"ரமளான் என்பது என்ன...?"

மவ்லவீ SNR ஷவ்கத்அலி மஸ்லஹி, பேரா,DUIHAகல்லூரி,தாராபுரம்.
இது ரம்ஜான் மாசமுங்க... என்று அனைவராலும் அன்புடன் அழைக் கப்படும் ரமளான் நோன்பு உண்மையிலேயே புனிதம் மிக்கது; மனிதம்மிக்கது. பசி என்றால் என்ன என்பதை எம் எல்லோருக்கும் புரியவைப்பது; சுய உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் அடக்கிவைப்பது; பிறரது பட்டினியை அறிந்துகொள்ள வைப்பது; சுய கட்டுப்பாட்டுடன் நாம் வாழக்கற்றுக் கொள்வது; பசியுடன் வாழப்பழகுவது இரவில் விழித்து வணக்கம் புரிவது என பல்வேறு பாடத் திட்டங்களை படித்துத் தருவது தான் இப்புனித ரமளான் மாத நோன்பு ஆகும்.
ரமளான் என்ற அரபுச் சொல்லிற்கு எரிப்பது, கரிப்பது, சாம்பலாக்குவது என பொருள்கள் பலவுண்டு. ஆம் ! உண்மையிலேயே ரம்ஜான் நோன்பு நமது சிறுசிறு பாவங்களை எரித்துக் கரித்துச் சாம்பலாக்கி விடுகிறது என்பதுதான் நபிமொழிகள் நமக்குக் காட்டும் உண்மை. நோன்பு என்பது நம்மை சிரமப்படுத்துவதற்காக வந்த ஒன்றல்ல...! நாம் ஈருலகிலும் சிரமம் இல்லாமல் வாழுவதற்காக வல்லான் அல்லாஹ்வால் வார்க்கப்பட்ட ஒன்றுதான் இந்த ரமளான் நோன்பு. அதற்கு இப்போதிருந்தே தயாராக வேண்டும். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இரு மாதத்திற்கு முன்பிருந்தே தயாராகி விடுவார்கள் என்பதை அவர்களது அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜப என்ற பிரபலமான பிரார்த்தனை நமக்கு துல்லியமாய் எல்லா விபரங்களையும் சொல்லி விடுகிறது.

இருந்தும் நாம் நமது நோன்புக்காக கொஞ்சமாவது தயாராகியிருக்கிறோமா..? நம் வீட்டில் ஒரு நிகழ்வு என்றால் எப்படியெல்லாம் அதற்கு நாம் தயாராகிறோம்..? நோன்பு என்றால் பிறையைக்கூட பார்க்க நாம் முன்வருவதில்லையே..! புனித நோன்பு அவ்வளவு கீழானதாஎன்ன.? நோன்பு என்பது உலக மக்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய ஒன்றல்ல.! அது அந்த அல்லாஹ்வால் நம்மீது கடமையாக்கப்பட்ட ஒன்று. நோன்பைப்பற்றி இறைமறை வசனம் உரைக்கிறது
இப்படி : ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட் டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் : 2:183)
நோன்பு நமக்கு மட்டும் கடமையாக்கப்படவில்லை. நமக்கு முன் வாழ்ந்த சமூகத்தினர் மீதும் இந்நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது என்கிறது மேற்கண்ட வான்மறை வசனம். அதன்
இறுதியில் இந்நோன்பின் பலனையும் அவ்வசனம் வெகுஅழகாகவே எடுத்துக்காட்டுகிறது நீங்களும் இறையச்சம் உடையோராக ஆகலாம் என்று...! மனித வாழ்வு சிறக்க இறையச்சம், பயபக்தி, தக்வா மிகமுக்கியமான ஒன்று. அது இந்த நோன்பின் மூலமும் கிடைக்கப் பெறுகிறது என்றால் அதை நாம் ஏன் மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது...?
இறையச்சம் இல்லாமல் செய்யப்படும் எந்தவொரு அமலும் இறைவனிடம் ஏற்கப்படுவதில்லை என்பது நபியவர்களின் நன்மொழி. அம்மொழி பொய் மொழியல்ல பொய்யாமொழி. ஏன் நமக்கு வழிகாட்ட வந்த வான்மறை கூட "இறையச்சமுள்ளவர்களுக்குத்தான் நான் நேர்வழிகாட்டுவேன்"
என்று ஆரம்பத்திலேயே அடித்துச் சொல்கிறது. ஆக இறையச்சமற்ற எந்தவொன்றும் வீண்தான் என்று எளிதாக எவராலும் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த அற்புதமான இறைநிறை அச்சத்தை இந்த நோன்பு நமக்கு வாரிவாரி வழங்குகிறது என்றால் அதை நாம் ஏன் மிகச்சரிவர பயன்படுத்திக் கொள்ளக்கூடாது?
ஸவ்ம் என்ற அரபுச்சொல்லிற்கு தடுத்துக் கொள்ளுதல் என்பது அகராதிப் பொருள். அதாவது நம்மை நாமே குறிப்பட்ட சில மணிநேரம் அதாவது சூரிய உதயத்திற்கு முன்பு இருந்து, சூரிய மறைவுவரை சுமார் 12 முதல் 14 மணிநேரம் வரை உண்ணல், பருகல், உறவுகொள்ளல் போன்றவற்றிலிருந்து தடுத்துக் கொள்வதற்கு நோன்பு என்று பெயர்.
மற்றவர்களின் நோன்புக்கும் நமது நோன்புகும் நிறைய அல்ல மிகப் பெரும் வித்தியாசமே இருக்கிறது. நம் வாயில் ஊறும் உமிழ்நீரைக் கூட சேர்த்து வைத்து விழுங்கக் கூடாது என்பது நோன்பின் விதிகளில் ஒன்று. உணவுகளிலும், நீராகாரங்களிலும் கூட எவ்வித வேறுபாடும் இல்லை. அப்படி ஒரு கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அது மெய்யான கட்டுப்பாடாக ஆகும். இல்லையெனில் நாம் சும்மா பட்டினிகிடப்பதில் நமக்கும் நாற்கால் ஜீவன்களுக்கும் இடையே பெருத்த வித்தியாசம் இல்லாமலேயே போய்விடும்.
இறையச்சம் என்பது நீங்கள் நினைப்பதைப் போல் வெறுமனே அல்லாஹ்வை அஞ்சுவது மட்டுமல்ல! அவன் விதித்தவைகளை ஏற்று நடப்பதும், அவன் விலக்கியவைகளை விட்டு நடப்பதும் தான் தக்வா என்பது...!
அப்படி நடக்கும் போது தான் கட்டுப்பாடு என்பது நமக்குள் நன்றாக வேர்பிடிக்கும். ஒருவனுக்கு சுயகட்டுப்பாடு வந்து விட்டால் அவனைவிட பெரும் பாக்கியசாலி யார்..? அந்தக் கட்டுப்பாடு
வரவேண்டும் என்பதற்குத்தான் வருடம் தவறாமல் போராடிக் கொண்டிருக்கிறது இந்தப்புனித நோன்பு.
கூடவே நாமும் போராடிக் கொண்டிருக்கிறோம் எப்படியாவது "முத்தகீன் இறையச்சமுள்ளவன்" ஆக ஆகிவிட வேண்டும் என்று...! ரமளானில் ஷைத்தான் இரும்புச் சங்கிலிகளால் கட்டிப் போடப்பட்டாலும் அவன் நமக்கு பழக்கிக் கெ(கொ)டுத்து விட்டுச் சென்ற தீய பழக்க வழக்கங்களிலிருந்து அணுவளவும் நம்மால் நகரமுடியவில்லையே இது ஏன்..? என்று நீங்கள் உங்கள் மனதுக்குள் கேட்கும் ஓசையை ஓரளவு நாமும் ஒரு ஓரத்தில் புரியமுடிகிறது. விடை மிக எளிதானது தான். என்றைக்குமே தொட்டுவைப்பது மட்டும் தான் அந்த ஷைத்தானின் வேலை.

மீதியெல்லாமுமே நமது பழக்கவழக்கம் தான். இதிலிருந்து மீளுவதென்பது மிகக் கடினமானது தான் என்றாலும் அதையும் மாற்றிக்காட்டும் பேராற்றல் நம் நோன்புக்கு நிச்சயம் உண்டு. எனவே நோன்பு உங்களுக்கு தக்வாவைத் தரும் என குர்ஆன் கூறிக்காட்டுகிறது. இதனால் தான் நோன்பைக்குறித்து நோன்பு ஒரு கேடயம் என்றும், தடுப்பு சாதனம் என்றும் ஜுன்னத், விஜாஉ என்ற இருவேறு சொற்களால் நபி (ஸல்)அவர்கள் நவின்றுள்ளார்கள். முன்னது உடலையும், பின்னது உயிரையும் பாதுகாக்கக்கூடியது என்று நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.
அதாவது உடலின் ஆசைகளையும், உயிரின் ஆசைகளையும் நோன்பு நிச்சயம் தடுத்து நிறுத்தும் என்று பொருள். அதற்கு முதலில் நாம் நமது நோன்பை நோன்பாக கடைப்பிடிக்க வேண்டும். சும்மா பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் அல்ல நோன்பு..!
இதனால்தான் நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலிகொடுப்பேன் அல்லது அதற்கு நானே கூலியாக ஆகிவிடுவேன் என்கிறான் அல்லாஹ். இதை விடவேறு என்ன பெரும் பாக்கியம் வேண்டும் நமது வாழ்வில்? அல்லாஹ்வே நமக்கு கிடைத்துவிட்ட பிறகு வேறு என்ன நமக்கு கிடைக்க வேண்டியதிருக்கிறது? இப்பாக்கியம் நோன்பாளிகளுக்கு மட்டுமே கிடைக்கப்பெறும் என்பதுதான் நாம் பெற வேண்டிய கூடுதல் தகவல்.
இவ்வளவு சிறப்புகளை நோன்பு தன்னுள் வைத்திருப்பதால் தான் "இதை யார் சரியாக பயன் படுத்திக் கொள்ள வில்லையோ அவர் நாசமாகட்டும்...!" என ஜிப்ரயீல் (அலை) துஆ செய்ய அதற்கு "ஆமீன் - அவ்வாறே ஆகட்டும்..!" என பதில் கூறினார்கள் சாபத்தையே விரும்பாத சர்தார் நபி (ஸல்) அவர்கள். இதிலிருந்தே நாம் நமது நோன்பின் மாண்பை நன்கு விளங்கிக்கொள்ளலாம். வரும் இந்த ரமளானில் நாம் சாபத்தைப் பெறப்போகிறோமா இல்லை லாபத்தைப் பெறப் போகிறோமா என்பது இனி நமது கை(வாய்)களில் தான் இருக்கிறது. இது குர்ஆன் இறங்கிய மாதம் என்பதால் கூடுதலாக நாம் அதிகமதிகம் குர்ஆன் ஓத வேண்டிய மாதமும் கூட என்பதையும் இந்நேரத்தில் நாம் நன்கு கவனத்தில் வைக்க வேண்டும். ஏனெனில் இம்மாதத்தில் ஒரே ஒரு முறை முழுக்குர்ஆனையும் நாம் ஓதி முடித்தால் அது எழுபது முறை நாம் முழுக்குர்ஆனையும் ஓதி முடித்ததற்குச் சமமாகும் என்பதை மட்டும் என்றைக்கும் நாம் மறந்து விடக் கூடாது.
வாருங்கள்...!
லாபங்களை அள்ளுவோம்...!
சாபங்களை தள்ளுவோம்...!