ஊட்டச்சத்து நெருக்கடி

சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (International Food Policy Research Institute) கடந்த அக்டோபர், 2 . 2017 அன்று வெளியிட்ட உலகளாவிய பட்டினி அட்டவணையில் (GHI - Global Hunger Index) இடம் பிடித்த 119 நாடுகளில் இந்தியா 2015 இல் 97 ஆம் இடத்தில் இருந்த இந்தியா இந்த வருடம்100 வது இடத்திற்கு கீழிறங்கி இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து ஒரு சில நாட்களிலேயே அம்பானி தலைமையிலான இந்தியாவின் 100 பெரும்பணக்காரர்களின் வரிசையை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. இரண்டும் தற்செயலான நிகழ்ச்சியல்ல.
இந்தியா வளர்ந்த நாடு! ! !
இந்தியா, பால், பருப்பு, சணல் ஆகியவற்றின் மிகப்பெரிய உற்பத்தியாளராக விளங்குகிறது. அரிசி, கோதுமை, கரும்பு, நிலக்கடலை, காய்கறிகள், பழம் மற்றும் பருத்தி ஆகியவற்றின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. மசாலா, மீன், கோழி, கால்நடை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் ஆகியவற்றின் முன்னணி உற்பத்தியாளர்களில் இந்தியாவும் ஒன்று. அதன் மதிப்பு $ 2.1 டிரில்லியன் டாலர், அமெரிக்கா மற்றும் சீனாவிற்குப் பிறகு இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடு.
2013-14 ஆம் ஆண்டில், இந்தியாவின் மொத்த உணவு தானிய உற்பத்தி 265 MT (Million Tonnes -மில்லியன் டன் ) என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் வருடாந்திர பால் உற்பத்தி 130 எம்.டி., மேலும் உலகின் மிகப்பெரிய அளவில் 19 மெட்ரிக் டன் பருப்பு உற்பத்தியாளராகவும், அத்துடன் மிகப்பெரிய இறக்குமதியாளராகவும் [3.5 மில்லியன் டன்] இந்தியா உள்ளது. [Food and Agriculture Organization of the United Nations]
உலகிலேயே மிக அதிகமாக மருந்து உற்பத்தி செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. இந்தியாவில் தயாராகும் மருந்துகள் 150 நாடுகளுக்கும் மேல் சென்று கொண்டிருக்கின்றன.
இந்தியாவின் வீழ்ச்சி / வறுமை, ஊட்டச்சத்து நெருக்கடி

13 - uttachathu 16
1990 மற்றும் 2005 க்கு இடைப்பட்ட காலங்களில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பல மடங்கு உயர்ந்த போதிலும், ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார பலம்மிக்க நாடாக இருந்த போதிலும் இன்னும் கிராமப்புறங்களிலும், பெருத்து வளரும் நகர்ப்புறத்தின் வளர்ச்சி குன்றிய பகுதிகளிலும் பொருளாதாரம் அதள பாதாளத்தில்தான் கிடக்கிறது.
2011 இல் நந்தி அறக்கட்டளையால் நடத்தப்பட்ட ஹங்கமா ஆய்வில் 42 சதவீதம் சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள் என கண்டறியப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் 110.000 சிறுவர்கள் மற்றும் 72 தாய்மார்களிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வு இது “ஊட்டச்சத்து நெருக்கடி” என்று கூறுகிறது
ஒரு நாட்டின் கடுமையான பசியின் அளவு குழந்தைகளின் ஊட்டத்துக் குறைவிலிருந்தே கணக்கிடப்படுகிறது என்கிறது சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் (IFPRI - International Food Policy Research Institute) அறிக்கை.
2008ஆம் ஆண்டில், உலகளவில் பிறக்கும் குழந்தைகளில், 8.8 மில்லியன் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், இலகுவில் தடுக்கப்படக் கூடிய, அல்லது குணப்படுத்தக் கூடிய நோய்கள் காரணமாக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் இறந்து போனதாகவும், அதற்கு முக்கிய காரணம் ஊட்டக்குறைவே எனவும் அறியப்படுகிறது (UNICEF).
மிகப்பெரும் மருத்துவ மருந்து உற்பத்தியாளராக இருக்கும் அதேநேரத்தில், இந்தியாவில் 60 கோடிக்கும் மேலான மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதில்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
உணவுப் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதியில் கொடி கட்டிப் பறக்கும் இந்தியாவில் நான்கில் ஒரு இந்திய குடிமகனுக்கு தினசரி ஊட்டச்சத்துத் தேவைகளை பூர்த்தி செய்யப் போதுமான உணவு கிடைக்கவில்லை. ஐந்து வயதிற்குட்பட்ட 48 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குறைந்தவர்கள், 20 சதவீதம் பகீனமானவர்கள் நோஞ்சான்கள், 43 சதவீதம் எடை குறைந்தவர்கள். 6 முதல் 59 மாதங்கள் வளர்ந்த ஒவ்வொரு 10 குழந்தைகளிலும் ஏழு குழந்தைகளுக்கு அனீமிக் நோய்கள் [இரத்த சோகை] உள்ளது. பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (55 சதவீதம்), ஆண்களில் கிட்டத்தட்ட கால்சதவீத பேர் (24 சதவிகிதம்) இரத்த சோகை உடையவர்கள். [international agriculture organization].
ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தமிழ்நாட்டில்தான் அதிகமாக உள்ளனர் என்கிறார் குழந்தை உரிமை ஆர்வலர் தேவநேயன்.
மத்திய பிரதேசம், இராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரகாண்ட், பீஹார், சட்டீஸ்கர் மற்றும் அஸ்ஸாம் ஆகிய ஒன்பது மாநிலங்களும், இந்தியாவில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைகளில் மிகவும் பின் தங்கிய மாநிலங்களாகும். இந்த மாநிலங்களின் மொத்த மக்கள் தொகை, சுமார் 58 கோடி. இது இந்தியாவின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் சுமார் 48%. பாதி இந்தியா சுகாதாரத்தில் பின் தங்கியுள்ளது.
ஊட்டச்சத்து குறைபாட்டால், இந்தியாவில் சுமார் 36% குழந்தைகள் வயதுக்குரிய எடையை விடக் குறைவாகவும், 38% குழந்தைகள் வயதிற்குரிய உயரத்தை விட உயரம் குறைவாகவும் உள்ளனர். இந்தியாவில் போதுமான உணவைப் பெறும் 6 முதல் 23 மாதத்திற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை வெறும் 9.6% மட்டுமே.
உயரத்திற்கான எடை குறைந்த சிறுவர்களின் எண்னிக்கை இந்தியாவில் 25 ஆண்டுகளாக வளராமல் இருந்த நிலையிலேயே இருக்கிறது. [Business Standard daily newspaper].
இதன் மூலம் பெரும்பான்மையான இந்தியக் குடிமகன்களின் உணவுக்கும் ஊட்டச்சத்துக்கும் எந்த உத்தரவாதமுமில்லை என்பது தெளிவாகி இருக்கிறது. இந்தியாவில் அனைத்து வடிவங்களில் சமத்துவமின்மை சமூக அநீதி அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறது.
ஒரு குவளை எருமைப் பாலுக்கும் வழியில்லாமல் காலை உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் பள்ளிக் கூடம் செல்லும் நாகினா சிங் சொல்வதைக் கேளுங்கள் : “என் பெற்றோர் தினசரி கூலி வேலைக்காக அதிகாலையிலேயே சென்று விடுவார்கள். வீட்டில் சாப்பிட எனக்கு எதுவும் இருக்காது” என்கிறான்[al jazeera].
இந்தியாவில் மக்கள் ஊட்டச்சத்துடன் ஆரோக்கியமான வாழ்க்கை பெற வாய்ப்புள்ள திட்டங்கள் பெருமளவில் கொண்டு வரப்பட்டாலும் இந்தியாவில் நிலவும் வறட்சியும் கட்டமைப்புக் குறைபாடுகளும் இந்திய மக்களிடையே ஏழைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைந்தவர்களின் எண்ணிக்கையை குறையாமல் செய்து வருகிறது என்கிறார் பி.கே. ஜோஷி, தெற்கு ஆசியாவின் IFPRI இயக்குனர். இருப்பினும், நடப்பு சூழ்நிலையை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்யக்கூடிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறுகிறார். [THE HINDHU]
“இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு பெண்களிடையே பெருமளவு இருக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு ரத்த சோகையாக மாறுகிறது. இந்த பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எடை குறைவானவர்களாகவும் நோஞ்சான்களாகவும் பிறக்கிறார்கள். மேலும் இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு என்பது அதன் ஆழமான வறுமை மற்றும் அதன் அமைப்புமுறைகளில் உள்ள குறைவான செயல்பாடு மற்றும் போதாமையின் பிரதிபலிப்பாகும்.” என்கிறார் தாமஸ் சண்டி [CEO, Save the Children, India]
இந்த சிக்கல்கள் வளங்களின் பற்றாக்குறையால் உண்டானது அல்ல, மாறாக நாட்டின் வாய்ப்புகளும் வளங்களும் இன்னும் சமமாகவும் சமூகநீதியுடனும் வழங்கப்படாததன் விளைவு. மேலும் கிராமப்புற வறுமைக்கு முக்கியக் காரணிகளில் ஒன்று சாதிய ஒடுக்குமுறை. அது அரசின் பொதுக் கொள்கை மற்றும் சமூக நலத் திட்டங்களிலும் வெளிப்படுகிறது.
இன்றைய நிலையில் குறைந்த வருவாய் கொண்ட மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு மானிய உணவுக்கு வழியில்லை. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் மூன்றில் ஒன்று அல்லது அரை சதவீதம் பேருக்கு உணவுப் பங்கீடு [ரேசன்] அட்டையே இல்லை.
ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் பொது விநியோக திட்டத்தின் மூலம் அடைந்த சமூக நல மேம்பாட்டை ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ளாமல் தலைகீழ் மாற்றமாக ஆரோக்கியத்தை சீரழிக்கும் திட்டத்தை இப்போது கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு.
உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் சொல்வதைக் கேட்டு பொது விநியோக [ரேசன்] முறையை ஒழித்துக்கட்டும் திட்டம் சாப்பாட்டுக்கே வழியில்லாத இந்தியர்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டு வருகிறது.
பொது விநியோக முறையில் உணவுப் பொருட்கள் வழங்குவதற்குப் பதிலாக பணம் கொடுக்கும் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இருக்கும் ஏழ்மையை வறுமையை தீர்ப்பதற்குப் பதிலாக இன்னும் மோசமாக்கும் திட்டமே இது. வசதி இல்லாத மக்களிடம் அதிக செலவினத்தையே ஏற்படுத்தும். வறுமையை ஒழிப்பதர்குப் பதிலாக ஆரோக்கியமற்ற சீரழிவையே ஏற்படுத்தும் என்கிறார் ஸ்டான் காக்ஸ். [research coordinator at The Land Institute]
ஊட்டச்சத்து இல்லாத நோஞ்சான்கள் பெருகி வரும் நமது இந்தைய திருநாட்டில்தான் எதை எதையோ தின்று பெருத்த உடல்களோடு வளரும் உடல் பருமன், ஊளைச் சதை குழந்தைகளும் பெருகி வருகின்றனர். இதுவும் ஊட்டச்சத்துக் குறைபாடுதான்.

13 - uttachathu 6
2012 இல் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் சொன்னார் : பல நேரங்களில் நான் சொன்னதை மீண்டும் சொல்கிறேன் ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சனை “தேசிய அவமானம்” நமது உள் நாட்டு உற்பத்தி உயர்ந்த போதிலும் ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது உயர்ந்த எண்ணிக்கையில் இருப்பது நாம் அந்தப் பிரச்சனையில் வெற்றி பெறவில்லை என்று காட்டுகிறது.
நமது நாட்டின் பொருளாதாரம், நமது சமூகத்தின் ஆரோக்கியம் இந்த தலைமுறையின் ஆரோக்கியத்தில் தங்கியுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள ஆரோக்கியமற்ற தலைமுறையால் ஆரோக்கியமான எதிர்காலத்தை அடைய முடியாது என்றார். அவர் 2012 இல் சொன்னது இன்று நிலமை அதை விட மோசமாகி இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு தொடக்கம் வரை ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு எந்த ஒளியும் தெரியவில்லை.
தீர்வு தான் என்ன ?
குழந்தைகள் இறப்பு விகிதத்திற்கும் ஊட்டச்சத்து குறைபாடுக்கும் முக்கிய காரணம் தாயின் ஆரோக்கியம். மக்கள்தொகையில் சுமார் 35 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் தினமும் ஊட்டமான உணவு கிடைக்காத இந்த சூழ்நிலை தடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆரோக்கியத்துக்கு அடிப்படை உரிமையான உணவு வழங்கப்பட வேண்டும்.
குறிப்பாக பெண்களுக்கு ஊட்டச்சத்தான உணவு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். ஒரே வீட்டில் பிறந்திருக்கும் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கு அதிக ஊட்டச்சத்து கொண்ட உணவுகள் கிடைக்கும் நிலை மாற வேண்டும். ஆரோக்கியம் இல்லாத தாயால் ஆரோக்கியமான குழந்தையை பெறவோ, வளர்க்கவோ இயலாது.
தாய்ப்பால்தான் தாய், சேய் இருவருக்கும் ஆரோக்கியத்தையும், மன திருப்தியையும் தருகிறது.
குழந்தையை நோய்கள், நிமோனியா, ஒவ்வாமை போன்ற பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும். குழந்தைப் பருவத்தில் ஏற்படும் சில வகையான புற்றுநோய்கள், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சர்க்கரைநோய், உடல்பருமன் போன்ற வை உருவாவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கும்.
“ஊட்டச்சத்தினை மேம்படுத்துவதில் விவசாய முறைகளின் பங்கு’ என்ற தலைப்பில் 2017 ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடந்த கருத்தரங்கில் எம்.எஸ் சுவாமிநாதன் பேசிய போது : நாட்டில் பெரும்பாலான பெண்கள், குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் போன்ற ஊட்டச்சத்து குறைபாடு என்பது ஒரு வகையான மறைமுகப் பசியே ஆகும். இதனைக் கருத்தில் கொண்டு சுகாதாரம், வேளாண்துறை, ஊட்டச்சத்து ஆகியவற்றை ஒருங்கிணைத்து மத்திய மாநில அரசுகள் திட்டம் வகுக்கவேண்டும்.
அரிசி, கோதுமைக்குப் பதிலாக அதிக ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய சிறுதானியங்கள், பயறு வகைகளை பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் பசியற்ற, ஊட்டச்சத்து குறைபாடற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றார்.
கர்நாடக வேளாண் அமைச்சர் ஸ்ரீ கிருஷ்ணா பைரேகௌடா :நாட்டில் அனைத்து மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து மக்களுக்கும் ஊட்டச்சத்து சென்று அடைவதில் இன்னும் இந்தியா தன்னிறைவு அடையவில்லை.

குறிப்பாக பல்வேறு குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டுடன் இந்தியாவில் இருக்கின்றனர். இதைக் களைவதைத்தான் நாங்கள் அடுத்த இலக்காக கொண்டு செயல்பட உள்ளோம். அதன் ஒரு பகுதியாக பொது விநியோக திட்டத்தின் கீழ் கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களை வழங்கும் திட்டம் உள்ளது என்றார். [தினமணி]
நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கும் “ஊட்டச்சத்து” நெருக்கடி என்பது பெருத்த சப்தங்களுக்கு இடையே பலநாள் பட்டினி கிடந்தவனின் குரல் போல யாருடைய காதையும் எட்டாமல் தன்னையே வருத்திக் கொல்கிறது.
மனிதர்களாக இருப்பவர்களுக்கு ஒரே ஒரு கேள்விதான் அண்டை வீட்டான் பசித்திருக்க தன் வயிற்றை மட்டும் நிரப்பிக் கொள்வதற்குப் பெயர் என்ன?