செலவில்லா சித்த மருத்துவம்

சலவலல சதத மரததவம

முசுமுசுக்கை :
இதற்கு இரு குரங்கு என்ற பெயரும் உண்டு. இருமல், சளி, மற்றும் சுவாச காச நோய்களுக்கு இலைச் சாற்றுடன் கோரோசனைச் சேர்த்துக் கொடுக்க விரைவில் குணம் கிடைக்கும்.
ஆடு தின்னா பாளை :
   இது தரிசு நிலங்களில் காணப்படும். மிகுந்த கசப்புத்தன்மை உடையது. மலட்டு வயிற்று வலி உள்ளவர்கள் இந்த இலையை அரைத்து கோலி அளவு சாப்பிட குணமாகும். இதன் விதையை அரைத்து பிள்ளைப் பெறப்போகிறவர்களுக்குக் கொடுக்க சுகப் பிரசவம் ஆகும். விஷம் தீண்டியவர்களுக்கு இதன் சமூலத்தை அரைத்துக் கொடுக்க விஷம் இறங்கும். ஊரல், சொறி உள்ளவர்கள் இந்த இலையுடன் கொஞ்சம் மஞ்சள், வசம்பு சேர்த்து அரைத்துத் தேய்த்துக் குளிக்க குணமாகும்.
யானை நெறிஞ்சில் அல்லது யானை வணங்கி :
    இது ரோட்டோரங்களில் காணப்படும். இதன் இலைகளை 1டம்ளர் தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து இலைகளை எடுத்து விட்டு குழு குழு என்றிருக்கும் தண்ணீரைக் குடித்தால் நீர்கடுப்பு, வெட்டைசூடு தீரும்.
எருக்கன் இலை:
   இதன் இலைச் சாற்றுடன் முட்டையின் வெண்கரு சேர்த்துக் குழப்பி குதிங்காலில் பூசி நெருப்பு, அனல் காட்ட குதிங்கால் வலி தீரும். இதன் இலைச் சாற்றையும், நீலி (அவுரி) இலைச் சாற்றையும் சேர்த்து தேள் கொட்டின இடத்தில் தேய்க்க தேள் விஷம் தீரும்.
கருந்துளசி :
    இலையை வதக்கி சாறு எடுத்து கோரோசனையுடன் சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மார்புச் சளி, இழுப்பு, இளைப்பு, கபம் எல்லாம் தீர்ந்துவிடும். கண்களில் கல், மண், கள்ளிப்பால் ஏதாவது விழுந்து விட்டால் உடன் துளசி விதை 10 – ஐ கண்களில் போட மேலே உள்ள எல்லாம் வெளியே வந்துவிடும்.
கற்பூர வல்லி:
   அனேகர் இதை வீடுகளில் வளர்ப்பர். இதன் இலைச் சாற்றுடன் அரிசி எடை கஸ்தூரி சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க மந்தம், அஜீரணம், தொண்டைக் கட்டு, சளி, தலை வலி, ஜலதோஷம் குணமாகும். இதன் இலையை நெற்றியில் தேய்க்க தலைவலி தீரும்.
கண்டங்கத்திரி :
   இது தரிசு நிலங்களில் காணப்படும். செடி முழுவதும் முள் முள்ளாக இருக்கும். காய் வரிவரியாக பச்சை வெள்ளை நிறத்தில் இருக்கும். பழம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் இலைச் சாற்றை ½ சங்கு அளவு குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் சளித் தொல்லை உண்டாகாது. பெரியவர்களும் சாப்பிடலாம். பழத்தை நெருப்பில் சுட்டு புகையை வாயில் அடக்க பல் பூச்சிகள் இறக்கும்.
கீழா நெல்லி :
   இது வீட்டு ஓரங்களிலும், தோட்டங்களிலும் காணப்படும். இதன் இலைகளை புரட்டிப் பார்த்தால் வரிசையாக காய்கள் இருக்கும். இவ்வாறு இலையின் கீழ் காய் இருப்பதால் இதற்கு கீழ்காய் நெல்லி என்ற பெயர் வந்தது. கீழ்காய் நெல்லியும், மஞ்சள் கரிசலையும் சமம் எடுத்து அரைத்து கோலி அளவு பசும்பாலுடன் காலை, மாலை கொடுத்துவர மஞ்சள் காமாலை என்னும் நோய் குணமாகும். இதை சமூலமாக அரைத்து பசும்பாலுடன் கொடுக்க பிள்ளை பெற்றவர்களுக்கு தாய்ப்பால் ஊறும். இதன் வேரை நல்லெண்ணெய்யில் அரைத்துக் காய்ச்சி தேய்த்து வர ஒரு தலை மண்டை இடி குணமாகும்.
குப்பை மேனி :
   இதற்கு பூனை வணங்கி என்ற பெயரும் உண்டு. இதன் இலையுடன் உப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்துக் குளிக்க சொறி சிரங்கு குணமாகும். இலைச் சாற்றை காதில் விட்டால் காதில் உள்ள ஈ வெளியேறி விடும். இலைச் சாற்றில் ½ சங்கு அளவு குழந்தைகளுக்குக் கொடுக்க (சிறிது உப்பு சேர்த்து) சளியெல்லாம் வெளியேறிவிடும். இதன் இலைச் சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி தலை முழுகி வர தலை குத்து குணமாகும்.
மருத்துவர் : கே.பி.பால்ராஜ்
9487348703