பாடமாக வாழ்ந்த ரஜீந்தர் சச்சார் (1923 - ஏப்ரல் 20, 2018)

இந்திய இஸ்லாமியர்களுக்கான ஆளுமைகள் என்றாலே அது மதிப்பிற்குரிய மவுலானா அபுல் கலாம் ஆசாத்தும், தமிழகத்தில் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களும் தான். இவர்களைத் தாண்டி இஸ்லாமியர்கள் பெரும்பாலும் தங்களுக்கான ஆளுமைகளாகப் பார்ப்பது எல்லோருமே முஸ்லிம்கள் தான். முஸ்லிம்கள் அறிந்து கொள்ளப்பட வேண்டியவர், தங்களுடைய சந்ததிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டியவர் - நீதியரசர் ரஜீந்தர் சச்சார்.

இந்தியாவில் மிகப்பெரிய சிறுபான்மையான முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு முதலான சமூக நிலைகள் குறித்து ஆய்வு செய்ய மன்மோகன்சிங் அரசு ஒரு குழு அமைத்தபோது முன்னாள் டெல்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சச்சார் அவர்களைத்தான் நியமித்தது. முஸ்லிம்களுக்காக மட்டும் முதன் முதலாக நியமிக்கப்பட்ட முதல் ஆய்வுக்குழு அது. முஸ்லிம்கள் எந்த அளவிற்குப் பின்தங்கியுள்ளனர் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியது அந்த அறிக்கை.
முஸ்லிம்கள் மட்டுமின்றி மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படும் எல்லோரின் பக்கமும் நின்றவர் சச்சார்.
சச்சார் கமிட்டி அறிக்கை என்கிறப் பெயரில் 2006-இல் ரஜீந்தர் சச்சார் தலைமையில் வெளிவந்த ஆழமான, விரிவான அறிக்கை தான் இந்தியாவில் முஸ்லிம்களின் உண்மையான நிலையை பட்டவர்த்தனமாக அரசுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்திய அரசியல் கட்சிகள் சிறுபான்மையினர்களை முஸ்லிம்களை ஓட்டுக்காகப் பிடித்து தொங்கிக் கொண்டு இருக்கிறார்கள் எனச் சொன்ன எல்லோருக்கும் ஆதாரப் பூர்வமாக இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை ஒடுக்கப்பட்டவர்களின் நிலையை விடவும் (சில காரணிகளைத் தவிர) படுமோசமாக இருக்கிறது என்று தெள்ளத் தெளிவாக காட்டியது சச்சார் அறிக்கை.
சச்சார் அறிக்கையை சமர்பிக்கக் கூடாது, அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அன்று அடம் பிடித்து முதல் அமைச்சர்கள் கூட்டத்தில் இருந்து அன்றைக்கு வெளியேறியவர் இன்றைய இந்தியாவின் பிரதமர்.
முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கலாசார, மதம் சார்ந்த வேறுபாடுகளையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியது.
இந்தியாவின் மொத்த அரசு வேலைகளில் வெறும் 3.2% மட்டுமே இஸ்லாமியர்கள். இத்தனைக்கும் மொத்த மக்கள் தொகையில் ஐந்து அல்லது ஆறில் ஒருவர் இஸ்லாமியர். இஸ்லாமியர்களுக்கு காலம் காலமாக இழைக்கப்பட்ட வரலாற்று துரோகத்தினை தரவுகளோடும், ஆதாரங்களோடும், புள்ளிவிவரங்களோடும் இஸ்லாமிய சமூகத்திற்கே சுட்டிக் காட்டியவர் ரஜீந்தர் சச்சார்.
வாழ்ந்தால் எப்படி வாழ வேண்டும் என்பதை மேற்கோள்கள் காட்டாமல், உரைகள் நிகழ்த்தாமல், பிரசங்கங்கள் கொடுக்காமல் ரஜீந்தர் சச்சார் மாதிரியான மனிதர்கள் சொல்லாமலேயே சொல்லிக் கொடுத்து விட்டு போய் விடுகிறார்கள்.
தனது 94ம் வயதில் நீதியரசர் ரஜீந்தர் சச்சார் மறைந்தார்.