சமூக உளவியலில் ஆதிக்கம் செலுத்தும் போட்டியும் பொறாமையும்.

அமானிதங்கள் (ஒருவரை நம்பி ஒப்படைக்கப்பட்டவைகள்) பாழ்படுத்தப்படுவதற்கான முதன்மையான காரணம் போட்டி பொறாமை ஆற்றாமை எனும் இழி குணங்கள். 

இவை இயல்பாகவே மனித மனங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன, மற்றொருவருக்கு இறைவன் வழங்கியுள்ள அறிவு, ஆற்றல், ஆரோக்கியம், திறமைகள், வளங்கள் வசதி வாய்ப்புக்கள் போன்று தனக்கும் கிடைக்க வேண்டும் என்ற போட்டியுணர்வு இருப்பதில் தவறில்லை என்றாலும் அவை அவரிடமிருந்து இல்லாமல் போய்விட வேண்டும் என்ற பொறாமை உணர்வு மிகவும் ஆபத்தானது.
இத்தகைய இழிவான குணங்கள் அடுத்தவருக்கு இழைக்கும் தீங்குகளை விட அவற்றை கொண்டிருப்போருக்கே அதிக தீங்குகளைக் கொண்டு வருகின்றன. அதனால் தான் அவற்றை உளவியல் நோய்கள் என இனிய மார்க்கம் இஸ்லாம் சொல்லித் தருகின்றது.
ஒரு ஆரோக்கியமான சிறந்த உள்ளத்தில் தற்பெருமை, பொறாமை, பேராசை, கெட்ட எண்ணங்கள், அகம்பாவம், அகங்காரம், நயவஞ்சகம் போன்ற இழிகுணங்கள் ஒரு பொழுதும் இருக்க முடியாது.
நப்சுடைய தீய குணாதிசியங்களில் இருந்து தூய்மை பெறும் “தஸ்கியா” ஒரு விசுவாசியின் முதன்மையான கடமையாகும். நமது தொழுகை, நமது நோன்பு, நமது ஜக்காத்து, நமது ஹஜ்ஜு என கடமையான மற்றும் நபிலான வணக்க வழிபாடுகள் அனைத்தும் நமது ஆன்மாக்களை பரிசுத்தப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவற்றில் பயனில்லை என்பதனை குர்ஆன் ஹதீஸ் வாயிலாக அறிந்திருக்கின்றோம்.
போட்டியும் பொறாமையும் தனிநபர், குடும்ப, சமூக வாழ்வில் ஏற்படுத்துகின்ற தாக்கங்கள் பற்றி அதிகம் பேச கேட்டிருக்கின்றோம், என்றாலும் குறிப்பாக ஒரு விஷயத்தை மட்டும் இந்த பதிவில் சுட்டிக் காட்டலாம் என நினைக்கின்றேன்.
இன்று நமது சமூக மற்றும் பொது வாழ்வில் நாம் எதிர் கொண்டுள்ள பல்வேறு சவால்கள், அவற்றிற்கு முகம் கொடுப்பதில் நமது பின்னடைவுகளை ஆராய்கின்ற போது ஒரு உண்மை புலப்படுகின்றது.
சமூகத்தின் எல்லா மட்டங்களிலும், எல்லாத் துறைகளிலும், எல்லாத் தரப்புக்களிடமும் அடுத்தவரை அங்கீகரிக்கின்ற, திறமைசாலிகளை கௌரவிக்கின்ற, அறிவு ஆற்றல்களுக்கு, துறைசார் நிபுணத்துவங்களுக்கு மதிப்பளிக்கின்ற அல்லது தமக்கு மத்தியில் இலை மறை காய்களாக மறைந்து கிடக்கின்ற பல நூற்றுக்கணக்கான திறமையும் திறனும் வாய்ந்த வளமான மனிதர்களை தேடி இனம் காணுகின்ற உயரிய நாகரீகம் நம்மிடம் இல்லாது போயிருக்கின்றது.

தன்னைவிடவும் ஒருவர் தனது துறையில் தேர்ந்து சிறந்து விடக் கூடாது என்றும், தகுதி இருக்கின்றதோ இல்லையோ தானோ தனக்கு வேண்டியவரோ பதவி அதிகாரம் அந்தஸ்துக்களில் இருக்கவேண்டும் என்றோ பலரும் எண்ணுகின்றார்கள், போட்டியும் பொறாமையும் சமூக உளவியலில் மிகவும் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

ஒருவர் வாழ்க்கையில் தனது கடின உழைப்பு, அறிவு ஆற்றல்கள், தேடல்கள் மூலம் உயர்ந்து செல்ல எத்தனிக்கின்ற போது அல்லது அவருக்கு உரிய நியாயமான அங்கீகாரம் கிடைக்கவிருக்கின்ற போது காலை வாரிவிடுவதில் கவனம் காட்டுபவர்கள் அதிகரித்துக் காணப்படுகின்றனர்.
உண்மையில் அமானிதங்கள் பாழ் படுத்தப்படுவதற்கு இந்த போட்டியும் பொறாமையும் அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன. தகுதியானவர்களுக்கு அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை, இடத்தை, பதவியை, பொறுப்பை வழங்குவது அமானிதமாகும், இமாமத், தலைமை, ஆட்சி அதிகாரம் இவையெல்லாம் அமானிதங்களாகும்.
முண்டியடித்துக் கொண்டு பொறுப்புக்களை பதவிகளை ஆட்சியை அதிகாரத்தை தகுதியற்றவர்கள் தட்டிப் பறித்துக் கொள்வதனை அதற்காக சூழ்ச்சிகள் செய்வதனை இஸ்லாம் தடுத்துள்ளது, அதேபோல் தகுதியற்றவர்களிடம் அவை சென்றடைவதை பார்த்துக் கொண்டிருப்பதும் அமானிதங்களை பாழாக்குவதாகும். குறுக்கு வழியில் ஒருவருக்குச் சேர வேண்டிய தொழிலை, அந்தஸ்தை, செல்வத்தை அடைய முனைவது அமானிதத்தை பாழாக்குவதாகும்.
பாராட்டப்பட வேண்டிய ஒருவரை பாராட்டாமல் இருப்பது, ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒருவரை ஊக்குவிக்காமல் இருப்பது, அங்கீகரிக்கப்படவேண்டிய ஒருவரை அங்கீகரிக்காமல் இருப்பது அல்லது அவற்றையெல்லாம் தகுதியில்லாவிடினும் தாமே அடைந்து கொள்ள முனைவது எல்லாம் அமானிதங்களை பாழ் படுத்துவதாகும்.
கவலைக்குரிய விஷயம் என்ன வென்றால் ஆன்மீக பண்பாடுகள் பற்றியும் அதை பயிற்றுவிப்பது பற்றியும் அதிகம் பேசுகின்ற நிறுவனங்கள் அமைப்புக்களில் கூட அடுத்தடுத்த தலைமைத்துவக் கட்டமைப்புக்கள் உருவாக்கப்படாமல் இருப்பதற்குப் பின்னால் இத்தகைய பெரும் உளவியல் கோளாறுகள் காணப்படுகின்றன.
இன்று சமூகத்தின் பெரும் சாபக்கேடாக மாறிவருகின்ற உரியவர்களுக்கு பொறுப்புக்கள் வழங்கப்படாமைக்கும், தகுதியானவர்கள் இனம் காணப்படாமைக்கும் பின்னால் அவர்களும் அவர்களை சூழவுள்ள அடுத்தவர்களுக்கு வழி விடவிரும்பாத சிறு சிறு குழுவினரும் காணப்படுகின்றனர்.
இன்று நமது கொள்கைகளும், கோட்பாடுகளும், பாதையும் பயணமும் இலக்குகளும் தெளிவாக இருப்பினும் நமக்கு மத்தியில் அதிகரித்த முரண்பாடுகளும் பிளவுகளும் அடிதடிகளும் இருப்பதற்கு காரணம் இத்தகைய சமூக உளவியலேயாகும்.
ஒவ்வொருவரும் அடைய வேண்டிய இலக்குகளை விட அடையாளங்களிலேயே அதிகம் கவனம் செலுத்துகின்றனர், அதனால் சாதனைகளை விட இன்று சோதனைகளே அதிகரித்துக் காணப்படுகின்றன.
“நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டினோம், ஆனால் அதை சுமந்துக்கொள்ள அவை மறுத்தன, அதைப்பற்றி அவை அஞ்சின. (ஆனால்) மனிதன் அதை சுமந்து கொண்டான். நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான் ” [33:72]
பரஸ்பரம் அன்பு பாராட்டுகின்ற ஒரு சமூகத்தில் மாத்திரமே ஐக்கியம், சமாதான சகவாழ்வு ஏற்பட முடியும். அன்பு பாராட்டாத தனி நபர்களாயினும், குடும்பங்களாயினும், சமூகங்களாயினும் பரஸ்பரம் அன்பு பாராட்டா விட்டால் அங்கு விட்டுக் கொடுப்பும் தாராளத் தன்மையும், மன்னித்தலும் இருக்க மாட்டாது.
மாறாக, அறிவு, செல்வம், இலக்குகள் குறித்த இறுமாப்பும், அகங்காரமும், போட்டி பொறாமையும், சுய நலமும் மேலோங்கி நிற்கும். அடுத்தவரை நாம் அங்கீகரிக்கவும் கூடாது, அவர்களுக்கு அங்கீகாரங்கள் கிடைத்து விடவும் கூடாது என்பதே பிரதான நிகழ்ச்சி நிரலாக இருக்கும். நேர்மையான அணுகுமுறைகள் அற்றுப் போய் எதிலும் எங்கும் எதிர்மறையான அணுகுமுறைகள் ஆதிக்கம் செலுத்தும்.
அதனால் தான் விசுவாசிகள் தங்களுக்கிடையில் பரஸ்பரம் அன்பு பாராட்டக் கூடிய சகோதர வாஞ்சையுடைய அடியார்களாக இருத்தல் வலியுறுத்தப்பட்டுள்ளது.
“முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், நிராகரிப்போர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்”
(ஸுரத்துல் பாத்ஹு 48:29)
இறுதித் இறைதூதர் பற்றிக் கூறும் பொழுது எல்லாம் வல்ல அல்லாஹ் மனித குலத்தின் மீது கருணையின் வடிவமாகவே அன்றி நாம் உம்மை அனுப்பவில்லை என்று கூறுகின்றான். “அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.” (ஸுரத் ஆல் இம்ரான் 3:159)
அன்பிலா அறிவும் அறிவும் மோதுகின்ற போது அங்கு ஆணவமும் செறுக்கும் மேலோங்கி நிற்கின்றன, ஆனால் அன்பின் முன் அறிவுகூட அடங்கிச் செல்கின்றது. அதே போன்று தான் அன்பிலா உழைப்பும் செல்வமும் அறநெறி தவறுகின்றன. அங்கு போட்டியும் பொறாமையும் தலை தூக்கி விடுகின்றன, அன்பிற்கும் பாசத்திற்கும் முன்னாள் கணக்கு வழக்குகள் கூட பிழைத்துப் போகின்றன.
அன்பு, கருணை, பற்று பாசம் என்பவை தனி மனித, குடும்ப, அண்டை வீட்டார், சமூக வாழ்வில் ஊக்குவிக்கப் படுவதற்கான அனைத்து ஆன்மீக பண்பாட்டு விழுமியங்களை இனிய இஸ்லாம் போதிக்கின்றது.
நீ எத்தகைய அறிவு படைத்தவனாகவும் இருக்கலாம், செல்வம், செல்வாக்கு, அதிகாரம், அந்தஸ்து படைத்தவனாகவும் இருக்கலாம் அவை அனைத்தும் தாயின் அன்பிற்கு முன்னால் தோற்றுப் போகின்றன, இல்லையேல் சுவனம் உனக்கு இல்லை. அதே போன்றே குழந்தைகளின் பிள்ளைகளின், உடன் பிறப்புக்களின், உறவுகளின் அன்பிற்கு முன்னால் அவை தோற்றுப் போகின்றன, இன்றேல் நீ மனிதனே இல்லை.
விசுவாசிகள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுதே ஒரு பிரகடனம் செய்து கொள்கின்றார்கள், உங்கள் மீது சாந்தி, அமைதி, சமாதானம் உண்டாகட்டும், இங்கு பரஸ்பர நல்லுறவு பேணப்படுதல் வலியுறுத்தப்படுகின்றது, விசுவாசிகளுக்கிடையில் நிலவுகின்ற பரஸ்பர அன்பும் சகோதரத்துவமும் ஒருவரின் நாவினாலோ நடத்தைகளினாலோ பாதிக்கப்பட்டால் அவர் நம்மைச் சேர்ந்தவரல்ல என்று இறைத் தூதர் (ஸல்) கூறியுள்ளார்கள்.
பரஸ்பரம் அன்பு பாராட்டாத ஒரு சமூகத்தில் வெறும் கொள்கைகளும், கோட்பாடுகளும், கருத்தாடல்களும் முரண்பாடுகளையே தோற்றுவிக்கின்றன, அங்கு மதத்திற்கு மதம் பிடிக்கின்றது, வெறிபிடிக்கின்றது, அங்கு புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, சமயோசிதம், உணர்வுகளை மதித்தல் மன்னித்தல், மறத்தல் போன்ற அடிப்படை ஒழுக்க விழுமியங்கள் உயிர்வாழ்வதில்லை.

இந்த உலகம் அன்பிற்காக, அரவணைப்பிற்காக, கருணைக்காக ஏங்கி நிற்பதனை எல்லா வாழ்க்கைத் தத்துவங்களும் உணர்த்தி நிற்க, மனித குலத்தின் விமோஷனத்திற்கான கருணையின் தூதை சுமந்துள்ள சிறந்த உம்மத்தாக பறை சாற்றுகின்ற ஒரு சமூகம் உள்வீட்டில் கொள்கைகளின் பேரால் முரண்பாடுகளை விதைத்து அடிப்படை வாழ்க்கைத் தத்துவங்களை குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கின்றப்பது அபத்தமானது.
விசுவாசிகள் மத்தியில் விடாப்பிடியான வாதப் பிரதிவாதங்கள், தர்க்கங்கள், குதர்க்கங்கள் அதிகரித்து வருவது வேதனையாக இருக்கின்றது, அதிகரித்த மன உளைச்சளைத் தருகின்றது.
நாம் நமக்கு மத்தியில் பரஸ்பரம் அன்பையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்ப ஆயிரம் நியாயங்கள் இருக்க வெவ்வேறு குழுக்களாக முரண்பட்டுக் கொள்வதற்கு ஒருசில நியாயங்களைத் தேடிக் கொண்டிருப்பதாக எனது மனம் சொல்லுகின்றது.
அவ்வாறான முரண்பாட்டு குழுக்கள் உம்மத்தின் பொது எதிரிகள் தமது இலக்குகளை அடைந்து கொள்வதற்காக பயன்படுத்தி வருவதனையும், அழிவின் விளிம்பில் கொண்டுபோய் நிறுத்தியுள்ளதையும் நாம் காணுகின்றோம். எதிர்மறையான எதிர்வினையாற்றல்களைத் தூண்டும் கருத்து வெளியீடுகள் ஹராமானவையாகும்!
நாவைப் பேணுவோருக்கு சுவனம் உண்டு, பேசினால் நல்லதையே பேசுங்கள் இல்லாவிட்டால் வாய் மூடியிருங்கள். வார்த்தை பிரயோகங்கள் வன்முறைகளையும் தூண்டலாம் சமாதான சகவாழ்வையும் கொண்டு வரலாம். நாவைப் பேணுதல் அமானிதமாக பார்க்கப்பட வேண்டும். நாவினாலும், நடத்தையினாலும் அடுத்தவரை காயப்படுத்தாதவரே ஒரு முஸ்லிம்.

அமைதி சாந்தி சமாதானம் என்ற அழகிய பிரயோகமே இஸ்லாமிய தொடர்புகளின் துவக்கப் புள்ளியாகும், வாழ்த்தாகும். ஆண்கள் அல்லது பெண்கள் ஒரு கூட்டத்தினரை பிறிதொரு கூட்டத்தினர் ஏளனம் செய்வது, புறம் பேசுவது, அபாண்டம் சுமத்துவது அல்குர்ஆனில் வன்மையாக கண்டிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் இருக்கின்ற போது கேட்பதற்கு விரும்பாத விஷயத்தை அவர் இல்லாத நிலையில் பேசாதீர்கள். அழகிய உபதேசங்கள், அறிவுப்பூர்வமான வழிமுறைகள் மூலம் மாத்திரமே அழைப்புப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.
அல்லாஹ் அல்லாதவற்றை அழைப்பவர்கள் மனம் காயப்பட நீங்கள் திட்டுவீர்களாயின் அவர்கள் அல்லாஹ்வைத் திட்டுவார்கள் என்ற அல் குர்ஆனிய அறிவுரை. எதிர்மறையான எதிர் வினைகளை வர வழைத்துக் கொள்ள வேண்டாம் என்ற அடிப்படை உண்மையை அழைப்பாளர்களுக்கு உணர்த்தி நிற்கின்றது.
இஸ்லாத்தில், நிர்பந்தமோ, பலவந்தமோ, வன்முறையோ கிடையாது. நாவு பேணப்படாமையின் விளைவுகளே குடும்ப வன்முறைகளின் முதல்படி. ஊடக சுதந்திரம், சமூக ஊடக சுதந்திரம் என்பவற்றை வரை முறைகளோடு கையாள தவறுபவர்கள் பெரும் பாவத்தை செய்து கொண்டிருக்கின்றார்கள். அழகிய மானுட விழுமியங்களின் பிரதிபலிப்பாகவே ஒரு விசுவாசியின் நாவும் நடத்தையும் இருத்தல் வேண்டும்.