பனிப்போர் துருக்கி - அமெரிக்கா

உலகின் தாதாவாக தன்னைக் கருதிக் கொள்ளும் அமெரிக்கா மத்திய கிழக்கு முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைக்க பெரும் முயற்சி செய்கிறது. அதற்கு பெரும் தடையாக இருப்பது முன்னாள் இஸ்லாமிப் பேரரசான இன்றைய துருக்கி.
நேட்டோவின் உறுப்பு நாடுகளாக அங்கம் வகிக்கும் அமெரிக்கா மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளுக்கிடையில் நடக்கும் பனிப்போர் உலகப் பொருளாதாரத்தில் மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் விருப்பத்துக்கு இணங்காமல் செயல்படும் துருக்கியை வழிக்குக் கொண்டு வர, துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் மற்றும் இரும்பு பொருட்கள் மீது கடும் கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்தது. இதனால் துருக்கியின் பொருளாதாரம் கடுமையாக பாதிப்படைய ஆரம்பித்தது. கடந்த ஒரு ஆண்டுகாலத்தில் மட்டும் துருக்கி நாணயமான லிராவின் மதிப்பு சுமார் 45 சதவீதம் வீழ்ச்சியினைச் சந்தித்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவிலிருந்து துருக்கியில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீதும் துருக்கி தடைவிதித்து பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவின் ஐஃபோனை கொரியாவின் சாம்சங்கும் துருக்கியின் ப்ராடக்டும் ஈடுகட்டும் எனவும் கூறியுள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு
அமெரிக்காவுடனான துருக்கியின் உறவு மோசமடைந்திருப்பதும், துருக்கியின் எஃகு மற்றும் அலுமினியத்தின் மீது அமெரிக்கா வரிகளை உயர்த்தியிருப்பதும் துருக்கி நாணயமான லிராவின் மதிப்பு மிகக்கடுமையாக வீழ்ந்ததற்கு காரணங்களாகும்.
இதன் விளைவாக முதலீட்டாளர்கள் வளர்ந்துவரும் நாணயமான ரூபாயை விட அமெரிக்க டாலர்கள் முதலான பாதுகாப்பான நாணயங்களை நாடத் துவங்கியுள்ளார்கள். இந்தியாவிலும் அது எதிரொலித்தது.
தற்போது துருக்கியின் லிரா மதிப்பு சரிவானது இந்தியாவின் நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. இதனால் இந்திய ரூபாய் மதிப்பானது கடும் சரிவை சந்தித்துள்ளது. இது வர்த்தக இடைவெளிக்கு வித்திட்டுள்ளது. இந்தியாவின் வணிக பற்றாக்குறையானது கடந்த ஐந்து வருடத்தில் இவ்வருடம் ஜூன் மாதம் 16.6 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான இன்னொரு முக்கிய காரணம் இந்தியாவில் எண்ணெய் இறக்குமதி அளவு. இந்தியா தனது தேவைக்கான எண்ணெய் அளவில் சுமார் 80 சதவீதம் இறக்குமதி செய்கிறது. உலகில் அதிகளவு எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் இந்திய நாணயம், அமெரிக்க நாணயத்துடன் வலுவாக போட்டி போட்டது. 1947இல் இந்தியா சுதந்திரமடைந்தபோது டாலரும், ரூபாயும் சமமாக இருந்தன. அப்போது இந்தியாவிற்கு கடன் ஏதும் இல்லை. பிறகு 1951இல் நாட்டில் முதல் ஐந்தாண்டு திட்டம் தொடங்கப்பட்டபோது, இந்திய அரசு வெளிநாடுகளிடம் இருந்து கடன் வாங்கத் தொடங்கியது. அதன்பிறகு ரூபாயின் பயணம் சரிவை நோக்கித் தொடங்கியது.
இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 70 ரூபாய் 32 பைசாவாக சரிந்தது.