திசை மாறும் மாணவர் சமுதாயம்

o-STUDENTS-STRESS-facebookஇன்றைய யுகம் நவீன யுகம் தொழில் நுட்ப வளர்ச்சியின் உச்சாணிக் கொம்பில் இருக்கின்றோம். ஆனால் ஒழுக்கம் பண்பாடு கலாச்சார விஷயத்தில் மிக மிக பின் தங்கியவர்களாக இருக்கிறோம். நமது தொழில் நுட்ப வளர்ச்சி நமக்கு ஒழுக்கத்தை பண்பாட்டை கற்றுத் தரவில்லை. மாறாக நமது வளர்ச்சி குறுகிய மனப்பான்மையை, அவசரத் தன்மையை, அதிவேக வளர்ச்சியை, குரோதத்தை, தன் மேல் அதீதமான நம்பிக்கையை வளர்த்திருக்கிறது விளைவு? இரக்கத்தன்மை இல்லாதொழிந்து தனக்காக, தன் தேவைக்காக யாரையும் வெறுக்கவும், வேரறுக்கவும் துவங்கி விட்டது மனித சமூகம்.
வேர்களை வெறுக்கும் விழுதுகளாய்! பெற்றோர்களை மதிக்காத ஒரு தலைமுறை இன்று தலையெடுத்திருக்கிறது. இவர்கள் பெற்றோர்கள் தங்களுக்கு அறிவுரை செய்வதை வெறுக்கிறார்கள். குறிப்பாக மாணவர் சமுதாயம் தான் செய்த தவறுகளுக்காகக் கூட ஆசிரியர்கள் தங்களைக் கண்டிப்பதை விரும்புவதில்லை. கண்டிக்கும் ஆசிரியர்களைத் துன்புறுத்தவும், சில நேரங்களில் கொலை செய்யவும் கூட துணிந்திருக்கிறார்கள் மாணவர்கள். தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுடன் தோழமை பாராட்டுவது நட்புடன் நடந்து கொள்வது போன்ற அறமான விஷயங்கள் அழிந்து போய் அற்பமான காரணங்களுக்காக குரோதம் வளர்த்து அறுவா தூக்கி சண்டையிடும் வில்லன்களாக இன்றைய மாணவர் சமூகம் மாறி இருக்கிறது. தன்னை ஹீரோவாக நிலை நிறுத்திக் கொள்ள எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.
விதவிதமான போதைப் பொருட்களுக்கு தங்களை அடிமையாக்கி இருக்கிறார்கள். இதனால் ஏற்படும் உடல் நலக் கேடு ஒரு புறம். மறுபுறம் அதை விடக் கொடூரமாக போதை ஏற்படுத்தும் மனநலக் கோளாறுகளால் பெண்களை சில்மிஷம் செய்யும், சீரழிக்கும் சமுதாயமாக இளைஞர் சமுதாயம் குறிப்பாக மாணவர்களும் மாறி வருகிறார்கள் வேதனை.
சுயத்தோடு இருக்கும் மாணாவர்கள் சிலர் பொழுது போக்கு என்ற போர்வையில் பெண்களை கிண்டல் செய்வதும் கலாட்டா செய்வதும் பெருகி வருகிறது. சுதந்திரம் என்ற பெயரில் பொது இடங்களில் முத்த மழை பொழிய போராட்டம் நடத்துகிறார்கள். இதைத் தவறு என்று சொல்பவர்களை பிற்போக்குவாதிகள் என்று கூறி அவர்களை அவமரியாதை செய்கிறார்கள். இப்படியாக எதிர்காலத் தலைவர்களான இன்றைய இளைய தலைமுறை தறுதலைகளாக மாறி இருப்பது இன்று நாம் எதிர் கொள்ளும் மிகப் பெரும் பிரச்சனை.
‘தம்பி பைக்கில் தெருவில் இப்படி வேகமாக போகாதே’ என்று புத்திச் சொன்ன பெரியவரை நய்யப்புடைத்துக் காயப்படுத்தும் மாணவர்கள்.
ஒரு பெண்ணுக்காக கல்லூரிக்குள் மாணவர்கள் ஆயுதங்கள் சகிதமாக மோதல்... 22 பேர் கைது; சாதிய உணர்வில் மோதிக்கொண்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் 63 பேர் மீது வழக்கு; ஏ.டி.எம்.,மெஷினில் திருட முயன்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது; செயின் பறிப்பில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள் என்பது போன்ற செய்திகள் நாள்தோறும் தொடராகி வருகிறது.

பணக்கார மாணவர்கள், பணத்தால் எதையும் வாங்க முடியுமென்று நினைக்கிறார்கள்; மற்றவர்கள் பணத்தை அடைய எதையும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள்; கல்லூரி நிர்வாகங்கள் பலவும், மாணவ, மாணவியரை பணம் காய்க்கும் மரங்களாகவே பார்க்கின்றன; வாழ்வியல், மானுடவியல், சூழலியல், சமூகவியல் சார்ந்த எந்தத் தெளிவான பார்வையும், இன்றைய இளைய தலைமுறையிடம் இல்லை; உலகின் எல்லா விஷயங்களையும், பொருளாதாரப் பார்வையாகவே பார்க்கச் செய்திருப்பதுதான், நமது குடும்பங்கள், கல்வி நிறுவனங்கள், சமூகம் செய்துள்ள ஆகப்பெரிய சாதனை.
சமுதாயத்தில், வளரும் தலைமுறைக்கு நல்ல விஷயங்களை விட தீய விஷயங்களே அதிகமாக கற்பிக்கப்படுகிறது. பள்ளிகளில், வாழ்வியல் பண்புகள் குறித்து சரியாக கற்பிக்கப்படுவதில்லை. சமுதாயத்தில், ஒழுக்கம் நிறைந்தவர்கள் போற்றப்படுவதில்லை. தீய ஒழுக்கம் உள்ளவர்கள் உயர்த்தி பிடிக்கப்படுகின்றனர். இதைப் பார்க்கும் மாணவர்களும் அதையே பிரதிபலிக்கிறார்கள்.
tasmacபொதுவாக இக்கால மாணவர்கள் அறிவுத்திறன் மிக்கவர்களாக உள்ளனர். மேலும், அவர்கள் பொறுப்பு உணர்வு மிகுந்தவர்களாக தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். பொறுமை, சகிப்புத்தன்மையைக் கடைபிடிக்க வேண்டும். இளமையின் வேகத்தில் தவறு செய்ய மனம் தூண்டும் போது, அதை கட்டுப்படுத்த பழகிக் கொள்ள வேண்டும்.
டீ குடிக்கச் செல்வது போல், பிராந்திக் கடைக்கு செல்கின்றனர். இது இரண்டாவது காரணமாகும். சமூக சிந்தனையைப் பற்றியும், குடும்பத்தைப் பற்றியும் கண்டுகொள்வதில்லை. தீய நண்பர்களுடன் சேர்ந்து, தீயபழக்கத்துக்கு ஆளாகின்றனர்.
இன்றைய இளைஞர்கள் தன்னை ஒரு "ஹீரோவாக" சித்தரித்து வாழ்கின்றனர். மொபைல் போன், நெட், பேஸ்புக் ஆகியவற்றில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, பணக்காரர் வீட்டுக் குழந்தைகளை போல் மாற்றிக் கொள்கின்றனர். பிறர் மிகைப்படுத்திப் பேச வேண்டும் என்பதற்காக, சிறு, சிறு சண்டைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.
இப்போது மாணவர்களைப்பற்றி அதிகம் பேசப்படுவது யாவரும் அறிந்த உண்மை. ஒரு நாட்டின் நம்பிக்கையாக மாணவர்கள் கருதப்படுகிறார்கள்.
ஓடும் பெற்றோர் ஒரு பக்கம்: பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒரு பக்கம். இதனால் குழந்தைகளால் சமூக சூழலை புரிந்து தங்களை மாற்றிக்கொள்ள இயலாத ஒருவித பயத்தையும், குழப்பத்தையும் அடைந்து, இதன் உச்சகட்டமான மன அழுத்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்களின் மன அழுத்தத்திற்குக் காரணம் குடும்பம். நண்பர்கள், எண்ணங்கள், சமுதாயம், ஊடகம் போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.
இன்றைய பெருவாரியான மாணவர்கள் பலவீனமாக இருப்பதற்கு தைரியம் இல்லாமையே காரணம். நன்கு படித்து நன்மதிப்பெண் பெற்றிருந்தும் வாழ்க்கைச் சிக்கலுக்கு தீர்வு காண முடியாமல் திணறுகின்றனர். இந்த நூற்றாண்டை நோக்கும்போது தவறு செய்பவர் பட்டியலில் அதிகம் இடம்பெறுபவர்கள் படித்தவர்களாகவே இருக்கின்றனர்
உங்கள் சிறுபிள்ளையை ஏழு வயதில் தொழும்படி ஏவுங்கள், பத்து வயதானால் காயப்படாமல் அடித்து தொழ வையுங்கள் என்பது நபிமொழியாகும். ஆனால் இன்று பத்து வயது ஆண், பெண்பிள்ளைகள் விடுமுறைக்காலத்தில் காலை பத்துமணி வரை தூங்குவதைக் காணலாம். சில வீடுகளில் தான் காலையில் மத்ரஸா போவதை அறிகிறோம். இந்த காலத்துப் பிள்ளைகள் சொல் பேச்சுக் கேளாதவர்களாக இருக்கிறார்கள் என்று குறைபட்டுக் கொள்ளும் நாம்தான். நமது கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் சிறுவயதிலிருந்து இஸ்லாமிய பண்பாடுகளை பழகவைக்க வேண்டும். அது பெற்றோரின் கடமை.
பெற்றோர் விடியற்காலையிலே எழுந்து, உணவு தயார் செய்து, குளிக்க வைத்து, பள்ளிப் பேருந்திற்காக வீதியில் வரிசையாக தெருபூராவும் தவம் கிடைப்பதை போல சன்மார்க்கத்தை படிக்க அனுப்புவதில் ஆர்வம் ஏன் குறைந்து போய்விட்டது தெரியவில்லை!
Tiblesஇன்றைய மாணவர்களின் சமுதாய பங்களிப்பு அவர்தம் பெற்றோரிடமிருந்தே எதிர்பார்க்க வேண்டும்.
மாணவர்களின் பண்பாடு குறித்து அவர்களின் பெற்றோர்களே முழுமையான அக்கரை கொள்ள வேண்டும். பாரம்பரிய மிக்க குடும்பத்து மாணவர்களாக இருந்தாலும் டீன்ஏஜ் பருவத்தில் அவர்களிடம் இயல்பாக ஏற்படும் மாற்றங்களினால், கூடா நட்பினால், சுற்றுப்புறத்தில் இருப்பவர்களால் கவனம் சிதறும் போது பெற்றோர் அக்கரையோடு வழிகாட்டாவிட்டால் பண்பாட்டுச் சீரழிவுக்கு மாணவர்கள் தள்ளப்படுவார்கள் என்பதை கொள்ள வேண்டும்.
ஏனெனில் மாணவர்களின் சேவைகளில்தான் மனித சமூகத்தின் எதிர்காலம் உள்ளது..