பொய்களின் அரசியலும் அரசியல் பொய்களும்

- ரவூப் ஸய்ன் -
உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் அகராதி வருடம் தோறும் அந்த ஆண்டுக்கான சொல்லைத் தேர்வு செய்வது வழக்கம். 2016 ஆம் ஆண்டுக்கான ஆக்ஸ்போர்ட் அகராதி தேர்வு செய்த சொல் Post - Truth என்பதாகும். அந்த ஆண்டில் பத்தி எழுத்தாளர்கள், நூலாசிரியர்கள், செய்திப் பகுப்பாய்வாளர்கள் இச்சொல்லை 2000 முறை பயன்படுத்தியதனாலேயே அந்த ஆண்டுக்கான சொல்லாக Post - Truth தேர்வாகியது.
1992 இல் The Nation என்ற நாவலின் ஆசிரியர் ஸ்டீவ் டைசிக் என்பவர்தான் இந்தச் சொல்லை முதலில் பயன்படுத்தினார். Post - Truth என்ற சொல்லின் அர்த்தம் உண்மைக்குப் பிந்திய அல்லது உண்மையைக் கடந்தது என்பதாகும். ஆயினும் இப்பெயர்ப்பு அச்சொல்லின் அர்த்தங்களை ஆழ அகலத்துடன் பிரதிபலிக்கவில்லை.
சமகால உலக அரசியல் அப்பட்டமான பொய்களை உண்மைகளாய் நம்பச் செய்து உண்மையான தரவுகள், தகவல்களை புறமொதுக்கி விட்டு, திட்டமிட்ட சில பொய்களோடு இயங்குவதனையே இந்தச் சொல் குறிக்கின்றது. 2016 ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அமெரிக்காவின் நடுநிலை ஊடகங்களும் எழுத்தாளர்களும் இச் சொல்லை அதிகம் பயன்படுத்தின. முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அமெரிக்கக் குடியுரிமை இல்லை என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
நியூயார்க் உணவு விடுதியொன்றின் அருகில் ஹிலாரி கிளின்டனுக்குச் சொந்தமான சிறுவர் துஷ்பிரயோக நிலையமொன்று இயங்குவதாக பிரச்சாரக் கூட்டத்தில் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இது சில ஊடகங்களில் பரப்பப்பட்டது. வடகரோலினா மாநிலத்திலிருந்து இச்செய்தியைக் கேட்டு ஆத்திரமடைந்த ஒருவர் 500 கி.மீ.க்கு அப்பாலுள்ள நியூயார்க்கிற்கு வந்து உணவு விடுதியின் அருகிலிருந்த கட்டடத்தின் மீது சரமாரியாகச் சுட்டதில் சிலர் இறந்து போனார்கள். பின்னர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட அந்த நபர் குறிப்பிட்ட ட்ரம்பின் கருத்தை தான் நம்பியதனாலேயே இந்த முடிவுக்கு வந்ததாக வாக்குமூலம் வழங்கினார்.
ஆனால், விசாரணையின் பின்னர் ட்ரம்ப் குறிப்பிட்டது போன்று ஹிலாரிக்குச் சொந்தமான துஷ்பிரயோக நிலையமொன்று மொத்தமாகவே அங்கில்லை என்பது தெளிவானது. பொய்களை திட்டமிட்டு உருவாக்குவதும் அதனை நம்பச் செய்து அதன் மீது தமது அரசியலை நடத்துவதுமே இன்று உலகின் பல நாடுகளில் நடக்கின்றது.
‘அரசியலில் பொய்’ என்பதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. கடந்த காலம் முழுவதும் அரசியல் பொய்கள் முக்கிய திருப்பங்களில் தீர்மானிக்கும் சக்தியாக இருந்துள்ளன. ஹிட்லரின் கொள்கை பரப்புச் செயலாளர் கோயபல்ஸ் மட்டுமே பொய் அரசியலுக்குப் பெயர் போனவர். ஆனால், அவருக்குப் பிந்திய பல பத்தாண்டுகளாக இன்று வரை கோயபல்ஸின் பொய்களை விட மிகப் பயங்கரமானதும் ஆபத்தானதுமான பொய்களோடு உலக அரசியல் நகர்கின்றது.
உண்மைகளைப் பொய்யாக்குவதும் பொய்களை உண்மையாக்குவதுமே Post - Truth எனலாம். இதில் உண்மையான புள்ளிவிபரங்கள், தரவுகளைப் பிழையானதாக அல்லது பொய்யானதாகத் திரிப்பது நிகழ்கிறது. இன்னொரு புறம் இல்லாததை இருப்பதாக பொய்கள் உருவாக்கப்படுகின்றன. உலகின் 748 கோடி மக்கள் 4 வல்லரசுகளின் 5 தலைவர்களால் சொல்லப்படும் பொய்களால் ஏமாற்றப்படுகிறார்கள்.
நிறுவனத் தேவைகளுக்கும் தனிநபர்களின் சுயநலன்களுக்கும் சில அரசுகளின் ஆதிக்கப் போட்டிக்கும் ஏற்ப பொய்கள் உருவாக்கப்படுகின்றன. அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் அரசியல் செயல்பாடுகள் பெரும்பான்மையானவை உண்மைக்குப் புறம்பான பொய்களின் மீதே நகர்கின்றன. அதன் எதிர்மறையான தாக்கம் உலக அரசியலை விட்டு வைக்க வாய்ப்பில்லை. அதனால், முழு மொத்த சர்வதேச அரசியலையும் இந்த அப்பட்டமான பொய்கள் பாதித்து வருகின்றன.
9/11 க்குப் பின்னர் புஷ்ஷும் பிளேயரும் வெளியிட்ட அறிக்கைகளும் அதனையொட்டி மேற்கொண்ட பயங்கரவாதத்திற்கு எதிரான போரும் மிகப் பெரிய பொய்களின் அடிப்படையில் நடந்தவைதான். ஈராக் ஆக்கிரமிப்புக்கும் ஆப்கான் ஆக்கிரமிப்புக்கும் புஷ் முன் வைத்த காரணங்கள் சுத்தமான பொய்கள். அந்தப் பொய்கள் ஈராக்கில் 10 இலட்சம் அப்பாவிப் பொதுமக்களை பலியாக காரணமானது. பல்லாயிரக்கணக்கான அப்பாவிக் குழந்தைகளை அநாதைகளாக்கின.
நூற்றுக்கணக்கான ஈராக்கிய பெண்களை பாலியல் வல்லுறவுக்குப் பலியாக்கின. ஈராக்கை மூன்று பிராந்தியங்களாகத் துண்டாடின. அதன் எண்ணெய் வளத்தை அமெரிக்கக் கம்பனிகளின் கீழ் கொண்டு வந்தன. இன்று வரை ஈராக் இன, மத பேதங்களால் குமுறிக்கொண்டிருப்பதற்கு புஷ்ஷும் பிளேயரும் சொன்ன பொய்களே காரணமாகியது. சத்தாம் ஹுஸைனிடம் பேரழிவு தரும் ஆயுதங்கள் உள்ளன என்பதே அவர்கள் சொன்ன பொய். இப்போது இது பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
1963 இல் ஜான் எஃப் கென்னடி சவூதி அரேபியாவுக்குப் படையினரை அனுப்பினார். எகிப்தின் ஜமால் அப்துந் நாஸர் சவூதியை ஆக்கிரமிக்கப் போகின்றார் என்று கென்னடி சொன்ன பொய்யை அடுத்து அவரது நகர்வு நியாயப்படுத்தப்பட்டது. ட்ரம்ப் அமெரிக்காவுக்குப் புலம்பெயரும் வெளிநாட்டவர்கள் குறித்து உருவாக்கிய அச்சம் அவரது வெற்றிக்குப் பின்னணியாய் இருந்தது. அது கூட மிகப் பெரிய பொய்தான். 1990 களில் இடம்பெற்ற பாரசீக வளைகுடா யுத்தத்திற்கு முதலாவது புஷ் முன்வைத்த நியாயமும் பொய்யானவைதான்.
2016 இல் உலக அரசியலில் விவாதிக்கப்பட்ட இன்னொரு மிகப் பெரிய பொய் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய சம்பவமாகும். டேவிட் கேமரூன் அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு முன் வைத்த பொய்ப் பிரச்சாரம் புள்ளி விபரங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. இப்பிரச்சாரம் பொய்யென நிரூபிக்கப்பட்ட பின்னரும் அதனைத் தோற்கடிக்க முடியாத அளவுக்கு பிரக் ஸிட் ஆதரவு ஊடகங்கள் இந்தப் பொய்யை உண்மையாக்கின.
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க வேண்டுமாயின், 3500 இலட்சம் பவுன்களை வருடம் தோறும் இழக்க வேண்டி ஏற்படும். எனவே, இவ்வளவு தொகையை இழந்த வண்ணம் ஐரோப்பிய ஒன்றியத்தில் அது நீடிக்க வேண்டியதில்லை என்பதே கேமரூன் அரசின் வாதமாக இருந்தது. ஆனால், முன் வைக்கப்பட்ட தரவு முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
அயோத்தியிலிருந்த பாபரி மஸ்ஜித் மொகலாய மன்னர் பாபரினால் கட்டப்பட்டது. அது இலக்கியத்தில் வரும் கற்பனைப் பாத்திரமான ராமன் பிறந்த இடம் என்று பொய்ப் பரப்புரை செய்யப்பட்டு சங்கபரிவாரம் அதனைத் திட்டமிட்டு அழித்தது. இந்தியச் சூழலில் இதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.
குஜராத் பிரதமர் நரேந்திர மோடியை பிரதமராக்குவதற்கு கார்ப்பரேட் கம்பெனியின் கட்டுப்பாட்டிலிருந்த ஊடகங்கள் திரும்பத் திரும்ப பரப்புரை செய்த பொய்களே துணை நின்றன. பொருளாதாரத்திலும் கல்வியிலும் குஜராத்தே முன்னிலை வகிப்பதாகவும் அதற்கு மோடியே காரணம் எனவும் பொய்கள் கட்டவிழ்க்கப்பட்டன. உண்மை இதற்குப் புறம்பாகவே இருந்தது. கேரளாவுடன் ஒப்பிடும்போது குஜராத்தின் கல்வி நிலை பின்தங்கியிருந்தது.
மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது ஊட்டச்சத்துக்குறையால் வாடும் குழந்தைகளின் வீதம் குஜராத்தில்தான் அதிகம் இருந்தது. மோசமான இனக் கலவரங்களுக்கும் பெயர் போன மாநிலம் அதுதான். இந்த உண்மைகளெல்லாம் மறைக்கப்பட்டு, மோடியைப் பற்றிய புதிய பிம்பங்கள் ஊடகங்களில் உலா வந்தன. மக்கள் அவற்றை நம்பினார்கள்.
இப்போது ஒரு புதிய சர்ச்சை கூட இந்தியச் சூழலில் உருவாகியுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதியொருவர் வரலாற்றை தலைகீழாய்ப் புரட்டும் பொய் ஒன்றை கட்டவிழ்த்துள்ளார். தாஜ் மஹாலின் உண்மைப் பெயர் தே.ஜே. மஹால் எனவும் அது பழைய சிவன் கோயில் எனவும் மொகலாயர் காலத்தில் முஸ்லிம்கள் அதனைக் கைப்பற்றி தாஜ்மஹால் என்று மாற்றினர் எனவும் ஹரிசங் ஜெய்ன் எனும் ஒரு நீதிபதியே இப்படிப் பெரிய பொய்யொன்றை அவிழ்த்துள்ளார்.
தாஜ்மஹாலின் வரலாற்றை இவர் அறியாதிருக்க வாய்ப்பில்லை. ஆனால், ஹரிசங் ஜெய்ன் ஆர்.எஸ்.எஸ். பாசறையில் வளர்ந்தவர் என்பதால் இந்துத்துவ கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்களுக்கு தீனி போட முயற்சிக்கிறார். மக்கள் இதனை நம்புவதற்கும் கலவரங்களில் பங்குகொள்வதற்கும் கூட இந்தப் பொய் காரணமாகலாம்.
நாங்கள் உருவாக்கும் உண்மைகளை மக்களை நம்பச் செய்வோம். அவற்றை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அதிகார வர்க்கத்தின் பொய் அரசியல் ஆகும். அரசியலில் பொய் என்பதை விட பொய் அரசியல் மிகுந்த ஆபத்தானதாகும்.
அகிலத்தை அழிப்பதற்கும் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கும் வல்லரசுத் தலைவர்களும் ஆதிக்க சக்திகளும் தமது கையிலெடுத்துள்ள பயங்கர ஆயுதமே இதுவாகும்.
ஜான் பெர்கின்ஸ் எனும் எழுத்தாளர் ஒரு காலத்தில் அமெரிக்காவின் சதிக் கோட்பாட்டிற்கு பொறுப்பாயிருந்த கூலிகளில் ஒருவர். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் அவர் எழுதியுள்ள ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் எனும் நூலின் இறுதிப் பகுதியில் அமெரிக்காவின் மிகப் பெரிய பலம் ஒட்டு மொத்த உலகப் பொருளாதாரமும் டாலரின் அடிப்படையில் இருப்பது தான். டாலரை அச்சடிப்பதற்கு நம்மால் முடிகின்றது. அதனால்தான் நாம் வல்லரசாக நிலைத்திருக்கிறோம் என்கிறார்.
அவரது கருத்தில் உலகத்தில் மிகப் பெரிய கறுப்புப் பணம் டாலர்தான். ஆனால் இதனை எத்தனை பேர் நம்புவார்கள் என்பதுதான் நமக்கு முன்னாலுள்ள பிரச்சினை.
நவீன உலக வரலாற்றை தலைகீழாய் மாற்றியதில் உண்மைக்குப் பிந்திய பொய் அரசியலுக்கும் அவற்றைப் பரப்புரை செய்யும் ஊடகங்களுக்கும் பெரிய பங்குள்ளது.
பெரும்பாலான அமெரிக்க ஊடகங்கள் அரசுக்கு ஆதரவானவை. கூலிக்கு மாரடிப்பவை. ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் லாபிகளின் கீழே உள்ளவை. இதனால், உண்மையை விட பொய்த் தரவுகளையும் தகவல்களையும் முன்வைத்து வாதிடுபவை. அவை உருவாக்க விளைவது பொய்ச் சமநிலையையே. பொய்களை அப்படியே சந்தைப்படுத்தும் நிலைக்கே இறுதியில் அவை வந்து சேர்கின்றன.
இன்றைய சமூக ஊடகங்கள் இதற்கு மேலும் பலமூட்டுகின்றன. டிஜிட்டல் பயன்பாடு மற்றும் இணைய வதியுள்ள ஒருவருக்கு தான் விரும்பும் கருத்தை உலகமயமாக்குவதற்கு வாய்ப்புள்ளது. அந்த அபிப்பிராயத்தில் பொய்கள், பக்கச் சார்புகள், உண்மையைப் புறந்தள்ளும் வெறுப்பு எல்லாமே கலந்திருக்கின்றது.
பொய்களையும் அசத்தியங்களையும் அடிப்படையாகக் கொண்ட இந்தப் புழுகுமூட்டை அரசியல், மக்களைத் தவறாக வழிநடாத்துகின்றது என்பது மட்டுமல்ல, உலகிற்கே பெரும் அழிவைக் கொண்டு வருகின்றது.
உண்மைகளைத் திட்டமிட்டு நிராகரித்து பொய்களை உருவாக்கி, சந்தைப்படுத்தும் எந்திரங்களாகவே உலகின் பெரும்பாலான அரசாங்கங்கள் இயங்குகின்றன.
இத்தகைய பொய்களை வடிகட்டி உண்மைகளை மட்டும் உள்ளீர்க்கும் மனோநிலைக்கு மக்களை கொண்டு வந்து சேர்ப்பதுதான் நமக்கு முன்னாலுள்ள பெரும் சவாலாகும்.