முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சவால்களை எதிர்கொள்ள..

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபழீல் (நளீமி)

muslim
முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சவால்களின் போது உணர்ச்சிகளுக்கு முன்னுரிமை வழங்காமல் அறிவுப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபடுவதே சாலச் சிறந்ததாகும். வேகத்தோடு விவேகமும் வேண்டும். ஆங்கிலத்தில் கூறப்படுவது போல் ஷிலிளிகீ ஙிஹிஜி ஷிஹிஸிணி (மெதுவாக நடக்கலாம்; ஆனால், நடப்பது நிச்சயமாக இருக்கும்)
நமது சமூகத்துக்கு இன்று தேவைப்படுவது நன்கு திட்டமிடப்பட்ட ஷிஜிஸிகிஜிணிநிமிசி றிலிகிழிஷி (சாதுரியமான திட்டங்கள்) ஆகும். அவற்றை நிறைவேற்ற ஊக்கமும், திறமைகளும், சமூகப் பிரக்ஞையும், உளப்பூர்வமான தன்மையும், தியாக சிந்தையும் படைத்தவர்கள் முன்வரவேண்டும்; அறிக்கைகளை வெளியிடுவதுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் அதேநேரம் செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.
சமூகத்திலுள்ள கடும்போக்குள்ளவர்கள் நெறிப்படுத்தப்பட வேண்டிய தேவை இருப்பது போலவே கடும்போக்கு சிந்தனையுள்ளவர்கள் உருவாகாமல் இருப்பதற்கான நீண்டகாலத் திட்டங்களை வகுப்பதும் அவசியமாகும். அதற்கான சில பணிவான முன்மொழிவுகள் வருமாறு:
1. இஸ்லாமியக் கல்வி நிலையங்களில் - அதாவது, ஜாமிஆக்கள் மத்ரஸாக்களில் பிக்ஹுல் அகல்லியாத் (நவீன இஜ்திஹாதின் வெளிச்சத்தில் சிறுபான்மை நாட்டின் வாழ்க்கைத் திட்டம்) பற்றிய தனியான பாடத்திட்டம் மிகவும் திறமையான விரிவுரையாளர்களால் கற்பிக்கப்படுவதோடு மாணவர்களுக்கு மத்தியில் அது தொடர்பான விழிப்புணர்வை ஆழமாக ஏற்படுத்த சிறப்பு விரிவுரைகள், கல்வி முகாம்கள், ஆய்வுமுயற்சிகள் நடத்தப்பட வேண்டும். அத்துடன் ’பிக்ஹுல் மகாஸித்’ -(இஸ்லாமிய ஷரீஆவின் இலக்குகள்), ’பிக்ஹுல் மஆலாத்’ (இஸ்லாமிய செயல்பாடுகளது விளைவுகள் தொடர்பான ஆய்வுகள்) போன்றவையும் விரிவாக கற்பிக்கப்பட வேண்டும். முஸ்லிம்களின் சிந்தனை முறையை நெறிப்படுத்தும் மத்திய நிலையங்களாக மதரஸாக்கள் மாற்றப்படுவது அவசியமாகும். எத்தனை மதரஸாக்கள் உள்ளன என்பது முக்கியமல்ல. எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் எத்தனை பட்டதாரிகளை அவை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதே முக்கியமான அம்சமாகும்.
2. மண்ணுக்கு ஏற்ற சீர்திருத்த திட்டம், தஃவா வழிமுறை, மற்றும் மாற்றத்துக்கான திட்டங்கள் தொடர்பான விரிவான ஆய்வுகளை உலமாக்களும் துறைசார்ந்த நிபுணர்களும் கூட்டாக இணைந்து மேற்கொள்வது காலத்தின் தேவையாகும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் எகிப்து, பாகிஸ்தான் போன்ற அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள், தனிமனிதர்கள், அமைப்புக்கள் போன்றவை சீர்திருத்தங்களுக்காகவும், சவால்களை எதிர்கொள்ளவும், கடைபிடிக்கும் வழிமுறைகளையும்; முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அவர்கள் தமது தனித்துவங்களையும் இருப்பையும் பாதுகாத்துக் கொள்ள கையாளும் திட்டங்களையும் நன்கு படித்து நமது மண்ணுகேற்ற வாழ்க்கைத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
3. இந்திய முஸ்லிம்கள் சிறுபான்மையாகவும் சிதறுண்டும் வாழ்கிறார்கள். பிராந்திய, சர்வதேச அரசியல் சதுரங்க மேடையில் இடம் பெறும் காய் நகர்த்தல்களாலும் வெட்டுக் குத்துக்களாலும் பொதுவாக இந்திய மக்கள் பகடைக் காய்களாக மாறும் போது, முஸ்லிம்களும் அதன் பாதிப்புக்களை அனுபவிக்காமல் இல்லை. அரசியல்வாதிகள் தமது இருப்பைப் பாதுகாக்க மக்களுடைய மத, இன, மொழிப் பற்றை துரும்புகளாக ஆக்கிக் கொள்ளும் மோசமான கலாசாரம் கொண்ட நாடு இது. எனவே, உரிமைப் போராட்டங்களின் போது சாணக்கியமும், தூர நோக்கும் கொண்ட புத்தி ஜீவிகளது சேவையைத்தான் முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்து நிற்கிறது. துரதிஷ்டவசமாக முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகளில் கணிசமானோர் தமது வருமானத்தோடு, குடும்ப வட்டத்துக்குள் மட்டும் நின்று விடுகின்றனர். சிலர் தாய் நாட்டு மக்களது துன்பங்களைக் கூட கண்டு கொள்ளாமல் உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள். சமூகத்துக்கு அவர்களால் கிடைக்க வேண்டிய பங்ளிப்பை அவர்கள் செய்யாமல் இருப்பதால் நிலைமை மோசமடைந்திருக்கிறது.
சமூகம் சந்திக்கும் அவலங்களைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு சிலர் தமக்குச் சரியென்று படுபவதை செய்து விடுகிறார்கள். அவர்கள் அந்த நிலையில் இருந்து விலக வேண்டும் என சமூகம் எதிர்பார்த்தால் இந்த புத்திஜீவிகளை சமூகக் களத்துக்குக் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். புத்திஜீவிகளால் இந்த இடைவெளிகள் நிரப்பப்பட்டால் தகுதி இல்லாதவர்கள் அடையாளமிழப்பார்கள்.
4. தலைமுறை இடைவெளி (நிணிழிணிஸிகிஜிமிளிழி நிகிறி) என்ற பிரச்சினை, சமூகப் போராட்டங்களில் சம்பந்தப்படும் இளைஞர்கள் முக்கியமான உலமாக்களையும், சமூகத்தின் முன்னணி வகிப்பவர்களையும் வெறும் தத்துவம் பேசுவோராகவும் நடைமுறைக்கு ஒவ்வாத கற்பனைகளில் மிதப்போராகவும். தமது உணர்வுகளைப் புரியும் நிலையில் கூட அவர்கள் இல்லை என்றும் கருதுகிறார்கள். இந்நிலைக்கு தீர்வு காண்பது எவ்வாறு?
முஸ்லிம் சமூகத்தின் இளைஞர்களை மூன்று பிரிவாக பிரிக்கலாம்:
அ. முதல் பிரிவினர், தவறான போக்குகளால் சீரழிந்து, கொண்டிருக்கிறார்கள். கல்வியிலோ சமூக விவகாரங்களிலோ அவர்களுக்கு அக்கறை இல்லை. சிற்றின்பங்களில் மூழ்கி எது பற்றியும் கவலைப்படாது சினிமாவைப் பார்த்தே தமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்கிறவர்கள். அவர்களுக்கு இந்த மார்க்கச் சண்டைகள் எல்லாம் வெகுதூரம். இவர்கள் குத்பாக்களுக்கு வந்தாலும் தூங்குவார்கள், அல்லது பேசிக் கொண்டிருப்பார்கள். அல்லது குறைந்த பட்சம் போன்களில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் நூற்றுக்கு எழுபது சதவீதம் இருக்கலாம்.
ஆ. சுமார் இருபது சதவீத இளைஞர்கள் மிதவாத இஸ்லாமிய இயக்கங்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். இளம் தலைமுறையினரை வழிநடத்தும் அடிப்படையான திட்டங்களோடு சில இயக்கங்கள் இயங்குவதை மறுப்பதற்கில்லை. ஆனால், அத்திட்டங்கள் இயக்கங்களது தொடர்பற்ற நிலையில் இருக்கும் 80% இளைஞர்களைச் சென்றடையவில்லை.
இ. மூன்றாம் பிரிவினர், சுமார் பத்து சதவீத இளைஞர்கள். இவர்கள் முதலாம் பிரிவினர் போன்று பாவங்களில் சம்பந்தப்படாதவர்கள். ஆனால், இஸ்லாமிய உணர்வுள்ளவர்கள். அதேநேரம் மிதவாத இஸ்லாமிய இயக்கங்களில் இணைந்து கொள்ளாதவர்கள். கட்டுக்கடங்காத பீரிட்டுப் பாயும் இஸ்லாமிய வேகத்தால் சமூக வலைத்தளங்களில் பிறசமூகங்களிலுள்ள தீவிர கருத்துள்ளவர்களையும் அவர்களது செயல்பாடுகளையும் ’கன்னா பின்னா’ என்று மட்டரகமான சொற்களால் விமர்சித்து சமூகத்துக்கே சிரமம் தருவார்கள். ‘வன்முறைகளுக்கு வன்முறைகளே’ பதிலடி என்று சிந்திப்பவர்கள். இவர்கள் கருத்துக்களில் தீவிர தன்மையுள்ளவர்கள்.
இளைஞர்கள் குறித்த இந்தப் புரிதல் அவர்களை வழி நடத்துகின்றவர்களுக்குத் தேவை. ஒவ்வொரு சாராருக்கும் ஒவ்வொரு வகையான வழிகாட்டல்கள் தேவைப்படலாம். எனவே, ‘தலைமுறை இடைவெளி’ யை நீக்குவதற்கான முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்படுவது அவசியமாகும்.
5. அரசியல்வாதிகளது பொறுப்பு
சமூகத்தின் பிரச்சினைகளை மிகச்சரியாக மத்தியமன்றத்திலும், சட்டமன்றத்திலும் உள்ளூராட்சி சபைகளிலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வைக்க வேண்டும். துல்லியமான புள்ளிவிபரங்கள், தரவுகளைக் கொண்டதாகவே அவர்களது உரைகளும், விவாதங்களும் அமைவது அவசியம். அவர்களால் அவற்றைத் தயாரித்துக் கொள்ள முடியாத போது துறைசார்ந்தவர்களது உதவியை அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
நாம் காலம்காலமாக சம்பவங்கள் நடந்து முடிந்த பின்னரே தீர்வுகளைக் காண முயற்சிக்கிறோமே தவிர சமூகத்தை கட்டிக்காப்பதற்கான பாதுகாப்பு அரண்களை நிர்மாணிப்பதற்கும் உறுதியான அஸ்திவாரங்களை அமைப்பதற்கும் முயற்சிப்பது மிகக் குறைவாகும்.
இவற்றை நீக்குவதற்கான முயற்சிகளில் இறங்கவேண்டும். வருமுன் காக்கும் நீண்ட காலத்திட்டங்களை வகுக்க வேண்டும். விமர்சனங்கள் ஆக்கபூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும், அன்பு கலந்ததாகவும் அமையவேண்டும். வெறும் விமர்சனங்கள் சமூகத்தை மேலும் பிளவுபடுத்தவே உதவும்.
எல்லாத் திட்டங்களிலும் அடிப்படையாக அமைவது நமது ஆன்மீகப் பகுதியாகும். அல்லாஹ்வுக்கும் நமக்கும் இடையிலான தொடர்பை மிகப் பலமாக அமைத்துக் கொள்வது மிக முக்கியமான அம்சமாகும். ஆழமான ஈமான், அல்லாஹ்வின் மீதான தவக்குல், இக்லாஸ், திலாவதுல் குர்ஆன், திக்ர், அவ்ராதுகள், தொழுகை, நோன்பு என்பன நமக்கு பலத்தையும், வெற்றியையும் நிச்சயமாகக் கொண்டுவரும்.
மேலும், நமது பண்பாடுகளை இஸ்லாம் கூறும் விதத்தில் அமைத்துக் கொள்வதும் நமது மிக முக்கியமான பலங்களில் ஒன்றாகும். அல்லாஹ்வின் தீனைப் பாதுகாக்க நம்மாலான முயற்சிகளில் ஈடுபடுவோமாக. அவன் நமக்கு அருள்பாலிப்பானாக!