சொந்த மக்களை கொன்றுகுவித்த அமெரிக்கா

இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற தருணத்தில் அமெரிக்கா ஜப்பானிலுள்ள ஹிரோஷிமா
நாகசாகி நகரங்கள் மீது அணு குண்டுகளை வீசி 2,75,000 மக்களை கொன்று குவித்தது.
அப்போது சொந்த மக்கள் மீது இப்படி ஒரு பழிபாவச்செயலை அமெரிக்கா செய்யுமா என்று
உலகத்தினர் கேட்டார்கள். அந்த கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது.
அரிசோனா பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறையை சேர்ந்த "கெய்த் மெயெர்ஸ்"
வெளிகொண்டுவந்துள்ள ஆய்வு அறிக்கை மேற்சொன்ன கேள்விக்கான விடை அளித்துள்ளது.
அமெரிக்கா அணுசக்தி காலத்திற்கு நுழைந்தவுடன் மிகவும் பொறுப்பற்ற தன்மையுடன்
நடந்துகொண்டது. 1951 முதல் 1973 ஆம் ஆண்டுகள் வரையுள்ள காலகட்டத்தில் சுமார் 3,40,000
முதல் 6,90,000 உயிர்களை அணு ஆயுத சோதனையால் இழந்துள்ளது.
1953 ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டு வரை நெவாடா பகுதியில் அமெரிக்கா நிலத்தின்
மேற்பரப்பில் அணு குண்டு சோதனைகளை செய்தது. அணுஆயுத ஆய்வாளர்கள் இப்படி
நிலப்பரப்பின் மீது சோதனை செய்வதின் ஆபத்தான விளைவுகளை பற்றி கவலை கொள்ளாமல்
பல்வேறு சோதனைகளை மேற்கொண்டார்கள்.
அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் மையம், நெவாடாவின் சோதனை தடத்திலிருந்து வெளியான
கதிர்வீச்சு ஐசோடோப்பான ஐயோடின் 131 குறித்த அளவீடுகளை பதிவு செய்துவைத்திருந்தது.
புற்றுநோய் மையம் பாலிலும், பரந்துபட்ட நிலப்பரப்பிலும் பதிவுசெய்யப்பட்ட கதிர்வீச்சின்
அளவுகளையும் தன்னுடைய தரவுகளையும் ஒப்பிட்டு மெயெர்ஸ் ஒரு முடிவிற்கு வருகிறார்.
அதாவது "பனிப்போர் நடைபெற்ற" காலத்தில் அணு குண்டு சோதனையால், ஹிரோஷிமா
நாகசாகியில் கொன்றதை விட தன் சொந்த மக்களை அமெரிக்கா மூன்று மடங்கு அதிகமாக
கொன்றுள்ளது. அதை மக்கள் உணரவில்லை. "பகுதி அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம்"
(partial test ban treaty) நடைமுறைக்கு வந்ததால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள்
காப்பாற்றபட்டுள்ளதாக சொல்கிறார் மெயெர்ஸ்.
பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இன்றளவும் இந்த சோதனைகளால் பாதிப்படைகிறார்கள்,
அரசாங்கத்தின் மருத்துவ உதவியை தவிர அவர்களுக்கு வேறு எதுவும் கிடையாது. இந்த ஆய்வு
அறிக்கை அணுகுண்டுகள் சொந்த மக்களை கொன்றொழித்த கதையை தலைமுறைகளுக்கு
சொல்லும், அணு ஆயுதங்கள் இல்லா உலகம் அமைய பாடுபடவைக்கும்.

பொறியாளர் சுந்தர்ராஜன்
பூவுலகின் நண்பர்கள்