ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடா சிரியா

உயிர்களில் வித்தியாசமில்லை மனிதர்கள் அனைவரும் மனிதர்களே. ஆனால் மதம், மொழி, இனம், நிலம் என்று பிரித்து வைத்து உயிர்களுக்கு தகுதி நிர்ணயிக்கிறார்கள் தங்களை மனிதர்கள் என்று சொல்லிக் கொல்லும் சிலர்.
சிரியாவில் வாழும் மனிதர்களுக்கு எந்த தகுதியும் இல்லை போலும் உயிர்களை மதிக்காத அதிகார வெறி கொண்ட யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் துப்பாக்கி ரவைகளால் சிரிய குடிமக்களின் உடல்களை ஓட்டையிடலாம். உயிர்கொல்லும் ரசாயானங்களை சிரியாவின் இளம் மொட்டுக்களான குழந்தைகள் முதல் அனைவருக்கும் சுவாசிக்கச் தூவலாம்.
ஆணதிகாரத்தை பறைசாற்ற பெண்களை வன்புணர்வு செயலாம்.
இந்தக் கொலைகள் போதை தரவில்லையானால் வானிலிருந்தோ பீரங்கி வழியாகவோ சிரியா நிலப்பரப்பில் வாழும் குடும்பங்களுக்கு அவர்களது வீடுகளையே சமாதியாக வசதி கொடுக்கலாம்.
சிரியாவின் எதிர்காலத்தை நாசமாக்கி வரும் இன்றைய போர் ஏகாதிபத்தியங்களின் திட்டப்படி மேலேகண்ட வடிவங்களில் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
சிரியாவின் எண்ணெய் வளம்தான் இந்தப் போர் வெறிக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. எண்ணெய் வளம் மட்டும் காரணம் அல்ல!
சிரியாவின் போருக்குப் பின்னால் இருக்கும் வெவ்வேறு மதம், இனம், மொழி, நிறம், நிலங்களை அடிப்படையாகக் கொண்ட பலர் இருக்கிறார்கள்.
சிரியாவின் பசர் அல் ஆசாதின் அரசு, சிரியாவுக்குள் இயங்கும் பல்வேறு ஆயுதக் குழுக்கள், ரசியா அரசு, அமெரிக்கப் பேரரசு, இஸ்ரேல் இவர்களில் யாரேனும் ஒருவருக்குப் பின்னால் இருக்கும் துருக்கி, சவூதி அரேபியா, ஈரான், லெபனான் ஹிஸ்புல்லாஹ் இவர்கள் அத்தனை பேரின் ஒரே ஆசை சிரியாவில் தங்களது சொல்பேச்சு கேட்கும் ஒரு அடிமை ஆட்சி செய்ய வேண்டும்.
உலகில் எங்கு பிரச்சனை சச்சரவு என்றாலும் களத்திற்கு தானாக வந்து தன்னை முன்னிறுத்தி பஞ்சாயத்து செய்யும் அமெரிக்கா சிரியா போரில் (தான் விரும்பிய குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கி) ஒதுங்கி நின்று சிரியாவுகு எதிராக கண்டனம் தெரிவிப்பது ஏன்?
ரசியாவுக்கும் சிரியாவுக்கும் என்ன தொடர்பு? சிரியாவின் எதிர்காலத்தை சூனியமாக்கும் இந்தப் போரில் சிரியாவுக்கு ஆதரவாக ரசியா எல்லா நிலைகளிலும் உதவுவது ஏன்?
ஏழு வருடங்களாக தொடர்ந்து நடக்கும் போரில் சிரியா அரசுக்கு ஆயுதங்கள் தங்கு தடையின்றி எங்கிருந்து கிடைகிறது?
சிரியாவின் உள்ளே இயங்கும் பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்குவது யார்? யார், யாருக்கு வழங்குகிறார்? என்பதில் இருக்கிறது சூழ்ச்சி.
யாருக்கு எதிராக யார் செய்யும் சூழ்ச்சி.
ஆறாம் நூற்றாண்டிலிருந்து 1925 வரை ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டிருந்த இஸ்லாமியப் பேரரசு இன ரீதியாகவும், தேச ரீதியாகவும் சின்னாபின்னமாக சிதறிக்கிடக்கிறது. அதுவும் திருப்தியை தராத நிலையில் சிதறிய சின்ன சின்ன முஸ்லிம் நாடுகளை மேலும் மேலும் சீரழிக்க மக்களிடம் இருக்கும் பலவீனமான சிந்தனைப் பகுதிகள் அடுத்தடுத்து தூண்டப்பட்டு மேலும் மேலும் சீரழிக்கப்பட்டு வருகின்றன. வரலாற்றில் எதிராகவும் நேராகவும் நடத்தப்பட்ட பிரிவிணையையும், ஒன்றிணைவையும் பார்ப்போம்.
இஸ்லாமிய நிலப்பகுதியில் தோற்றுவிக்கப்பட்ட எதிர் மாற்றங்கள் :
18 ஆம் நூற்றாண்டின் இறுதி 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் துருக்கி தலைமையின் கீழ் இருந்த இஸ்லாமியப் பேரரசு துண்டு துண்டாக்கப்பட்டது.
1925 க்குப் பிறகு மொழி, தேசிய, இன உணர்வு ஊட்டப்பட்ட வளைகுடாப் பகுதிகள் அய்ரோப்பா நாடுகளால் பங்கு போடப்பட்டு அடிமை நிலங்களாக, காலனி நாடுகளாக மாறின.
1940 க்குப் பிறகு அய்ரோப்பியர்கள் செய்த நாட்டாமைத் தனத்தின் வழியாக இஸ்ரேல் என்ற விஷ விதை ஃபலஸ்தீனப் பகுதியில் நடப்பட்டு விருட்ஷமாக வளர்த்தெடுக்கப்பட்டது.

5. syria 7
1960, 70 காலங்களில் அரபு நிலங்களில் பெட்ரோலிய வளங்கள் கண்டறியப்பட்டு அதன் மொத்த குத்தகைதாரர்களாக அமெரிக்கா, ஐரோப்பா, ரசியா ஏகாதிபத்தியங்கள் தங்களை ஆக்கிக் கொண்டன.
1990 க்குப் பின் ஒற்றை ஏகாதிபத்தியத்தை நோக்கிய பயணத்திற்கு தடைகல்லாக இருந்த சதாம் ஹுஸைனின் ஈராக் சின்னாபின்னமாக்கப்பட்டது.
2000 க்குப் பின் மற்றொரு தடை கல்லாக அமெரிக்கா ஏகாதிபத்தியம் வளர்த்து விட்ட தாலிபான்களின் ஆஃப்கானிஸ்தான் தகர்க்கப்பட்டது.
அந்த வரிசையில் 2011 லிருந்து சிரியா…
அய்ரோப்பா, அமெரிக்கா பகுதிகளில் உருவாக்கப்பட்ட நேர்மாற்றங்கள் :
அமெரிக்காவைச் சுற்றி பல்வேறு நிலப்பகுதிகளாக பிரிந்து கிடந்த தனித்தனி நாடுகள் ஒவ்வொரு நாடாக தானாகவோ அல்லது வற்புறுத்தியோ 1787 முதல் 1959 வரை இணைக்கப்பட்ட 50 நாடுகளின் ஒருங்கிணைந்த தொகுப்புதான் இன்றைய யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா.
அய்ரோப்பிய கண்டங்களில் வெவ்வேறு தேசங்களாக விரவிக்கிடந்த பல நாடுகளை 1951 இல் ஒன்றிணைக்க ஆரம்பித்த அய்ரோப்பியர்கள் 1992 இல் 28 நாடுகளைக் கொண்ட அய்ரோப்பிய ஒன்றியத்தை நிறுவினார்கள். ஐரோப்பா ஒன்றியத்திலிருந்தோ, நாடுகளிலிருந்தோ எந்த ஒரு பகுதியும் பிரிந்து போக உரிமை இல்லை. இன்று தனிநாடு கேட்கும் கடலோனியா வரை அதுதான் நிதர்சனம்.
பல்வேறு நாடுகளாக, மாநிலங்களாக இருந்த தேசங்கள் “கூட்டாட்சியாக”, “ஒன்றியமாக” ஒரே பெயரில் ஒற்றை வடிவமான அதேகாலத்தில்…
ஒரே தலைமையின் கீழ் இருந்த இஸ்லாமியப் பேரரசு சிதறிப் போனது. முஸ்லிம்களின் பலவீனம் மட்டும் காரணம் அல்ல! பின்னப்பட்ட சூழ்ச்சியும், முஸ்லிம் உலகுக்கு எதிராக தொடந்து தீட்டப்படும் திட்டங்களுமாகும்.
ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா போன்றோ, ஐரோப்பிய ஒன்றியம் போன்று அரபு நாடுகளின் ஒன்றியம் ஒன்று உருவாவதை ஏகாதிபத்தியங்கள் ஒரு போதும் விரும்புவதில்லை. ஒருவேளை மேற்குலகு விரும்பினாலும் இஸ்ரேலோ இஸ்ரேலுக்காகவே வாழும் நவீன ரோம் அமெரிக்காவோ அதை ஒருபோதும் விரும்பாது.

5. syria 11
அதனால்தான் ஒரு இனத்திடம் இருந்து பறித்து இன்னொரு இனத்துக்கு, இன்னொரு இனத்திடம் இருந்து பறித்து மற்றொரு இனத்துக்கு அதிகாரங்களைக் கொடுத்து இன, மத, மொழிப் பிரிவு முரண்பாடுகளை தக்கவைத்து, எப்போதும் தங்களுடைய அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வார்களே தவிர இஸ்லாமிய நிலப் பரப்பில் கூட்டாட்சி அமைப்பு உருவாவதையோ, தாங்கள் வகுத்த எல்லைகள் மாறுவதையோ ஒரு போதும் அமெரிக்கா, ஐரோப்பா அதிகாரங்கள் அனுமதிக்காது. அந்த வகையில் இப்போது தன் பழை கூட்டாளி சிரியாவின் பசர் அல் ஆசாத்தைக் காப்பாற்ற எதுவும் செய்கிறது ரசியா.
பசர் அல் ஆசாத் வீழ்ந்து தான் விரும்பும் ஒரு கையாள் கிடைக்கும் வரை போரை ஓய்வதை அமெரிக்கா, இஸ்ரேலும் அவர்களோடு இருப்பவர்களும் விரும்ப மாட்டார்கள். பசர் அல் ஆசாத் வீழ்வதைத் தடுக்க ரசியா போரை தொடரும்.
இவர்களின் அதிகார வேட்டையில் சிரியா பொது மக்களும், குழந்தைகளும் பெண்களும் கொத்துக் கொத்தாக செத்து விழுவதை தடுப்பது யார்? சிரியா அதிகாரங்களின் வேட்டைக்காடா?