஸல்) அவர்கள் உயிர் பிரியும் கடைசி வேளையில் கூட தொழுகையை வலியுறுத்தினார்கள்.
தொழுகை மார்க்கத்தின் தூண் - உமர் (ரலி) தொழுகை சுவர்க்கத்தின் திறவுகோல் - ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப்படும் போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராக அமையவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும்.
- அபூஹுரைரா (ரலி), ஸுனன் அபூதாவுத்
இது போன்ற தொழுகையை வலியுறுத்தும் பிற நபிமொழிகளும் நாம் நன்கு அறிந்த ஒன்றே. மேலும் பல சொற்பொழிவுகள், புத்தகங்கள், காட்சிகள் மூலமாகவும் தொழுகைக்கு எந்த அளவு இஸ்லாத்தில் முக்கியத்துவமும் , சிறப்பும் இருக்கின்றது என்றும் அது ஐந்து வேளை கடமையாக்கப்பட்டுள்ளது என்பதும் எல்லா முஸ்லிம்களும் அறிந்த ஒன்றே!
ஆனால் இன்று உலகளவில் ஐந்து வேளை தொழுகையை தவறாது தொழுபவர்கள், நமக்குத் தெரிந்தவகையில் 10% லிருந்து 20% (சதவிகிதம்) மட்டுமே. பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகையின் போதும் ரமளான் நேரத் தொழுகையின் போதும் நிரம்பி வழியும் கூட்டம், கடமையான தொழுகைகளின் போது காணப்படுவதில்லை, குறிப்பாக ஃபஜ்ர் நேரத்தின் போது ஒரு வரிசை கூட முழுமை அடைவதில்லை.
வாழ்க்கையில் கஷ்டம் ஏற்படும் போது மட்டுமே தொழுகையாளிகளாக இருப்பவர்களும் உண்டு. இளைஞர்களை விட முதியோர்களே அதிகம் தொழுகையாளிகளாக உள்ளனர். பள்ளிக் கூடத்திற்காக தமது பிள்ளைகளை எழுப்பும் பெற்றோர்கள், தொழுவதற்காக எழுப்புவதில்லை.

இது ஒருபுறம் இருக்க, தொழுகைக்காக மக்களை அழைக்கும் பணியில் பல மார்க்க அறிஞர்கள், இன்னும் பிற சமூக ஆர்வலர்கள் பலவழிமுறைகளைக் கொண்டு மக்களிடம் பிரச்சாரம் செய்து கொண்டுதான் உள்ளனர் ஆனால் மாற்றம்???

தொழுகைக்கு அழைப்பவர்களைக் கண்டால், புதிய தலைமுறையினர் தப்பித்தால் போதும் என்று ஏன் ஓடி ஒளிந்துகொள்கிறார்கள்? பிரச்சனை அழைக்கப்படும் முறையில் இருக்கிறதா? அழைக்கப்படுபவர்களிடத்தில் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய நாம் மூன்று காரணங்களை எடுத்துக்கொள்வோம்
ஒன்று : நமது நம்பிக்கையில் உறுதியின்மை.
நம்மில் பலருக்கு நமது நம்பிக்கைகள் குறித்தும், நமது வழிபாடுகள் குறித்தும், நமது மார்க்கச் சட்டங்கள் குறித்தும் பல சந்தேகங்கள் இருக்கின்றன. உறுதியற்ற நம்பிக்கை, தொழுகைக்கு நம்மைத் தூண்டுவதில்லை!
இரண்டு : தொழுகையாளிகளின் முன்னுக்குப்பின் முரணான செயல்பாடுகள்.
தொழுபவர்கள் முன்மாதிரி முஸ்லிம்களாக விளங்கிடவில்லை. அவர்களில் பலர் வேடதாரிகளாக விளங்குகிறார்கள். (தொழாதவர்களில் பலர் நல்லவர்களாக விளங்குவதும் நிதர்சனமான உண்மையே!). தொழுகையாளியாகிய தந்தை கருணையோடு நடப்பதில்லை, பொய் கூறாமல் இருப்பதில்லை. உண்மையைச் சொல்லப்போனால் தொழுகை நம்மிடையே ஒரு வெற்றுச் சடங்காகப் போய்விட்டிருக்கின்றது! அது நமக்குள் எந்த ஒரு நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்திடவில்லை! தொழுகையாளிகளில் பலர் மக்களின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இது ஒரு மவுனமான வெறுப்பு!
மூன்று : புதிய தலைமுறையினரிடம் கலந்துரையாடுவது எப்படி என்பதை இன்னும் சரிவரக் கற்றுக் கொள்ளாமை.
அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைப்பதுபோல, புளித்துப்போன பேச்சாகப் போய்விட்டது நமது அழைப்பாளர்களின் பேச்சு. மார்க்கச் சொற்பொழிவாளர்களுக்கும் இந்த 21ஆம் நூற்றாண்டு இளைஞர்களுக்கும் மத்தியில் அறிவு சார்ந்த இடைவெளி (intellectual gap) அதிகமாகிவிட்டது.
இந்த நவீனகாலத்தில், கல்வி உட்பட எல்லாத்துறைகளிலும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நமது சமூகத்தை சீர்திருத்திடவும் மேம்படுத்திடவும் புதிய வழிமுறைகள் தேவைப்படும் காலம் இது!
ஆனால் இன்றைய முஸ்லிம் இளைஞர்களிடம் உரையாடுவது எப்படி என்று இன்னும் நாம் கற்றுக்கொள்ளவில்லை. நமது சொல்லை கேட்பவரின் மனநிலையைக் கூடப் புரிந்து கொள்ளாமல், அவர்களின் சந்தேகங்களைப் புரிந்து கொள்ளாமல், பேசுவது என் கடமை என்று பேசுவதால் மட்டும் மாற்றம் வந்துவிடாது.
நாம் மக்களை அழைக்கும் முறையிலேயே மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்றால் அது மிகையில்லை!
மாற்றத்தை நோக்கி....