தலைமுறை உருவாக்கம்

ஸாஹிர் பற்றி கொஞ்சம் சொல்லித்தான் வேண்டும். பொதுவாக இன்றும்தான், அன்றும்தான் அவரை யாரும் பெரிதாக பேசியதில்லை.

ஸாஹிர் கருப்பானவர். அலங்கோலமானவர். குரலாவது அழகாக இருக்கும் என்று பார்த்தால் அதுவும் இல்லை. அவரோடு உரையாட யாரும் விரும்புவதில்லை. அவரை விட்டும் தூரமாகிச் செல்வதுதான் எல்லோர் வழக்கமும்.
ஸாஹிர் சந்தையில் இருக்கிறார். பின்னாலிருந்து அவரை ஒருவர் கட்டியணைக்கிறார். சிரமத்துடன் திரும்பிப் பார்த்தால், உயிரிலும் மேலான இறைத்தூதர், உலகமனிதர்களின் முன்மாதிரி முஹம்மத் நபி(ஸல்) அவர்கள். ஸாஹிரின் உள்ளம் அன்பால் நிறைந்திருந்தது.
நபியவர்கள் சத்தம்போட்டுக் கூறினார் : யார் இவரை வாங்க விரும்புவது? உடனே ஸாஹிர் நபியவர்களிடம் "என்னை யார்தான் வாங்க விரும்புவார்? மிகவும் மலிவானவன் நான்" எனக் கூற நபியவர்கள் "ஸாஹிர்! நீங்கள் அல்லாஹ்விடத்தில் மிக விலை உயர்ந்தவர்கள்" என்றார்.
நம்மிலும் எத்தனையோ ஸாஹிர் (ரலி) போன்றவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. நாளும் பொழுது நம்மை கடந்து செல்கிறார்கள். அவர்கள் மனிதப் பார்வையில் மிகச் சாதாரணமானவர்கள், அற்பமானவர்கள். அல்லாஹ்விடத்தில் மிக உயர்ந்தவர்கள், கண்ணியமானவர்கள்.
சாதரண பாமர மனிதர்களையும் தம்மோடு அரவணைத்து வாழ்ந்து அவர்களை தன்னோடு தன் கொள்கையோடு நெருக்கமாக்கிக் கொண்டார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள். மனிதர்களோடும் அவர்களின் மனங்களோடும் நெருங்கி வாழ்வது மனிதர்களை உண்மையாளர்களாக உருவாக்குவதில் முதன்மையான பண்பு.
இந்த வரலாற்றுச் சம்பவம் மூலம் இன்றைய நமது சமூகக் கட்டமைப்பை ஆராய்வோம்.
நமது சமூகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களை புரிந்து கொள்ள அது உதவும்.
இன்னொரு வரலாற்று நிகழ்வின் பின்னணியிலிருந்து பெருமானார் கட்டமைத்த சமூகத்தையும் அதன் இன்றைய தேவையையும் அறிந்து கொள்வோம்.
பண்டைய சீனர்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்காக சீனப் பெருஞ்சுவரை நிர்மாணித்தனர். அதன் அதிகபட்ச உயரத்தின் காரணத்தினால் யாருமே அதன் மீது தாவி, ஏறி தங்கள் பகுதிக்கு உள்ளே நுழைய முடியாது என அவர்கள் உறுதியாக நம்பினர்.
ஆனால் சீனச் சுவர் நிர்மாணிக்கப்பட்டு முதல் நூற்றாண்டு காலப்பகுதிக்குள் மட்டும் சீனா மூன்று போர்களை சந்தித்தது. அந்த மூன்று முறையும் சீனச் சுவரைச் தாண்டிச் செல்ல வேண்டிய தேவை எதிரிகளின் காலாட்படைகளுக்கு ஏற்பட்டது.
அப்போதெல்லாம் வாசல் பாதுகாவலனுக்கு இலஞ்சம் கொடுத்துவிட்டு, வாசல் கதவின் வழியாக எதிரிகள் நுழைந்தனர்.
சுவரை கட்டியெழுப்புவதில் கவனமாக இருந்த சீனர்கள், வாசல் பாதுகாவலனை நல்ல மனிதனாக உருவாக்க மறந்து விட்டனர்.
மனிதனை உருவாக்குவது அனைத்தையும் கட்டியெழுப்புதவற்கு முன்னர் செய்ய வேண்டிய விசயமாகும்.
இதுதான் பெருமானாரின் வரலாற்றில் இருந்து நாம் பெற வேண்டிய பாடமும் படிப்பினையும்.
கீழைத்தேய அறிஞர் ஒருவர் சொல்கிறார். ஒரு சமூகத்தின் நாகரீகத்தை அழிக்க விரும்பினால் அங்கே மூன்று வழிமுறைகள் உள்ளன.
1- குடும்பங்களை சீர்குலைத்தல்
2- கல்வியை இல்லாமல் செய்தல்
3- முன்மாதிரிகளையும், மூல ஆதாரங்களையும் வீழ்த்துதல்
குடும்பத்தை சீர்குலைக்க வேண்டுமா? தாயின் பங்களிப்பு இல்லாமல் செய்யுங்கள். தாய் 'குடும்பத் தலைவி' என்று சொன்னால் அவள் வெட்கப்பட வேண்டும் என்ற அளவில் அவளை ஆக்கிவிடுங்கள்.
கல்வியை இல்லாமல் செய்ய வேண்டுமா? சமூகத்தில் ஆசிரியருக்கு உள்ள முக்கியத்துவத்தை வழங்காதீர்கள். அவர்களின் அந்தஸ்த்தை குறைத்து, மாணவர்களும் அவர்களை கேலி செய்யும் அளவுக்கு செய்து விடுங்கள்.
முன்மாதிரிகளை வீழ்த்த வேண்டுமா? அறிஞர்களை குறைகாணுங்கள். அவர்கள் மீது சந்தேககங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களது மதிப்பை கொச்சைப்படுத்துங்கள். அவர்களை செவிமடுக்கவோ, பின்பற்றவோ யாரையும் விட்டுவிடாதீர்கள்.
உணர்வுப்பூர்வ தாய் இல்லாமலாகி, தூய்மையான ஆசிரியரும் இல்லாமலாகி, முன்மாதிரியும், மூல ஆதாரமும் வீழ்ச்சியுறும் போது மதிப்புமிக்க தலைமுறையை உருவாக்க யார் இருக்கப் போகிறார்கள்?!
கலாநிதி மஹ்தி அல்-மன்ஜரா Mohamed Basir