பாபர் மஸ்ஜித் - ராம ஜென்ம பூமி வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ளும் வகையில் முஸ்லிம்கள் ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும்

குடியரசு இந்தியாவில் வகுப்புக் கலவரங்கள் உயிரிழப்புகள் பொருளிழப்புகள் ஏற்படுவதற்கு பாபர் மஸ்ஜித் ராம ஜென்ம பூமி விவகாரம் மிக முக்கிய காரணியாக அமைந்து விட்டது.
இந்த விவகாரத்தை 1947 க்கு முன்பு கொஞ்சம் அடக்கியும் குடியரசு இந்தியாவில் ஒருவித இறுமாப்புடனும் சங் பரிவாரங்கள் அடாவடியாக கையாண்டு வருகின்றன.
காரணம் 1947 இல் இந்திய முஸ்லிம் ஜனத்தொகை பிளவுபட்டு இரண்டு மூன்றாகி தங்களது சமூக வலிமையை இழந்தது தான்.
பிளவுபட்டு வலிமை குன்றிய சமூகத்தை எப்படி வேண்டுமானாலும் அடக்கலாம் என்ற இறுமாப்பின் உச்சம் தான் 1992 டிசம்பர் 6 பள்ளிவாசல் இடிப்பு என்ற மாபாதக குற்றச்செயல்.

இன்று வரை அந்த குற்றத்தை பகிரங்கமாக ஊரறிய உலகமறிய செய்த குற்றவாளிகள் யாரும் இந்திய நாட்டின் நீதித்துறையால் தண்டிக்கப்படவில்லை. மக்களின் மத உணர்ச்சியைத் தூண்டி வெறுப்பை விதைத்து கலவரங்கள் ஏற்படுத்தி ஆட்சியை பிடிப்பதற்கும் மதச்சார்பற்ற இந்தியாவை காவி மயமாக்குவதற்கும் பாபர் மஸ்ஜித் - ராம ஜென்ம பூமி விவகாரத்தை ஒரு கருவியாக சங்கப் பரிவாரங்கள் பயன்படுத்துகின்றனர்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் இதை மிக வீரியமாக பயன்படுத்த இப்போதே துவங்கி விட்டனர். இனி எந்த நீதிமன்றத் தீர்ப்பும் இவர்களை கட்டுப்படுத்தாது. கட்டுப்படமாட்டார்கள். இந்த உண்மையை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மக்கள் எண்ணிக்கையில் சமூக அதிகாரத்தில் முஸ்லிம்கள் சமவலிமை பெற்றிருந்தால் மட்டுமே தீர்ப்பும் நீதியாக வரும் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சமூக வாழ்வில் மக்களாட்சி மரபில் ஒரு இனம் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதும் ஒரு பாதுகாப்பு. அதுவும் ஒரு வலிமையான ஆயுதமாக கருதப்படும்.
எண்ணிக்கையில் சிறுபான்மை சமூகம் கூனி குறுகி ஆதரவான வார்த்தைகளுக்கும் நீதிக்கும் ஏங்க வேண்டிய நிலை ஏற்படும். சிறிய அளவு கருணை காட்டுபவர்களைக்கூட தம்மை காப்பாற்ற வந்த கதாநாயகனாக கொண்டாடும் நிலை ஏற்படும். இப்போது இந்த மனநிலை இந்தியா இலங்கை பர்மா உள்ளிட்ட நாடுகளில் முஸ்லிம்களின் இயல்பாக மாறியுள்ளதை காணலாம்.
பாபர் மஸ்ஜித் - ராம ஜென்மபூமி தகராறு காரணமாக குடியரசு இந்தியாவில் நடைபெற்றுள்ள வகுப்புக் கலவரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளனர். கோடிக்கணக்கில் பொருளிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சொந்த நாட்டில் பல ஆயிரம் முஸ்லிம்கள் அகதிகளாக மாற்றப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு பல பத்தாண்டுகளாக சிறைகளில் தவிக்கின்றனர்.
இத்தகைய உணர்ச்சிக் கொந்தளிப்பு மிக்கதும் இந்தியாவின் எதிர்காலத்தையே தீர்மானிப்பதுமான இந்த விவகாரத்திற்கு உச்ச நீதிமன்றம் அல்ல! சர்வதேச நீதிமன்றம் கூட சரியான தீர்வை இன்றைய சட்டத்தின் அடிப்படையில் தந்துவிட இயலாது என்ற கசப்பான உண்மையை நாம் உணர வேண்டும். அப்படியே தந்தாலும் ஒரு பிரிவினர் அதை நிச்சயம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
அப்படியென்றால் இந்த விவகாரத்திற்கு எது தீர்வு......?
எதிர்கால சந்ததியின் நலனை கருத்தில் கொண்டு நீதிமன்றத்தை தாண்டிய தீர்விற்கான வழிமுறைகளை முஸ்லிம்களின் சமூக மார்க்கத் தலைமை சிந்திக்க வேண்டும். விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் ஊடகங்களில் துணிச்சலாக எழுத வேண்டும். ஜும்மா மேடைகளில் பேச வேண்டும்.
பாபர் மஸ்ஜித் - ராம ஜென்ம பூமி தொடர்பாக எந்த மாற்றுத் தீர்வை யார் சிந்தித்தாலும் அல்லது முன்வைத்தாலும் அதை அறிவுப்பூர்வமாக அணுகாமல் உணர்ச்சியோடும் இழப்புகள் ஏற்படுத்திய வடுக்களோடும் வேதனைகளோடும் அணுகுவது ஒரு நாளும் தீர்வை நோக்கி நகர்த்தாது. மக்களிடையே அமைதியை ஏற்படுத்தாது.
இழப்புகளையே பேசிக்கொண்டிருக்கும் பலரால் எந்த காலத்திலும் ஒரு தீர்வை முன்வைக்க இயலாது. யார் மீதும் நம்பிக்கை இல்லாமல் போவது என்ற நிலை ஒரு நாட்டையும் சமூகத்தையும் அழித்துவிடும்.
வட இந்திய முஸ்லிம்கள் இந்த விவகாரத்திற்கு ஒரு சமரச தீர்வை உருவாக்கும் யதார்த்த சூழலிலும் அமைதியான மன நிலையிலும் இல்லை. அத்தகைய சமூக அதிகாரத்திலும் அவர்கள் இல்லை.
வட இந்திய முஸ்லிம் சமூகத்திற்குள் வறுமையும் கல்லாமையும் கருத்துப் பிளவுகளும் சூழ்ந்து அவர்கள் வாழ்வை செல்லரித்து வருகிறது. அவர்களின் வாழ்நிலையில் வளர்ச்சியோ மாற்றங்களோ இல்லை. அதை ஏற்படுத்தும் தொலைநோக்குத் தலைமையும் இல்லை. வாழ்ந்து கெட்ட மக்களின் சமூக பொருளாதார நிலையிலேயே கடந்த 160 ஆண்டுகளாகத் தொடர்கின்றனர்.
மட்டுமல்ல வட இந்திய கிராமப்பகுதிகள் காவி குரோதம் சூழப்பட்டு முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழத் தகுதியற்றதாக மாறிவிட்டன. தங்களது கலாச்சார அடையாளங்கள் உயிருக்கு உலை வைப்பதாக இருக்கிறது என்று பகிரங்கமாக கூறும் அளவிற்கு முஸ்லிம்கள் சமூக ஒதுக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்
விந்திய மலைக்கு தெற்கே தென்னிந்தியாவில் தமிழகத்தில் திராவிட கட்சிகள் சமூகநீதி தலைவர்கள் அரும்பாடுபட்டு விதைத்த மத நல்லிணக்கம் என்ற விதை இன்று தமிழ்ச் சமூகத்தின் மனங்களில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. அதனால் தான் இன்று இங்கு ரத யாத்திரையை
மதச்சார்பற்ற அமைப்புகள் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் சேர்ந்து இவ்வளவு மூர்க்கமாக எதிர்க்க முடிந்தது. காவி தேசியத்தை எதிர்த்து நிற்கும் ஆற்றலை முஸ்லிம் உம்மத் இன்னும் கூட வளர்த்துக் கொள்ளவில்லை. வளரும் இளைஞர்கள் சிலருக்கு மேடைகளில் பொது வெளியில் வாய் சவடால் விடுவது எப்படி என்று மட்டும் சில அமைப்புகள் கற்றுக் கொடுத்துள்ளன. தமிழக முஸ்லிம்கள் இனியாவது நாட்டில் உம்மத்திற்கு ஏற்படும் இடர்பாடுகளை அறிவுப்பூர்வமாக தொலைநோக்குப் பார்வையோடு தீர்க்க திட்டங்கள் வகுத்து செயல்பட வேண்டும்.
அமைப்புகளின் பெயர்கள் வேறாக இருந்தாலும் உம்மத்தின் பாதுகாப்பில் கைகோர்த்து செயல்படும் தமிழக முஸ்லிம்களில் இரண்டு மகத்தான ஆளுமைகளான பேரா.ஜவாஹிருல்லாஹ் மௌலவி தெஹ்லான் பாக்கவி ஆகிய இருவரும் முன்வந்து பாபர் மஸ்ஜித் - ராம ஜென்ம பூமி விவகாரத்தில் முஸ்லிம் சமூகம் சார்பில் ஒரு தீர்வை வடிவமைக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும்.
முஸ்லிம்களோடும் ஏனைய சிறுபான்மை சமூகத்தோடும் இணக்கமாக பயணிக்கும் சைவ, வைணவ, சீக்கிய, கிருத்துவ மதகுருமார்கள், மதச்சார்பற்ற தலைவர்கள், மதச்சார்பற்ற
உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை கொண்ட ஒரு குழு ஒரு மாற்று தீர்வை வடிவமைப்பது உம்மத்திற்கும் நாட்டிற்கும் நாளைய சந்ததிக்கும் நல்லது என்று தோன்றுகிறது.

அந்த மாற்றுத் தீர்வை இந்திய நீதிமன்றங்கள், சட்டமன்றங்கள், நாடாளுமன்றம், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும்.
பாபர் மஸ்ஜித் - ராம ஜென்ம பூமி விவகாரத்தில் அநீதம் இழைக்கப்பட்ட முஸ்லிம்களும் அமைதியை விரும்பும் ஜனநாயக அமைப்புகளும் முன்னின்று உருவாக்கிய இந்தத் தீர்வு மூலம் உடன்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஏற்படாவிட்டாலும் அமைதியை வளர்ச்சியை விரும்பும் இந்திய மக்களிடம் இந்த முயற்சி ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அடாவடித்தனமாக திரியும் சங் பரிவார் அமைப்புகளுக்கு இந்திய மக்களே நெருக்கடி கொடுப்பார்கள். அது தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.