மனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.

    மரமானது மனிதன் பிறந்தது முதல் மரணம் வரையிலும் அவனுடன் நட்போடு உறவாடுகிறது. நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான நீரும், மூச்சுக்காற்றும் ஆக்ஸிஜன் (Oxyzen) உயிர் காற்றுகூட

மரங்கள் வழியாகவே பெற வேண்டியதுள்ளது. பூமி வெப்பமாகி வரும் இந்த காலகட்டத்தில் பச்சைக் குடைப் பிடித்து பூமியைப் பாதுகாக்க வேண்டுமானால் மரங்களை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.
உலக மயமாக்கலின் விளைவாக நமது முன்னோர்கள் வளர்த்த பலவகை மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. மரங்களின் மூலம் நமக்கு நேரடியாகக் கிடைக்கும் பலன்களைவிட மறைமுகமாகக் கிடைக்கும் பலன்கள் அதிகம்.
கிராமங்கள் மற்றும் நகர்ப்புரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளைச் சுற்றி சில மரங்களை நட்டு வளர்த்தாலே தமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
அதில் சில மரங்கள்! சில பயன்கள்!
1.அகத்தி, முருங்கை மரங்கள் : கீரையாக, காயாக பயன்படுகிறது.
2. சவுண்டல், கிளரிசிடியா, கொடுக்காப்புளி, சவுண்டல் : கால்நடைத் தீவனமாக பயன்படுகிறது.
3. எலுமிச்சை, மா, பலா, வாழை, நெல்லி, சீதா, மாதுளை : பழமரங்களாக பயன்படுகிறது.
4.வேம்பு, கடுக்காய், நொச்சி, அகத்தி, புங்கம், இலுப்பை, நெல்லி, கற்றாழை, பூவரசு, சீயக்காய் : நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது.

இதன் அடிப்படையில் சென்ற மாதம் திருப்பூர் மதீனா பள்ளிவாசல் நிர்வாகமும், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து வனத்துறையின் மூலம் இலவச மரங்களை வாங்கி திருப்பூர் கோம்பைத் தோட்டம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சுமார் 250 மரங்கள்வரை நடப்பட்டது.
முஸ்லிம் சமூகம் மழை வேண்டி பிரார்த்தனை செய்வதோடு நின்று விடாமல் மழைக்கான முயற்சியாக மரங்கள் நடுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று பிப்ரவரி மாத சமூக நீதி முரசு இதழில் நம்மாழ்வாரும் நாமும் என்ற கட்டுரையின் மூலம் அறிவுறுத்தப்பட்டது. இந்தக் கட்டுரை மரம் நடுவதற்கு மேலும் எங்களை ஊக்கப்படுத்தியது.
எங்களது பள்ளிவாசல் இமாம் அவர்களும் ஜும்ஆ பிரசங்கத்தின் வழியாக குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மரம் நடுவதின் அவசியம் பற்றி எடுத்துக் கூறினார். அத்தோடு நில்லாமல் எங்களோடு சேர்ந்து மரம் நட்டார்கள்.
வறட்சியைத் தாங்கி வளரும் மரங்களான வேம்பு, புங்கன், பூவரசு, மலைவேம்பு, நாவல், வாதநாராயணன், வாகை மரம், இலுப்பை, நீர்மருது, முப்பிரண்டை, ஆகிய மரங்களை நட்டுள்ளோம். இவைகளை 6 அடி உயரமான கன்றுகளாக வாங்கி நட்டுள்ளோம். சுமார் 2 அடி ஆழம் குழி பறித்து மன்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு, அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டிரியா (சிறிது) ஆகியவை கலந்து மேல்மண்ணோடு சேர்த்து நட்டுள்ளோம். இன்ஷாஅல்லாஹ் இன்னும் சில நாட்களில் இந்தப் பகுதி குளிர்ச்சி தரும் சோலையாக மாறும்.
நாளை உலகம் அழிவதாக இருந்தாலும் இன்றைக்கு மரம் நடுவதை விட்டு விடாதே! என்ற பெருமானார் ஸல்… அவர்களின் பொன்மொழிக்கேற்ப முஸ்லிம் சமூகம் மரம் நடுவதில் மிகுந்த ஆர்வமும், அக்கரையும் செலுத்த வேண்டும்.
ஜெ.ரபீவுத்தீன் 9443204727
மாவட்டப் பொறுப்பாளர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம், திருப்பூர்.