சின்னதாய் ஒரு சிந்தனை…

முஸ்லிம் உம்மத் உலகின் பல பாகங்களிலும் அடிவாங்கிக் கொண்டிருக்கிறது. அகதிகளில் பெரும் பகுதியினர் முஸ்லிம்களே.
முஸ்லிம்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்படுகிறது.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது முஸ்லிம்களில் பலருக்கு, குறிப்பாக இளம் சந்ததியினருக்கு, அதிலும் குறிப்பாக சகோதர சமூகங்களுடன் கலந்து வாழ்பவர்களுக்கு ஒருவகையான தாழ்வு மனப்பாங்கு உருவாக வாய்ப்பிருக்கிறது.
தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்வது அவமானமாகத் தோன்றலாம். இஸ்லாம் உண்மையானதுதானா என்றொரு சந்தேகமும் மனதுக்குள் எட்டிப் பார்க்கலாம்.
இத்தகைய விபரீதங்களைத் தவிர்ப்பதற்கு இஸ்லாமிய வரலாறு பல மட்டங்களிலும், பல வடிவங்களிலும் அடிக்கடி மீட்டப்பட [நினைவுறுத்தப்பட] வேண்டும். கோளாறு இஸ்லாத்தில் அல்ல என்பது உணர்த்தப்பட வேண்டும்.
முஸ்லிம் உம்மத் அல்குர்ஆனை வாழ்வில் வழிகாட்டியாக ஏற்று நடந்த காலமெல்லாம் புகழ் பூத்த சமூகமாக, உலகுக்கு வழிகாட்டும் சமூகமாகத் திகழ்ந்தது என்பது ஆதாரப்பூர்வமாக விளக்கப்பட வேண்டும்.
இன்று மேற்கு சொந்தம் கொண்டாடும் சகல அறிவுத் துறைகளும் அல்குர்ஆனின் நிழலில் முஸ்லிம்களால் உரம் போட்டு, நீர் பாய்ச்சி வளர்க்கப்பட்டவை என்பதை முழுச் சமூகமும் அறிந்து கொள்வதற்கான செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அல்குர்ஆனின் வழிகாட்டுதலை விட்டும் தூரமானதே இன்றைய இழிநிலைக்குக் காரணம் என்பதை சமூகம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக நம் சமூகத்துக்கு ஸஹாபாக்கள் காலம் வரையான வரலாறு மட்டுமே தெரியும். அந்த வரலாறுகள்அதிலும் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டுமே திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றன.
இஸ்லாம் உலகின் பெரும் பகுதியை ஆண்ட வரலாறும் அறிவியல் துறைகளில் கொடிகட்டிப் பறந்த வரலாறும் சமூகத்தில் பெரும் பகுதியினரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படாமல் இருக்கிறது.
அல்குர்ஆனின் வழிகாட்டல்கள் எல்லாத் துறைகளிலும் முன்மாதிரியாக விளங்கக் கூடிய சமூகம் ஒன்றைக் கட்டியெழுப்பும் வல்லமை கொண்டவை என்பது கோட்பாட்டு அளவில் மட்டுமன்றி வரலாற்றுச் சான்றுகளுடனும் மக்களுக்கு முஸ்லிம்களுக்கு விளக்கப்பட வேண்டும்.
அப்போதுதான் இஸ்லாம் நூற்றுக்கு நூறு வீதம் நடைமுறைச் சாத்தியமானது என்பதை உள்ளங்கள் ஒப்புக் கொள்ளும். மனதுக்குள் மறைந்திருக்கும் சந்தேகங்கள் நீங்கும். இஸ்லாத்தின் மீதான நம்பிக்கை ஓங்கி வளரும். மீண்டும் அந்த நிலையை அடையும் அடைய வேண்டும் என்ற வேட்கை மனதில் ஓங்கும். அதற்கான பாதையில் கால்கள் நடக்கத் தொடங்கும்.
வாருங்கள்! அதற்கான பாதையைத் திறந்து கொடுப்போம்.